பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்

-ஜனனி ரமேஷ்

 ‘பொது சிவில் சட்டத்திற்கு’ ஆதரவாக டாக்டர் அம்பேத்கரும், நீதிமன்றங்களும் கூறியதையே, மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தும் வழிமொழிந்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறவும், டாக்டர் அம்பேத்கர் கனவை நனவாக்கவும், பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.

சொத்துரிமை, முத்தலாக் ஆகிய இரண்டுமே முஸ்லிம் ஷரியத் சட்டத்தில் முக்கியமானவை.  இவற்றில் முஸ்லிம் பெண்ணை ஒரே நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ கூறி ஆண்கள் விவாகரத்து செய்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் சட்டம் 2019 ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்தது. எனவே, முஸ்லிம் தனிநபர் ஷரியத் சட்டத்தில் (1937) பெண்களுக்குப் பாகுபாடு காட்டும் சொத்துரிமை, வாரிசுரிமை பிரிவுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர்  பௌலோமி சுக்லா மனு தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி  சூர்யகாந்த், நீதிபதிகள் ஆர் மகாதேவன், ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் முன்னிலையில் 2025 மார்ச் 10ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பாக்சி கூறுகையில் ‘1951ஆம் ஆண்டில் நரசு அப்பா மாலி வழக்கில் திருமணம், சொதுரிமை உள்ளிட்ட தனிநபர் சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்கி உள்ளதா என்பதை ஆராய முடியாது என பம்பாய் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது’ என்றார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பதிலளிக்கையில் ‘வாரிசுரிமை என்பது சிவில் உரிமை, மதச்சடங்கு இல்லை. எனவே முஸ்லிம் ஆண்களுக்கு நிகரான சொத்து உரிமையை முஸ்லிம் பெண்களுக்கும் வழங்க வேண்டும். ஷாயரா பானு வழக்கில் முத்தலாக் முறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முத்தலாக் போல மதம் சார்ந்த விவகாரமாக இல்லாமல், சொத்துரிமை சிவில் உரிமை என்பதால், நீதிமன்றமே உத்தரவிடலாம். கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளதால் அங்குள்ள இஸ்லாமிய ஆண்களுக்கு நிகரான சொத்துரிமையைப்  பெண்கள் பெறுகின்றனர்’ என்றார்.

நீதிபதி பாக்சி தொடர்கையில், ‘ஒருவனுக்கு ஒருத்தி என்பது அனைத்துச் சமூகங்களிலும் சீராக இல்லை. அதற்காக இருதாரத் திருமணங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கலாம் என்பது அர்த்தமாகுமா? தற்போதைய தனிநபர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தால், வாரிசுரிமை, சொத்துரிமை விவகாரங்களில் சட்ட வெற்றிடமே ஏற்படும். தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி, பெண்களுக்குத் தற்போது கிடைக்கும் சிறிய அளவிலான உரிமைகள் கூட பறிபோகலாம். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றமே சட்டம் இயற்ற முடியுமென உச்சநீதிமன்றம் பல முறை கூறியுள்ளது’ என்றார்.

நீதிபதி பாக்சி கருத்தை ஆமோதித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில்,  ‘தனிநபர் சட்டங்களிலுள்ள பாலின, வாரிசுரிமை, சொத்துரிமை, திருமண வேற்றுமைகளுக்கு ‘பொதுச் சிவில் சட்டமே’  தீர்வாகும். இதே கருத்தை 1985 ஷாயிரா பானு, 1996 சரளா முட்கல், 2003இல் ஜான் வல்லமட்டொம், 2019இல் ஜோஸ் பாலோ கோடின்ஹோ வழக்குகளில், பொது சிவில் சட்டத்தின் தேவையை வலியுறுத்தி நீதிபதிகள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளனர்’ என்றார். 

இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டபோதும், இங்கு ‘பொது உரிமையியல் சட்டம்’ அமல்படுத்தப்படவில்லை. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 44 ஆவது பிரிவு,  ‘இந்திய நிலப் பரப்பில் வாழும் மக்கள் ஒரே சீர்மையிலான பொது சிவில் சட்டத்தை (Common Civil Code) பெற அரசு முயற்சி எடுக்க வேண்டும்’ (The State Shall endeavor to secure for the citizens a Uniform Civil Code throughout the territory of India) என்கிறது.

இந்தியாவில் வாழும் இந்துக்களைத் தவிர, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், யூதர்கள், பஹாய்கள் உள்ளிட்டோர் சிறுபான்மையினராகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்துக்களுக்கான சட்டங்கள் இயற்றப்படும் வரை, அவர்களின் தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட ‘யாஞ்யவல்கர் ஸ்மிருதி’, அதன் உரைநூலான ‘மிதாக்ஷ்ரா’, ‘தயாபாகா’ ஆகியவை குடும்பச் சொத்துரிமை குறித்த வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1956இல் இந்துக்களுக்காகப் பின்வரும் சட்டங்கள் இயற்றப்பட்டன:

1. இந்து திருமணம் மற்றும் மணமுறிவுச் சட்டம் (Hindu Marriae & Divorce Act)

2. இந்து இறங்குரிமைச் சட்டம் (Hindu Intestate Succession)

3. இந்து இளவர் உரிமை மற்றும் பாதுகாப்பாளர் சட்டம் (Hindu Minority & Guardianship Act)

4. இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் (Hindu Adoption & Maintenance Act) 

5. உயில்வழி இறங்குரிமை & இந்திய இறங்குரிமைச் சட்டம் (Testamentary Succession & Indian Succession Act)    

இஸ்லாத்தில் ஷியா, சுன்னி, அஹமதியா, கச்சி மேமம், கோஜா, லப்பை, ஹனாஃபி, ஷஃபி, மாலிகி, ஹன்பாலி ஆகிய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், உட்பிரிவிலும் வாரிசு உரிமை, சொத்துரிமை ஆகியவை வேறு வேறாக இருக்கும். முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டமாக உள்ள ‘ஷரியத்’  நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்ட எந்தச் சட்டத்தின் கீழும் வரவில்லை.

கிறிஸ்தவம் ஆங்கிலேய மற்றும் போர்சுகீஸிய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் பரவத் தொடங்கியது. 1872இல் இயற்றப்பட்ட இந்தியக் கிறிஸ்தவ மதத் திருமணச் சட்டத்தில் திருமணம், மணமுறிவு, வாரிசுரிமை, சொத்துரிமை, இறங்குரிமை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. கிறிஸ்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட இச்சட்டங்கள், திருவிதாங்கூர், கொச்சி உள்ளிட்ட சமஸ்தானங்களுக்கு ஏற்ப மாறுபட்டன.

கிறிஸ்தவர்களாக மாறிய மேகாலயாவிலுள்ள காசி, ஜெயந்தியா, காரோ மலைவாழ் / பழங்குடி மக்களிடையே இந்து முறைப்படிதான் சொத்துப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. பிகார் முண்டாக்களும், ஒடிசா ஓராங்களும் கிருத்தவர்களான பிறகும், பழங்குடி பழக்க வழக்கப்படிதான் சொத்துப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. பார்சி இன மக்களின் திருமண மற்றும் மணமுறிவுகளுக்கு பார்சி திருமண மற்றும் மணமுறிவுச் சட்டமும், சொத்துக்கள் விவகாரங்களுக்கு இந்து இறங்குரிமைச் சட்டமும் பொருந்தும்.

முதல் மனைவிக்குத் தெரியாமலோ, சம்மதம் இல்லாமலோ இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதை இந்து மதம் சட்ட விரோதமாகக் கருதுகிறது. அரசாங்க ஊழியராக இருப்பவர் முதல் மனைவிக்குத் தெரியாமல், இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை, முதல் மனைவி புகாராகப் பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு  அரசு வேலை பறிபோகும்.

ஆனால் முதல் மனைவி இருக்கும்போதே பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாத்தில் முன்பு, நீதிமன்றத்திற்குச் செல்லாமலேயே ‘தலாக்’, ‘தலாக்’, ‘தலாக்’ என்று மூன்று முறை சொல்லி மனைவியை விவாகரத்து செய்யலாம். ஆனால், 2019இல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து முத்தலாக் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமானது. 

இஸ்லாமிய சமூகத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும், பெண்ணுக்கு ஒரு பங்கும் சொத்து வழங்கினால் போதும் என்று விதி உள்ளது. திருவாங்கூர் சமஸ்தானம் உருவாக்கிய கிறிஸ்தவச் சட்ட விதிகளின்படி, பெண் வாரிசுக்கு 5,000 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, ஆண் வாரிசுக்கு மீதமுள்ள அனைத்துச் சொத்துகளையும் கொடுத்து விடலாம் என்று சட்டம் சொல்கிறது. இந்து சமூகத்தில் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லை என்று 2005 ஆம் ஆண்டு வரை இந்து இறங்குரிமை சட்டத்தில் விதியாக இருந்தது (மேற்கு வங்கம், ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பே, பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு).

திருமணம், விவாகரத்து ஆகியவற்றில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் இல்லாமல் மதத்திற்கு மதம் மாறுபடுவதால், சாதகமான மதத்திற்கு மாறலாம். அல்லது மத மாற்றத்திற்கான தூண்டுகோலாக அமையலாம். இஸ்லாத்தில், விவகாரத்து பெற்ற பெண்ணுடைய ‘இதத்’ (IDDAT) காலத்தில் (முஸ்லிம் பெண்கள் விவாகரத்துக்குப் பிறகு, அடுத்துவரும் மூன்று மாதவிடாய் மாதங்களுக்கு) வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இந்த மூன்று மாதவிடாய் ‘இதத்’ காலத்தில் மட்டும் ஜீவனாம்சம் வழங்கினால் போதும் என்கிறது இஸ்லாம்.

ஆனால் மற்ற மதங்களில் விவாகரத்து பெற்ற மனைவி மறுமணம் செய்து கொள்ளும்வரை, அல்லது சுயமாக சம்பாதிக்கும் வரை, அவளுடைய முன்னாள் கணவன் ஜீவனாம்சம் வழங்கியே தீர வேண்டும்.  ஜீவனாம்சம் அளிக்க வேண்டியதில்லை என்று இஸ்லாம் கூறுவதற்குக் காரணம் திருமணத்தின் போது மணமகன் ‘மெஹர்’ என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மணமகளுக்கு  வழங்குகிறார். எனவே விவாகரத்து போன்ற பிரச்சினைகள் வரும்போது இந்தத் தொகையே ஜீவனாம்சத் தொகையாகக் கருதப்படுவதால், விவாகரத்து செய்த மனைவிக்கு தனியாக கணவன் ஜீவனாம்சம் அளிக்க வேண்டியதில்லை என்கின்றனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகக் கூறியதாவது:

“பொது சிவில் சட்டத்தை அந்தந்த மதத்தின் தனிப்பட்ட சட்டங்களுக்குப் பாதகம் வராமல் அமல்படுத்த வேண்டும் என்ற கருத்தை ஏற்க இயலாது. 1935ஆம் ஆண்டு வட மேற்கு எல்லைப்புற மாகாணங்களில் இஸ்லாமியர் தங்கள் மதம் சார்ந்த சட்டங்களை வைத்துக் கொள்ளாமல், ஹிந்து மதச் சட்டங்களைத்தான் பின்பற்றினர். 1937 ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த மும்பை மாகாணப் பகுதிகளிலும், இஸ்லாமிய மக்கள் ஹிந்து மதச் சட்டங்களையே பின்பற்றினர். வடக்கு மலபார் பிரதேசச் சட்டம் ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கும்தான்.

மதங்களின் தனிநபர் சட்டங்களைப் பாதுகாக்க, அரசியலமைப்புச் சட்டத்தில் விலக்களித்து, ஷரத்துகளைச் சேர்த்துக் கொண்டே போனால், நிறைவாக அரசியல் அமைப்புச் சட்டமே நீர்த்துப் போகும். சமூக முன்னேற்றத்திற்கே முட்டுக்கட்டை போடும். ஒரு சட்டம் பொதுவானது எனச் செயல் வடிவம் பெறுவது, ‘பொது நன்மை’ என்னும் அடிப்படையில்தான். சமூகம், இனம், மதம் ஆகியவற்றின் உணர்வுகளை, சம்பிரதாயங்களைப் பாதிக்கும் எண்ணத்தில் சட்டம் கொண்டு வரப்படுவதில்லை.  ‘மதங்களின் தனிநபர் சட்டங்கள், அரசின் சட்டம் இயற்றும் அதிகார வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்’   என்ற கருத்தைக்  கடுமையாக எதிர்க்கிறேன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பகுதி 3  அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) மற்றும் பகுதி 4 (Directive Principles of State Policy ) அரசின் கொள்கை நிர்ணயத்துக்கான வழிகாட்டிகள். இவற்றுக்கு இடையேயான முக்கியமான வேறுபாடு, பகுதி 3 உறுதி செய்யப்பட்ட,  நீதிமன்றத்தின் வழியாக, உரிமையாக கோரிப் பெற, உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஷரத்துக்களைக் கொண்டதாகும். ஆனால் பகுதி 4 அப்படியானது அல்ல. இதனாலேயே ‘பொது சிவில் சட்டம்’ ஓர் அடிப்படை உரிமை ஷரத்தாக உறுதி செய்யப்பட வேண்டும்”

-என்றார்.

 ‘பொது சிவில் சட்டத்திற்கு’ ஆதரவாக டாக்டர் அம்பேத்கரும், நீதிமன்றங்களும் கூறியதையே, மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தும் வழிமொழிந்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறவும், டாக்டர் அம்பேத்கர் கனவை நனவாக்கவும், பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.

  • நன்றி: தினமணி (16.03.2026)
  • குறிப்பு: திரு. ஜனனி ரமேஷ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

$$$

Leave a comment