-திருநின்றவூர் ரவிகுமார்

இந்திய விமானப் படை (IAF – Indian Air Force) பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் இந்திய விமானம் மற்றும் வான்வெளிப் படை அல்லது இந்திய வான் மற்றும் விண்வெளிப் படை (IASF – Indian Air and Space Force) என பெயரிடப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் மாற்றம் இதுவரை ‘தீரமிகு விமானப்படை’ என்றிருந்தது, வரும் காலத்தில் ‘மதிப்புமிக்க விண்வெளிப்படை’யாக மாறுவதன் ஓர் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. உலகில் மட்டுமின்றி புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாலும் தனது பாதுகாப்பு சேவையை விரிவாக்குவதற்கான இந்திய விமானப்படையின் தொலைநோக்குப் பார்வை – 2047 என்ற மாற்றத்திற்கான திட்ட வரைவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும் (DRDO – Defence Research and Development Organisation) இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பும் – இஸ்ரோ- (ISRO – Indian Space Research Organisation) இணைந்து நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NewSpace India) என்ற வர்த்தக நிறுவனத்தை 2019 இல் ஆரம்பித்தன. இது தவிர இஸ்ரோ தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற வசதி செய்வதற்காக இன் ஸ்பேஸ் (IN- Space – Indian National Space Promotion and Authorisation Centre) 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது. மேற்சொன்ன அனைத்துடனும் இணைந்து பணிபுரிய விமானப்படை தயாராகி வருகிறது.
இதே போன்ற அமைப்பை ஏற்கனவே சீனாவும் (People Liberation Army Strategic Support Force) அமெரிக்காவும் (United States Space Force – USSF) 2019இல் உருவாக்கி வைத்துள்ளன. இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா போன்று இன்னும் சில நாடுகளும் தங்கள் விமானப்படையில் விண்வெளி படைப்பிரிவை ஆரம்பித்து அதற்கான தலைமையையும் ஏற்படுத்தி உள்ளன.
வரும் காலங்களில் போர் என்பது விண்வெளியிலும் நடக்கும். எனவே எல்லா நாடுகளும் தனது பாதுகாப்புத் திட்டத்தில் மேற்கண்ட அம்சத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நிலையில் உள்ளன. இந்திய விமானப் படையும் தான் இதுவரை பயன்பாட்டில் வைத்திருக்கும் ஒருங்கிணைந்த தலைமை மற்றும் கட்டுப்பாட்டு முறையை (Integrated Air Command and Control System) மேலும் மேம்படுத்தி, ஒருங்கிணைந்த வான், விண்வெளி தலைமை மற்றும் கட்டுப்பாட்டு முறைமை (IASCCS) என்ற முறையை உருவாக்க உள்ளது. அதன்படி நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய செயற்கை கோள்களை அடுத்த ஏழு எட்டு ஆண்டுகளில் பெற உள்ளது.
***
புவி அரசியல் மெதுவாக விண்வெளி அரசியலாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் வலிமையானது அதன் புவியியலை – மலைகள், ஆறுகள், கடல், மனித வளம், இயற்கை வளங்களையும் வசதிகளையும், இன்னும் பிறவற்றையும் சார்ந்ததாக இருந்தது. ஆனால் விண்வெளி என்பது அப்படிப்பட்டதில்லை என்று சொல்ல முடியாது. விண்வெளியில் கதிர்வீச்சு அடர்த்தியாக உள்ள பகுதிகள் உள்ளன. தூரம், கோளின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி செயற்கைக்கோளின் பயண வேகத்தை அதிகரித்துக் கொள்வது, நமக்கு வசதியான – ராணுவ மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்கு வசதியான- இடத்தில் கோளை நிறுவுவது, இயற்கை விண்கோள்கள் மற்றும் துணைக்கோள்களின் வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள முனைவது போன்றவை எல்லாம் அதில் உள்ளன.
எனவே எந்த வல்லரசும் விண்வெளியில் உள்ள வசதிகளை, வாய்ப்புகளை அலட்சியப்படுத்தி விட முடியாது. பூமியின் ஈர்ப்பு சக்திக்கு வெளியே உள்ள பகுதியை ‘உலகப் பொது’ என்று கூறலாம். அதாவது எந்த ஒரு நாட்டின் அதிகார எல்லைக்கு உட்பட்டதல்ல, அதற்கு அப்பாற்பட்டது. அதனால் அப்பகுதி சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கிறது என்ற பொருளில், உலக நாடுகள் வரையறுத்துள்ளன. அண்டார்டிகா, சில கடல் பகுதிகள், சைபர் ஸ்பேஸ் எனப்படும் விண்வெளிப் பகுதி போன்றவை உலகப் பொதுவில் வருபவை. இதற்கான ஐ.நா.சபையின் அவுட்டர் ஸ்பேஸ் ட்ரீட்டி (Outer Space Treaty) என்ற ஒப்பந்தம் 1967 இல் உருவானது. இதை 111 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி சந்திரன் போன்ற விண்வெளியில் உள்ள விஷயங்களை எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது; ஆக்கிரமிக்கக் கூடாது. ராணுவச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. அங்கு எந்த கருவிகளையும் நிறுத்தக் கூடாது. எந்தவிதமான ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்கக் கூடாது. அணு ஆயுதங்களையோ வேற எந்த விதமான ஆயுதங்களையோ அங்கு வைத்திருக்கக் கூடாது, என்றெல்லாம் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.
இதை நடைமுறைப்படுத்துவதற்காக அமைப்பொன்று ஐ.நா.சபையில் உள்ளது. விண்வெளி விவகாரங்களுக்கான ஐ.நா.சபை அலுவலகம் (United Nations Office for Outer Space Affairs) என்று அதற்குப் பெயர். ஆனால் அந்த அமைப்பிற்கு, தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டரீதியான அதிகாரமோ, ராணுவ பலமோ இல்லை.
1979 இல் நிலவு ஒப்பந்தம் என்றொரு ஒப்பந்தம் உருவானது. அது குறிப்பாக, ‘சந்திரனை ராணுவ நடவடிக்கைகளுக்காகவோ ஆயுதங்களை நிறுத்தவோ பயன்படுத்தக் கூடாது’ என்று கூறுகிறது. இதுவரை 18 நாடுகள் மட்டுமே அதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. போர்க்களம் விண்வெளிக்கு மாறிக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் பல நாடுகளை அதில் இணைக்க வேண்டியுள்ளது.
இதில் பிரச்னை ஒன்று உள்ளது. அனைவருக்கும் பொதுவான விண் பரப்பு எங்கு தொடங்குகிறது என்பது பற்றி நாடுகளிடையே கருத்தொற்றுமை இல்லை. அமெரிக்காவின் நாசா அமைப்பு கடல் பரப்பிலிருந்து 80 கி.மீ. உயரத்தில் அது தொடங்குகிறது என்று சொல்கிறது. ஸ்விட்சர்லாந்தை மையமாகக் கொண்ட எஃப்ஏஐ என்ற உலக அமைப்பு 100 கி.மீ. என்கிறது. விண்கலங்கள் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடுவது அந்த இடத்தில் தான் என்பதால் அதைக் குறிப்பிடுகிறது எஃப்ஏஐ.
ஒரு நாடு 80 கி.மீ., இன்னொரு நாடு 100 கி.மீ. என்று சொல்லும் நிலையில், மற்றொன்று 90 கி.மீ. தொலைவில் தன் செயற்கைக்கோளை நிறுவினால் அதை முதல் நாடு அழித்துவிட வாய்ப்புள்ளது. அதேபோல விண்வெளிக்குச் சென்று திரும்பும் வீரர்களை மீட்பது, விண்வெளியில் ஏற்படுத்தப்படும் அழிவுகளுக்கு இழப்பீடு தருவது, அதற்காகப் பதிவு செய்வது பற்றியெல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஐ.நா. தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. பாரதம் எல்லா ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ள உள்ள போதிலும், நிலவு ஒப்பந்தத்தை மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த மே மாதம் ஐ.நா.சபை ‘ஒட்டுமொத்த மனித இனத்திற்கு…. உலக அமைதிக்காக…. நாம் விண்வெளிப் பரப்பை நிர்வாகிப்பது பற்றி…. கூடி பேசி, விவாதித்து…. உலகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு….. விண்வெளியில் ஆயுதப் போட்டி நடக்காமல் இருக்க…. புதிய அச்சுறுத்தல் ஏற்படாமல்….. புதிய ஒப்பந்தம் போட வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா.சபையின் அதிகாரம் கேள்விக்குள்ளாகி வரும் இன்றைய சூழ்நிலையில், மேற்கண்ட அறிக்கை காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
உதாரணத்திற்கு ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். முதன்முதலில் 1957 இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -1’ என்று செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்தியது. அதிலிருந்து 2012 வரை பார்த்தால் ஆண்டுக்கு சுமார் 150 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. ஆனால் அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது. 2022 இல் மட்டும் 2,500 சேர்க்கை கோள்கள் ஏவப்பட்டுள்ளன. செயல்படும் நிலையில் உள்ள செயற்கைக்கோள்களை அதிகம் வைத்திருப்பது அமெரிக்கா, சுமார் 2000. அடுத்தது சீனா 500. ரஷ்யா, இங்கிலாந்து தலா 200. ஜப்பான் 100, பாரதம் 52 (இதில் 23 லியோ 29 ஜியோ. இதைப் பற்றி பின்னால் பார்க்கலாம்).
இப்போது உலகத்தில் சில முக்கியமான இடங்கள் உள்ளன. அதை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதைப் பற்றி கடும் போட்டி உலக நாடுகள் இடையே நிலவி வருகிறது. அந்த மையங்கள் ராணுவ, வர்த்தக மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. அங்கு சிறு உரசல் ஏற்பட்டாலும் அது பெரும் மோதலாக மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உதாரணத்துக்கு சூயஸ் கால்வாய், ஜிப்ரால்டர், மலாக்கா, ஹோர்முஸ் கரை போன்றவை. அது போலவே விண்வெளியில் உள்ளது.
***
பூமியிலிருந்து சுமார் 2,000 கி.மீ. வரையுள்ள பகுதி குறைந்த புவி சுற்றுப்பாதை / புவி தாழ் சுற்றுப்பாதை (Leo – Lower Earth Orbit) – லியோ எனப்படுகிறது. இன்று சுமார் 5,000 செயற்கைக்கோள்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எண்பது சதவீதத்துக்கும் அதிகமான செயற்கைக்கோள்கள் லியோ-வில் உள்ளன. பத்து சதவீதம் செயற்கைக்கோள்கள் ஜியோ-வில் உள்ளன.
ஜியோ (GEO – Geosynchronous Earth Orbit) என்பது புவிநிலை சுற்றுப்பாதை. அது 36,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரே இடத்தில் நிற்பது போலத் தெரிவதால், அது புவி நிலை சுற்றுப்பாதை என்று அழைக்கப்படுகிறது. ஏறத்தாழ எல்லா தொலைக்காட்சி, வானொலி, வானிலை ஆய்வு, தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்களும் இங்குதான் உள்ளன. காரணம் இங்கு நிறுத்தப்படும் செயற்கைக் கோள் ஒவ்வொன்றும் சுமார் 42 சதவீத உலகைப் ‘பார்க்க’ முடியும்.
இங்கு நிறுத்தப்படும் செயற்கைக் கோள்களின் சிக்னல்கள் (ஒளிபரப்பு அலைவரிசை) ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் இருக்க, தனித்தனி அலை வரிசைகள் வழங்கப்படுகிறது. ஐ.நா.சபையில் இதற்கான தனி அமைப்பு உள்ளது. ‘மாஸ்டர் இன்டர்நேஷனல் ஃப்ரீக்குவன்சி ரிஜிஸ்டர்’ என்ற பதிவேடு இதற்காக பராமரிக்கப்படுகிறது.
ஜியோ-வில் தான் தகவல் தொலைத்தொடர்பு மட்டுமன்றி, ராணுவப் பயன்பாட்டிற்கும் பயன்படும் இரட்டைப் பயன்பாட்டு செயற்கைக்கோள்களை அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் நிலைநிறுத்தி உள்ளன. வாழ்நாள் முடிந்த செயற்கைக் கோள்களை ஜியோ-வுக்கு (36,000 கி.மீ.) அப்பால் உடைத்து வீசி விடுவார்கள். ஜியோ-வுக்கும் லியோ-வுக்கும் இடைப்பட்ட பகுதி மியோ (MEO – Medium Earth Orbit) எனப்படுகிறது. இங்கு நூற்றுக்கும் அதிகமான செயற்கைக்கோள்கள் உள்ளன.
அது மட்டுமின்றி லியோ-வில் நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்களில் 500க்கும் மேற்பட்டவை இரட்டை (தொடர்பு & ராணுவம்) பயன்பாட்டைக் கொண்டவை. அந்தப் பகுதியில் தான் சர்வதேச விண்வெளி நிலையம் போன்றவை சில வெறும் 400 கி.மீ. தொலைவில், பைனாகுலரில் பார்த்தாலே தெரியும் தூரத்தில் உள்ளன. இதன் மூலம் பூமியை துல்லியமாகக் கவனிக்க முடியும்.
பாரதம் உட்பட சுமார் பதினோரு நாடுகள் தான் செயற்கைக்கோளை ஏவும் திறன் படைத்தவை. இந்த பதினோரு நாடுகளைப் பயன்படுத்தி, அவற்றின் மூலம் 90 க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களுக்கென செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தி உள்ளன.
***
செயற்கைக் கோள்கள் இன்று நம் வாழ்வின், நாகrஇகத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாகி உள்ளன. இன்று வெவ்வேறு மாவட்டத்தில், மாநிலத்தில் ஏடிஎம் பயன்படுத்தி பணம் எடுக்கிறோம். தெரியாத விலாசத்தைத் தேடிப் போக அலைபேசியில் ஜிபிஆர்எஸ் உள்ளீடு செய்து சரியாகப் போய்விடுகிறோம். காரணம் ஜிபிஎஸ் (GPS – Global Positing System) எனப்படுகின்ற வசதி. அதைத் தருபவை மேலே உள்ள செயற்கைக் கோள்கள். ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழித்து விட்டாலே, அதன் தினசரி வாழ்க்கையும் பொருளாதாரம் குலைந்து போய்விடும்.
அதற்காக அடுத்த நாட்டு செயற்கைக் கோள்கள் அனைத்தையும் அழிக்க வேண்டுமென்பதில்லை. ஒன்றை உடைத்தெறிந்தாலே போதும். ஏனெனில் செயற்கைக் கோள்கள் ஒரு தொகுப்பாக வேலை செய்பவை. ஜிபிஎஸ்-ஸை எடுத்துக்கொண்டால் 24 செயற்கைக் கோள்கள் உலகைக் காண்பிக்கப் போதுமானது. அதில் ஒன்றை அழித்தாலே மொத்தமும் செயலிழந்து போய்விடும். ஜியோ-வில் பொருத்தப்படும் செயற்கைக்கோள் பூமியை துல்லியமாக காட்டக் கூடியது; சுமார் ஆறு அங்குல வித்தியாசம் தான் ஏற்படும். அங்கு செயற்கைக்கோளை நிறுத்த கடும் போட்டி நிலவுகிறது.
பூமியைப் போலவே விண்வெளியிலும் போட்டி நிலவுகின்ற பகுதிகள் ஐந்து உள்ளன. அதை எல் 1, எல் 2 , எல் 3, எல் 4, எல் 5 (Lagrange Point) என்கிறார்கள். அவை சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை சமன்படும் இடங்கள். அண்மையில் எல் 1 எனப்படுகின்ற நிலையில் (பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது) ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைக்கோளை பாரதம் நிறுத்தியுள்ளது. எல் 2 இல் அமெரிக்கா கடந்த ஆண்டு ‘ வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’பை நிறுத்தி உள்ளதைப் படித்தோம். சீனாவும் அங்கு உள்ளது. அங்கிருந்து நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்வதாக அது சொல்கிறது. அங்கு ராணுவத்தை (ஆயுதங்களை) நிறுவ அமெரிக்கா முயற்சிக்கிறது என்ற புகார் எழுந்துள்ளதை புறந்தள்ள முடியாது.
கடந்த நூற்றாண்டில் விமானப்படை (இப்போது அத்துடன் டிரோன்கள் சேர்ந்துள்ளன) எப்படி வெற்றிக்கு பேருதவி புரிந்ததோ அதேபோல இப்பொழுது விண்சக்தி முக்கியமானதாகிறது. அதுமட்டுமின்றி சந்திரன், செவ்வாய் கிரகப் பயணத்திற்கும், அந்த விண் பாதையைக் கட்டுப்படுத்துபவர் வலிமை உள்ளவர் ஆகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பூமிக்கு வெளியே பெரிய கண்ணாடி வைத்து சூரிய ஒளியைத் திருப்பினால் இரவே இல்லாமல் செய்து விட முடியும் என்று கூறியதும், அதற்கு நாசா பரிசளித்துப் பாராட்டியதும் நினைவிருக்கலாம். அந்த யுக்தியைப் பயன்படுத்தி நாம் இயற்கையான வகையில் (மாற்று) எரி சக்தியைத் தயாரிக்க முடியும். இப்படி பல்வேறு கோணங்களில் லியோ-வைக் கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் முனைந்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில் ஓஎஸ்டீ (அவுட்டர் ஸ்பேஸ் டீரீட்டி) ஒப்பந்தமும் நிலவு ஒப்பந்தமும் நடைமுறையில் செல்லாக்காசாகி விட்ட நிலையில், அமெரிக்கா ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் என்பதை முன்னிறுத்தி வருகிறது. கிரேக்கப் புராணங்களின்படி அப்போலோவும் ஆர்ட்டெமிஸ்ஸும் இரட்டை சகோதரிகள். நிலவுக்கான தெய்வமாக அப்போலோ கருதப்படுகிறது.
ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் என்பது உலக பொது ஒப்பந்தம் அல்ல. இதனை அமெரிக்காவுடன் ஒவ்வொரு நாடும் தனித்தனியாக செய்து கொள்ள வேண்டும். விண்வெளி ஆய்வு, பயணம், பயன்பாடு தொடர்பானது இந்த ஒப்பந்தம். இதன் மூலம் அமெரிக்காவை பெரியண்ணன் ஆக ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று ஆகிறது. சீனா, ரஷ்யா, இந்தியா உட்பட சுமார் 170 நாடுகள் இதை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த ஒப்பந்தத்தின்படி நிலவில் உங்களுக்கு நிரந்தர இடம், சொந்தமான இடம் கிடையாது. போகலாம், ஆய்வுகளைச் செய்யலாம், அதற்காக ஏதோ கொஞ்சம் எடுத்து வரலாம். ஆனால், நிலவில் நிரந்தரமாகத் தங்கவோ, சுரங்கம் தோண்டவோ அனுமதி இல்லை என்கிறது இந்த ஒப்பந்தம்.
***
ஆனால், மனிதனை அங்கு குடியமர்த்துவது பற்றி வல்லரசு நாடுகள் யோசித்து வருகின்றன. அமெரிக்காவில் சில தனியார் நிறுவனங்கள் நிலவுக்கு சுற்றுலா செல்ல பயணச்சீட்டு விற்பனை செய்து வருகின்றன என்ற செய்தியை நாம் படிக்கிறோம். அதைவிட முக்கியமாக, நிலவில் உள்ள வளத்தை எப்படிச் சுரண்டுவது என சில நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.
நிலவில் அலுமினியம், டைட்டானியம், சிலிக்கான், அரிய தாதுக்கள், இவை எல்லாவற்றையும் விட ஹீலியம் 3 (He3) அதிகமாக உள்ளது. இப்போது உலகில் கிடைக்கும் ஹீலியம் நான்காம் (He4) வகையைச் சேர்ந்தது. கிடைப்பதில் 0.0001 சதவீதம் மட்டுமே மூன்றாம் வகை ஹீலியம். ஹீலியம் அணுசக்தி உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. ஹீலியம்-மூன்று மிகக் குறைவான கதிர்வீச்சு கொண்டது. ஐந்து கோடி பீப்பாய் எண்ணெயில் இருந்து கிடைக்கும் மின் சக்திக்கு இணையான சக்தியை ஒரு டன் ஹீலியம்-மூன்றில் இருந்து தயாரித்து விடலாம். நிலவில் ஹீலியம்-மூன்று கொட்டிக் கிடக்கிறது. அது நமது மின் சக்தி பிரச்னையைத் தீர்க்க வல்லது.
அது மட்டுமன்றி, நாம் விண்வெளியை ஆய்வு செய்ய பூமியிலிருந்து கோள்களை ஏவுவதற்குப் பதிலாக நிலவிலிருந்து ஏவ முடியும் என்றும், விண்கலங்களை நிறுத்தும் இடமாகவும் எரிசக்தி நிரப்பும் இடமாகவும், நிலவை மாற்ற முடியும் என்றும் அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இதனை, போட்டியை இன்னும் தீவிரப்படுத்தும் விஷயமாகக் கருதலாம்.
ஏற்கனவே உள்ள ஓஎஸ்டீ, நிலவு ஒப்பந்தங்கள் உலகத்திற்கு பொது என்றும் அமைதிப் பயன்பாடு என்றும் சொல்லி உள்ள நிலையில், ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் அதுபோல எதையும் சொல்லவில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிக் கொள், ஆனால் நிரந்தரமாக இடம் பிடிக்காதே என்றும், என்ன செய்கிறாய் என்பதை எனக்கு (அமெரிக்காவுக்கு) சொல்லிவிடு என்றும் கூறுகிறது. இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமின்றி, நிலவில் இறங்கிய இடத்திற்கு பெயர் வைத்துவிட்டு வந்திருக்கிறது. இதற்கு மறைமுகப் பொருள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
‘அமைதி’ என்ற ஐ.நா.சபையின் வார்த்தையை ரஷ்யா ‘ராணுவச் செயல்பாடுகள் இல்லாத’ என்று வரையறுக்கிறது. அமெரிக்காவோ ‘ஆக்கிரமிப்பு இல்லாத’ என்று விளக்கம் கொடுக்கிறது.
ஏற்கனவே விண்வெளி ஆய்வுகளில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இடையே கூட்டாகச் செயல்பட ஓர் ஒப்பந்தம் உள்ளது. அது 2030- 31 முடிந்துவிடும். தனக்கென விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது சீனா. அதன் வாழ்நாளும் 2037 இல் முடிந்துவிடும்.
இந்நிலையில், அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருப்பார்களா என்றால் முடியாது என்பதுதான் பதில். காரணம் 2011 நாசா சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தடை விதித்தது. அதற்கு உல்ப் திருத்தம் (Wolf Amendment) என்று பெயர். எனவே இனிவரும் காலங்களில் சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக மாறும் வாய்ப்பே அதிகம்.
ஏற்கனவே சீனா உலக கடல்சார் சட்டங்களை ஏற்கவில்லை; ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தையும் ஏற்க மறுத்துவிட்டது. மூன்றாண்டுகளுக்கு முன்பு ரஷ்யா அந்த ஒப்பந்தத்தை – அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக்கை ஆக்கிரமித்தது போன்று – ‘நிலவை ஆக்கிரமிக்கும் ஒப்பந்தம்’ என்று கூறி ஏற்க மறுத்து விட்டது. இந்த சூழ்நிலையில் உலக நாடுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் புதிய ஒப்பந்தம் தேவைப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.
***
சில நாடுகள் தங்களுடைய செயற்கைக் கோள்களின் வாழ்நாள் முடிந்ததும் அவற்றை ஆயுதங்களைக் கொண்டு உடைத்து விண்வெளியில் வீசியுள்ளன. 2021 இல் ரஷ்யா அதுபோல 1,500 துண்டுகளாக உடைத்தெறிந்ததில் சில துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது தெறித்தன என்று புகார் உள்ளது. மற்றவர்களின் செயற்கைக்கோளைத் திட்டமிட்டு தாக்குவது ஒருபுறம் இருக்க, இது போன்ற விபத்துகளும் நடக்க வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தியாவும் 2019 இல் செயற்கைக்கோளை அழிக்கும் ஆயுதத்தை சோதித்துள்ளது. ஆனாலும் இந்தியாவை சீனாவுக்கு இணையாக்க் கருத முடியாது. மொத்தத்தில் விண்வெளியில் இப்பொழுது தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது போல காட்டாட்சியாக உள்ளது.
பாரதம் இதுவரை தனது விண்வெளித் திட்டங்களை எல்லாம் மக்கள் பயன்பாட்டை (சிவில்) மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது ராணுவச் செயல்பாட்டை அலட்சியப்படுத்தி விட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதை உணர்ந்தே உள்ளது.
அணு ஆயுதம் எப்படி தற்காப்பு ஆயுதமாக உள்ளதோ அதுபோலவே, விண்வெளி ஆயுதத் திட்டங்களும் தற்காப்புக்குத் தேவைப்படுகின்றன. அண்டை நாடான – அதே வேளையில் நட்பு நாடாக இல்லாத – சீனா இவ்விஷயத்தில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பாரத விமானப்படை சரியான திசையில், சரியான விஷயத்தை மேற்கொண்டு வருகிறது என்பதையே முதலில் சொன்ன பெயர் மாற்றம் சுட்டிக் காட்டுகிறது.
$$$