பகவத் கீதை – ஐந்தாம் அத்தியாயம்

-மகாகவி பாரதி

செயலைச் செய்யாமல் துறப்பதை விட, செயலின் பலன்களைத் துறந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதே பிறவி நோக்கம் என்கிறார் பார்த்தசாரதி, ஐந்தாம் அத்தியாயத்தில். இன்பம் - துன்பம் என்ற இருமையை நீங்கியவனே சந்நியாசி. அத்தகையவன் “விரும்பிய பொருளைப் பெறும்போது களி கொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்” என்கிறான் கண்ணன்.

ஐந்தாம் அத்தியாயம்: சந்யாச யோகம்

கர்மயோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும், ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கி யிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை அளிக்கும் என்று கூறுபவர் பலர். அவர்கள் அறிவில் தேர்ச்சி பெறாதவர்கள். ஆனால், கர்ம யோகமின்றி, ஞான யோகத்தைப் பெற இயலாது. சுக துக்கங்களைப் பொருட்படுத்தாமல் கர்ம யோகத்தையே தழுவியிருந்தால் பலனைக் கடுகப் பெறலாம். எல்லா ஆத்மாக்களும் ஒரே மாதிரியானவை. தோற்றும் வேறுபாடுகளெல்லாம் தேக சம்பந்தத்தால் வந்தவை என்ற உணர்வு வேண்டும்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. கண்ணா! செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்கு நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

2. துறவு, கர்ம யோகம், இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றுள் கர்மத் துறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.

3. பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய். பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

4. சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலைபெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.

5. சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையான்.

6. பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.

7. யோகத்திலே மருவித் தூய்மை யுற்றோன், தன்னை தான் வென்றோன். இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானேயானவன், அவன் தொழில் கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.

8. உண்மை அறிந்த யோகி,   ‘நான் எதனையுஞ் செய்வதில்லை’ என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,

9. புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும்,  ‘இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன’ என்று கருதியிருக்கக் கடவான்.

10. செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்திவிட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவன், நீரில் தாமரையிலைபோல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

11. யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும் அன்றி வெறும் இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.

12. யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.

13. தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லாக் கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.

14. செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் – இவற்றுளெதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல் பெறுகிறது.

15. எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள், மயக்கமெய்துகின்றன.

16. அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

17. பிரம்மத்தில் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.

18. கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினத்தும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனித்தும் பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

19. மனம் சம நிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சம நிலையுற்றது ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

20. விரும்பிய பொருளைப் பெறும்போது களி கொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தியுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலை பெறுகிறான்.

21. புறத் தீண்டுதல்களில் பற்றுதல்கள் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.

22. புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்திற்குக் காரணங்களாகும். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

23. சரீரம் நீங்குமுன்னர், இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி, அவன் இன்பமுடையோன்.

24. தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

25. *1 இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத்தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சியெய்தும் ரிஷிகள் பாவங்களொழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

26. விருப்பமும், சினமும் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

27. புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி, மூக்கினுள்ளே இயங்கும் பிராணவாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்து கொண்டு;

28. “புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக்கெனக் கொண்டு விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்தான் முக்தனே யாவான் முனி.”

29.  “வேள்வியும் தவமும் *2 மிசைவோன் யானே உலகுகட் கெல்லாம் ஒருபேரரசன் எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்றறிவான் அமைதி யறிவான்.

அடிக்குறிப்புகள்:

*1 நன்மை - தீமை; குளிர் - சூடு; இன்பம் - துன்பம் என எல்லாப் பொருள்களைப் பற்றி நிற்கும் இரட்டை நிலைகள்
*2 மிசைவது = உண்பது

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s