-வ.மு.முரளி
2026ஆம் வருடத்திய ஜன் விஸ்வாஸ் சட்டம், ஒழுங்குமுறை என்ற பெயரில் நடைபெறும் துன்புறுத்தல்களை இல்லாமல் ஆக்குகிறது; ஜன விஸ்வாஸ் சட்டமானது, அதிகப்படியான சட்டத் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது. எனவே, இதன் விளைவுகள் தொழில் துறையிலும் மக்களின் அன்றாட வாழ்விலும் சிரமங்களைக் குறைத்து, தொழில், வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்.

ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 1, 2026இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் நம்பிக்கை (விதிமுறை திருத்த) சட்ட மசோதா’ என்று சொல்லலாம். நம் நாட்டில் சிறு குற்றங்களுக்கும் கூட சிறைத் தண்டனை வழங்கிவந்த காலாவதியான பல சட்டங்களைச் சீர்திருத்தும் நோக்கத்தோடு, சிறு விதிமீறல்களுக்கு சிறைத் தண்டனையின்றி அபராதம் மட்டும் விதிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய சட்ட சீர்திருத்தம் ஆகும். இதன்மூலமாக, நாடு முழுவதும் தேக்கமடைந்துள்ள 4.8 கோடி வழக்குகள் மறு ஆய்வு செய்யப்பட்டு விரைவில் எளிய முறையில் தீர்வு காணப்படும். இதன்மூலம் இனிமேல் சிறு குற்றங்கள், விதிமீறல்கள் அனைத்தும் குற்றமற்றதாகவே கருதப்படும்.
மேலும் தற்போது நீதிமன்ற வழக்கில் உள்ள சுமார் 717 சிறு குற்றங்களை குற்றம் அற்றதாகக் கருதி, அவற்றை குற்றவியல் பிரிவிலிருந்து நீக்கி, அபராதம் அல்லது எச்சரிக்கை விடுக்கும் உரிமையியல் விதிமீறல்களாக இந்தச் சட்டம் மாற்றியுள்ளது. மேலும் 67 சட்டப்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நீதிமன்றங்களின் பணிச்சுமை குறைவதோடு, சிறைச்சாலைகளிலும் நெரிசல் குறையும் என்று கருதப்படுகிறது.
இதற்கான அடிப்படைத் தரவுகளை பல்வேறு அமைச்சகங்கள், தொழில் அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் வழங்கினர். ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்களுடன், 24 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழுவால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு, 49 ஆலோசனைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட பிறகே, ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்த மசோதா உருவாக்கப்பட்டது.

இந்த மசோதா, காலாவதியான சட்டங்களை எளிமையாக்குவதிலும், தேவையற்ற குற்றவியல் விதிகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது 23 அமைச்சகங்களை உள்ளடக்கிய 80 மத்தியச் சட்டங்களில் உள்ள 784 விதிகளைத் திருத்துகிறது. 42 மத்திய சட்டங்களில் இருந்த குற்றவியல் தண்டனைக்குரிய 183 சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இது விதிமுறைகளுக்கு மக்கள் தாமாக இணங்குவதை எளிதாக்குகிறது. இந்தச் சீர்திருத்தத்தின் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட சிறு குற்றங்கள் முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1940ஆம் வருடத்திய மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தில் இருந்த சிறு பிழைகள் மீதான குற்றவியல் அம்சங்கள் நீக்கப்பட்டதால் மருந்து உற்பத்தித் துறைக்கு சட்டச் சிக்கல்களிலிருந்து நிம்மதி கிடைக்கும். 1957ஆம் வருடத்திய தில்லி அபிவிருத்தி சட்டம், 1994ஆம் வருடத்திய புது தில்லி முனிசிபல் கவுன்சில் சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களால், சிறிய உள்ளாட்சி விதிமீறல்களுக்கு சிறை போன்ற கடும் தண்டனைகள் அகற்றப்பட்டிருக்கின்றன.
1956ஆம் வருடத்திய தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சரக்குப் போக்குவரத்து, உள்கட்டமைப்புத் துறைகளில் தொழில் புரிவதை எளிமைப்படுத்தும். 1988ஆம் வருடத்திய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், சிறிய குற்றங்களும் விதீமீறல்களும் குற்றவியல் தண்டனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. எனினும் சாலைப் பாதுகாப்பு தொடர்புடைய கடுமையான குற்றங்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
நம் நாட்டில் தொழில் அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்திற்கான மத்திய அரசுத் துறையால் (DPIIT) அங்கீகரிக்கப்பட்ட 2012 லட்சம் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் (புத்தொழில் நிறுவனங்கள்) உள்ளன. விதிமீறல்களுக்கு கடும் தண்டனை என்ற விதிமுறை தளர்த்தப்பட்டிருப்பதால், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்ட முனைப்பில் செயல்படும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கும் சிரமங்கள் குறைந்துள்ளன.
அளவையாக்கச் சட்டத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தத்தால், லேபிள் பதித்தல், பேக்கிங் செய்தல் ஆகியவற்றில் நிகழும் சிறு பிழைகளுக்கு ஓராண்டு சிறை என்ற கடும் தண்டனை நீக்கப்பட்டிருக்கிறது. மாறாக சிறு பிழைகளையும் விதிமீறல்களையும் திருத்திக்கொள்ள புதிய மசோதா வாய்ப்பளிக்கிறது.
இந்தச் சீர்திருத்தம், ‘குறைந்தபட்ச அரசு – அதிகபட்ச ஆளுகை’ என்ற நரேந்திர மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது. இந்த மாற்றம், தொழில்நுட்பத் தவறுகள் மற்றும் நடைமுறைப் பிழைகள் குற்றமாகக் கருதி தண்டிக்கப்படும் என்ற அச்சத்தைப் போக்குகிறது. மேலும், இந்த நடவடிக்கை, சிறு தவறுகளால் வணிகங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளைக் குறைக்கிறது.
இதுவரை தண்டனை அச்சத்துடன் தொழில் புரிந்து வந்த நிலை மாறி, மக்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் சிறு குற்றங்களைத் திருத்தும் வகையில் நம்பிக்கை அடிப்படையிலானதாக, ஜன் விஸ்வாஸ் திருத்தச் சட்டம் மூலமாக, பல சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. இது இந்திய தொழில்துறையின் போட்டியிடும் திறனுக்கு ஊக்குவிப்பாக அமையும்.
உலக அளவில் தொழில் நடத்துவது எளிதாக உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இப்பட்டியலில் இந்தியா 2014இல் 142வது இடத்தில் இருந்தது, 2020இல் 63வது இடத்துக்கு முன்னேறி இருந்தது. ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்தம் மூலமாக, இந்தப் பட்டியலில் இந்தியா மேலும் முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 791 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இது அடையாளமாகும். புதிய சட்டத் திருத்தம் இதனை மேலும் அதிகரிக்கும்.
அதிகார வர்க்கத்தின் சிவப்புநாடா முறையையும், நீதிமன்றங்களில் குவியும் விதிமீறல் வழக்குகளின் எண்ணிக்கையையும் புதிய சட்டத் திருத்த மசோதா குறைக்கும். இதனால் நீதித்துறையின் பணிப்பளு 30 % வரை குறையும் என்று மதிப்பிடப்படுகிறது. இதனால், பெருங்குற்றங்களை விசாரிப்பதில் மட்டும் நீதிமன்றங்கள் கவனம் கொடுக்க முடியும். தவிர, வர்த்தக தாவாக்களை நீதிமன்றம் செல்லாமலே தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் ‘உரிமம் – அரசு ஒதுக்கீடு’ (லைசென்ஸ்- கோட்டா) முறை அமலில் இருந்தபோது சிக்கலான சட்ட விதிமுறைகள் கோலோச்சின. அதுவே அதிகாரவர்க்கத்தின் ஊழலுக்கும் இடைத்தரகர்களின் தலையீட்டுக்கும் காரணமானது. 2012ஆம் ஆண்டு வோடஃபோன் நிறுவனமும் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனமும் முன்னோக்கு வரிவிதிப்பால் அவதிப்பட்டபோது உலக அளவில் இந்தியாவின் நற்பெயர் குலைந்தது. மாறாக, சட்டங்களை எளிமையாக்குவதன் மூலம் தொழில் புரிவதில் விதிமுறைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு மோடி அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது.
2026ஆம் வருடத்திய ஜன் விஸ்வாஸ் சட்டம், ஒழுங்குமுறை என்ற பெயரில் நடைபெறும் துன்புறுத்தல்களை இல்லாமல் ஆக்குகிறது; ஜன விஸ்வாஸ் சட்டமானது, அதிகப்படியான சட்டத் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது. எனவே, இதன் விளைவுகள் தொழில் துறையிலும் மக்களின் அன்றாட வாழ்விலும் சிரமங்களைக் குறைத்து, தொழில், வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்.
$$$