-நரேந்திர மோடி
கொல்கத்தாவுக்கு வெளியே நிறுவப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளை, சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தான். தமிழக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடிச் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரை இப்பணிக்காக சென்னைக்கு அனுப்பினார் சுவாமி விவேகானந்தர். அவரது முயற்சியால், சென்னையில் 1897-இல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிறுவப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் காலத்திலேயே நிறுவப்பட்ட மடம் என்ற பெருமை மிக்கது இம்மடம். ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற முழக்கத்துடன், நாட்டின் தர்மம் காக்கும் பணியில் அயராது பாடுபட்டு வரும் இந்த மடத்தின் 125-ஆம் ஆண்டு விழா, கடந்த 2023, ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்புரையாற்றினார். சென்னை கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணர் இயக்க சந்நியாசிகள் மட்டுமே பங்கேற்ற இவ்விழாவில் பிரதமரின் உரை, அற்புதமானதாகவும் எழுச்சியூட்டுவதாகவும் அமைந்திருந்தது. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்ட சொற்களின் காரணமாக, அதன் தாக்கமும் அளவிடற்கரியதாகவே உள்ளது. அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் இதோ இங்கே…

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவடிகளுக்கு வணக்கங்கள். தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி, இங்கு கூடியுள்ள சென்னை ராமகிருஷ்ண மடத்தின் துறவியர் பெருமக்கள், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள்!
நண்பர்களே,
இங்கு உங்களுடன் இருப்பதால் மிகவும் மகிழ்கிறேன். நான் மிகவும் மதிக்கும் இயக்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம். எனது வாழ்வில் இந்த மடம் மிகவும் முக்கியமான பங்காற்றியிருக்கிறது சென்னையில் உள்ள தனது கிளையின் 125ஆம் ஆண்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் தற்போது கொண்டாடுகிறது. இது நான் கூடுதலாக மகிழ்ச்சி கொள்ளக் காரணமாக இருக்கிறது. நான் தமிழக மக்கள் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருக்கிறேன். தமிழ்மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும், சென்னையின் துடிப்பான அதிர்வையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.
விவேகானந்தர் இல்லத்துக்கு வருவதற்கான வாய்ப்பு எனக்கு இன்று கிடைத்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் தனது புகழ்பெற்ற திக்விஜயத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர் இங்குதான் தங்கியிருந்தார். இங்கு அவர் தியானம் செய்தது அற்புத அனுபவமாக அமைந்தது. இதனால் நான் உத்வேகமும் ஆற்றலும் பெறுகிறேன். தவிர, நமது பாரம்பரியச் சிந்தனைகள் நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளம் தலைமுறையை எளிதாகச் சென்றடைவதால் நான் மகிழ்கிறேன்.
நண்பர்களே,
தமிழகத்தின் தெய்வப்புலவரான திருவள்ளுவர் தனது இனிய குறளில் இவ்வாறு கூறி இருக்கிறார்:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற *1
கருணையை விட மிகச் சிறந்தது இவ்வுலகிலோ, தேவருலகிலோ எதுவும் இல்லை என்பதே இக்குறளின் பொருள். இந்தக் கண்ணோட்டத்துடன் தான், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், தமிழ்நாட்டில் அரும்பணியாற்றி வருகிறது. கல்வி, நூலகம், புத்தக வங்கிகள், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் நிவாரண சேவைகள், சுகாதாரம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் மடத்தின் சேவை விரிந்து பரந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தாக்கம் குறித்து இதுவரை குறிப்பிட்டேன். ஆனால் இது பிற்பாடு வந்த விளைவு மட்டுமே. இதற்கு முன்னதாக நாம் கவனிக்க வேண்டியது சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் தமிழ்நாடு செலுத்திய தாக்கம் தான். தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில், அங்குள்ள புகழ்பெற்ற பாறையில் சுவாமி விவேகானந்தர் தவம் செய்தார்*2; அங்குதான் தனது வாழ்வின் பொருளை முற்றும் உணர்ந்தார். அதுவே அவரது வாழ்வை மாற்றியது; அதுவே சிகாகோவில் அவரது முழக்கமாக உணரப்பட்டது.
மேற்கத்திய நாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர் முதலில் காலடி வைத்தது, புனிதமான தமிழக மண்ணில் தான். ராமநாதபுர மன்னர் *3 அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். சென்னைக்கு சுவாமி விவேகானந்தரின் வருகையோ மிக மிகச் சிறப்பாக அமைந்தது. நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ரொமெய்ன் ரோலண்ட் *4 அதனை தனது எழுத்துகளில் பதிவு செய்திருக்கிறார். சுவாமி விவேகானந்தரின் சென்னை விஜயத்தின்போது *5, இங்கு 17 வெற்றித் தோரண அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்ததாக ரொமெய்ன் ரோலண்ட் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்த ஒருவார காலமும் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை மாறியிருந்தது; அக்காலம் ஒரு திருவிழா மனநிலையுடன் இருந்ததாக ரொமெய்ன் ரோலண்ட் குறிப்பிட்டிருக்கிறார்.

நண்பர்களே,
சுவாமி விவேகானந்தர் வங்கத்தில் பிறந்தவர். அவர் தமிழ்நாட்டில் ஒரு கதாநாயகனுக்குரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந்நிகழ்வு, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகள் முன்னதாக நடந்திருக்கிறது. இந்த நாடு முழுவதிலும் வாழ்ந்த மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்நாடு ஒரே நாடு என்பதை உளப்பூர்வமான நம்பிக்கை கொண்டிருந்ததையே இந்நிகழ்வு காட்டுகிறது. இதுவே ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற சிந்தனையின் ஆணிவேர். இதே அற்புதமான உணர்வுடன் தான் இங்கே ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும் இயங்குகிறது. நாடு முழுவதும் ராமகிருஷ்ண மடம், எண்ணற்ற மக்களுக்கு தன்னலமின்றி சேவை புரியும் பல நிறுவனங்களை நடத்துகிறது.
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற சிந்தனையைப் பற்றிப் பேசும்போது, காசி தமிழ்ச் சங்கமத்தின் *6 பிரமாண்டமான வெற்றி நினைவுக்கு வருகிறது. அதை நாம் நேரில் கண்டோம். தற்போது சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமத்திற்கான *7 ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிகிறேன். இந்திய ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் இதுபோன்ற சிறந்த முயற்சிகள் அனைத்தும் வெல்ல வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
நமது ஆட்சித் தத்துவமும் சுவாமி விவேகானந்தரின் கருத்துகளால் உத்வேகம் பெற்றதே. சிலருக்கான முன்னுரிமைகள் எப்போது உடைபட்டு சமத்துவம் உறுதி செய்யப்படுகிறதோ, அப்போது சமுதாயம் முன்னேறும் என்று சுவாமி விவேகானந்தர் கூறி இருக்கிறார். இன்று, நமது அரசின் முத்திரைத் திட்டங்கள் பலவும் இதே கண்ணோட்டத்துடன் செயல்படுத்தப்படுவதை நீங்கள் காணலாம். இதுவரை, அடிப்படை வசதிகள் பலவும் சமுதாயத்தின் குறிப்பிட்ட சிலருக்கே முன்னுரிமையாகக் கிடைத்து வந்தன. நாட்டின் வளர்ச்சியால் கிடைத்த பலன்களை மக்களில் பலர் பெற முடியாத நிலையே நிலவியது; சில குழுக்களும், குறிப்பிட்ட சில பிரமுகர்களும் மட்டுமே அந்தப் பலனை அடைய முடிந்தது. ஆனால் இன்று, தேச வளர்ச்சியின் கதவுகள் அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளன.
நமது அரசின் மிகவும் வெற்றிகரமான திட்டங்களுள் ஒன்றான முத்ரா கடனுதவித் திட்டம், இன்று தனது எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. சிறுதொழில் முனைவோர் 38 கோடி பேருக்கு இத்திட்டத்தின் வாயிலாக பிணையில்லாக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது. வங்கிக்கடன் பெறுவது என்பது சிலரது முன்னுரிமையாக இருந்த காலம் மாறி, தற்போது, தேவையுள்ள அனைவருக்கும் இத்திட்டத்தால் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதேபோல, வீடு, மின்னிணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பிடம் போன்ற பல வசதிகளும் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்று சேர்கின்றன.

நண்பர்களே,
இந்தியா குறித்த பிரமாண்டமான கனவுகளை சுவாமி விவேகானந்தர் கொண்டிருந்தார். தனது கனவுகள் தற்போது நனவாகி வருவதை விண்ணுலகில் இருந்து கண்டு அவர் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறேன். நம்மிடமும் நமது நாட்டிடமும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே அவரது உபதேசங்களின் மையமாக இருந்தது. இன்று, இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்று வல்லுநர்கள் பலர் கூறத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்தியர்கள் அனைவரும் வருங்காலம் நமது காலம் என்று உணர்ந்து வருகின்றனர். நாம் மிகுந்த நம்பிக்கையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் நாம் இந்த உலகை அணுகுகிறோம்.
அதேபோல, ‘பெண்களுக்கு யாரும் உதவத் தேவையில்லை’ என்று பலமுறை சுவாமி விவேகானந்தர் கூறி இருக்கிறார். அதாவது, பெண்களுக்கு கல்வி அளித்து, அவர்களுக்கான சரியான வாய்ப்புகளை வழங்கிவிட்டால், அவர்களே பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள்; சமுதாயத்தையும் முன்னணியிலிருந்து வழிநடத்துவார்கள் என்றார் அவர். இன்றைய இந்தியா மகளிர் வழிநடத்தும் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருக்கிறது; புத்தொழில் முனைவு, விளையாட்டுத் துறை, பாதுகாப்புப் படைகள், உயர்கல்வி என எந்தத் துறையை எடுத்தாலும் இந்திய மகளிர் தடைகளை உடைத்து சாதனை புரிகிறார்கள்!
விளையாட்டுகளும், உடற்பயிற்சியும் ஒருவரது பண்புருவாக்கத்தில் பேரிடம் வகிப்பதாக சுவாமி விவேகானந்தர் நம்பினார். ஒருகாலத்தில் தனிப்பட்ட கூடுதல் செயல்பாடாகக் கருதப்பட்ட விளையாட்டுகள், இன்றைய இந்தியாவில் தொழில்சார்ந்தவையாக சமுதாயத்தால் கருதப்படத் தொடங்கிவிட்டன. யோகா, ஃபிட் இந்தியா ஆகியவை மாபெரும் மக்கள் இயக்கங்களாக வளர்ந்திருக்கின்றன.
கல்வியே அதிகாரம் அளிக்கும் என்பது சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கை. அது மட்டுமல்ல, அறிவியல், தொழில்நுட்பக் கல்வி அவசியம் என்றும் அவர் கருதினார். அதன் அடிப்படையில் தான் நமது தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வியில் உலகத் தரத்திலான நடவடிக்கைகளை தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. அதேபோல, மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டமும் இதுவரை காணாத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தவிர, உலகின் மிகத் துடிப்பான அறிவியல், தொழில்நுட்ப அமைப்புகளை நாம் கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே,
இதே தமிழகத்தில் இருந்தபோது தான், இன்றைய இந்தியாவுக்கான மிக முக்கியமான சிந்தனைகளை சுவாமி விவேகானந்தர் வழங்கினார். ‘ஐந்தே ஐந்து கொள்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றில் முழுமையாக அர்ப்பணித்து வாழ்வது அதீத சக்தி தரும்’ என்று அவர் கூறி இருக்கிறார்.
நாம் தற்போது சுதந்திரத்தின் பவளவிழாவை *8 கொண்டாடுகிறோம். வரக்கூடிய 25 ஆண்டுகளை நாம் அமுதகாலமாக *9 வகைப்படுத்துகிறோம். இந்த அமுதகாலத்தில் நாம் ஐந்து பிரதான கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலமாக, மாபெரும் சாதனைகள் இத்தேசத்தில் நிகழும். ‘பன்ச் பிராண்’ எனப்படும் அந்த ஐந்து கொள்கைகள்: வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கு, காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட அடிமை மனநிலையையும் அதன் அடையாளங்களையும் நீக்குதல், பாரம்பரியத்தைக் கொண்டாடுதல், மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துதல், நமது கடமைகளின் மீது கூர்ந்த கவனம் செலுத்துதல் ஆகியவை.
மேற்கண்ட ஐந்து கொள்கைகளையும் கடைபிடிப்போம் என, நம்மால் தனியாகவோ, கூட்டாகவோ உறுதி ஏற்க முடியுமா? நாட்டிலுள்ள 140 கோடி மக்களும் மேற்கண்ட கொள்கைகளைக் கடைபிடிக்கத் தீர்மானித்துவிட்டால், வளர்ச்சி அடைந்த, தன்னிறைவான, அனைவருக்குமான இந்தியாவை 2047-ஆம் ஆண்டுக்குள் அமைக்க இயலும். இந்த மாபெரும் இலக்கு நோக்கிய பயணத்தில் சுவாமி விவேகானந்தரின் பரிபூரண ஆசி நமக்கு உண்டு என்று உறுதியாக நம்புகிறேன்.
நன்றி. வணக்கம்.
.
அடிக்குறிப்பு விளக்கங்கள்: 1. திருக்குறள் – 213; பொருள்: வானுலகத்திலும் சரி, இவ்வுலகத்திலும் சரி இயலாதவர்களுக்கு உதவி செய்வதைத் தவிர சிறந்ததும் நன்மையானதும் வேறொன்றும் இல்லை; அதைப் போன்ற அரிய வாய்ப்பும் வேறு இல்லை. 2. சுவாமி விவேகானந்தர் 1892 டிச. 24, 25, 26 தேதிகளில், குமரிமுனையில் கடலிடையே உள்ள பாறைத்திட்டில் மூன்று நாட்கள் தவம் செய்தார். அப்பாறை தற்போது ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படுகிறது. அங்கு விவேகானந்த கேந்திரம் அமைத்த நினைவாலயம் உள்ளது. 3. தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தான ஜமீன்தாரராக இருந்த பாஸ்கர சேதுபதி (1868- 1903), 1892-இல் சுவாமி விவேகானந்தர் தமிழகம் வந்தபோது அவரை ஆதரித்தவர். இவரது உதவியால் தான் சிகாகோ சர்வ சமயப் பேரவைக்கு சுவாமி விவேகானந்தர் சென்றார். 4. ரொமெய்ன் ரோலண்ட் (1866- 1944), பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த அறிஞர்; எழுத்தாளர்; ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பிரெஞ்ச் மொழியில் எழுதியவர். 5. மேற்கத்தியப் பயணம் முடிந்து கொல்கத்தா திரும்பும் வழியில் சென்னை வந்திருந்த சுவாமி விவேகானந்தர், கடற்கரை சாலையில் அமைந்திருந்த ஐஸ் ஹவுஸ் கட்டடத்தில் 1897 பிப். 6- 15 தேதிகளில் தங்கி இருந்தார். அந்தக் கட்டடமே தற்போது விவேகானந்தர் இல்லமாக உள்ளது. 6. காசி தமிழ்ச் சங்கமம்: தமிழகத்துக்கும் புனிதத் தலமான காசிக்கும் இடையே உள்ள பண்பாட்டு உறவைக் கொண்டாடும் வகையில், 2022 நவ. 19 முதல் டிச. 16 வரை வாரணாசியில் மத்திய அரசால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சார்ந்த பலதுறை நிபுணர்கள், மாணவர்கள் 2,500 பேர் பங்கேற்றனர். 7. சௌராஷ்டிர தமிழ்ச் சங்கமம்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில், வரும் 2023 ஏப். 17 முதல் ஏப் 26 வரை நடைபெற உள்ள இந்நிகழ்வு, குஜராத்தில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் சௌராஷ்டிர மக்களின் பழமையான பிணைப்பைக் கொண்டாட உள்ளது. 8. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் ஆண்டு விழா, இந்திய அரசால் அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 9. சுதந்திரப் பவள விழா கொண்டாடும் 2022 முதல், நூற்றாண்டு கொண்டாடும் 2047 வரையிலான 25 ஆண்டுகளை நாட்டின் அமுதகாலம் என்று அரசு அறிவித்திருக்கிறது.
- தமிழில்: சேக்கிழான்
- காண்க: PM Modiji’s Speech at Sri Ramkrishna Math, Chennai
$$$