-சேக்கிழான்
காலந்தோறும் நமது தாய்மொழி எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான நிகழ் சாட்சியமாகவே, நமது ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ என்ற தேடலைக் கூற முடியும். நாட்டு மக்கள் நலம் பெற உதவும் மன்னரின் செங்கோலுக்கு நமது இலக்கியங்கள் சுமார் 2,500 ஆண்டுகளாக அளித்த முக்கியத்துவம் கடந்துபோன அத்தியாயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் நிறைவாக, நல்லாட்சி, செங்கோல் குறித்து, தமிழ்த்தாயின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் கருத்து என்னவாக இருந்தது என்று அறிவோம்.

பகுதி- 20: அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க!
.
21. நல்லறம் நாடிடும் மன்னர்கள் வாழ்க!
தமிழ் இலக்கியப் பிரவாகத்தில், அண்மைக்காலத்தில் புத்துணர்வூட்டும் பெரும் ஊற்றாக வெளிப்பட்டவர் மகாகவி பாரதி. நவீனத் தமிழ் மொழியின் வரலாற்றை எழுதும் எவரும், பாரதிக்கு முன், பாரதிக்குப் பின் என்றே வகைப்படுத்துவார். அந்த அளவிற்கு மகாகவி பாரதியின் எழுத்துத் தவம் நமது தாய்மொழியின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.
காலந்தோறும் நமது தாய்மொழி எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான நிகழ் சாட்சியமாகவே, நமது ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ என்ற தேடலைக் கூற முடியும். நாட்டு மக்கள் நலம் பெற உதவும் மன்னரின் செங்கோலுக்கு நமது இலக்கியங்கள் சுமார் 2,500 ஆண்டுகளாக அளித்த முக்கியத்துவம் கடந்துபோன அத்தியாயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் நிறைவாக, நல்லாட்சி, செங்கோல் குறித்து, தமிழ்த்தாயின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் கருத்து என்னவாக இருந்தது என்று அறிவோம்.
***
செங்கோலை மறந்தாரா, தவிர்த்தாரா?
பாரதியின் பாடல்களில் மூன்று இடங்களில் மட்டுமே மன்னரின் கோல் குறித்து வருகிறது. அதுவும், கம்சனின் கோலாக (கொடுங்கோல்) ஓரிடத்திலும், சிவாஜியால் வெல்லப்பட்ட மிலேச்சர்களின் தீயகோலாக இன்னோரிடத்திலும், ரஷ்யாவின் ஜார் மன்னனின் கொடுங்கோலாக மற்றோரிடத்திலும் வருகிறது.
பாரதி வாழ்ந்த காலகட்டத்தின் அரசியல் சூழலும், விடுதலை உணர்ச்சியும் அவரது பாடல்களில் தீப்பொறி போல வெளிப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆதிக்க ஆட்சியின் கீழ் அடிமையாக இருந்த அவரால் செங்கோன்மை குறித்து நேரடியாகச் சிந்திக்க முடியவில்லை என்றுதான் கருதத் தோன்றுகிறது.
மன்னர்கள் அல்லது கடவுள்களின் பத்து அணிகலன்களை (நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, செங்கோல், கொடி) பாராட்டும் விதமாக கவியெழுதும் சிற்றிலக்கிய வகைமைக்கு ‘திருத்தசாங்கம்’ என்று பெயர். மகாகவி பாரதியோ, மன்னர்களையோ கடவுளரையோ போற்றிப் பாடாமல், பாரத அன்னையை நாட்டின் பேரரசியாக வர்ணித்து ‘பாரத தேவியின் திருத்தசாங்கம்’ பாடுகிறார். அதிலும்கூட, மன்னரின் அணிகலனில் ஒன்றாகக் கூறப்படும் செங்கோலை பாரதி தவிர்த்தது கூர்ந்த கவனத்திற்குரியது. இதில் மன்னரின் செங்கோலுக்கு மாற்றாக மாலையை (தார்) சேர்த்திருக்கிறார் மகாகவி பாரதி.
அவரது உரைநடைக் கட்டுரைகளில் ‘செங்கோல்’ குறித்து என்ன கூறி இருக்கிறார் என்று ஆராய்வது இன்றைய தேவையாக உள்ளது. ஆங்கிலேய ஆட்சியின் அவலங்களை அவர் தனது பல பத்திரிகை செய்திகள், கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார். அவை குறித்து தனியே ஆராயப்பட வேண்டும்.
கண்ணன் என் அரசன்:
கண்ணனை தோழனாக, தாயாக, தந்தையாக, குழந்தையாக, ஆண்டானாக, சேவகனாக, சற்குருவாக, சீடனாக, காதலனாக, காதலியாகப் பாடிய பாரதி, அவனை தனது அரசனாகவும் பாடி இருக்கிறார். அதில்தான், மன்னரின் கோல் குறித்த சொற்பிரயோகத்தை அமைத்திருக்கிறார் பாரதி.
கண்ணன் அரசனாக இருந்தபோதும் பல கொடுமைகளுக்கு உடனடியாக பதிலடி கொடுக்காமல் வேடிக்கை பார்க்கிறான் என்று செல்லமாகக் கடிந்துகொள்ளும் பாரதி,
பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்.
(கண்ணன் பாட்டு- கண்ணன் என் அரசன்- 1)
-என்கிறார். அப்போதுதான், தன்னைக் கொல்ல பூதகியை அனுப்பிய தாய்மாமனான கம்ஸன் கொடுங்கோல் ஆட்சி நடத்திட, அதைக் கண்டுகொள்ளாமல் கோபியருடன் பொழுதுபோக்குகிறான் கண்ணன் என்கிறார் பாரதி.
கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட,
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான்.
(கண்ணன் பாட்டு- கண்ணன் என் அரசன்- 4)
எனினும் உரிய காலம் வருகையில், வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் பகையைப் போக்குவான் சக்கரமேந்திய கண்ணன் என்கிறார் பாடலின் பிற்பகுதியில், மகாகவி பாரதி. இந்தப் பாடலில் பயின்று வரும் கோல், கம்ஸனின் கொடுங்கோலைக் குறிக்கிறது.
அறம் வளர்த்த தமிழ் மன்னர்கள்:
மகாகவி பாரதிக்கு தமிழக வரலாற்றுணர்வுடன் தேசியப் பெருமிதமும் இருந்தது. அதை அவரது படைப்புகளில் நாம் காண்கிறோம். தனது ‘சுயசரிதை’ கவிதையில், வரலாற்றுப் பெருமையைப் பதிவு செய்யும் பாரதி, இந்தப் பெருமிதங்களை நாம் தற்போதைய கல்வியில் கற்றுக் கொடுப்பதில்லையே என்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.
இந்தப் பாடலில், மன்னராட்சியின் சிறப்புகளாக மூன்று உதாரணங்களை பாரதி முன்வைக்கிறார். ‘தமிழகத்தின் பாண்டியர்களும் சோழர்களும் அறம் சூழ்ந்த ஆட்சி நடத்தினர்; அருட்சுடர் மின்னும் வாளுடன் பேரரசர் அசோகன் பிழைபடாது புவித்தலம் காத்தார்’ என்று பாரதி குறிப்பிட்டிருப்பதனை, நல்லாட்சிக்கான அவரது முன்மாதிரிகள் என்று கொள்ளலாம்.
அடுத்து, மராட்டியத்தில் பிறந்து மிலேச்சர்களின் கொடிய ஆட்சியை வீழ்த்தி வென்ற வீரர் சிவாஜியைப் புகழ்கிறார் மகாகவி பாரதி. இந்த இடத்தில் கொடிய மிலேச்சர்களின் (மொகலாய அரசு) தீயகோல் என்று அவர்களது கொடுங்கோலாட்சியைக் குறிக்கிறார் பாரதி.
இதோ அப்பாடலின் தேவையான பகுதிகள்…
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதை புனைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்,
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்துத் தர்மம் வளர்த்ததும்,
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழை படாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்,
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்,
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே!
(சுயசரிதை- கனவு- 24-26)
ராஜநீதி மறக்கலாமா?
அடிமைத்தளையிலிருந்து நாடு மீள வேண்டும் என்ற கனவு கனலாக எரியும் நெஞ்சினரான பாரதி இயற்றிய காப்பியம் ‘பாஞ்சாலி சபதம்’. மகாபாரத காப்பியத்தின் ஒரு சிறு கூறை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப் புத்தம் புதிய காப்பியமாக்கி மகிழ்ந்த பாரதி, அதில் தனது அரசியல் கருத்துகளைப் புகுத்தத் தயங்கவில்லை.
கௌரவர் சபையில் சூதாடும் தருமன் சகுனியிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறான். அப்போது சூதாட்ட மயக்கத்தில், தனது இந்திரப்பிரஸ்த நாட்டையே பணயம் வைக்கிறான் தருமன். அப்போது மகாகவி பாரதியின் அறச்சீற்றம் கவிதையில் எரிமலையாக வெடிக்கிறது.
நாட்டை ஆளும் மன்னனுக்கு அதைக் காக்க மட்டுமே உரிமை; அதை யாருக்கும் பணயம் வைக்க உரிமையில்லை என்ற கோபம் பாரதியின் கவிதையில் தெறிக்கிறது.
கோயில் பூசை செய்பவர் கடவுளர் சிலையைக் களவாடி விற்பது போலவும், வீட்டைக் காக்க வேண்டிய காவலனே அந்த வீட்டை விற்பது போலவும், ஆயிரம் நீதிகளை உணர்ந்திருந்தாலும் தருமன் புத்தித் தடுமாற்றத்தால் தேசத்தை வைத்து இழந்தான். சீச்சீ…. சிறியோர் செய்கை இது என்று ஆவேசத்துடன் பாடுகிறார் பாரதி.
நாட்டு மக்களை மனிதர்களாகக் கருதாமல் ஆட்டு மந்தையெனக் கருதுவோரே இப்படிப்பட்ட கீழ்மையான செயல்களில் ஈடுபடுவர். மன்னர்கள் சாஸ்திர நூல்களை மறந்து, மக்களை எண்ணாமல் நாட்டைப் பணயம் வைப்பது ராஜநீதி அல்ல….
யாருக்கும் தீங்கு செய்யாமல், அறம் மீதான உறுதியைக் கைவிடாமல், பிறரைத் துயரில் வீழ்த்தாமல் நாட்டை ஆள முடியாது என்ற பொருளற்ற வார்த்தை இங்கு உருவாகிவிட்டதே!
-என்று வருந்துகிறார் பாரதி. இதோ அப்பாடலின் மூன்று பத்திகள்…
கோயிற் பூசை செய்வோர் – சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் – வீட்டை
வைத்திழத்தல் போலும்,
ஆயிரங்க ளான – நீதி
யவைஉ ணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான்; – சீச்சீ!
சிறியர் செய்கை செய்தான்.
‘நாட்டு மாந்த ரெல்லாம் – தம்போல்
நரர்களென்று கருதார்;
ஆட்டு மந்தை யாமென்’ – றுலகை
அரச ரெண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள் – பலதாங்
காட்டினார்க ளேனும்,
நாட்டு ராஜ நீதி – மனிதர்
நன்கு செய்ய வில்லை.
ஓரஞ் செய்திடாமே, – தருமத்
துறுதி கொன்றிடாமே,
சோரஞ் செய்திடாமே, – பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே,
ஊரை யாளு முறைமை – உலகில்
ஓர்புறத்து மில்லை.
சார மற்ற வார்த்தை! – மேலே
சரிதை சொல்லு கின்றோம்.
(பாஞ்சாலி சபதம்- அடிமைச் சருக்கம்- 2.1.5. 15-17)
கொடுங்காலனான கொடுங்கோலன்:
மகாகவி பாரதியின் தேசபக்திப் பாடல்களில் பாரத அன்னையை மாகாளியாகவே வர்ணிக்கிறார். ருஷியாவில் கொடுங்கோலாட்சி நடத்தி வந்த ஜார் மன்னனின் வீழ்ச்சியைக் கூட மாகாளியின் கடைக்கண் பார்வையால் நிகழ்ந்தது என்றுதான் பாடுகிறார் பாரதி.
‘புதிய ருஷியா’ என்ற அந்தப் பாடல் முழுவதும் கொடுங்கோன்மைக்கு எதிரானது. கொடுங்காலனாகிவிட்ட (மக்களுக்கு யமனாகிவிட்ட) கொடுங்கோலன் ஜார் மன்னனை தனது சொல் விளையாட்டில் சாடுகிறார் பாரதி.
இப்பாடலில் பாரதி காட்டும் கொடுங்கோலாட்சிக் காட்சிகளுக்கு முற்றிலும் எதிரான காட்சிகளைக் கொண்டதே, நல்லாட்சிக்கான, செங்கோலாட்சிக்கான இலக்கணமாக இருக்க முடியும். எனவே அப்பாடல் இங்கு முழுமையாகக் கொடுக்கப்படுகிறது.
புதிய ருஷியா
(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)
மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்;
வாகான தோள்புடைத்தார் வானமரர்;
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர், புதுமை காணீர்!
இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பே ரிசைந்த பாவி
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும்; தருமந் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்;
பொய்சூது தீமை யெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்
தோங்கினவே அந்த நாட்டில்.
உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை;
பிணிகள் பலவுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்க
ளுண்டு; உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு,
தூக்குண்டே யிறப்ப துண்டு;
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே
ஆவிகெட முடிவ துண்டு.
இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால்
வனவாசம்; இவ்வா றங்கே
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்,
அம்மைமனங் கனிந்திட்டாள், அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்; முடிந்தான் காலன்.
இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன்; இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுங் குறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே!
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!
(தேசிய கீதங்கள் - புதிய ருஷியா)
மக்களை மாய்க்கும் கொடுங்கோலர்களின் ஆட்சி மறைய வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும் என்ற துடிப்பில் இப்பாடலைப் பாடியிருக்கிறார் பாரதி. ரஷ்ய நாடு புரட்சியில் 1917-இல் வெற்றியடைந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். அதை நினைத்து ஆனந்தமாகப் பாடிக் களிக்கிறார்.
இப்பாடல் சுதந்திரம் கிடைக்குமா என்று அவநம்பிக்கை கொள்ளும் இந்தியர் மனதில் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இந்திய மக்கள் அனைவரும் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டு நின்றால், ரஷ்யா கண்ட யுகப் புரட்சியை இங்கும் காண முடியும்; ஆங்கில ஆட்சியை வீழ்த்த முடியும்; மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று பாரதி எண்ணினார்.
சமூக மாற்றத்துக்கு இறையருளும் தேவை என்ற பாரதியின் கருத்தும் இப்பாடலில் வெளிப்படுகிறது. அதேசமயம், ‘ருஷியாவில் வன்முறை மூலமாக அரசை நிலைநாட்டும் ஸ்ரீமான் லெனினின் முயற்சிகள் நிலைக்காது’ என்பதையும் தனது செய்தி விமர்சனக் கட்டுரையில் பாரதி குறிப்பிட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதோ அவரது ‘சுதேசமித்திரன்’ கட்டுரையின் ஒரு பகுதி…
…தேசத்து பிறந்த சர்வ ஜனங்களுக்கும் தேசத்து செல்வம். பொது என்பது உண்மையாய்விடின், ஏழைகள்- செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமற் போகும்படி சகலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால், தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தி அடைந்து, ஜனங்களின் க்ஷேமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும். எனவே, ருஷ்யாவிலுள்ள அபேதவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையவையல்ல.
...ஆனால் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே, தீங்கு தருவனவாம். ருஷ்ய கொள்கைகளை இப்போது அனுஷ்டிக்கப்படும் ருஷ்ய முறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால், அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடித்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்து அன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும் ஏழைகளும் ஒருவரை ஒருவர் வெடிகுண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் பீரங்கிகளாலும் தூக்கு மரங்களாலும் கொல்லத் தொடங்குவார்களாயின், அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?
ஆனால், இந்த முறைமை, போர், கொலை, பலாத்காரம் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்கு சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதருக்குள்ளே சண்டைகளும், கொலைகளும் நடக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க, ஸமத்வம், ஸஹோதரத்வம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர், அவற்றை குத்து, வெட்டு, பீரங்கி, துப்பாக்கிகளால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல், மிகவும் பொருந்தாத செய்கை என நான் நினைக்கிறேன்...
ஏனென்றால், பிறர் உடமையை தாம் அபகரித்து வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர்களும், சர்வ ஜனங்களும் ஸமமான சௌகர்யங்களுடன் வாழ வேண்டும் என்ற கருத்து இல்லாத பாவிகளும், தம்முடைய கொள்ளை விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு, வாள், பீரங்கி, துப்பாக்கியால் அநேகரைக் கொலை செய்து, ஊர்களையும், வீடுகளையும் கொளுத்தியும் அநியாயங்கள் செய்வது, நமக்கு அர்த்தமாகக்கூடிய விஷயம். ஆனால், எல்லா மனிதரும் உடன் பிறந்த ஸஹோதரர் ஆவார்கள் என்றும், எல்லாரையும் ஸமமாகவும், அன்புடனும் நடத்தவேண்டும் என்று கருதும் தர்மிஷ்டர்கள், தம்முடைய கருணாதர்மத்தை நிலைநிறுத்த, கொலை முதலிய மகா பாதகங்கள் செய்வது, நமக்கு சிறிதும் அர்த்தமாகாத விஷயம்.
கொலையாலும், கொள்ளையாலும் அன்பையும், சமத்வத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர், தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.
‘இதற்கு நாம் என்ன செய்வோம்? கொலையாளிகளை அழிக்க கொலையைத்தானே கைக்கொள்ள நேருகிறது? அநியாயம் செய்வோரை, அநியாயத்தாலே தான் அடக்கும்படி நேரிடுகிறது’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார்.
இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே தவிர, அதை நீக்க வல்லாது. அநியாயம், அநியாயத்தை விருத்தி பண்ணுமே அல்லது அதை நீக்காது. பாபத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். மேலும் ரஷ்யாவிலும்கூட, இப்போது ஏற்பட்டிருக்கும் சோஷலிஸ்ட் ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையது என்று கருத வழியில்லை.…. லெனின் வழி சரியான வழி இல்லை.
(சுதேசமித்திரன்- 1917)
இதன்மூலமாக, வன்முறையும் அரசியல் சர்வாதிகாரமும் நாட்டுக்கு நல்லதல்ல என்ற மகாகவி பாரதியின் கருத்து தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. பாரதி தீர்க்கதரிசனமாக உரைத்தது போலவே, ஒருகாலத்தில் வெகுவாகப் பேசப்பட்ட சோவியத் ரஷ்யாவின் பொதுவுடைமை அரசு ஒரு நூற்றாண்டுக்குள் (1917-1989) வீழ்ந்துவிட்டதைக் காண்கிறோம்.
எனவே, நோக்கம் மட்டுமல்ல, அதற்கான செயல்முறையும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கருத்து, நல்லாட்சிக்கான அடியுரமாகும். மன்னராட்சி முடிந்து மக்களாட்சிக் காலத்தில் வாழும் நமக்கு மகாகவி பாரதியின் தெளிவான வழிகாட்டலே இக்கவிதையும் கட்டுரையும் எனலாம்.
இதுவே அன்னையின் எச்சரிக்கை:
மகாகவி பாரதி ‘செங்கோல்’ என்ற சொல்லை தனது கவிதைகளில் நேரடியாகப் பயன்படுத்தாத போதிலும், நல்லாட்சிக்கான இலக்கணத்தை செறிவான விதை போல சில கவிதைகளில் பதியமிட்டிருக்கிறார். இந்த நல்லாட்சிக்கு மாறான ஆட்சியாளர்கள் வந்தால் என்ன ஆகும்? இதோ பாரதியின் தீர்க்கதரிசனக் கவிதை…
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய் - அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்தி டுவாள்.
(தேசிய கீதங்கள்- எங்கள் தாய்- 9)
முடியாட்சியாயினும் குடியாட்சியாயினும் நாட்டு மக்கள் நலம் காக்கும் அரசே காலவெள்ளத்தில் நிலைக்கும்; தொடரும். அதனையே – நல்லறம் நாடிய மன்னரையே – அன்னை ஆசிர்வதிப்பாள். அதற்கு மாறாக தவறான ஆட்சி செய்வோரை அன்னை விழுங்கி ஆனந்தக் கூத்திடுவாள் என்று பாரதி கூறுகிறார். இங்கு அன்னை என்று குறிப்பிடுவது பாரத அன்னையையே. பாரத அன்னை வேறு யாருமல்ல, நாட்டு மக்களாகிய நாமே தாம்.
‘எங்கள் தாய்’ கவிதையிலேயே பாரத அன்னை யாரென்று பாரதி கூறிவிடுகிறார். இதோ அந்தப் பகுதி…
முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்...
அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் – தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்.
(தேசிய கீதங்கள்- எங்கள் தாய்- 3, 5)
மகாகவி பாரதி வாழ்ந்த காலத்தில் நாட்டு மக்களின் எண்ணிக்கை முப்பது கோடி, அவர்களையே அன்னையாக உருவகிக்கிறார் பாரதி. இன்று நாம் வாழும் உலகின் மிகப்பெரும் மக்கள் சக்தியாக இந்தியா உயர்ந்திருக்கிறது; நமது மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்திருக்கிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.
நல்லறம் நாடிய ஆட்சியாளர்களே, செங்கோலாட்சி புரிபவர்களே, பாரத அன்னையின் – நாட்டு மக்களின் – நல்லாசியை தொடர்ந்து பெறுவார்கள். இதுவே மகாகவி பாரதி நமக்கு கூற வந்த நல்லாட்சிக்கான சாசனம்.
இத்தகைய ஆட்சியாளர்களைக் கொண்ட நாடே வளம் பெறும்; நலம் பெறும்; செங்கோன்மையை நிலைநாட்டும்; செங்கோலென்றால் என்னவென்று உலகிற்கு வழிகாட்டும்.
(நிறைவு)
$$$
One thought on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 21”