-வ.மு.முரளி
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை.

முன்னுரை
‘ஆளுடையபிள்ளை’ என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்த நாயனார், ‘அப்பர் பெருமான்’ என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார், ‘தம்பிரான் தோழர்’ என்று அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய இம்மூவரும் தமிழகம் எங்கும் பயணித்து, சைவமும் தமிழும் வளர்த்தனர்.
சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவர்களின் புனிதக் காலடி பெற்ற பேறு பெற்ற தலங்கள் மாநிலம் முழுவதும் உண்டு. அவர்கள் ஒவ்வொரு தலத்திற்குச் செல்லும்போதும் இன்தமிழால் தல இறைவனைப் பாடி மகிழ்ந்தனர். அவற்றில் கால வெள்ளத்தில் காணாமல் போனவை போக மீதமுள்ள பாடல்களை, பத்தாம் நூற்றாண்டில், மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆணைப்படி, நம்பியாண்டார் நம்பி தொகுத்தார். சைவ இலக்கியத் தொகுப்பான பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் இவரே.
பன்னிரு திருமுறைகளில் முதல் 7 திருமுறைகள் ‘தேவாரம்’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றைப் படைத்தோர் விவரம்:
- திருஞானசம்பந்தர் (1, 2, 3 திருமுறைகள்) – 4,169 பாடல்கள்,
- திருநாவுக்கரசர் (4, 5, 6 திருமுறைகள்) – 3,066 பாடல்கள்,
- சுந்தரர் (7-ஆம் திருமுறை) – 1,037 பாடல்கள்.
- மொத்தம்: 8,272 பாடல்கள்.
தேவார மூவரால் பாடப்பட்ட திருத்தலங்கள் இன்னும் பல இருந்திருக்கலாம். நமக்குக் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை: 8,272. அந்தப் பாடல்களில் காணும் திருத்தலங்களின் அடிப்படையில் மட்டுமே, இந்நூலை நாம் தொகுத்திருக்கிறோம்.
கொங்குநாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற மேற்கண்ட ஏழு திருத்தலங்களும், 13 தேவார வைப்புத் திருத்தலங்களும், நம்மை ஆன்மிகரீதியாக ஒன்றுபடுத்தி வருகின்றன. இந்தத் தலங்கள், சைவமும் தமிழும் இரு கண்ணென வளர்த்து, மக்களை நன்னெறிப்படுத்துபவை.
இத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபடும்போது, தேவார மூவர் அருந்தமிழால் போற்றிப் பாடிய பதிகங்களும், அவர்களது தெய்வீக சாதனைகளும் நினைவில் வருகின்றன. மந்திரத் தமிழில் பதிகம் பாடி இறைவனை வணங்கிய நமது முன்னோரின் நினைவுகளே நம்மை என்றும் காக்கும்.

கொங்கேழ் தலங்கள்:
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி தமிழகத்தில் உண்டு. தமிழகத்தின் பழமையான நகரங்கள், ஊர்கள் பலவும் அங்குள்ள கோயிலை மையமாகக் கொண்டே உருவாகியிருப்பதைக் காண முடியும். தமிழோடு சைவமும் வைணவமும் வளர்த்த பெருமை மிக்கது தமிழகம்.
பண்டைக்காலத்தில் தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு என அரசியல்ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த பிராந்திய வேறுபாடுகள் ஒவ்வொரு காலத்திலும் மாறியபடியே இருந்துள்ளன. ஆயினும், ஏதாவது ஒரு ஊரைக் குறிப்பிடுகையில் அந்த ஊர் உள்ள பகுதியை சேரநாடு, கொங்குநாடு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்துள்ளது.
அதன்படி, தர்மபுரி முதல் கோவை வரையிலான தற்போதைய மேற்கு மண்டல தமிழகப் பகுதிகள் ‘கொங்குநாடு’ என்று அழைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்கள் அக்காலத்தில் ‘கொங்குநாடு’ என்று அழைக்கப்பட்டுள்ளன.
இந்த கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவை:
- பவானி
- திருச்செங்கோடு
- கரூர்
- கொடுமுடி
- அவிநாசி
- திருமுருகன்பூண்டி
- வெஞ்சமாகூடல்.
தேவார மூவர்:
தமிழகத்தில் சைவசமய எழுச்சி 1,500 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. அப்போது தோன்றிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவார மூவர் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கால்நடையாகவே சென்று பக்திப்பயிர் வளர்த்தனர். சைவ சமயத்தில் மட்டுமல்லாது தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடும் திறனும் படைத்த அவர்கள், ஊர்தோறும் சென்று அத்தலத்தின் இறைவனையும் தலத்தையும் போற்றி பதிகங்கள் பாடி மக்களை வழிப்படுத்தினர்.
அவர்களது தமிழகப் பயணம் பல அற்புதங்களை நிகழ்த்துவதாகவும் அமைந்தது; இறையாற்றல் வாய்ந்த மொழி தமிழ்மொழி என்பதை நிலைநாட்டுவதாகவும் அமைந்தது. தேவார மூவர் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகளில் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கொங்கு நாட்டில் உள்ள ஏழு தலங்கள் மீதான பதிகங்களும் அடங்கும்.
திருநணா (பவானி), திருச்செங்கோடு, கருவூர் (கரூர்), திருமுருகன் பூண்டி, திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி), திருப்புக்கொளியூர் (அவிநாசி), வெஞ்சமாக்கூடல் ஆகிய ஏழும் ‘கொங்கேழ் தலங்கள்’ என்ற சிறப்புப் பெற்றவை. இத்தலங்கள் தேவார மூவர் விஜயம் செய்து அற்புதங்கள் நிகழ்த்திய பெருமை வாய்ந்தவை.
தேவாரப் பாடல்களில் பதிவு பெற்று ஆன்மிக சரித்திரத்தில் இடம் பெற்றவை இந்த ஏழு தலங்களும். அந்த ஏழு தலங்களுக்கும் செல்வோமா?
(தொடர்கிறது)
$$$