கதீமா: பரிதாபத்திற்குரிய பணிப்பெண்

-வ.மு.முரளி

மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் உள்ள ‘கஃபாலா’ என்ற தொழிலாளர் ஒப்பந்த முறையின் அநியாயம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒரு குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார், கேரளத்தைச் சார்ந்த இளம் இயக்குநர் கோவிந்த் கே. சஜி. அது தொடர்பான ஓர் அறிமுகம் இங்கே...

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் நடைமுறையில் உள்ள தொழிலாளர் ஒப்பந்த முறை ‘கஃபாலா’. அந்த நாட்டில் உள்ள வசதியானவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும் வேலை செய்ய வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வருவித்துக்கொள்ள அந்நாட்டு அரசுகள் அனுமதி அளிக்கின்றன. அவரே வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளியின் சட்டப்பூர்வமான காப்பாளர் (கஃபீல்).

மன்னராட்சி நிலவும் வளைகுடா நாடுகள் 1970களில் எண்ணெய் வளத்தால் கொழிக்கத் தொடங்கியபோது அந்நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உடலுழைப்பு தேவைப்பட்டது. அப்போது, ஆயிரம் ஆண்டுகளாகவே அப்பகுதியில் பின்பற்றப்பட்டுவந்த கஃபாலா நடைமுறை வேகம் பெற்றது. உள்நாட்டில் தொழிலாளர்கள் போதாதபோது வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வருவிக்கப்பட்டனர்.

இஸ்லாமியர்களின் புனித நூலில் கஃபாலா விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பணியில் அமர்த்தப்படுபவரின் உரிமைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், செயல்பாடு என்று வரும்போது, விதிமுறைகள் அனைத்தும் செல்லாக்காசாகி விடுகின்றன. கஃபாலா முறையால் அராபியர்களால் பாதிக்கப்பட்டவர்களில் பிற மதத்தினர் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும் உண்டு.

பணியமர்த்துபவரின் ஆதிக்க உணர்வும், பணிபுரியும் நாடுகளின் சட்டதிட்டங்கள் உள்ளூர்வாசிகளுக்கே சாதகமாக இருப்பதும், அறவுணர்வற்ற சூழலை உருவாக்கி, தொழிலாளர்களின் கண்ணீர்க்கதைகளாக உருவெடுக்கின்றன. வேலை அளிப்பதாக அழைத்துக் கொள்ளும் அராபிய முதலாளியின் கொத்தடிமைகளாக மாறும் அவலம், இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. 

உலகம் முழுவதிலும் இருந்து, அதிலும் ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகளிலிருந்து லட்சக் கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் இவ்வாறு ஒப்பந்தத் தொழிலாளர்களாக வளைகுடா நாடுகளில் (சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்) பணி புரிகின்றனர். இவர்களில் சுமார் 30 % பேர் பெண்கள். ஜோர்டான், லெபனான் நாடுகளிலும் இந்த நடைமுறை உண்டு. இஸ்ரேலில் நடைமுறையில் இருந்த இம்முறை அந்நாட்டு நீதிமன்றத்தால் 2006இல் ரத்து செய்யப்பட்டது.

இவர்கள் பெரும்பாலும் நல்ல வேலை, நல்ல ஊதியம் என்று ஆசை காட்டப்பட்டு இடைத்தரகர்களால் வெவ்வேறு நாடுகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இவர்களில் பெரும் பகுதியினர்  அங்கு சென்ற பிறகே அடிமை போல நடத்தப்படுவதை உணர்கின்றனர். ஆனால், அங்கிருந்து வெளியேற முடியாத விஷவட்டத்தில் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

கஃபாலா ஒப்பந்த முறையை தங்கள் வசதிக்கேற்றபடி மாற்றி அமைத்துள்ள அரசாங்கங்கள், வேலை அளிப்பவருக்கு (முதலாளி என்று வைத்துக் கொள்வோம்) விசா ஏற்பாடு உள்ளிட்ட உச்சபட்ச அதிகாரத்தை அளிக்கின்றன. அதன் காரணமாக, பணியாளரின் பாஸ்போர்ட்டைக் கைப்பற்றி வைத்துக் கொண்டு, தொழிலாளியை சில முதலாளிகள் கொத்தடிமை போல நடத்துகின்றனர். பணியாளரால் அவர்களிடமிருந்து விடுபட்டு வேறு வேலைக்கு மாற முடிவதில்லை; பணியிடத்தில் நல்ல சூழலில் வாழ முடிவதில்லை; இந்த வேலை வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் கூட, அந்நாட்டை விட்டு வெளியேற முடிவதில்லை.

இதுதொடர்பாக உலக அளவில் விழிப்புணர்வு உருவாகி, கண்டனங்கள் எழுந்த போதிலும் சில அராபிய நாடுகளில் இன்றும் இந்த ஒப்பந்தப் பணியாளர் முறை தொடர்கிறது.

2020இல் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த இளம்பெண் ஜெனலின் விலாவண்டே  ‘கதீமா’வாகச் சென்று குவைத்தில் முதலாளியால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டபோது, உலகம் முழுவதிலும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய முதலாளியால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷைச் சார்ந்த சுமி அக்தேர் (2019), முதலாளியின் கொடுமையிலிருது தப்ப மாடியிலிருந்து குதித்ததால் வலது கையை இழந்த தமிழகத்தைச் சார்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (2015) ஆகியோர் சவூதி அரேபியாவில் இருந்து மீண்டு வந்தபோது, கஃபாலாவின் கொடூரத்தை உலகம் உணர்ந்தது.

சவூதி அரேபியாவில் 2025 ஜூன் மாதம் முதல் இந்த நடைமுறைக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கத்தார் நாட்டில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 2009இல் பஹ்ரைனில் இந்த ஒப்பந்த முறையில் சீர்திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. ஆயினும் இன்னமும் இந்தக் கொடிய ஒப்பந்த முறை சில நாடுகளில் தொடர்கிறது.

இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கேரளத்தைச் சார்ந்த இளைஞர் கோவிந்த் கே. சஜி ‘கதீமா; ஒரு பணிப்பெண்’  என்ற அற்புதமான குறும்படத்தை (Khadima: The Caregiver) எடுத்திருக்கிறார்.

கோவிந்த் கே. சஜி

அரபு நாடுகளில் உள்ள குழந்தைகள், வயதானவர்களைப் பராமரிக்க வெளிநாடுகளில் இருந்து பெண் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு பராமரிப்பாளராக (கதீமா) நியமித்துக் கொள்வதும் கஃபாலா முறையில் வருகிறது.

14.18 நிமிடங்களே ஓடும் இந்த மலையாளக் குறும்படம், உலக அளவில் கவனத்தை ஈர்த்திருப்பதுடன், பல சர்வதேச விருதுகளையும் கோவிந்த் கே.சஜிக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

கேரளத்தின் அழகிய கிராமம் ஒன்றிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் செல்கிறாள் ஜானகி. அவளது மகன் சிறப்புக் குழந்தை அச்சு (படத்தில்: அனய் கிருஷ்ணலால்). அவனை தோழியான மரியா கவனித்துக் கொள்கிறாள். நல்ல சம்பளம், நல்ல வேலை என்ற வாக்குறுதியை நம்பி, பல கனவுகளுடன் செல்லும் அவளுக்கு 3 ஆண்டுகள் நடக்கும் கொடுமைகளை சில வசனங்களில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களை வருந்தவைத்து விடுகிறார் கோவிந்த்.

பணியிடத்தில் முதலாளியால் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஜானகி, அதனை எதிர்ப்பதால் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறாள். இரண்டு நாட்கள் தண்ணீர் கூட கொடுக்காமல் ஓர் அறையில் அடைத்து வைக்கப்படுகிறாள். பிறகு இஷ்டம் போல அவளைக் கொடுமைப்படுத்துகிறான் முதலாளி சலீம். இதனை நமக்கு தனது மிகையற்ற இயல்பான நடிப்பால், தகவலாகச் சொல்வதன் மூலமாகவே மிக எளிதாகச் சேர்த்து விடுகிறார் ஜானகியாக நடிக்கும் அஜிஷா பிரபாகரன். பாஸ்போர்ட்டைப் பறித்து வைத்துக்கொண்டு  செக்ஸ் அடிமையாக தன்னை முதலாளி (படத்தில்: ரஷீன் கான்) நடத்துவதை அவர் விவரிக்கும்போது, ‘போதும், வேண்டாம்’ என்கிறாள் தோழி மரியா (படத்தில்: காயத்ரி கோவிந்த்). தொலைபேசியில் உள்ள விடியோகால் வசதியைப் பயன்படுத்தி இருவரும் பேசிக் கொள்வதாக மிகவும் லாகவமாக குறும்படத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.

ஜானகியின் துயரம் கண்டு, அங்கிருக்கும் மற்றொரு மலையாளியான அகமது இக்கா உதவுகிறார். எப்படியாவது இந்தியத் தூதரகம் சென்று விட்டால் அங்கிருந்து மாற்று பாஸ்போர்ட் பெற்றுக்கொண்டு தாய்நாடு திரும்பிவிடலாம் என்ற ஆபத்தான திட்டத்துடன் விமானப் பயணச்சீட்டை வாங்கி வருகிறார் அகமது (படத்தில்: குமார் சுனில்). மொத்தமே ஐந்து பாத்திரங்கள் தான். முதலாளியின் உதவிக்கு வரும் மூன்று அராபியரும் உண்டு. ஜானகி இந்தியா திரும்பினாளா என்பதே கதை.

இந்தக் குறும்படத்தை கோவிந்தின் மனைவி ஸ்ருதா சுரேஷ் தயாரித்திருக்கிறார். பணிப்பெண்ணின் மன உறுதிக்கும், வக்கிரமான ஆதிக்க சக்திக்கும் இடையிலான போராட்டம், கஃபாலா முறையின் கொடூரம் ஆகியவை மிகவும் நேர்த்தியாக திரைக்கதையில் பின்னப்பட்டுள்ளன.

தனது  ‘கதீமா’ குறும்படத்திற்கு படைப்பு ஆலோசகராக இருந்த ரஃபீக் ராவுத்தரை நன்றியுடன் நினைவு கூர்கிறார் கோவிந்த். அவர் கேரளத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பணிநிமித்தமாகச் சென்று அல்லல்பட்ட ஆயிரம் பேருக்கு மேல் பேட்டி எடுத்து, கைரளி டி.வி.யில் பதிவு செய்தவர்.

விதிவசப்பட்ட மனிதர்களின் பரிதாபகரமான வாழ்க்கை, தனது தாய்க்கு நேரிட்டிருக்கும் விபரீதம் புரியாமல் உலக உருண்டையை உருட்டியபடி நாடுகளின் பெயர்களை ஒப்பிக்கும் சிறப்புக் குழந்தை அச்சு வெளிப்படுத்தும் குறியீடு, மதம் கடந்து உதவி செய்யும் மானுடநேயம், பின்னணியில் மெல்லிய வயலின் இசைக்கோர்ப்பு என, சர்வதேச விருதுகள் தேடிவரத் தேவையான அனைத்தும் இந்தக் குறும்படத்தில் இருக்கின்றன. 

ஒரு கலைப்படைப்பு, அநியாயத்திற்கு எதிராக மக்களைக் கொந்தளிக்கச் செய்வதாக இருக்க வேண்டும்; படைப்பின் முடிவு எப்படி இருந்தாலும், அற உணர்வை ஏதாவது ஒரு வகையில் பார்வையாளரின் மனதில் பதியச் செய்ய வேண்டும். அந்த வகையில் கோவிந்த கே.சஜி நம்பிக்கை அளிக்கும் திரை இயக்குநராக உருவெடுத்து வருகிறார்.  ‘கதிமா’ குறும்படம், கோவிந்தின் படைப்பாற்றலின் வாமன ரூபம். இவரது விஸ்வரூபத்திற்காக ஹாலிவுட் திரையுலகம் காத்திருக்கிறது.

$$$

பெட்டிச் செய்தி:

சாதனையை நோக்கிய பயணம்

கேரளத்தின் திருச்சூர் நகரில் பிறந்தவர் கோவிந்த் கே.சஜி (37). இவரது தந்தை சி.கே.சஜி கே.நாராயணன் பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் அகில பாரதத் தலைவராக இருந்தவர். இளம் வயதிலேயே புத்தகங்கள், இசை, குறுந்தகடுகடுடன் வளர்ந்த கோவிந்த், குறும்படக் கதைசொல்லியாக மாறிய பரிணாம வளர்ச்சி கவனிக்கத் தக்கது.

கோவிந்த் மின்னியல் மற்றும் மின்னணுவியலில் பட்டம் பெற்றவர். மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெட் ஒர்க்கிங், ஃபிலிம் மேக்கிங் ஆகியவற்றில் டிப்ளமோவும் பெற்றவர். சிறு வயதில் இருந்தே புகைப்படக் கலையில் ஆர்வம். (பள்ளிப்படிப்பு முடித்தவுடன் தந்தை வாங்கிக் கொடுத்த கேமரா தான் தனது வாழ்க்கையை வடிவமைக்க உதவியது என்கிறார் கோவிந்த்). 2011 வரை பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவர், தனக்குள் ஒளிரும் கனலைக் கண்டுகொண்டு, 2014 முதல் தனது கனவுத் துறைக்கு மாறினார்.

கரோனா தொற்றுக்காலத்தில் அமெரிக்கா சென்ற அவர் அங்குள்ள நியூயார்க் ஃபிலிம் அகாதெமியில் சேர்ந்து எம்.எஃப்.ஏ. (2024) பட்டம் பெற்றார். அப்போது கோல்ட் ரைஸிங் கல்வி உதவித்தொகையைப் பெற்றவர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள  ‘விஷுவல் நரேட்டிவ் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தில் படைப்புத் தயாரிப்பாளராகப் பணிபுரிகிறார்.

பெரும் நிறுவனங்களுக்கான விளம்பரப் படங்கள், இசை விடியோக்கள், ஃபேஷன் படப்பிடிப்புகள் போன்றவை இவரது தொழில்ரீதியான பணிகள். மனதுக்கினிய பணி, குறும்படம் எடுப்பது. இதுவரை Framed, A Bedtime Story, The Maid, Khadima ஆகிய 4 குறும்படங்களை இயக்கி இருக்கிறார். Franky குறும்படத்தில் இவர் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறார்.

‘கதீமா’ குறும்படம் இப்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இதனை முறைப்படி ரசிகர்களின் பார்வைக்கு விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் கோவிந்த்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பறந்து பறந்து படம் பிடித்துக் கொண்டிருக்கும் கோவிந்தின் ஆசை, உலக அளவில் மிகச் சிறந்த திரை இயக்குநர் என்ற நிலையை அடைவது! 

$$$

Leave a comment