துணை ஜனாதிபதியாகும் தமிழர்!

-வ.மு.முரளி

நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும்  திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவால் பதவி விலகியதால், வரும் செப். 9ஆம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ஆர். மிகப் பெரும்பான்மை வலுவுடன் வென்றிருக்கிறார்.

சி.பி.ஆரின் பொதுவாழ்க்கை 16 வயதில் தொடங்கியது. திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி. அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தபோது நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டு மாணவர் தலைவராக வென்றவர் சி.பி.ஆர். அதற்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ். தொடர்புடன் ஷாகா செல்லத் தொடங்கி இருந்தார். அந்தக் காலத்தில் மாநிலத்தில் திமுக ஆட்சி இருந்தது. அதை எதிர்த்து பல மாணவர் போராட்டங்களை சிறு வயதிலேயே நடத்தி இருக்கிறார். தேசிய சிந்தனையும், போராட்டக் குணமும், தலைமைப் பண்பும் தான் இவரை நாட்டின் இரண்டாவது உயரிய பதவியை நோக்கிக் கொண்டு சென்றிருக்கின்றன.

1957, அக்டோபர் 20ஆம் தேதி, பிறந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். பெற்றோர்: சி.கே.பொன்னுசாமி – ஜானகி. திருப்பூர் அருகிலுள்ள சந்திராபுரம் கிராமம் தான் இவர்களது பூர்வீகம். விவசாயக் குடும்பம். தந்தை எல்.ஐ.சி. முகவராகவும் இருந்தார். கோவை தொகுதி எம்.பி.யாக (காங்கிரஸ்) இருமுறை இருந்த சி.கே.குப்புசாமி இவரது பெரியப்பா. குடும்பமே காங்கிரஸ் குடும்பம். அந்தக் காலத்தில் சிறந்த தத்துவ ஞானியாக அறியப்பட்ட, பின்னாளில் துணை ஜனாதிபதியான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் மீதான பற்றில்தான், தங்கள் மகனுக்கு இவரது பெற்றோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். காலத்தின் விளையாட்டு, இன்று அவரும் துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி. நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் (இப்போது மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி) சி.பி.ஆர். படித்தபோது ஆர்.எஸ்.எஸ்.  தொடர்பு ஏற்பட்டது. அப்போது 11வது வரை (அதுவே அன்றைய எஸ்.எஸ்.எல்.சி.) படிக்க வேண்டும். படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்த மாணவராக இருந்தார்; மாணவர் தலைவராகவும் ஆனார். 

அடுத்து கல்லூரி அறிமுக வகுப்பான பி.யூ.சி.யை கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தார். அதையடுத்து இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்க திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கல்லூரியில் சேர்க்கப்பட்டார். ஆனால், இவரது ஆர்.எஸ்.எஸ். தொடர்பும் தீவிர அரசியல் ஈடுபாடும் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தின. எனவே, பெரியப்பாவின் முயற்சியால் அங்கிருந்து விலக்கி, தூத்துக்குடியில் உள்ள  வ.உ.சி. கலைக் கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாகம் (பிபிஏ) படிப்பில் சேர்த்தனர். அக்கல்லூரி அப்போதைய காங்கிரஸ்  எம்.பி.யான ஏ.பி.சி.வீரபாகுவால் நடத்தப்பட்டது. அங்கு சென்றும் ஆர்.எஸ்.எஸ். பணியில் ஈடுபட்டதால், கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார்; பெரியப்பாவும் காங்கிரஸ்காரர் என்பதால் படிப்பு தடைபடவில்லை.

படிப்பு முடித்து திருப்பூர் திரும்பியவரை மீண்டும் அரசியல் ஈர்த்தது. பாஜகவின் முந்தைய வடிவான பாரதிய ஜனசங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகவும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். இவரை வளர்த்தெடுத்ததில் அமரர் மூர்த்திஜியின் பங்களிப்பு  குறிப்பிடத் தக்கது. பல்லடம் தாலுகா பிரசாரக் ஆக இருந்த மூர்த்திஜி பின்னாளில் இந்து முன்னணியின் மாநில நிர்வாகியாக இருந்தவர்.

இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடிநிலையின் போது, அதை எதிர்த்து தலைமறைவுப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். கார்பன் தாளில் வைத்து எழுதி பிரதி எடுத்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருக்கிறார். அதையடுத்து 1978இல் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்து, கவிழ்ந்த பிறகு, 1980இல் ஜனசங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். அடுத்து, அது பாஜகவாக மாறியபோதும் கட்சிப் பணிகளைத் தொடர்ந்தார்.

அதன் பிறகு திருப்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். தலைவர், மாவட்டத் தலைவர் பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். 1984இல் பொள்ளாச்சியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். முதலாம் ஆண்டு பயிற்சி முகாமில் பங்கேற்றார்.

துணை ஜனாதிபதி தேர்தல்- ஒரு புள்ளிவிவரம்:

நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

லோக்சபா எம்.பிக்கள் மொத்த எண்ணிக்கை: 543
காலி இடம்: 1
வாக்களிக்க தகுதி கொண்டவர்கள்: 542

ராஜ்யசபா எம்.பி.க்கள் மொத்த எண்ணிக்கை: 245
காலியிடம்: 6
வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்: 239.

வாக்களிக்க தகுதி கொண்ட லோக்சபா + ராஜ்யசபா எம்.பி.க்கள் எண்ணிக்கை: 542 + 239 = 781.
வாக்களிக்காதவர்கள்: 14
பதிவான வாக்குகள்: 767  
செல்லாத வாக்குகள்: 15
பதிவான செல்லும் வாக்குகள்: 752

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பெற்ற வாக்குகள்: 452
இண்டி கூட்டணி வேட்பாளர் பெற்ற வாக்குகள்: 300

152 வாக்குகள் வித்தியாசத்தில் திரு. சி.பி.ஆர். துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1985இல் சி.பிஆருக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி சுமதி. இவர்களுக்கு மகன் ஹரிசஷ்டிவேல், மகள் அபிராமி என இருவர் பிறந்தனர். அதன் பிறகே தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். திருப்பூரில் பின்னலாடை உற்பதியில் முன்னோடியாக இருந்தவர் சி.பிஆர். இவரது ஸ்பைஸ் கார்மென்ட்ஸ் உள்நாட்டு உற்பத்தியிலும், ஹிந்துஸ்தான் எக்ஸ்போர்ட்ஸ் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தின. தொழிலில் சிறப்பாகச் செயல்பட்டாலும், அரசியல் ஆர்வம் காரணமாக, அதை பெரிய அளவில் அவர் வளர்க்கவில்லை. 

1996இல் பாஜகவின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1998இல் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தபோது கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். 1999 தேர்தலிலும் தொடர்ந்து அவரே வென்றார். வாஜ்பாய் ஆட்சியின்போது நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுக்களில் சிறப்பாகச் செயல்பட்டார். 2003இல் ஐ.நா. சென்ற நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுச் சென்றதுடன், ஐ.நா. பொது அவையில் (20.10.2003) உரையாற்றினார்.  ‘இயற்கைச் சீற்றங்களின்போது அரசியல் வேற்றுமைகளை மறந்து மனிதநேயத்துடன் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று தனது உரையில் சி.பி.ஆர். குறிப்பிட்டார்.

வாஜ்பாய் அரசில் ஜவுளித் துறையினருக்காகக் குரல் கொடுப்பதில் முன்னிலை வகித்த சி.பி.ஆர். நாடாளுமன்ற ஜவுளித் துறைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதைப் பயன்படுத்தி, விசைத்தறிகளை நவீனமயமாக்கத்திற்கு கடனுதவி அளிக்கும்  டி.யு.எஃப். திட்டத்தைக் கொண்டுவந்தார். பின்னலாடைகளுக்கு டிராபேக் குறைக்கப்பட்டபோது அரசுடன் பேசி அதனை அதிகரிக்கச் செய்தார்.

2004, 2014, 2019 தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ஆர். தோல்வியைத் தழுவினார். என்றபோதும் பாஜகவின் செயல்பாடுகளில் முன்னிலை வகித்தார்.

2003 முதல் 2006 வரை தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக சி.பி.ஆர். இருந்தபோது, குமரி முதல் சென்னை வரை 2003-இல் மிகப்பெரிய ரதயாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுச் சின்னத்தில் தொடங்கிய இவரது யாத்திரை, தமிழகத்திலுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்குச் சென்று, 93 நாட்களில் சென்னை விவேகானந்தர் இல்லத்தை அடைந்தது. வாஜ்பாய் அரசின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்தல், தேசிய நதிநீர் இணைப்பு, மகளிருக்கு 33 % ஒதுக்கீடு, ஹரிஜன மக்களின் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த யாத்திரையை சி.பி.ஆர். நடத்தினார்.

சமூக இணக்கத்தின் நாயகன்

சி.பி.ஆர். கோவை எம்.பி.யாக இருந்தபோது, திருப்பூர், மங்கலம் அருகிலுள்ள மலைக்கோயிலில் ஹரிஜன மக்கள் ஆலயப் பிரவேசம் செய்ய வேண்டும் என்ற போராட்டம் ஹரிஜன அமைப்புகளால் நடத்தப்பட்டது. அதனை அரசு கையாண்ட விதத்தால் அங்குள்ள கொங்கு வேளாளர் - ஹரிஜன மக்களிடையே மனக் கசப்பு ஏற்பட்டிருந்தது. அதனைப் போக்க, ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகி வி.சண்முகநாதன், மாவட்டத் தலைவர் ஆம்ஸ்டிராங் பழனிசாமி, பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் இளைய பீடாதிபதியாக இருந்த மருதாசல அடிகள் ஆகியோருடன் 18 கிராமங்களுக்குச் சென்று சமூக ஒருமைப்பாட்டு விழிப்புணர்வை சி.பி.ஆர். ஏற்படுத்தினார். ஹரிஜன மக்களின் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது, கவுண்டர் சமுதாய மக்களிடம் பேசி அவர்களைப் புரிய செய்வது என்ற இரட்டைச் செயல்பாட்டின் விளைவாக, அங்கு ஏற்பட இருந்த பெரும் சிக்கல் தவிர்க்கப்பட்டது. ஹிந்துக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியதன் வாயிலாக இந்த மாற்றம் அங்கு நிகழ்த்தப்பட்டது.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும் தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக (2016 -19) நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் கயிறு வாரியம் புதிய சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு தென்னைநார்ப் பொருட்களின் ஏற்றுமதியைப் பெருக்கியது. அதற்கு முன் மிதியடி தயாரிப்பில் மட்டுமே கவனம் கொடுத்துவந்த நிலையில் திரைச்சீலை உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பை ஊக்குவித்தன் மூலமாக, ரூ. 50 கோடியாக இருந்த தென்னைநார்ப் பொருட்களின் ஏற்றுமதி ரூ. 2,000 கோடியாக உயர்ந்தது.

2020-இல் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான சி.பி.ஆர், 2020-22-இல் கேரளா பாஜக வின் பொறுப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். 2023இல் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ஆர்., 2023 வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார். 2024இல் மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். இதனிடையே, தெலுங்கானா ஆளுநராகவும், பாண்டிசேரி துணைநிலை ஆளுநராகவும் சில மாதங்கள் தற்காலிகப் பொறுப்பு வகித்திருக்கிறார். மாநில அரசுகளுடன் சுமுக உறவைக் கொண்டிருந்ததுடன், தேவையான நேரங்களில் ஆளுநருக்குரிய கண்டிப்பைக் காட்ட சி.பி.ஆர். தவறியதில்லை.

இவ்வாறாக 1974ஆம் ஆண்டுமுதல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கண்டிருப்பது, தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டிய நிகழ்வு.

எதிர்த்தரப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டார். ஒரு தமிழர் என்ற முறையில் சி.பி.ஆரை திமுக ஆதரித்திருக்க வேண்டும். ஆனால், வழக்கம்போல அக்கட்சி அரசியல் நாடகம் நடத்தியது. இதன்மூலம், அக்கட்சியின் சாயம் வெளுத்திருக்கிறது. கொங்கு மண்டலத்தின் முக்கியமான தலைவரை இத்தேர்தலில் முன்னிறுத்தியது, பாஜகவின் மிகச் சிறந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

பொது வாழ்வில் 51 ஆண்டுகளாக ஒரே கொள்கையில் இடைவிடாது இயங்கியதன் பலனை சி.பி.ராதாகிருஷ்ணன் இப்போது பெற்றிருக்கிறார். எந்தப் பணி கொடுத்தாலும் அதை திறம்படச் செய்பவர் என்பதால் நாட்டின் மிக உயரிய பதவிக்கு இவர் தேர்வாகி இருக்கிறார்.

அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்ட, இங்கிதம் அறிந்த, கொங்குத் தமிழில் அளவளாவும் சி.பி.ஆரின் செயல்பாடுகள் தான் இவரை உயர்த்தி இருக்கின்றன. கொள்கைப் பிடிப்பு கொண்டோருக்கு இவரது உயர்வு வழிகாட்டியாகத் திகழும் என்பது உண்மை.

$$$

Leave a comment