திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரு திருப்பங்கள்

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மீறிய தமிழக அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செவ்வாய், புதன் கிழமைகளில் இரு திருப்பங்களைச் சந்தித்தது. செவ்வாய்க்கிழமை அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், புதன்கிழமை இவ்வழக்கு தனிநீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை என்று கூறிய நீதிபதி, வழக்கை தொடர்ந்து விசாரித்ததுட்டன் ஏப்ரல் 9ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடரும்: தனி நீதிபதி அதிரடி

மதுரை, மார்ச் 18:  “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணையைத் தொடரலாம்” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் விசாரிக்கப்படும் நிலையில், அதற்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் மீது நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 17)  விசாரித்தது.

அப்போது, நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீது தனி நீதிபதி கடந்த டிசம்பர் 4-இல் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், பிற மேல்முறையீட்டு மனுக்களுக்கு வழக்கு எண் வழங்கி விசாரணைக்குப் பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.  (காண்க: கீழே உள்ள முழுமையான செய்தி).

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் புதன் கிழமை (மார்ச் 18) விசாரணைக்கு வந்தன. அப்போது காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அரசுத் தரப்பில், “தனி நீதிபதி முன்பு உள்ள அனைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, மனுதாரர் தரப்பு, “டிசம்பர் 4-இல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மட்டுமே அமர்வு தடை விதித்துள்ளது” எனத் தெரிவித்தது.

அப்போது நீதிபதி, “முழு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தடை உத்தரவில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அந்த உத்தரவில், ஏப். 8 வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தான் கூறப்பட்டுள்ளது” என்றார்.

அரசுத் தரப்போ, “அனைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளையும் எதிர்த்து தொடரப்பட்ட ஒரு உரிமையியல் மற்றும் இதர மனுக்களுக்கும் பொதுவான இடைக்காலத் தடை பொருந்தும். மனுவில் கோரப்பட்ட கோரிக்கைகள் குறித்து பதிவுத்துறையிடம் விளக்கம் கேட்டால் குழப்பத்தை தவிர்க்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, “அமர்வில் என்ன கேட்டீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்? என்று கேள்வி எழுப்ப, “பதிவுத் துறையிடம் அறிக்கை கேட்கலாம்” என்றது அரசுத் தரப்பு.

அப்போது நீதிபதி, “அது என் வேலையல்ல, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால உத்தரவின்படியே செயல்படுவேன். இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவுக்குக் கீழ்ப்படிவது என் கடமை. உங்களைப் போலல்லாமல் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மரியாதை அளிப்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது உத்தரவுகள் வெளிப்படையாக மீறப்படுகின்றன. இவ்வளவு பிடிவாதமாக இருக்கக் கூடாது. எனக்கு எதிராக உங்கள் எதிர்ப்பைக் காட்டாதீர்கள்” என்றார்.

அரசுத் தரப்பில், “அப்படியில்லை. நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.

அதன்பின் நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

 “காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் ஏன் ஆஜராகவில்லை? அவர்களுக்கு விலக்கு அளிக்கவில்லை. தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்களா? இனிமேல் அவர்களின் முகங்களைப் பார்க்க நான் விரும்பவில்லை. சட்டப்படி அவர்களைக் கையாள்வேன்…

மொத்தம் 3 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன். கார்த்திகை மாதம் முடிந்துவிட்டதால், நீதிமன்ற உத்தரவுக்கு அடையாளப்பூர்வமாக மரியாதை செலுத்தும் அதேவேளையில், அதிகாரிகள் தங்கள் சட்டப்பூர்வமான தீர்வுகளையும் மேற்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தேன். இவ்விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில், நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்களுக்குத் தீர்வு காண அல்லது சரிசெய்ய தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குவது நீதிமன்றத்தின் கடமை. அதற்காக, வழக்கு நடைபெறும் எந்த நிலையிலும் நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதன் அடிப்படையில் தான் ஒரு குறிப்பிட்ட பரிந்துரையை வழங்கியிருந்தேன்.

கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அந்தப் பரிந்துரையைப் பரிசீலிக்க கால அவகாசம் கோரினார். மதிப்பு மிக்க ஒரு மூத்த வழக்கறிஞரிஞரிடமிருந்து ஒத்திவைப்புக் கோரிக்கை வந்ததாலும், அது இந்த நீதிமன்றத்தின் பரிந்திரையைப் பரிசீலிக்கவே என்பதாலும், அதனை நான் நிராகரிக்கவில்லை. அதனால் தான், மனுதாரர்களின் (ராம.ரவிகுமார் தரப்பு) கடும் எதிர்ப்பை மீறி வழக்கு என்னால் (மார்ச் 18ஆம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டது.

இந்த 2 வாரகால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அமருவில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டப்படி தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதித்துறை சார்ந்த நிவாரணங்களைப் பயன்படுத்திக் கொள்வது எதிர்மனுதாரர்களின் (அரசு அதிகாரிகளின்) உரிமை. அதேசமயம், நான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்வு தோன்றுகிறது.

நீதிமன்றத்தில் ஒரு பதிலுடன் மீண்டும் ஆஜராகும் பொருட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டது. அக்கோரிக்கை நீதிமன்றத்தால் ஏற்கப்படுமாயின், அதற்கிணங்க நீதியுணர்வுடன் செயல்படுவது நியாயமாகும். காதலிலும் போரிலும் மட்டுமல்ல, நீதிமன்ற நடவடிக்கைகளிலும் கூட அனைத்தும் நியாயமே.

கடந்தமுறை வழக்கு (மார்ச் 4) விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நான் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்தேன். ஆனால் காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன்ஆகியோர் இந்த நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. அவர்களில் ஒருவர், இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக எழுத்துபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

டிச.3-இல் நான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, பிரவீண்குமார், லோகநாதன் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். அதனை உயர்நீதிமன்ற அமர்வு டிச. 4-இல் தள்ளுபடி செய்தது. அப்போது, “டிச.3இல் தனி நீதிபதி (நான்) பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்றாதது வேண்டுமென்றே செய்யப்பட்டதா, இல்லையா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கும் பொறுப்பு தனி நீதிபதியையே (என்னையே) சாரும்” என்று அமர்வு நீதிபதிகளின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவும், நேற்று அமர்வு பிறப்பித்த இடைக்காலத் தடையும் முரண்பட வாய்ப்பில்லை. எனவே, முழு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் எந்தத் தடையும் இல்லை. நீதிமன்றத்தில் கடைசி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதாக உத்தரவில் இல்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம்.

டிச. 3-இல் நான் பிறப்பித்த உத்தரவை மீறியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும். அவ்வாறு செய்யாமல், அமர்வு பிறப்பித்த உத்தரவை நான் பின்பற்றாவிடில் எனது கடமையிலிருந்து தவறியவன் ஆவேன்.

டிச. 4இல் மேல்முறையீட்டை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து இதுவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. உயர்நீதிமன்ற அமர்வு டிச. 4இல் பிரப்பித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் வரையிலும், நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்த வேண்டியிருக்கும்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உத்தரவு தொடர்பானது மட்டுமல்ல. எவ்வாறாயினும் இவ்வழக்கு தற்போது இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளது. அது ஏப். 8 வரை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இவ்வழக்கு விசாரணை ஏப். 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது”.

-இவ்வாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

  • ஆதாரம்: ஒன் இந்தியா / தினமணி

$$$

முந்தைய நாள் (மார்ச் 17) வழக்கு விசாரணை செய்தி:

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான அவமதிப்பு வழக்கில்

தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

விசாரணையை ஏப்.8-க்கு தள்ளிவைத்த இரு நீதிபதிகள் அமர்வு

மதுரை, மார்ச் 17: ​​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கு தொடர்பான நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு​களில் தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு​க்கு ஏப்​. 8-ஆம் தேதிவரை இடைக்​கால தடை விதித்து உயர் நீதி​மன்ற அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

திருப்பரங்குன்றம் தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்​தும், நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​களில் தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக​வும் அரசுத் தரப்​பில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இதனை விசா​ரித்த இரு நீதிப​தி​கள் கொண்ட அமர்​வு, ஒவ்​வோர் ஆண்​டும் கார்த்​திகை தீப நாளில் தீபத்​தூணில் கோயில் நிர்​வாகம் தீபம் ஏற்ற வேண்​டும் என ஜன. 6-ஆம் தேதி உத்​தர​விட்​டது. நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​கள் நிலு​வை​யில் இருந்​தன.

இதனிடையே நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து விசா​ரணை நடத்தி, பல்​வேறு உத்​தர​வு​களை பிறப்​பித்து வந்​தார். இந்த மனு கடந்த மார்ச் 4-ஆம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது,  “உயர் நீதி​மன்​றம் நியமிக்​கும் 5 பேர் கொண்ட குழு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வழி​பாடு நடத்த அனு​ம​திப்​பது தொடர்​பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்​டும். மேலும் இதுதொடர்​பாக மார்ச் 18-ஆம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன் ஆகியோர் தகுந்த பதில் அளிக்​க வேண்டும். தவறினால் அவர்​கள் மீது குற்​றச்​சாட்டு பதிவு செய்​யப்​படும்” என உத்​தர​விட்டு அடுத்தகட்ட விசா​ரணையை தள்​ளி​வைத்​திருந்​தார்.

இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு இன்று (மார்ச் 18) விசா​ரணைக்கு வரவிருந்த நிலை​யில், நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு​களில் தனி நீதிபதியின் உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நீதிபதிகள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் நேற்று (மார்ச் 17) விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது அரசுத் தரப்​பில்,  “நீதி​மன்​றம் பரிந்​துரைக்​கும் 5 பேரை தீபத்​தூண் அருகே பூஜை செய்ய அனு​ம​திப்​பது தொடர்​பாக தெரிவிக்​கக் கூறப்​பட்​டுள்​ளது. இந்த அவம​திப்பு வழக்​கில் புதிய நபர்களும் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இது உச்ச நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ரானது. இதற்கு எதிராக​வும் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதை​யும் விசா​ரிக்க வேண்​டும்” எனக் கோரப்​பட்​டது.

அப்​போது நீதிபதிகள்,  “அதை அனு​ம​திப்​ப​தில் என்ன சிக்​கல் இருக்​கப் போகிறது? 5 நபர்​களை பூஜை செய்ய அனுப்​புவது பிரச்​சினை​யாக இருந்​தால் கோயில் சார்​பில் பூஜை செய்​ய​லாமே? இது சிறிய விஷ​யம்தானே? இதில் ஈகோ பார்க்கக் கூடாது. பிடிவாதம் பிடிக்கக் கூடாது. இதை செய்து மற்ற பிரச்​சினை​களைத் தவிர்க்​கலாமே? சிறு பிரச்சினைக்கு எத்தனை வழக்குகளை தாக்கல் செய்வீர்கள்? இதனால் நீதிமன்றத்தின் நேரம் தான் வீணாகிறது” என்றனர்.

அதற்கு அரசுத் தரப்​பில், “நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 2 உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளன. அதி​காரத்தை மீறி உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது” எண்று தெரிவிக்கப்​பட்​டது.

பின்​னர் நீதிபதிகள்,  “நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கின் உத்​தர​வு​விவரங்களை அரசுத் தரப்​பில் தாக்கல் செய்ய வேண்​டும். அது​வரை நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு​களில் தனி நீதிபதி டிச. 4இல் பிறப்பித்த உத்​தர​வு​களுக்கு இடைக்​காலத் தடை விதிக்​கப்​படு​கிறது. விசா​ரணை ஏப். 8-க்கு தள்ளிவைக்​கப்​படு​கிறது”  என உத்​தரவிட்​டனர்​.

  • ஆதாரம்: இந்து தமிழ் திசை/ தினமலர் (18.03.2026)

$$$

Leave a comment