-மகாகவி பாரதி
ஓர் அற்புதமான ஞான இலக்கியம் போர்முனையில் உதித்ததை அஞ்ஞானிகள் உணர மாட்டார்கள். ஏனெனில், இது மனத்தின் இருநிலைகளுக்கு இடையிலான போர். அஞ்ஞானிகளின் ஆணவம் இதனை அறிய விடாது. பகவத் கீதையின் இறுதி அத்தியாயம் இது… வில்லேந்திய வீரன் விஜயன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவனை பலவாற்றானும் தேற்றி, பலவிதமான வாதங்களால் அவன் மயக்கத்தைப் போக்கி, போருக்கு ஆயத்தப்படுத்துகிறான், அவனது அன்புத் தோழன் கண்ணன். இறுதியாக, “எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே” என்று நம்பிக்கை அளிக்கிறான்.

பதினெட்டாம் அத்தியாயம்: மோக்ஷ சந்யாச யோகம்
“சந்நியாச மென்றாலும், தியாக மென்றாலும் ஒன்றே. ஆனால், காம்ய கர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும், நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும். எல்லாக் கர்மங்களையும் விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய நைமித்திக கர்மங்களைச் செய்தே தீர வேண்டும். செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான். அப்படியிருக்க தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தாமசம் என்று மூவகைப் பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம்”. இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.
அர்ஜுனன் சொல்லுகிறான்:
1. உயர் புயத்தோய்! கண்ணா! கேசியைக் கொன்றாய், *1 சந்நியாசத்தின் இயல்பையும், *2 தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:
2. விருப்பத்தால் செய்யப்படும் செய்கைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிந்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்து விடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
3. சில அறிஞர் செய்கையைக் குற்றம் போல கருதி விட்டுவிட வேண்டும் என்கிறார்கள், வேறு சிலர் ‘வேள்வி’, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது என்கிறார்கள்.
4. பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே! தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள். தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டுள்ளது.
5. வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும், தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
6. ஆனால், பார்த்தா! இச்செயல்களைக் கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.
7. *3 நியமத்தின்படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது; மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
8. உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டுவிடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின்பாற் பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடைய மாட்டான்.
9. நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்குரியது’ என்னு மெண்ணத்தால் செய்து, அதில் *4 ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.
10. சத்வ குணத்திலிசைந்து, மேதாவியாய் ஐயங்களையறுத்த தியாகி இன்பமுற்ற செய்கையைப் பகைப்பதில்லை; இன்பமுடைய செய்கையில் *5 நசையுறுவதில்லை.
11. (மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.
12. வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களை தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
13. எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்!
14. அவை *6 இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.
15. மனிதன் உடம்பாலும், வாக்காலும், மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும், விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.
16. இங்ஙனமிருக்கையில் தனிப் பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ, அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
17. ‘நான்’ எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்ற மதியுடையான். அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளியாகான், கட்டுப்பட மாட்டான்.
18. அறிவு, அறியப்படு பொருள், அறிவோன் – என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் சமைப்பு மூன்று பகுதிப் பட்டது.
19. குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா, இவை குணபேதங்களால் இம்மூன்று வகைப்படும். அவற்றை உள்ளபடி கேள்.
20. பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற, நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.
21. உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.
22. காரணங் கருதாமல், யாதேனும் ஒன்ற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையது ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.
23. பயன்களை வேண்டாதா தொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை சாத்விகமெனப்படும்.
24. விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயாசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.
25. செய்கையின் பின் விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும் துன்பத்தையும் செய்வானது திறமையையும் கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படும் கர்மம் தாமசமெனப்படும்.
26. நசைகளற்றான், நானென்பதற்றான் உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான், வெற்றி தோல்வியில் வேறுபாடற்றான் – இங்ஙனமாகித் தொழில்களியற்றுவோன் ஒளியியல்யுடையானென்ப.
27. வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூமையற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.
28. யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமை யுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக் கொண்டே போவோன் – இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையர் எனப்படுவான்.
29. குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன் தனஞ்ஜயா! கேள்.
30. தொழிலெது, ஒழிவு யாது, செய்யத் தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலையெது – என்பவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா! சாத்விக புத்தியாம்.
31. தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா!
32. பார்த்தா! இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.
33. மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்விகமாவது, பார்த்தா!
34. பார்த்தா! பற்றுதலுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாம்.
35. பார்த்தா, உறக்கத்தையும், அச்சத்தையும், துயரத்தையும், ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
36. பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,
37. எது தொடக்கத்தில் விஷத்தையொத்ததாய் விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.
38. விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.
39. தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலினின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.
40. இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலத்தில் தேவருள்ளேயுமில்லை.
41. பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்;
42. அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் – இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
43. சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை; இறைமை – இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாம்.
44. உழவு, பசுக் காத்தல், வாணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசிய கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.
45. தனக்கு, தனக்குரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தி யடைகிறானென்பதை சொல்லுகிறேன், கேள்.
46. உயிர்களுக்கெல்லாம் பிறப்பிடமாய், இவ்வையகமனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.
47. பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றி செய்தலும் நன்று. இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.
48. குந்தி மகனே! இயல்பான தொழில் குறையுடையதாயினும் அதைக் கைவிடலாகாது. தீயைப் புகை சூழ்ந்திருப்பது போல் எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.
49. யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்த்து பின்னர்ச் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.
50. சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலையெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.
51. தூய்மை பெற்ற புத்தியுடையவனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,
52. தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று தியான யோகத்தில் ஈடுபட்டு, எப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,
53. அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் – இவற்றைவிட்டு, *7 மமகாரம் நீங்கி, சாந்த நிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.
54. பிரம்மநிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
55. யான் எவ்வளவுடையோன், யாவன் என என்னையொருவன் உள்ளபடி பக்தியாலே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்துகொண்ட பின்னர் ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
56. எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்திய பதவியை எய்துகிறான்.
57. அறிவினால் செயல்களையெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.
58. என்னை சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய், அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயெனில் பெரிய நாசத்தை அடைவாய்.
59. நீ அகங்காரதிலகப்பட்டு, ‘இனிப் போர் புரியேன்’ என்ற துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.
60. இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.
61. அர்ஜுனா! எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான்; மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.
62. பாரதா! எல்லா வடிவங்களும் அவனையே சரணெய்து. அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.
63. இங்ஙனம் ரகசியத்தாலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.
64. மீண்டுமொரு முறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன் ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.
65. உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. என்னையெய்துவாய். உண்மை இஃதே. உனக்கிது சபதமுரைக்கிறேன். நீ எனக்கினியை.
66. எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே.
67. இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும், என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.
68. இந்தப் பரம இரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்வேன். என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான்; ஐயமில்லை.
69. மானுடருக்குள்ளே, அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.
70. நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன்; இஃதென் கொள்கை.
71. நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி, இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான். அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணும் நல்லுலகங்களெய்துவான்.
72. பார்த்தா! சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?
அர்ஜுனன் சொல்லுகிறான்:
73. மயக்க மழிந்தது நின்னருளாலே அச்சுதா! நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.
சஞ்ஜயன் சொல்லுகிறான்:
74. இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.
75. யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.
76. அரசனே! கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து, நான் மீண்டும் மீண்டும் களிப்பெய்துகிறேன்.
77. அரசனே! ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரிய முண்டாகிறது! மீண்டும் மீண்டும் களிப்படைகிறேன்.
78. கண்ணன் யோகக் கடவுள், எங்குமுளன், வில்லினையேந்திய விஜயன் தன்னோடும், அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும், இஃதென் மதம்.
அடிக்குறிப்புகள்: *1. சந்நியாசம் = துறவு. *2. தியாகம் = விடுதல். *3. நியமம் = ஒழுங்கு, சட்டம், சாஸ்திர விதி. *4. ஒட்டுதல் = விருப்பம் *5. நசை = பற்றுதல். *6. கர்த்தா = தொழில் செய்வோன்; கரணம் = கருவி. உட்கரணங்களாவன: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்; புறக்கரணங்கள் புலன்களும் பூதக் கருவிகளுமாம், ‘தைவம்’ இயற்கை. *7. மமகாரம் = உடைமையுணர்ச்சி.
ஸ்ரீமத் பகவத் கீதை நிறைவு பெற்றது.
$$$