சத்திய சோதனை – 2(16-20)

மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே என் உள்ளத்தின் ஆசை. அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்தது. அதனால் அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது....

சத்திய சோதனை 2(11-15)

னக்கு இருந்த கஷ்டங்கள் மேலும் ஆழமானவை. ‘ஏசுநாதர் ஒருவரே கடவுளின் அவதாரமான திருக்குமாரர். அவரிடம் நம்பிக்கை வைப்பவர்கள் மாத்திரமே நித்தியமான வாழ்வை அடைய முடியும்’ என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளுக்கு குமாரர்கள் இருக்க முடியும் என்றால், நாம் எல்லோரும் அவருடைய குமாரர்களே. ஏசுநாதர் கடவுளைப் போன்றவர் அல்லது அவரே கடவுள் என்றால், எல்லா மனிதரும் கடவுளைப் போன்றவர்களே என்பதுடன் ஒவ்வொருவருமே கடவுளாகவும் முடியும். ஏசுநாதர் தமது மரணத்தினாலும், தாம் சிந்திய ரத்தத்தினாலும் உலகத்தைப் பாவங்களிலிருந்து ரட்சித்தார் என்பதை அப்படியே ஒப்புக்கொண்டுவிட என் பகுத்தறிவு தயாராக இல்லை. இதை உருவகமான கூற்றாகக் கொண்டால் இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதோடு, கிறிஸ்தவ தருமத்தின்படி மனிதருக்கு மாத்திரமே ஆன்மா உண்டேயன்றி மற்ற ஜீவன்களுக்கு ஆன்மா இல்லை. அவைகளுக்குச் சாவு என்பது அடியோடு மறைந்துவிடுவது தான். நானோ, இதற்கு மாறுபட்ட நம்பிக்கை கொண்டிருந்தேன். ஏசுநாதர் லட்சியத்துக்காக உயிரைக் கொடுத்தவர், தியாகமூர்த்தி, தெய்வீகமான போதகர் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதுவரையில் தோன்றியவர்களிலெல்லாம் அவரே பரிபூரணர் என்பதையும் நான் ஒப்புக்கொள்வதற்கில்லை. சிலுவையில் அவர் மாண்டது, உலகிற்குப் பெரியதோர் உதாரணம். ஆனால், ‘அதில் பெரிய ரகசியம் அல்லது அற்புதத் தன்மை இருக்கிறது’ என்பதை என் உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற சமயங்களை பக்தியுடன் பின்பற்றுகிறவர்கள் எனக்கு அளிக்கத் தவறியது எதையும் கிறிஸ்தவர்களின் பக்தி வாழ்க்கை எனக்கு அளித்து விடவில்லை. ....

சத்திய சோதனை- 2(6-10)

சுமார் மூன்று மணிக்கு வண்டி, பார்டேகோப் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இப்பொழுது, தலைவர் நான் உட்கார்ந்திருந்த இடத்தில், தாம் உட்கார்ந்து கொள்ள விரும்பினார். சுருட்டுப் பிடிக்க விரும்பியதோடு, கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கவும் அவர் விரும்பியிருக்கக் கூடும். ஆகவே, வண்டியோட்டியிடமிருந்து ஓர் அழுக்குக் கோணித் துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படி மீது அதை விரித்தார். பிறகு என்னைப் பார்த்து “சாமி இதன் மீது நீர் உட்காரும். வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்” என்றார். இந்த அவமதிப்பை என்னால் சகிக்க முடியவில்லை. “என்னை உள்ளே உட்கார வைக்க வேண்டியிருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்கார வைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்பொழுது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புவதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்கார மாட்டேன். ஆனால், உள்ளே வேண்டுமானால் உட்காரத் தயார்” என்று பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் கூறினேன்.

     இவ்விதம் நான் தட்டுத் தடுமாறிச் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து, என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை மாத்திரம் விடுவதில்லை என்று உறுதிகொண்டேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும் நான் சும்மா இருப்பதுமாகிய அக் காட்சியைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமாவன். பிரயாணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று.

....

சத்திய சோதனை- 2(1-5)

 குருவைக் குறித்தும், ஆன்ம ஞானத்தை அடையும் விஷயத்தில் குருவின் அவசியத்தைப் பற்றியும் கூறும் ஹிந்து தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன். உலக விவகாரங்களில் அரைகுறையான ஆசானைச் சகித்துக்கொள்ள முடியலாம். ஆனால், ஆன்மீக காரியங்களில் சகிக்க முடியாது. பூரணத்துவம் உள்ள ஒரு ஞானியே குருபீடத்தில் அமர அருகதை உடையவர். ஆகையால் அந்தப் பூரணத்துவத்தை நாடுவதில் இடைவிடாது பாடுபட வேண்டும். ஏனெனில் அவனவனுக்கு ஏற்ற குருவையே அவனவன் அடைகிறான். பூரணத்துவத்தை அடைய இடைவிடாது பாடுபடுவது ஒருவரின் உரிமை. அதுவே அதனால் அடையும் பலனும் ஆகும். மற்றவை எல்லாம் கடவுளின் சித்தத்தைப் பொறுத்தவை....

சத்திய சோதனை 1(21- 25)

ஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, முறையை அனுசரிப்பது. இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, பரீட்சைகளில் தேறுவது. முறையை அனுசரிப்பது என்றால், முறைப்படி தின்பது, அதாவது ஒரு கால அளவில் நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால் சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும். ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும், அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது மிதமானது என்றே கருதப்பட்டது. சாப்பாட்டின் விலையை விட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு நாம் நாகரிகம் அடையாதவர்களாக இருந்தால் - ஆச்சரியமாக இருக்கும். முதன்முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை.... நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ஒயின் என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத் தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கும் இரண்டு ஒயின் பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது. இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் பெரிய விருந்து என்று ஒன்று நடக்கும். போர்ட், ஷெர்ரி ஒயின்களும் அதிகமாக, ஷாம்பேன் போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப் பெரிய விருந்து நாட்களில் எனக்கு கிராக்கி வெகு அதிகம் இருக்கும்....

சத்தியசோதனை 1(16-20)

புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதை கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்.  ‘தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டு விட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு’ என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குத் கைம்மாறாய் விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல் உடனே என் நினைவுக்கு வந்தது. கீதை, ஆசிய ஜோதி, மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.....

சத்திய சோதனை 1(11-15)

ஒரு சன்னியாசி, எலி உபத்திரவத்தைப் போக்க ஒரு பூனை வளர்த்தார் என்றும் பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காகப் பிறகு ஒரு பசுவும் வளர்த்தார் என்றும், பசுவைக் கவனிக்க ஓர் ஆள் வைத்தார் என்றும், அப்புறம் சன்னியாசி ஒரு குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றும் ஒரு கதை உண்டு. துறவியின் குடும்பம் வளர்ந்ததைப் போல என்னுடைய ஆசைகளும் வளர்ந்தன. மேனாட்டுச் சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்து கொள்ளுவதற்காக நான் பிடில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே, மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்கினேன். அதைச் சொல்லிக் கொடுக்க அதைவிட அதிக தொகை கொடுத்தேன். பிரசங்கத் திறமை வர போதிப்பதற்காக மூன்றாவது ஆசிரியர் ஒருவரைப் பிடித்து அவருக்கு ஆரம்பக் கட்டணமாக ஒரு கினி (21 ஷில்லிங்) கொடுத்தேன். இதற்குப் பாடப் புத்தகமாக பெல் எழுதிய ‘ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட்’ என்ற புத்தகத்தை அவர் சிபாரிசு செய்தார். அதையும் வாங்கினேன். பிட்டின் பிரசங்கம் ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.....

சத்திய சோதனை 1(6-10)

என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனித் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்..... அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது....

சத்திய சோதனை 1(1- 5)

உலகப் புகழ் பெற்ற சுய சரிதைகளில் மகாத்மா காந்தியின் (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) ‘சத்திய சோதனை’க்கு பிரதான இடமுண்டு. சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது அவர் எழுதிய சுய வாழ்க்கை வரலாற்று நூ‌ல். ‘என்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல’ எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தியடிகள், தன் வாழ்க்கையை ’ஒரு திறந்த புத்தகம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு நினைவுபடுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவரது எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு ’சத்தியசோதனை’ என்று அவர் பெயர் சூட்டினார். தம் பிறப்பு முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான சுய சரிதையை காந்தியடிகள் எழுதியுள்ளார். இது, குஜராத்தி மொழியில் வெளிவந்த ‘நவஜீவன்’ வாரப் பத்திரிகையில் 1925 முதல் 1929 வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் காந்தியடிகளின் தனிச் செயலர் மகாதேவ தேசாய். தமிழில் ரா.வேங்கடராஜுலு மொழிபெயர்த்துள்ளார்.