ஆவணி அவிட்டம்‌

-மகாகவி பாரதி

வாழ்க்கையில்‌ அன்றாடம்‌ நடக்கும்‌ விஷயங்களைக் கதை போலே எழுதுவதில்‌ மகாகவி பாரதி சமர்த்தர்‌. நம்‌ தமிழ்நாட்டுச்‌ சமூகத்தின்‌ உயர்வும்‌ தாழ்வும்‌ யாவும்‌ இந்தக் கதைகளில்‌ பளிச்செனத்‌ தெரிகின்றன. ‘ஆவணி அவிட்டம்‌’ என்ற இக்கதை முதலில்‌ சுதேசமித்திரனில்‌ வெளியாகி, பிறகு மித்திரன்‌ காரியாலயம்‌ 1920-இல்‌ வெளியிட்ட  ‘கதாமாலிகா’ நூலில்‌ பிரசுரமாயிற்று.

வேதபுரத்தில்‌ அத்வைத சமாஜம்‌ ஒன்றிருக்கிறது. இதில்‌ பிராமணர்‌ மட்டும்தான்‌ சேர்ந்திருந்தார்கள்‌. வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக்கிழமைதோறும்‌ தண்டுல சாஸ்திரி என்பவர்‌ அங்கே உபந்நியாசமோ கதையோ நடத்துகிறார்‌. இந்த அத்வைத சமாஜத்துக்கும்‌ கும்பகோணம்‌ சங்கர மடத்துக்கும்‌ ஸ்நேஹம்‌.

ஸமாஜத்துக்‌ காரியதரிசியின்‌ பெயர்‌ முத்துசாமி அய்யர்‌. இவருக்கு நாற்பது வயதிருக்கும்‌. இங்கிலீஷில்‌ எம்‌.ஏ. பரீக்ஷை தேறி நூற்‌றைம்பது ரூபாய்‌ சம்பளம்‌ வாங்கிக்கொண்டு உச்சி குமாஸ்தா வேலை பார்க்கிறார்‌. இவரகத்தில்‌ குழந்தை குஞ்செல்லாம்‌ எப்போதும்‌ இங்கிலீஷ்‌ தான்‌ பேசும்‌. மனுஷ்யன்‌ நல்லவர்‌, பெரிய ஸம்ஸாரி, கொஞ்சம்‌ பயந்தவர்‌; அதிலே கொஞ்சம்‌ லோகோபகார சிந்தை. வேதபுரத்து வைதிக, லெளகிக பிராம்மணர்களை ஒன்று சேர்த்துத்‌ தான்‌ சொன்ன திதியில்‌ ஆவணியவிட்டம்‌ வகையராக்கள்‌ நடத்தும்‌ படியாகவும்‌, தன்னைக்‌ கும்பகோண மடத்தார்‌ பொருள்‌ தெரிந்து மதிக்கும்படியாகவும்‌ நடந்துகொள்ள வேண்டும்‌ என்ற நல்லெண்‌ணத்துடன்‌, அந்தத்‌ தொழிலையே லோகோபகாரமாகவும்‌ நடத்தி வருகிறார்‌.

கொஞ்சம்‌ ஆசார திருத்தக்‌ கொள்கையுடையவர்‌, ஆனால்‌ அதிலும்‌ பயக்‌ கலப்பில்‌ மெதுவாகத்தான்‌ வேலைசெய்து கொண்டு வருகிறார்‌. பரபரப்புக்‌ கிடையாது. பொறுமையுடையவர்‌. நிற்க,

… இன்று காலையில்‌ நான்‌ நம்முடைய ஸ்நேகிதராகிய இடிப்பள்ளிக்‌ கூடம்‌ பிரமராய வாத்தியாரைக்கண்டு, புரோஹிதர்‌ வந்தால்‌ என்‌ வீட்டுக்கு ஆவணியவிட்டம்‌ பண்ணுவிக்கும்பொருட்டு அனுப்பும்படி சொன்னேன்‌. பிரமராயர்‌ சொன்னார்‌: “பெரிய வாத்தியாருடைய தங்கைக்கு உடம்பு சரியில்லை. மிகவும்‌ ஆபத்தான நிலையிலிருப்பதாகக்‌ கேள்விப்பட்டேன்‌. என்ன செய்யலாம்‌? ஐயோ, பாவம்‌! கிழவி; அந்த ஆனி பெஸன்ட்‌ வயது இவளுக்குமிருக்கும்‌. அதனாலே அந்த வாத்தியார்‌ இன்றைக்கு உபாகர்மம்‌ பண்ணிவைக்கக்‌ கோயிலுக்கு வருவதே ஸந்தேஹம்‌. அவருடைய மருமகன்‌ குமார சாஸ்திரி வருவான்‌. நான்‌ கோயிலுக்குத்‌ தான்‌ போவேன்‌. ராமராயர்‌ உங்களைப்போலே, உபாகர்மம்‌, உபநயன, விஷயங்களை வீட்டுக்குள்ளேயே ரஹஸ்யமாக தடத்தி வருகிறாராகையால்‌, அந்தக்‌ குமார சாஸ்திரி என்‌ வீட்டுப்‌ பக்கமாக வருவான்‌. நான்‌ உங்கள்‌ வீட்டுக்கு உடனே அனுப்புகிறேன்‌” என்று சொன்னார்‌.

நான்‌ அவரிடம்‌, “அதென்ன, ஸ்வாமி, இந்த ப்ராமண ஸமூகத்தில்‌ வருஷந்தோறும்‌ இன்றைக்கு ஆவணியவிட்டமா, நாளை ஆவணியவிட்டமா என்கிற சண்டை நியதமாகவே நடந்துகொண்டு வருகிறதே. காரணமென்ன?” என்று கேட்டேன்‌.

அவர்‌ சொன்னார்‌:- “ஹிந்துக்களிலே பத்தாயிரத்தில்‌ ஒன்பதி னாயிரத்துத் தொள்ளாயிரத்துத்‌ தொண்ணூற்றொன்பது பேர்‌ அபண்டிதர்கள்‌. பஞ்சாங்கமே முழுவதும்‌ தப்பிதம்‌. உத்தராயண தக்ஷிணாயணக்‌ கணக்கில்‌ 22 நாள்‌ தப்பிதம்‌ போட்டிருக்கிறான்‌. இருபத்‌திரண்டுக்கும்‌ இருபத்து மூன்றுக்கும்‌ நடுவிலே. அதாவது, பஞ்‌சாங்கம்‌ பிரயோசனமில்லை. நம்முடைய வருஷ மாஸம்‌ தேதி எல்லாம்‌ தப்பிதம்‌. இதைக்‌ சுவனிக்க நாதனைக்‌ காணோம்‌. ஆவணியவிட்டச்‌ சண்டை நிர்த்தூளி படுகிறது! அஹோ அபண்டிதாஹ்‌” என்றார்‌.

“பத்திரிகைகளிலே நடக்கிறதே, அதைத்‌ தவிர இந்த உள்ளூர்ப்‌ பண்டிதர்கஞக்குள்ளே வேறே லடாயிகள்‌ உண்டோ?” என்று கேட்டேன்‌.

“அதை என்ன சொல்வேன்‌, போம்‌! அத்வைத ஸமாஜமே மிகவும்‌ த்வைத ஸ்திதியில்‌ இருக்கிறது. உச்சி குமாஸ்தா முத்துஸாமி அய்யர்‌ வியாழக்கிழமை தான்‌ பூனூல்‌ போட்டுக்கொள்ள வேண்டும்‌ என்ற கக்ஷி. மணிலாக்கொட்டை மஹாதேவய்யர்‌ வெள்ளிக்கிழமைக்‌ கக்ஷி, வெங்காயக்கடை. வெங்கு அய்யர்‌ தெரியுமோ உமக்கு? அவருக்கு முத்துஸாமி அய்யரே திதி, நக்ஷத்‌திரம்‌ எல்லாம்‌. யாராவது நம்மிடம்‌ வந்து இன்றைக்குத்‌ திதி என்ன என்று கேட்டால்‌ நாம்‌ பஞ்சாங்கத்தைப்‌ பார்த்துச்‌ சொல்லுகிறேன்‌ என்போமா மாட்டோமா? அந்த இடத்தில்‌ அவர்‌ முத்துசாமி அய்யரைப்‌ பார்த்து வந்து சொல்கிறேன்‌ என்பார்‌. அவர்கூட இந்தத்‌ தடவை ஸர்க்கார்‌ ரஜா ஆவணியவிட்டத்துக்காக வெள்ளிக்‌கிழமைதான்‌ விடுகிறார்களென்பதையும்‌, அவருடைய மாப்பிள்ளை ஸர்க்கார்‌ உத்தியோகத்தில்‌ இருப்பதாலும்‌ அவருக்கு வியாழக்‌கிழமை ரஜா கிடையாதாகையாலும்‌, வெள்ளிக்கிழமையன்று உபாகர்மம்‌ நடத்தினால்தான்‌ மாப்பிள்ளையும்‌ தானும்‌ சேர்ந்து நடத்த முடியும்‌ என்பதையும்‌ உத்தேசித்து, இந்த நிலைமையில்‌ முத்துசாமி அய்யரைக்‌ காட்டிலும்‌ கும்ப்கோணமே ப்ரமாணம்‌ என்பதாகத்‌ தீர்மானம்‌ செய்துவிட்டார்‌. ருஷ்யாவிலே குழப்பம்‌ எப்படியிருக்‌ கிறது, ஸ்வாமி?” என்று பிரமராயர்‌ முடித்தார்‌.

“அது எக்கேடும்‌ கெட்டுப்‌ போகிறது: மேலே உபாகர்ம விஷயத்தைச்‌ சொல்லும்‌” என்றேன்‌. “இந்த ஸமயத்தில்‌ கோயில்‌ தர்மகர்த்தா வீரப்ப முதலியாரும்‌ அங்கே வந்து சேர்ந்தார்‌. வந்தவர்‌ என்னை நோக்கி;- “இன்று கோயிலில்‌ பிராமண அட்டகாசம்‌ அதிகமாக நடக்கும்‌. நீங்கள்‌ கோயிலிலே பூனூல்‌ போட்டுக்‌ கொள்ளுகிறீர்களா? வீட்டில்தானா?” என்று கேட்டார்‌. ஆமென்றேன்‌. வீரப்ப முதலியார்‌ பேசத்‌ தொடங்கினார்‌:- “பூனூலை எடுத்துப்‌ போடுங்கள்‌. இந்தியா முழுவதும்‌ ஒரே ஜாதி, ஒரே ஆசாரம்‌ என்று செய்துவிட வேண்டும்‌. அதுவரை பிராமண சபை, அப்ராமண சபை, ரெட்டி சபை, வன்னியர்‌ சபை, முதலியார்‌ சபை இந்த இழவெல்லாம்‌ தீராது. ஒரே கூட்டம்‌ என்று பேசு; பூனூலென்ன, கீனூலென்ன! வீண்கதை!” என்றார்‌. பிரமராயர்‌ ஸமாதானப்படுத்தப்‌ போனார்‌.

வீரப்ப முதலியார்‌ சொல்லுகிறார்‌:- “எல்லாம்‌. தெரியும்‌, தெரியும்‌. யாரோ ஒரு ராஜாவாம்‌. அவன்‌ பூனூலை ஒரு தட்டிலும்‌, பொன்னை ஒரு தட்டிலும்‌ வைத்து நிறுத்துப்‌ பார்த்தானாம்‌. பூனூல்‌ கீழே இழுத்ததாம்‌. பொன்‌ மேலே போய்விட்டதாம்‌. இதென்ன மூட்டை! எல்லோரையும்‌ சரி சமானமாக்கு, ஐரோப்பியர்களைப்போலே நடப்போம்‌. ஜப்பானிலே அப்படித்தான்‌- ஜாதி வித்தியாசத்தை முதலிலே நீக்கிவிட்டுத்தான்‌ மறுவேலை பார்க்கத்‌ தொடங்கினார்கள்‌. ஜப்பானியரைப்‌ போலே இருப்போம்‌” என்றார்‌.

“ஹிந்துக்களைப்‌ போலவே யிருப்போம்‌” என்று நான்‌ சொன்னேன்‌.

எப்போதும்‌ பிரிவும்‌ சண்டையும்‌ இருக்க வேண்டும்‌ என்பது உம்முடைய கக்ஷியோ?” என்று வீரப்ப முதலியார்‌ கேட்டார்‌.

“வேண்டியவர்களெல்லாம்‌ பூனூல்‌ போட்டுக்‌ கொள்ளலாம்‌. அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக்‌ காலத்தில்‌ ஏற்‌பட்டது. இஷ்டமான ஹிந்துக்களெல்லாரும்‌ பூனூல்‌ போட்டுக்‌ கொள்ளலாம்‌. மற்றவர்கள்‌ ஸரிஸமானமாக இருக்கலாம்‌. பூனூல்‌ இருந்தாலும்‌ ஒன்றுபோலே, இல்லாவிட்டாலும்‌ ஒன்றுபோலே, ஹிந்துக்களெல்லாம்‌ ஒரே குடும்பம்‌. அன்பு காப்பாற்றும்‌. அன்பே தாரகம்‌” என்றேன்‌.

“அன்பே சிவம்‌” என்று பிரமராயர்‌ சொன்னார்‌. இவ்வளவுடன்‌ காலை சபை கலைந்த்து.

$$$

Leave a comment