-கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், டி.கே.எல்.ஸ்ரீராம், அரவிந்தன் நீலகண்டன், ஆமருவி தேவநாதன், நம்பி நாராயணன், வெங்கடசுப்பிரமணியன் ராமமூர்த்தி, வ.மு.முரளி
திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில (முகநூல் பதிவுகள்) இங்கே…

.
அ. தமிழ் இலக்கியத்துக்கு மானக்கேடு!
-கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்
வைரமுத்துவுக்கு ஞான பீடம் அறிவிக்கப் பட்டிருப்பது தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும், மொழிக்கும் ஏற்பட்டிருக்கும் மானக்கேடு, கேவலம்.
சரியாகச் சொன்னால் அது ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இருவருமே ஒரேவகையான அற்பர்கள் தாம். ஆட்களை சென்று சென்று பார்த்து, அணுகி அணுகி தூதுவிட்டு, பொய் பேசி, தளுக்கி, உயர் அதிகாரபீடங்களை நெருங்குபவர்கள். ஆனால் படைப்பின் பொருட்டு என வைத்துப் பார்த்தால், தமிழில் ஜெயமோகனின் படைப்புகள் மாத்திரமே அந்த விருதுக்குத் தகுதியானவை. இந்தக் காலத்தில் அது ஜெயமோகனுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும்.அதுவே தமிழ் மொழிக்கு உரிய பெருமை.
இப்போது நடந்திருப்பது மிகப் பெரிய தாழ்ச்சி, சீர்கேடு. மகா ஊழல். எப்படி இவ்வாறு எல்லாம் நடக்கிறது என்பதை என் போன்றவர்களால் புரிந்து கொள்ளவே இயலவில்லை. அதனைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது.
சங்கடப்படுவது, சபிப்பது தவிர இதற்கு வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. இந்த மானக்கேட்டுக்குக் காரணமானவர்கள் யார் என்பதையேனும் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்
இந்த விஷயங்களில் இருந்தெல்லாம் உண்மையான கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்களை எடுத்து கூடுமானவரையில் ஒளித்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு வழி இல்லை. என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய அண்டைவீட்டார் கூட எழுத்துடன் தொடர்புடையவர் இவர் என அறிந்து வைத்திருப்பதை நான் விரும்பவில்லை. இலக்கிய அடையாளம் இப்போதெல்லாம் பெரிய மானக்கேடு அடைந்து கிடக்கிறது.
இதுபோன்ற கேவலங்களில் எள்ளளவும் இல்லாதிருக்க வேண்டும் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது.
$$$
ஆ. இது தனியார் விருது!
-டி.கே.எல்.ஸ்ரீராம்
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருது, மத்திய அரசால் வழங்கப்படுவது கிடையாது.
இந்த விருதை பாரதிய ஞானபீடம் (Bharatiya Jnanpith) என்ற தனியார் பண்பாட்டு அமைப்பு வழங்குகிறது.
இது 1944-இல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் மற்றும் அவரது மனைவி ரமா ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்டது.
முதல் விருது 1965-ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் ஜி. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது.
ஞானபீட விருதுக்கும் மத்திய அரசுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை.
அரசு விருதுகளான ‘சாகித்ய அகாதெமி’ போன்றவற்றுடன் இதை ஒப்பிடக் கூடாது; அவை மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளால் வழங்கப்படுபவை.
இருப்பினும், இந்த விருதின் கௌரவம் கருதி, பெரும்பாலும் நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் தான் விழாவில் கலந்துகொண்டு விருதை வழங்குவார்கள்.
விருது பற்றிய முக்கிய விவரங்கள்:
பரிசுத் தொகை | ரூ. 11 லட்சம், பாராட்டுப் பத்திரம் மற்றும் வெண்கலத்தால் ஆன சரஸ்வதி சிலை.
விருதுக்கு தகுதி என்னவென்றால், இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும்.
தேர்வு முறை நடக்கும் விதம் எப்படி என்றால், ஒரு குறிப்பிட்ட நூலுக்கு மட்டுமல்லாமல், அந்த எழுத்தாளரின் ஒட்டுமொத்த வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.
இதுவரை அகிலன், ஜெயகாந்தன் மற்றும் கவிஞர் வைரமுத்து (2024-ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது) ஆகியோர் பெற்றுள்ளனர்.
திரும்பவும் சொல்வது என்னவென்றால், மத்திய அரசு நேரடியாக சாகித்ய அகாதெமி விருதுகளைத் தான் வழங்குகிறது.
ஞானபீடம் என்பது ஒரு கௌரவமிக்க தனியார் இலக்கிய அங்கீகாரம்.
ஆகவே யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
$$$
இ. பண்பாட்டுக்கு நேர்ந்த தீக்கனவு
-அரவிந்தன் நீலகண்டன்
வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்குவது என்பது பண்பாட்டுக்கு நேர்ந்த தீக்கனவு. மிகப்பெரிய மதிப்பீட்டு வீழ்ச்சி. அது தமிழ் மொழிக்கு இழைக்கப்பட்ட ஓர் அவமதிப்பு. உன்னதத்தின் பெயரால் அருவருப்புக்கு முடிசூட்டும் செயல் இது.
நான் ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்: என் வாழ்நாளில் நான் சந்திக்கவோ அல்லது மீண்டும் பார்க்கவோ விரும்பாத நபர்களின் பட்டியலில், ஜெயமோகன் என்றும் அணுவளவும் அசையாத முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பவர். ஒரு மனிதராக நான் அவரிடமிருந்து அறவே அகன்றிருப்பேன் என்றென்றும்.
ஆனால் ஒரு எழுத்தாளராக?
இன்று வாழும் தமிழர்களில் ஞானபீட விருதுக்குத் தகுதியான ஒருவர் உண்டு என்றால், அது ஐயமற ஜெயமோகன்தான்.
ஆழ்ந்த சிந்தனையும் இந்திய நாகரிகம் குறித்த நேர்மறைப் புரிதலையும் இரண்டு தலைமுறைக்குக் கொண்டு சென்று, அந்தத் தலைமுறைகளின் சிந்தனையாளர்களை தன்னை ஒட்டியும் வெட்டியும் தீவிரமாகச் சிந்திக்கத் தூண்டிய ஒரு ஆளுமை நம்மிடம் இருக்கிறார். அவரது பின்பற்றுபவர்கள் அவர் ஊக்குவிக்கும் ஒருவிதக் குழுவாத மோகத்தையும், கண்மூடித்தனமான போக்கையும் வெளிப்படுத்தினாலும் கூட, அவர் நிச்சயமாக ஒரு இலக்கிய நிகழ்வு என்பதில் ஐயமில்லை.
மறுபுறம் வைரமுத்து: ஆழமற்ற, மேலோட்டமானதோர் பாட்டுவரிகளின் வியாபாரி. அல்லது கூலி. ஆம். அவர் ஒரு கவிஞர் என்பதை விட ‘பாட்டுவரிகளின் கூலி’ என்றே சொல்லத்தக்கவர்; தரம் குறைந்த வரிகளையும் கொண்டு எதுகை-மோனை வியாபாரியானவர். அதிகார மையங்களின் அணுக்கத்தினால் உருவானதோர் செயற்கை ஆளுமை அவர்.
ஒரு வைரமுத்து ரசிகரையும் ஒரு ஜெயமோகன் வாசகரையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்கு வித்தியாசம் விளங்கும்.
நான் முன்னரே ஜெயமோகனை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். அவரது சீடர்கள் அவருக்கு பத்மஸ்ரீ விருது வாங்கக் காய்களை நகர்த்தியபோது நான் அதற்கு எதிராகப் பேசினேன் – அது அவருக்குத் தகுதி இல்லை என்பதற்காக அல்ல (அந்த பத்ம விருதை விட மேலான ஒன்றிற்கே அவர் தகுதியானவர்), மாறாக அந்த ஒட்டுமொத்தச் செயல்பாட்டிலும் நான் அருவருப்பாக உணர்ந்த இரட்டை வேடத்திற்காக. அதை அத்தோடு விட்டுவிடுகிறேன்.
ஜெயமோகனுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டிருப்பதுதான் அறமான செயலாக இருந்திருக்கும்; அது அந்த விருதுக்கே ஒரு கௌரவத்தைச் சேர்த்திருக்கும். அதற்குப் பதிலாக, தமிழ் கலாசாரத்திற்கு இழைக்கப்பட்ட ஒரு நாகரிக அவமதிப்பை நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிகார மையங்களுடனான அணுக்கத்தால் தன்னை பெரியவனாகக் காட்டிக்கொள்ளும் ஒரு கீழ்மையை உயர்த்திப் பிடித்து, அதை ‘மேன்மை’ என்று அழைப்பதுதான் ‘புதிய இந்தியா’வின் அறிவுசார் அளவுகோல் என்றால், என் தேசத்தை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்.
இந்த கேலிக்கூத்து சோகத்திற்கும் மேலானது; நம் வீழ்ச்சியின் ஒட்டுமொத்த வடிவம்.
ஜெயமோகனை எனக்கு அணுக்கமாகத் தெரியாது. அவரை வெகுதூரத்திலிருந்து எழுத்து மூலமாக மட்டுமே அறிவேன். ஒரு சில உரையாடல்கள் மூலமாகவும் அதிலிருந்து நான் ஒன்றைச் சொல்ல முடியும்: இந்த அநீதி அவரை இன்னும் உயர்ந்த ஒன்றை நோக்கி உந்தித் தள்ளும் – அது ஒரு சர்வதேச அங்கீகாரமாக அமையலாம். அது தமிழுக்கானதாகவும் அமையும்.
இறுதியாக ஒரு தெளிவுபடுத்தல்:
நான் ஜெயமோகனிடம் இணக்கமாக மாறிவிட்டேன். அல்லது மாற விரும்புகிறேன் என துளியும் எண்ண வேண்டாம். எனது தனிப்பட்ட தவிர்ப்புப் பட்டியலில் மாற்றமே இல்லை.
அந்த மதிப்பீடு நிலையானது.
$$$
ஈ. எல்லாமே குப்பைகள் தான்!
-ஆமருவி தேவநாதன்
அவ்வளவு சந்தோஷமா இருக்கு சார். குதூகலத்துல எம்பிக் குதிச்சுண்டே இருக்கேன்.
பாலியல் குற்றங்களுக்குப் பெயர் போன ஆபாசப் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ‘ஞானபீடம்’ விருது தருகிறார்கள். ஜெயகாந்தன் பெற்ற விருது இது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒருவரிடம் ‘சாஹித்ய அகாதெமி’ விருதுகளில் தேச விரோதக் கும்பல்களுக்கு விருது கிடைப்பது பற்றி என் என் ஆதங்கத்தைச் சொல்லியிருந்தேன். தற்போதைக்கு ஒன்றும் செய்வதற்கில்லை என்றார். இப்போது வைரமுத்துவுக்கு ஞானபீடம்.
எப்படிப்பட்ட மனுஷன் வைரமுத்து! அடடா.. என்ன ஒரு ஞானம் படைத்த மனுஷன் அவர். அவருக்குத்தான் இந்த விருது கொடுக்கணும்.
இந்த அழகில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி மத்தியில். பண்பாடு, கலாச்சாரம், ஆன்மிகம் – இதெல்லாம் குப்பைகள் தான் போல.
எனக்குக் கிடைக்காது. கொடுத்தாலும் வேண்டாம் ஞானபீடம்.
இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது.
இப்போதுள்ள தமிழ் எழுத்தாளர்களில் ஞானபீடம் விருதுக்குத் தகுதியான ஒரே மனிதர் ஜெயமோகன் மட்டுமே. ( அவரது சாய்வு அரசியல் நிலைப்பாடுகளுக்கு என் எதிர்ப்பு இருந்தாலும்).
$$$
உ. கண்டிக்கத் தக்கது!
-நம்பி நாராயணன்
தமிழை ஆண்ட ஆண்டாள் தாயாரை இழிவு செய்த காமந்தகனுக்கு…
என் இராமச்சந்திர மூர்த்தியை இழிவு செய்தவனுக்கு..
வள்ளுவர் வள்ளலார் அடையாளங்களை மடை
மாறியவனுக்கு…
சுருக்கச் சொன்னால் கடைந்தெடுத்த அஞ்ஞானிக்கு…
ஞானபீட விருது என்பது கேவலம். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
$$$
ஊ. ஞானபீட எழுத்து
-வெங்கடசுப்பிரமணியன் ராமமூர்த்தி
“ஹலோ”
“வணக்கம் ஸார் – நான் உங்க ரசிகை”
“வணக்கம். சொல்லுங்க”
“உங்க எழுத்துக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்”
“சந்தோஷம். நன்றி”
“ரொம்ப நாளா உங்களோட பேசணும்னு விருப்பம்…”
“அப்படியா?”
“என்னைப்பத்தி நீங்க ஒன்னுமே கேக்கலியே…”
“சொல்லுங்க கேக்கறேன்”
“—-ந்ன்னு பேர்.. கல்யாணம் ஆயிடிச்சு. மூணு குழந்தைகள் இருக்கு. அவருக்கும் உங்க கதைகள் ரொம்பப் பிடிக்கும். ஆனா நான் எப்பப் பார்த்தாலும் உங்களைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கிறது அவருக்கு அவ்வளவாப் பிடிக்காது. ‘என்ன எப்பப் பார்த்தாலும் ஜெயகாந்தன், ஜெயகாந்தன்’னு எரிச்சல் படறார். எனக்கு உங்க எழுத்துக்கள் பிடிக்கும். அதிலே என்ன சார் தப்பு?”
“அதில ஒன்னும் தப்பு இல்லே. அதுக்காகத் தன் மனைவி சதா இன்னொருத்தரைப் புகழ்ந்து பேசிக்கிட்டே இருக்கிறது ஒரு புருஷனுக்குப் பிடிக்காம இருக்கிறதும் தப்பில்லே”
“He is jealous”
“அப்படியானா என்னைப்பத்தி அதிகம் பேசறதை நீங்க நிறுத்திக்கணும்…”
“உங்களை நான் பார்த்திருக்கேன் — ஒரு தடவை ஹாரிஸ் ரோடிலே கார் ஓட்டிக்கிட்டுப் போனீங்க”
“ம்.. நான் உங்களைப் பார்த்தேனா?”
“இல்லே – நீங்க வேற ஒரு பொண்ணைப் பார்த்துக்கிட்டுப் போனீங்க”
“ஸாரி..”
“உங்களைச் சந்தித்துப் பேசணும்னு விருப்பம்”
“அது.. சரி, இப்ப நீங்க எனக்குப் போன் பண்ணிப் பேசறது உங்க ஹஸ்பெண்டுக்குத் தெரியுமோ?”
“அவர் வீட்டிலே இல்லே…”
“பிறகு சொல்வீங்களா?”
“ஐயோடி! மாட்டேன்..”
“ஏன், அதிலே என்ன தப்பு?”
“அவர் தப்பா எடுத்துக்குவாரே…”
“நீங்க தப்பா நெனைக்கலேன்னா நிச்சயம் உங்க ஹஸ்பெண்டுகிட்டே இதைச் சொல்லணும். இல்லேன்னா இது தப்புதான். சரியான காரியம்கூட ரகசியமானால் தப்பாயிடும். நான் எதையும் யாருக்கும் பயந்து ரகசியமாச் செய்யறதில்லை..”
“……”
“ஹலோ; என்ன சத்தத்தைக் காணோம்?”
“நான் இப்ப உங்களுக்குப் போன் பண்ணினது தப்புன்னு நீங்களே நினைக்கறீங்களா ஸார்?”
“இல்லே, நிச்சயமா இல்லே. வேற யாரும் அப்படி நெனைக்க வேண்டாம்னு சொல்றேன். உங்க புருஷனுக்கு இது தப்பாப் படறது சரியில்லேன்னா அவர்கிட்டே நீங்க பேசிக் ‘கன்வின்ஸ்’ பண்ணனும். அது முடியாதுன்னு தோணினா இதைச் செய்யாமல் இருக்கிறதுதான் நல்லதுன்னு நான் நெனைக்கிறேன். என் பொருட்டு உங்களுக்குள்ளே தப்பெண்ணம் வர வேண்டாம்…”
“சரி.. ஸார். தாங்க்ஸ். ஐ வில் டாக் டு மை ஹஸ்பெண்ட்”
— அதன் பிறகு ஒருமாதம் ஆகிறது. அந்தப் பெண்ணிடமிருந்து டெலிபோன் கால் வரவே இல்லை.
***
மேலே நீங்கள் வாசித்தது ஞானபீட விருது பெற்ற திரு. ஜெயகாந்தன் 1973இல் எழுதிய ஒரு கட்டுரை.
சரி.. விஷயத்துக்கு வருவோம். இப்போ ஞானபீடம் விருது பெற்றவருக்கு இப்படியொரு ஃபோன் கால் வந்தால் என்ன செய்வார்? அவரைப் பற்றி என்ன எழுதுவாங்க?
“இவரா.. பாடகியைப் பாராட்டி பாண்டீன் ஷாம்பு கொடுத்தவருன்னு…
$$$
எ. ஜனாதிபதி செல்லக் கூடாது!
-வ.மு.முரளி
“ஒரு நல்லவனுக்கு கெடக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கு கெடச்சுருதே, அது எப்படி.. பொருக்கிப் பயலுக்கு மரியாதய தட்டுல வச்சு குடுக்குதே இந்த ஊரு, இந்த உலகம்”
-மகாநதி திரைப்பட வசனம்.
***
நீங்கள் மீ-டூ பிரபலமா?
இல்லை…
நீங்கள் தேசிய விரோதியா?
இல்லை….
நீங்கள் லாபி செய்யத் தெரிந்தவரா?
இல்லை…
அப்படியானால் இந்த விருது உங்களுக்கு இல்லை!
***
ஞானபீடம் தனியார் விருது தான். ஆனால் இதனை வழங்க ஜனாதிபதியோ துணை ஜனாதிபதியோ போகக் கூடாது என்று வலியுறுத்த தமிழ் அன்பர்களுக்கு உரிமை இருக்கிறது. மீ-டூ புகழ் வீரமுத்துவுக்கு விருது வழங்க அவர்கள் செல்லக் கூடாது.
***
லாபி செய்பவர்களுக்கே எல்லாம் கிடைக்கும் காலம் இது. பத்திரிகை ஆசிரியர் முதல் சினிமா கவிஞர் வரை, பதிப்பாளர் முதல் எழுத்தாளர் வரை எல்லோருமே லாபி செய்ய வேண்டும்; அல்லது புரோக்கராக வேண்டும். அவர்களைத் தான் நாம் மேடையேற்றிக் கொண்டாடுவோம்.
நக்கீரர் வளர்த்த தமிழின் இன்றைய நிலை மிகவும் பரிதாபம்!
$$$