-ச.சண்முகநாதன்

17. வாலியின் காலன் இவனே. தீயவர் கூற்றமும் இவனே!
சீதையை ராவணன் கடத்திச் சென்றதை எண்ணி வருந்தியபடி இருக்கிறான் ராமன். அவளைக் காப்பாற்ற வேண்டும் என்று உள்ளம் துடிக்க லக்ஷ்மணனிடம் “அவள் சென்ற திசை எதுவென்று ஜடாயு சொன்னபடி ராவணன் இருப்பிடத்தை துருவித் துருவி கண்டுபிடித்து சீதையை மீட்டு ராவணனுக்கு படம் புகட்டுவோம்”” என்று கோபக்கனல் வீசுகிறான்.
“...அப் பொன்னை நாடாது, ஈண்டு இருத்தல் புகழோ? என்ன, புகழோனும், 'சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து' என்ன”
இருவரும் ருசியமுகம் எனும் மலைப்பகுதியை அடைய, அங்கே சுக்ரீவன் கூட்டத்தினர் “இவர் இருவரும் வாலியின் ஆட்கள்” என்று நினைத்து ஓடி ஒளிந்தனர். பின்னர் அனுமன் அவர்களைக் கண்டு “வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்” என்று “இதென்ன தவ வேடம் புரிந்தவர்கள் கையில் வில்லுடன் இருக்கிறார்களே!” என்று குழம்பி “இவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும்” என்று மனத்தில் எண்ணி தோன்ற, ராமனும் “நீ யார்?” என்று கேட்க, அனுமன் “யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்” என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
இதுவே ராமன் – அனுமன் முதன்முதலில் பேசிக்கொண்டது.
ராமன் மனத்தில் அநுமனைப் பற்றி உயர்வாக நினைத்து லக்ஷ்மணனிடம் “பேராற்றல் கொண்டவன். பின்னர்க் காணுதி மெய்ம்மை” என்று சொல்லி சுக்ரீவனைக் காண வேண்டும் என்று வேண்டுகின்றனர். அனுமன் சுக்ரீவனிடம் சென்று “அவர்கள் பகைவரில்லை. ‘மாரீசன் எனும் மாய மான், மாய யமனாய்’ நின்றவன்” என்று ராமனின் வரலாற்றை பெருமையுடன் சுருக்கமாக்க் கூறுகிறான்.
“நேர் இல் மாரீசன் ஆம் மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான்.”
(கம்பனின் வார்த்தை விளையாட்டு இங்கே ‘மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான்’ = மாய மானான மாரீசன் மா யமன் ஆயினான்; ‘மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான்’ = மாய மானான மாரீசன் மாய (அழிய) மான் (சிங்கம்) ஆயினான் என்று எப்படி இரண்டு உரை இருக்கிறது)
அனுமன் சொன்னது கேட்டு ராமனைப் பார்க்க வருகிறான் சுக்ரீவன். பார்த்ததும் “அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே, மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ” என்று தெரிந்து கொண்டான்.
நட்பு மலர்கிறது அங்கே. ராமனும் சுக்ரீவனும் (அவனது சேனையும்) நட்புப்பாலம் அமைத்துக்கொள்கின்றனர்.
ராமன் சுக்ரீவனிடம் “நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்” என்று நட்புப் பிரகடனம் செய்கிறான்.
எல்லோருக்கும் சுக்ரீவன் விருந்து அளிக்க ஏற்பாடு செய்கிறான். சுக்கிரீவனின் துணைவியை எங்கும் காணாமல் “யும் உன் மனைவியைப் பிரிந்து இருக்கிறாயா?” என்று கேட்க (“நன் மனைக்கு உரிய பூவையைப் பிரிந்துளாய்கொலோ நீயும் பின்?”) அனுமன், சுக்ரீவனின் சார்பாக, “வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான்” என்று வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் உள்ள பிரச்னையை சொல்லி வைக்கிறான்.
தம்பிக்காக அரியணை துறந்து வனம் புகுந்தவன் இங்கே “சுக்ரீவன் எனும் தம்பி தன் மனைவியை வாலி அபகரித்துவிட்டான்” என்ற செய்தி கேட்டு கோபத்துடன் “பரிவு இலன், ஒருவன் தன் இளையோன் தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ?” என்று கோபப்படுகிறான். “தம்பி மனைவியை அபகரிப்பவரும் இருக்கிறார்களா? என்ன கொடுமை. சரி அவன் இருப்பிடம் காட்டு. ‘நின் தாரமும், உனக்கு இன்று தருவென்; புலமையோய்!’ அவன் உறைவிடம் காட்டு” என்று கிளம்புகிறான்.
சுக்ரீவனும் “ஐயனே, இந்த மராமரங்கள் ஏழில் ஒன்றை உன் அம்பு துளைக்குமாறு செய்து காட்டினால் என் உள்ளம் மகிழ்ச்சியடையும்” என்று சொல்ல ராமன் சுக்ரீவனின் எண்ணம் உணர்ந்து, நாண் பூட்டி வில் விடுகிறான். ஒன்று என்ன ஏழு மராமரங்களையும் துளைத்து வருகிறது. அது மட்டும் அல்ல. எவையெல்லாம் ‘ஏழு’ என்ற எண்ணிக்கை இருக்கிறதோ அவற்றையெல்லாம் தேடி அடித்துவிட்டு வருகிறது.
“ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும் ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி”
பார்த்துக் கொண்டிருந்தவர் எல்லோரும் “வாலியின் காலன் இவனே. தீயவர் கூற்றமும் இவனே” என்று கண்ணில் நீர் வர மகிழ்ச்சி கொள்கின்றனர்.
வாழிய ராகவன் புகழ்!
$$$
18. வாலி வதம் – நியாயமா?
வாலி வதத்தை கொஞ்சம் பின்னிருந்து நோக்கினால் ராமனின் எண்ணம் / தர்மம் புரியும் என்பதால் யுத்த கண்டத்தில் இருந்து சில நிகழ்வுகளை ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
வாலியின் மகன் அங்கதன். அந்த அங்கதன் தான் ராமன் போரில் வென்று அயோத்தி வேந்தனாக முடிசூட்டுக்கொள்ளும் பொழுது ஒரு முக்கியமான இடம் வகிக்கிறான்.
“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த” எவ்வளவு பெருமை மிக்க இடம், வாலியின் மகனான அங்கதனுக்கு!
இலங்கைக்குப் பாலம் அமைத்து கடல் கடந்து சென்றவுடன், முக்கியமான, நம்பகமான ஒருவரை ராவணனிடம் “உன் இடத்திற்கே வந்துவிட்டேன். என் தேவியை விடு என்று எச்சரிக்கை செய்கிறேன்” என்று தூது அனுப்ப நினைக்கும் போது, ராமனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் அங்கதன், வாலியின் மைந்தன்.
அப்படி தூது சென்றவன் ராவணன் அரசவை அடைந்து நின்றபோது “யார் நீ?” என்று ராவணன் அலட்சியமாக கேட்ட பொழுது
“பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், இப் பூமேல் சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும் வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன், தான் விட்ட தூதன் யான்”
என்று முதலில் “நான் ராமபிரானின் தூதன்” என்று பெருமையோடு சொல்லிவிட்டு, அதன் பிறகே “நான் வாலியின் மைந்தன்” என்று தன்னை அறிமுகம் செய்கிறான் வாலியின் மைந்தன் அங்கதன் .
அதுகேட்ட ராவணன் “நான் வாலியின் நண்பன். ராமன் உன் தந்தையைக் கொன்றவன். அவன் பின்னால் ஏன் சுற்றுகிறாய். என்னுடன் சேர்ந்து விடு. ‘உன் அரசு உனக்குத் தந்தேன்; ஆளுதி, ஊழிக் காலம். மன்னவன் ஆக, யானே சூட்டுவென், மகுடம்” என்று ஆசை வார்த்தை காட்ட, அங்கதனோ “சிங்கத்துக்கு ஒரு நாய் அரசுரிமை வழங்குவதா! சீ. உனக்கு ராமன் சொன்ன செய்தி இதுதான். தேவியை விடு இல்லை உன் ஆவியை விடவேண்டி வரும்”என்று சீறுகிறான்.
ராமன் தன் தந்தை வாலியைக் கொன்றது அறத்தின்பால் என்று உணர்ந்து, அந்த விதியை ஏற்றுக்கொண்டு ராமனுடன் அவனுக்கு உதவியாக வாழ்கிறான்.
‘நாய் தரக் கொள்ளும் சீயம், நல் அரசு! தேவியை விடுக! அன்றேல், செருக் களத்து எதிர்ந்து, தன்கண் ஆவியை விடுக!”
அங்கதனை இப்படி இப்படி, இந்த எண்ணத்தோடு, வாழச் சொன்னதே வாலி தான்.
“வாலிமேல், கோல் ஒன்று வாங்கி, தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான்” எனும்படி ராமன் விடுத்த அம்பு வாலிமேல் பாய, வாலி இது ராமன் விடுத்த அம்பென்று உணர்ந்து, “இது நியாயமா, ராமா?” என்று ‘இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ?’ என்றும் கேட்கிறான்.
ராமன், வாலிக்கு, “ஒருவன் தன் தம்பியின் மனைவியை அபகரிப்பது பெருங்குற்றம். அதைக் கட்டுப்படுத்துவது ஒரு க்ஷத்ரியனின் கடமை. நீ செய்தது பெருந்தவறு. சொந்த மகள், சகோதரி அல்லது தம்பியின் மனைவியை அபகரித்தவன் நீ. பெரும்பாவத்தை செய்து விட்டாய். உன்னைப் போன்றவர்களுக்கு தண்டனை தருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது க்ஷத்ரியக் கடமை” என்று விளக்கம் சொல்லிவிட்டு. “க்ஷத்ரியர்கள் தர்மத்திற்குட்பட்டு விலங்குகளை வேட்டையாடும்பொழுது, எதிர்ப்புறமாக ஓடினாலும் வேட்டையாடிக் கொன்றுவிடுவார்கள். இதை நீ புரிந்து கொள்” என்று விளக்கம் அளித்துவிட்டு பின்னர் “ஒருவன் தன் பாவச்செயல்களுக்கு தண்டனை பெற்றுவிட்டால் அவன் பாவம் நீங்கிவிடும். உன் பாவமும் நீங்கிவிட்டது” என்றும் ஆறுதல் வார்த்தை சொல்கிறான் வாலிக்கு.
அது கேட்ட வாலி உண்மை உணர்ந்து “ராமா, என் உயிர் போகும் முன்னர் என் அறிவுக்கண்ணைத் திறந்துவிட்டாய்” என்று சரணடைகிறான் ராமனிடம்.
“ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்; மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!”
அதன்பின் வாலி சுக்ரீவனை அழைத்து “இவன் சுற்றத்தோடும் உன் அடைக்கலம்” என்று ஒரு தந்தையைப்போல, தன் தம்பியை, ராமனிடம் ஒப்படைக்கிறான்.
தன் மகன் அங்கதனை அழைத்து “ராமன் என்னை முடித்துவிட்டான் என்ற எண்ணம் எப்பொழுதும் உன் மனதில் எழக் கூடாது. நடந்தது தர்மத்தின் படியே நடந்திருக்கிறது. எனவே நீ “தருமம் நோக்கி, மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி” என்று அங்கதனிடம் சொல்லிவிட்டு “ராமா இவன் மற்று உன் கையடை ஆகும்” என்று ராமனிடம் ஒப்புவித்து விட்டு மேலுலகம் செல்கிறான் வாலி.
எதிரிகளையும் வில்லால் மட்டும் அல்ல, தன் சொல்லால், தான் கடைபிடிக்கும் தர்மத்தால், அவர்கள் மனதையும் வென்றவன் ராமன்.
அவர் தலைவர். அன்னவர்க்கே சரண் நாங்களே.
(தொடர்கிறது)
$$$