தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 1

-சேக்கிழான்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது 1947 ஆகஸ்ட் 14-இல் திருவாவடுதுறை ஆதீனத்தால் நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று (28.05.2023)  தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்படுகிறது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. இதனையொட்டி, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செங்கோல் குறித்த பதிவுகளைக் காண்போம்...

1. திருக்குறளில் செங்கோன்மை

பழந்தமிழர் மரபில் சோழர், சேரர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்தில், மன்னர்களின் சிறப்பு அடையாளமாக செங்கோல் இடம் பெற்றதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கிய நூல்களில் உள்ளன. திருக்குறள், தேவாரம் ஆகிய நூல்களிலும் செங்கோல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்கோல் என்பதன் பொருள், செம்மையான கோல் என்பதே. நீதி, நேர்மை தவறாமல் ஆட்சி நடப்பதைப் பறைசாற்றும் விதமாகவும், மன்னர்கள் தங்களுக்கு தாங்களே நீதியைக் காக்க வேண்டியதன் தார்மிக உரிமையை உணர்த்திக்கொள்ளும் விதமாகவும் தான் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. மன்னர்களின் குலகுருக்கள் பட்டாபிஷேகத்தின்போது இதனை மன்னருக்கு அளித்து ஆசி வழங்குதல் மரபு.

முடியாட்சிக் காலத்தில் மன்னரின் அடையாளமாக அமைந்திருந்த மணிமகுடம், சிம்மாசனம், முரசு போன்றவற்றின் வரிசையில் செங்கோலுக்கும் முக்கிய இடமுண்டு. மன்னரின் கோணாத செங்கோலே நாட்டைக் காக்கிறது என்பது மக்களின் நம்பிக்கை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முறை தவறாமல் செங்கோன்மை ஆட்சி நடத்திய மன்னர்களை இலக்கியங்கள் புகழ்கின்றன.

வான்முகில் வழாது பெய்க!
   மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க!
   குறைவிலாது உயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்கள் ஓங்க
   நற்றவம் வேள்வி மல்க!
மேன்மைகொள் சைவ நீதி
   விளங்குக உலக மெல்லாம்!

      -கச்சியப்ப சிவாச்சாரியார்

-என்பது கந்த புராணம்.

அரசன் கோன்முறை அரசாளும்போது, வான்மழை தவறாது பொழியும்; மலைவளம் பெருகும்; மக்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களும்  குறையில்லாமல் வாழும்; வேதங்களும், அறமும் ஓங்கும்; தவம் புரிவோர் மகிழ்வர்; உலகம் அனைத்தையும் ஒன்றெனக் கருதும் சைவநீதி உலகமெங்கும் சிறக்கும்.

செங்கோலின் இலக்கணம்:

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் தமிழின் மணிமகுடமான திருக்குறளில் செங்கோல் குறித்த பல குறட்பாக்கள் உண்டு. திருக்குறளின் பொருட்பாலில், அரசியல் என்ற பகுப்பில், நாட்டை ஆளும் மன்னருக்குத் தேவையான நீதிகள் பல போதிக்கப்படுகின்றன. குறிப்பாக, மன்னரின் சிறப்பை வெளிப்படுத்தும் செங்கோன்மை என்ற அதிகாரமே தனியாக உள்ளது.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

-திருக்குறள் 390

-என்று திருக்குறளின்  ‘இறைமாட்சி’ அதிகாரம் மன்னரின் இலக்கணம் கூறும்.

இதன் பொருள்: கொடை, அருள், செங்கோல் முறை, நாட்டின் குடிமக்களைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்று ஒளிர்ப்பவன்.

ஒரு மன்னனின் நடுநிலைமை எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் ’தெரிந்து வினையாடல்’ aதிகாரத்தில் கூறுகிறார் வள்ளுவர்.

“நாள் தோறும் தன் கடமைகளை ஆராய்ந்து தன் செயல்களை நடுவுநிலைமை தவறாது, நீதி வழுவாமல் ஒரு அரசன் செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு அரசன் செய்வான் ஆயின் அந்நாட்டு மக்களும் அவர்கள் பணிகளை சரியாகச் செய்வர். அரசன் தனது நீதியில் இருந்து தனது கடமையில் வளையவில்லையென்றால் (கோடாமை: செங்கோல் ஒருபுறம் சாயாமை) என்றால், மக்களும் அவர்களது கடமையில் இருந்து தவற மாட்டார்கள். ஒரு அரசன் அவன் நாட்டிற்கு  தன் செயல்களில் நேர்மையாக முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என்கிறார் வள்ளுவர். இதோ அக்குறள்:

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

    -திருக்குறள்- 520

மன்னனுக்கு பத்து கட்டளைகள்:

இனி செங்கோன்மை அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் பத்து குறட்பாக்களையும் காணலாம். திரு. மு.வரதராசன் எழுதிய உரையே இங்கு பொருள் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

-திருக்குறள்- 541

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத் தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

-திருக்குறள்- 542

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன;  அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

-திருக்குறள்- 543

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

-திருக்குறள்- 544

குடிகளை அன்போடு அணைத்துக்கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலை பெறும்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

-திருக்குறள்- 545

நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

-திருக்குறள்- 546

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

-திருக்குறள்- 547

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின், அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

-திருக்குறள்- 548

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

-திருக்குறள்- 549

குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

-திருக்குறள்- 550

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்கு நிகரான செயலாகும்.

(தொடரும்)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 1

Leave a comment