பகவத் கீதை- பதினாறாம் அத்தியாயம்  

-மகாகவி பாரதி

கடவுளை அறிந்தர்கள் தானே கடவுளின் இன்னொரு படிமம் (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை அறிவார்கள். கடவுள் இல்லை என்று இறுமாப்புடன் கூறுவோரோ கடவுளை அறியாத, அசுரத்தன்மை கொண்ட பதர்கள் (அஹம் நாஸ்தி). ஹிரண்யனின் வீழ்ச்சியைக் கண்ட பிறகும் மனமயக்கில் ஆணவத்துடன் இருக்கும் இவர்களுக்கு மீட்பு இல்லை என்கிறான் தேரோட்டியாம் கிருஷ்ணன் இந்த அத்தியாயத்தில்…

பதினாறாம் அத்தியாயம்: தெய்வாசுர சம்பத் விபாக யோகம்

முதற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத்தன்மை யுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார்; கோபமறியார்;  பொறுமை, இரக்கம் பெற்றிருப்பார். அசுரத் தன்மை யுடையோரே டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத்தன்மை யுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார். மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும், தங்களுக்கு நிகர் எவருமில்லையென்றும் எண்ணிக்கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது. தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கோ சாஸ்திரமே பிரமாணமாகும்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

1. அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, வேதங் கற்றல், தவம், நேர்மை,

2. கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,

3. ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன, பாரதா!

4. டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் – இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன, பார்த்தா!

5. தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம். அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்திவிட்டாய்; துயரப்படாதே.

6. இவ்வுலகத்தில் உயிர்ப் படைப்பு இரண்டு வகைப்படும்; தேவ இயல் கொண்டது, அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன். பார்த்தா! அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

7. அசுரத் தன்மை கொண்டோர், தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும், வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.

8. அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும், நிலையற்றதென்றும், கடவுளற்றதென்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றிப் பிறந்த தென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.

9. இந்தக் காட்சியில் நிலைபெற்று, அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய், அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.

10. நிரப்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும் பொருந்தியவராய், மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.

11. பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய்,  ‘உண்மையே இவ்வளவுதான்’ எற நிச்சயமுடையோராய்,

12. நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு, காமத்துக்கும், சினத்துக்கும் ஆட்பட்டோராய் காம போகத்துக்காக அநியாயஞ் செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.

13.  “இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னவையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்,

14. இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன், நான் ஆள்வோன், நான் போகி, நான் சித்தன், நான் பலவான், நான் சுக புருஷன்,

15. நான் செல்வன், இனப்பெருக்க முடையோன், எனக்கு நிகர் யாருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்று அஞ்ஞானங்களால் மயங்கினோர்,

16. பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் – இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

17. இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறி, பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.

18. அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், இனத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.

19. இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை, நான் எப்போதும் அசுரப் பிறப்புக்களில் எறிகிறேன்.

20. பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர், என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதையைச் சேர்கிறார்கள், குந்தியின் மகனே!

21. ஆத்ம நாசத்துக்கிடமான இம்மூன்று வாயில்களுடையது நரகம்; (அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால் இம்மூன்றையும் விடுக.

22. இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந் தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.

23. சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.

24. ஆதலால், எது செய்யத் தக்கது, எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதை யறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s