-நடிகர் விவேக்
சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஓராண்டு ரத யாத்திரையின் நிறைவு விழா, கோவை பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயத்தில் 12, ஜனவரி 2014 22 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மறைந்த நடிகர் விவேக் (1961- 2021) பேசியதன் சுருக்கம் இது…

விவேகானந்தர் துறவிகளில் மட்டுமல்ல, மனிதர்களுள் சிறந்தவரும் ஆவார். பெண்மைக்கு முக்கியத்துவம் அளித்த முதல் புரட்சிச் சிந்தனையாளர். கல்வி,வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றால் தான் இந்தியா உயர முடியும் என்று தீர்க்கமாக நம்பியவர். நூறு யானைகளின் பலத்தையொத்த வலிமையும்,சிங்கங்களின் கர்ஜனை போன்ற வீரத்தையும் உடையவர். உண்மை, தன்னம்பிக்கை, ஆண்மையின் உருவமாக இவரை உலகம் பார்த்தது. எப்போதும் இளைஞராக உருவகிக்கப்படும் இவர் இளைஞர்களின் மனதில் நம்பிக்கை விதையை விதைத்தவர்.
தன்னுடைய வீர உரைகளால் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பல தலைவர்களை உருவாக்கியவர் விவேகானந்தர். பொதுவாக துறவிகள் என்றாலே சாந்தமாக, அமைதியாகப் பேசுபவர்களாகவே தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் துடிப்பும், கத்தி போன்ற கூர்மைடைய கருத்துக்களையும், வீரம் ததும்பும் வடிவையும் உடையவராக விளங்கினார் சுவாமி விவேகானந்தர்.
அனைத்து மதங்களையும் மதிக்கும் மனப்பான்மையை நம் மனதில் விதைத்த முதல் சமதர்மவாதி. இந்தியாவில் முதன்முதலாக தகுந்த ஊக்கத்தை வழங்கி இந்திய அறிவியல் நிறுவனத்தினை ஆரம்பிக்க அடித்தளமிட்டவரே சுவாமி விவேகானந்தர்தான் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்? இந்த நிறுவனத்திலிருந்து தான் நம்மால் ஒரு அப்துல் கலாமைப் பெற முடிந்தது.

தமிழகத்தில் பிறந்ததாலோ என்னவோ தேசியகவியான பாரதிக்கு இதுவரையிலும் முறையான தேசிய அங்கீகாரம் கிடைத்ததில்லை. ஆனால் வங்கத்தில் பிறந்த சுவாமி விவேகானந்தரை தமிழகம் தான் உச்சிக்குக் கொண்டு சென்றது. தமிழகத்திற்கு வரும்வரை இந்தியா இவரைக் கண்டுகொள்ளவில்லை.
பாரதி சுதந்திரம் அடைவதற்கும் முன்னரே ‘அதனை அடைந்துவிட்டோமே’ என்று பள்ளுப் பாடினார். விவேகானந்தரும் இந்தியாவிற்கு இன்னும் 50 ஆண்டுகளில் சுதந்திரம் கிடைக்கும் என்றார். அதுபோலவே கிடைத்தது. இருவருமே நாட்டின் அடித்தட்டு ஏழைகளைப் பற்றி சிந்தித்தனர். பெண்களின் உயர்விற்காக இருவருமே ஏங்கினர். ஏழைகளின் பட்டினியைப் போக்காத மதமோ, கடவுளோ நமக்குத் தேவையில்லை என்ற இவ்விருவருமே, ஒத்த கருத்துடைய புரட்சிச் சிந்தனையாளர்களாகப் பரிணமித்தார்கள்.
அதனால்தான் விவேகானந்தர், காந்திஜி, ராஜாஜி, நேதாஜி போன்ற தலைவர்களுக்கு வழிகாட்டியாக அமைய முடிந்தது. இன்று தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் விவேகானந்தர் ரதம் சென்றிருக்கிறது. லட்சக் கணக்கான கிராம மக்கள் சாதி, மதம் பாராமல் இதற்கு வரவேற்பளித்ததே, இந்தியாவின் உண்மையான தலைவராக இன்றும் விவேகானந்தரே இருக்கிறார் என்பதற்குச் சான்றாக அமைந்தது.
- நன்றி: தினமணி
$$$