பாரதி போற்றும் தேசியக் கல்வி- 3

-சேக்கிழான்

3. கல்விச்சாலைகள் வைப்போம்!

‘பாரத தேசம்’ என்ற தனது லட்சியம் தெறிக்கும் பாடலில், கல்விச்  சாலைகள் வைப்போம் என்று முழங்குகிறார் பாரதி. எதிர்காலத்தில் நமது தாய்நாடு எவ்வாறு சிகரத்தை எட்டப் போகிறது என்பதை மனக்கண்ணால் பார்த்து கவிதை வடித்த பாரதியின் வைர வரிகள் இவை:

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
   ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
   உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம். 

     (தேசிய கீதங்கள்- பாரத தேசம்: 9)

கல்விக்கடவுளான கலைவாணியைத் தொழும் பாடலிலும் கூட, கல்விச்சாலைகள் நிறுவுவதே தலையாய கடமை என்று நினைவுறுத்துகிறார் பாரதி. அடிமை மக்களுக்கு கல்வி புகட்ட ஆதிக்க அரசு நினையாது என்பதை உணர்ந்த சமுதாயக் கவிஞரான பாரதி, ஊர்தோறும் வசதியானவர்கள் கல்விச்சாலைகளை நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

வீடு தோறும் கலையின் விளக்கம்,
      வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
      நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
      தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
      கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். 

     (பக்திப் பாடல்கள்- வெள்ளைத் தாமரை: 6)

கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில்லாத ஊரைத் தீயீட்டு எரிப்போம் என்று கூறும் அளவிற்கு பாரதியின் வேகம் மிகுந்திருப்பதை இப்பாடலில் நாம் காண்கிறோம். “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரித்திடுவோம்” என்று பாடியவன் அல்லவா?

ஊர்தோறும் பள்ளி அமைவது எங்ஙனம்? இதோ அதற்கும் அடுத்த பத்திகளில் வழிகாட்டுகிறார் மகாகவி.

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
      நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்,
      ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்,
மான மற்று விலங்குக ளொப்ப
      மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
      புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! 

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
      இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
      ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
      பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
      ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.  

நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
      நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
      ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
      வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
      இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!  

      (பக்திப் பாடல்கள்- வெள்ளைத் தாமரை: 8-10)

இதே நோக்கத்தை தனது கட்டுரைகளிலும் பாரதி வெளிப்படுத்துவதைக் காணலாம். சுதேசமித்திரன் இதழில் அவர் எழுதிய ‘குழந்தைகள்’ கட்டுரையின் ஒரு பகுதி இது:

“ஆண், பெண், அடங்கலாக நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இனாம் படிப்புக் கட்டாயமாய்ச் சொல்லி வைக்க வேண்டும். இது ராஜாங்கத்தாருடைய கடமை. ஆனால் நம்முடைய ராஜாங்கத்தார் இப்போதுள்ள நிலைமையில் அவர்கள் இந்தக் காரியம் செய்ய மாட்டார்கள்.

நமக்கு நல்ல காலம் எப்போது வருமோ தெய்வத்துக்குத்தான் தெரியும். அதுவரை அதிகாரிகள் எப்படியிருந்த போதிலும், அதைப் பொருட்டாக்காமல் நாட்டிலுள்ள பணக்காரர் மற்றெல்லாவித தர்மங்களைக் காட்டிலும், ஜனங்களுக்கு அறிவு விருத்தியும், தைரியமும், தேச பக்தியும் உண்டாக்கத் தகுந்த சுதேசியக் கல்வி ஏற்படுத்திக் கொடுப்பதைப் பெரிய தர்மமாகக் கருதி, அதிலே பணம் செலவிட முற்படும்படி மேற்படி பணக்காரருக்கு நல்ல புத்தி ஏற்படுத்திக் கொடுக்குமாறு தெய்வத்தை வேண்டுகிறோம்.”

     (குழந்தைகள்- சுதேசமித்திரன் 25.10.1917 கட்டுரை).

இது மட்டுமல்ல, பாரதி எழுதிய ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில், பாரதி விரும்பிய சுதேசிப் பள்ளியின் இலக்கணமும், அங்கு பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்களும், ஒரு தேர்ந்த கல்வியாளர் போல திட்டமிட்டு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு உவக்கிறோம்.

சுதேசமித்திரன் இதழில் ஐந்து பகுதிகளாக 1920 மே மாதம் 13, 18, 20, 21, 28  என்ற தேதிகளில் இக்கட்டுரை வெளியாகி உள்ளது.  

(இன்றைய மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள  ‘தேசிய கல்விக் கொள்கை’யின் பல அம்சங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். நாம் அனைவரும் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் வைத்துப் படித்திருக்க வேண்டிய அற்புதமான கட்டுரை இது).

“தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசியக் கல்வி இன்றியமையாதது. தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்….”

      (தேசியக் கல்வி)

-என்று அக்கட்டுரையின் முத்தாய்ப்பாக மகாகவி பாரதி கூறியிருப்பதை நினைவில் கொள்வது அவசியம்.

“உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது, பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் சாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள்.”

என்று இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மக்களுக்கு ஆணையிடுகிறார் மகாகவி பாரதி.

சுதேசமித்திரனில் வெளியான ‘விளக்கு’ கட்டுரையில் பாரதி, படித்த  இளைஞர்களுக்கு உத்தரவே பிறப்பிக்கிறார். அவரது உள்ளத்தில் தகித்த தேசபக்தி, இளைஞர்களுக்கு ஆணையாக வெளிப்படுகிறது. அக்கட்டுரையின் ஒரு பகுதி இது:

“இங்கிலீஷ், ஸம்ஸ்க்ருதம், தமிழ் என்ற பாஷைகளில் ஏதேனும் ஒன்று படித்து யாதொரு உத்தியோகமுமில்லாமல் சும்மா இருக்கும் பிள்ளைகளுக்கு நான் ஒரு யோசனை கண்டுபிடித்துக் கொடுக்கிறேன். இஷ்டமானால் அனுசரிக்கலாம். அனுசரித்தால் லாபமுண்டு. 

கூடி வினை செய்வோர், கோடி வினை செய்வார்.

கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, கிராமந்தோறும் யாத்திரை செய்யுங்கள். ஊரூராகப் போய்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதே கைங்கரியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் வண்டிச் செலவுக்குப் பணமில்லையானால் நடந்து போகவேண்டும். மற்றபடி ஆஹார வ்யவஹாரங்களுக்கு நமது பூர்வ மதாசார்யார்களும், தம்பிரான்மாரும், ஞானிகளும், சித்தர்களும், பக்தர்களும் செய்தபடியே செய்யுங்கள். எங்கே போனாலும் உயர்ந்த மதிப்பும்,  உபசாரங்களும் ஏற்படும். கூட்டத்துக்கு விருந்து காட்டிலேகூடக் கிடைக்கும். அங்கங்கே திண்ணைப் பள்ளிக்கூடங்களும், குடிசைப் பள்ளிக் கூடங்களும் போட்டுத் திறமையுடையோரை வாத்தியாராக நியமித்துக்கொண்டு போகலாம். யாத்திரையின்பம், தேசத்தாரின் ஸத்காரம், வித்யாதான புண்யம், சரித்திரத்தில் அழியாத கீர்த்தி இத்தனையும் மேற்படி கூட்டத்தாருக்குண்டு.

படிப்பு  எல்லா மதங்களுக்கும் பொது. எல்லா தேசங்களுக்கும் பொது. எல்லா ஜாதிகளுக்கும் பொது. திருஷ்டாந்தமாக, ஐரோப்பியர் அதிகப்  பயிற்சி செய்திருக்கும் ரஸாயனம் முதலிய சாஸ்திரங்கள் நமக்கு மிகவும் அவஸரம். எவ்விதமான  பயிற்சிகளும் தேச பாஷைகள் எழுதவும் படிக்கவும் செய்விப்பதே ஆதாரமாகும். அதை முதலாவது வேரூன்றச் செய்ய வேண்டும்.

ஹிந்துப் பிள்ளைகளே, உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு. கூட்டங் கூடி நாட்டைச் சுற்றுங்கள். தமிழ் வளர்ந்தால் தர்மம் வளரும். பிராமணர் முதலாகப் பள்ளர் வரையிலும், எல்லா ஜாதிகளிலும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகுதிப்பட்டால், அநாவசியப் பிரிவுகள் நிச்சயமாகக் குறைவு படும். நமக்குள் கைச்சண்டை மூட்டி விடுவோரையும், பாஷைச் சண்டை, சாதிச் சண்டை மூட்டிவிடுவோரையும் கண்டால் ஜனங்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள். ஹிந்துக்களாகிய நாமெல்லாரும்  ஒரே கூட்டம், ஒரே மதம்,  ஒரே ஜாதி, ஒரே குலம், ஒரே குடும்பம், ஒரே உயிர் என்பதை உலகத்தார் தெரிந்து கொள்ளுவார்கள். அதனால் பூமண்டலத்துக்கு ஷேமமுண்டாகும்.

     (விளக்கு- சுதேசமித்திரன் -10.05.1917).

(தொடர்கிறது)

$$$

Leave a comment