-கருவாபுரிச் சிறுவன்
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23இல் நடைபெற உள்ளது. பாரதம் என்னும் தேசத்தின் வீட்டில் பூஜையறையாகத் திகழ்வது இந்த தமிழகம். பூஜையறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் இருந்தால், வழிபடுபவர்களுக்கு மனம் லயிக்காது. எனவே பூஜை ஈடுபாடு உள்ளவர்களையும் நம்பிக்கைக்குரியவர்களையும் கொண்டு வந்து விரைவில் சேர்க்கும் இயற்கை. அது நடக்கும் என நம்புகிறோம்.

உயர்ந்த ஞானமும் தெய்வீகமும் கொண்டது இந்த இந்த பாரத தேசம். இந்த தேசத்தில் வாழ்ந்த அருள்ஞானிகள், முனிவர்கள், அருளாளர்கள், மகான்கள், ரிஷிகள் யாவரும் இந்த அகண்ட பாரதத்தில் நிகழ்த்திய திருவெளிப்பாடுகள் எத்தனை எத்தனை!
அந்நியர்களால் சிதறுண்ட இத்தேசம் ஒவ்வொரு முறையும் அருள்ஞானிகளால் கட்டமைக்கப்பட்டது, மறு சீரமைக்கப்பட்டது. அதற்கு அவர்கள் அஸ்திவாரமாகத் திகழ்ந்தார்கள் என்பதை அவர்களது வரலாற்றை நுணுகிப் பார்க்கும் போது தெரியும். அதனால் தான் தேசிய கவி பாரதியாரும்,
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு ஞானத்திலே பரமோனத்திலே - உயர் மானத்திலே அன்னதானத்திலே கானத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே உயர் நாடு - இந்தப் பாருக்குள்ளே நல்ல நாடு
என சிறப்பித்துப் பாடுகிறார்.
நமக்கு தெரிந்த அளவு ஒவ்வொரு முறையும் இக்கட்டான சூழலில் இந்த தேசத்தை தனது இறையாண்மை சக்தி மூலம் வலுவூட்டினார்கள்.
நம் நாட்டு மக்களிடம், தொன்றுதொட்டு வேறுன்றி இருந்த நற்பழக்க வழக்க பண்பாடுகளை, நாகரிக ஒழுக்கங்களை அபகரித்துக் கொண்ட சில்லறை ஈனர்களும், குள்ளநரிக் கூட்டங்களும் ஹிந்து மதத்தினை துச்சமென நினைத்து அதில் அரசியல் சாயங்களைப் பூசி, அநாகரிகமாக இன்றும் திரிகிறார்கள்.
ஹிந்துமதத்தினர் தன் சுயத்தை இழந்து வருகிறார்கள் என்பது நிஜம்.
ஆன்மிக வாதிகள் ஒவ்வொரு வரும் அரசியலில் ஈடுபாடு கொள்வது நாட்டுக்கும் வீட்டு மக்களுக்கும் நல்லதா என்பதற்கு விடை காண முயலுவதே இச்சிந்தனையின் முதன்மை நோக்கம்.
- நாடு நன்றாக இருக்க வேண்டும்.
- நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்
-என்ற இரண்டு கோட்பாடுகளுக்கு ஆட்சியாளர்களால் இடையூறு வரும் போது ஆன்மிகவாதிகள் அரசியலில் ஈடுபடலாம். இதற்கு உதாரணமாக இந்த தேசத்தில் வழிவழியாக நடந்த நிகழ்வுகள் ஏராளம்.
ஆன்மிகவாதிகள் அரசியல்வாதிகளுக்கு புரியும் படி நீதிநெறிகளை எடுத்துச் சொல்லலாம்.
அரசியல்வாதிகள் ஆன்மிகவாதிகளிடம் தர்மநெறிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இருவரும் சீராகச் செயல்படுகிறார்களா என்பதைப்பற்றிய புரிதல் மக்களிடமும் இருந்தாலே போதும்.
நல்லவர்கள் கண்ட நல்லாட்சி மலரும் என்பது உண்மை.
பாண்டிய நாடு:
பாண்டிய நாட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வேற்று மதத்தில் நாடும் நாட்டு மக்களும் மூழ்கிக் கிடந்தார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என நினைத்தாள் நாட்டையாளும் மகாராணி மங்கையற்கரசி.
அமைச்சர் குலச்சிறையார் மூலம் ஞானக்கன்று திருஞானசம்பந்த நாயனாருக்கு தகவல் சொல்லப்பட்டது.
சீர்காழி அம்மையின் மூலம் சிவஞானம் கைவரப்பெற்ற அருளாளர் திருஞானசம்பந்தர். சிவபெருமானின் திருவருள் திறத்தால் இவ்வுலகிற்கு விரும்பி வரப் பெற்றவர். சைவம் தழைக்க வந்த மாதலைவர். நாயன்மார்கள் வரலாற்றில் இவருக்கு மட்டுமே பாதி புராணம் என்பது சான்றோர்களின் கூற்று.
இப்பெருமானின் அவதாரச் சிறப்பினை, “வேதநெறி தலைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தார்” என்பார் தெய்வச்சேக்கிழார் சுவாமிகள்.
மதுரையம்பதிக்கு எழுந்தருளிய சீர்காழிப் பெருமான் பல்வேறு சீர்திருத்தங்களை திருவருள் துணை கொண்டு செய்தார். திருநீற்றின் பெருமையை இவ்வுலகமெல்லாம் விளங்குமாறு செய்து, நல்லாட்சி நடைபெற சன்மார்க்க நெறியைத் துளங்கச் செய்தார் என, பெரியபுராணம் தொடங்கி பல்வேறு திருநுால்கள் அதன் மகிமைகளை இன்றுவரை புகழ் பாடிக் கொண்டே இருக்கின்றன.
வீரர் சத்ரபதி சிவாஜி:
வீரர் சத்திரபதி சிவாஜி சென்னை காளிகாம்பாளை தரிசனம் செய்த வீரர். இந்தியாவில் ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டிய மராத்திய மன்னர். தைரியம், நம்பிக்கை, தர்மம் ஆகியவற்றின் மொத்த வடிவமாகத் திகழ்ந்தவர். பாரதத் திருநாட்டை முகலாயப் பேரரசு சூறையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களை எதிர்த்து நின்றவர் தான் சத்திரபதி சிவாஜி.
இவருடைய தாயார் ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக்கதைகளையும் சிறுவயது முதலே சொல்லிக் கொடுத்து ஹிந்து தர்ம சாஸ்திரங்களை லகுவாக போதித்தார்.
ராமர், அனுமன் ஆகியோரின் பக்தரான சமர்த்த ராமதாச சற்குரு என்ன சொல்லுகிறாரோ அதை உடனுக்குடன் நிறைவேற்றி ஹிந்துமத சிறப்புகளை நாம் அறிவதற்குக் காரணமாக இருந்தவர் ஹிந்து மப்த பேரரசர் என்னும் பெயருக்கு சொந்தக்காரர் ஆவார்.
இவர் வாழ்ந்த காலத்தை தென்னிந்தியாவின் பொற்காலம் என்கிறது வரலாறு.
விஜயநகரப் பேரரசு:
வேத, ஆகம, புராண, திருமுறை, சாத்திர பாரம்பரிய ஐதீகங்களைப் போற்றி புரந்தருளுவது ஆதினங்களும் திருமடங்களும்.
பாரதத்தின் பாரம்பரிய புனிதத்தை இன்று வரை பேணிக் காத்து வரும் திருமடங்களில் கர்நாடகாவிலுள்ள சிருங்கேரி சாரதா பீடம் முக்கியமானது. இம்மடத்தின்12வது பட்டத்துத் தலைவர் வித்யாரண்ய சுவாமிகள் விஜயநகரப் பேரரசு அமையக் காரணமாக இருந்தவர். மகாபானு. சிறந்த ஞானி. மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்.
சற்குருவான வித்யாரண்யர் தென்தமிழகத்தில் முகலாயப் பேரரசு செய்த, கொடுமைகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என நினைத்தார்.
கோதாவரி நதிக்கரையில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஹரிஹரர், புக்கர் என்ற இரு இளைஞர்களுக்கு ஞானத்தை வழங்கினார். அவர்களால் ஹிந்து மத சாம்ராஜ்யங்களை மீண்டும் தழைக்கச் செய்தார்.
இதனால் பல ஆண்டுகாலமாக தென்தமிழகக் கோயில்களில் தடைப்பட்ட பூஜை முறை, வழிபாடுகள் யாவும் பொலிவு பெற்று சிறப்புற்றன.
தொண்டைமான் சக்கரவர்த்தி:
வேதம், ஆகமம், புராணம், சாஸ்திரம், கல்வி, கேள்வி யாவற்றையும் கசடறக் கற்ற மகாபுருஷர். சிவத்தையும் சத்தியத்தையும் தவிர இங்கு வேறு எதுவும் இல்லை என்ற உண்மைப்பொருளை திரிகாலத்திற்கும் உணர்ந்த உன்னத ஞானிகளில் ஒருவர். கரூர், நெரூரில் ஞானச்செங்கோல் செலுத்தி வரும் சதாசிவ பிரமேந்திராள். மகாஞானி. அவதுாதப் பெருமான். சர்வத்திலும் பிரம்மத்தைக் கண்ட சிவஞான பரம சொரூபி.
புதுக்கோட்டை தொண்டைமான் சக்கரவர்த்திக்கு குல தெய்வமாகவும் ராஜ குருவாகவும் திகழ்ந்தவர். அவருக்கு ஞான உபதேசம் செய்த மகா உத்தமர்.
அப்பிரபுவின் நற்கருணையினால் தான் தொண்டைமான் மன்னனால் சத்திய ஆட்சி நடாத்திட முடிந்தது என்பதை அவருடைய வரலாற்றின் மூலம் அறிவோம்.
பெருமானின் திருக்கரம் பட்டு எழுதப்பட்ட மணலை இன்றும் இவ்வரச வம்சத்தினர் அரண்மனையில் வைத்து பூஜித்து வருகிறார்கள் என்பது உயர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு ஆகும்.
சற்குருவாகிய சதாசிவ பிரமேந்திர சுவாமிகளின் பரிபூரண கிருபா கடாட்சத்தினால் நல்லாட்சி மலர வேண்டும் என இந்த நேரத்தில் அப்பிரபு எழுந்தருளியிருக்கும் திசை நோக்கி விண்ணப்பித்து பிரார்த்தனை செய்து கொள்வோம்.
பனையூர் ஆண்டவர்கள்:
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோயில் வட்டம், கரிவலம்வந்த நல்லுாருக்கு அருகிலுள்ள கிராமம் பனையூர். இதனை தென்பனையூர் என இலக்கியங்கள் அழைக்கின்றன. 1800 – 1891 வரையிலும் உள்ள காலகட்டங்களில் வாழ்ந்த மகாஞானிகள் சற்குரு சங்கரநாராயண சுவாமிகள், தெட்சிணாமூரத்தி சுவாமிகள்.
தந்தையும் மகனுமான இவர்கள் மருந்து, மந்திரம், எந்திரம் மூலம் மக்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டியாக வாழ்ந்த துறவிகள்.
இவர்கள் ஜீவிதமாக வாழ்ந்த காலத்தில் மக்கள் சிற்றின்பத்தில் தோய்ந்து இருப்பதைக் கண்டும், மது, மாதுவிலும், கஞ்சா போதையிலும் சிக்கித் திரிவதைக் கண்டு மனம் வெதும்பியுள்ளார்கள்.
தன்னுடன் இருந்த சீடர்கள் குழாமிடம் கட்டளையிட்டார்கள். அவர்களைத் திருத்துமாறு அறிவுரை வழங்கச் சொன்னார்கள். அதையும் அங்காங்கே இருந்த சீடர் குழாம் அதனை நிறைவேற்றினார்கள்.
இந்த நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் பனையூர் தெட்சிணாமூர்த்தி சரிதத்தை கலிவெண்பாவாகப் பாடிய மதுரை வரகவி. மு. கணபதியாபிள்ளை. இதோ அந்தப் பாடல்…
நல்லவர்கள் உறவு வேண்டும் கொடிய பாவிகள் நாடாதிருக்க வேண்டும் ஞான மோட்ச செல்வம் வேண்டும் எப்போது முன் நட வெளி காண வேண்டும். கல்வி வல்லமை வேண்டும் ஓதும் நல் விசயமே கை கொண்டிருக்க வேண்டும் கஞ்சா அபின்தின்று நெஞ்சு புண்ணாகாது கதி மருந்து அருளல் வேண்டும். மல்லலே வேண்டும் மலைபல்லுயிரும் ஒன்றென்றல் மறவாதிருக்க வேண்டும் மமதை அற வேண்டும் முன் சமுகம் வர வேண்டும் என் மனதில் நீ வாழ வேண்டும். நல்குமடியார் திருத்துணை வேண்டும் முனிவிலார் நத்து பனையூரின் வாழ்வே நற்சுரரு மெச்சவரு தெச்சிணா மூர்த்தியே ஞான வடிவான குருவே!
இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்த பெரும் தவசீலர்கள் இருவர். ஒருவர் வாடிய பயிரைக் கண்ட பொதெல்லாம் வாடினேன் என்று உயிர் இரக்கம் கொண்டவர். அந்த உயிர்களை ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்ற சொல்லாட்சி மூலம் பதவியைப் பெறலாம் என ஞான உபதேசம் செய்த உத்தமர் வடலுார் ராமலிங்க சுவாமிகள்.
மற்றொருவர் உயிர்க்கொலையைக் கண்டு அஞ்சி நடுங்கியவர், எங்கும் சன்மார்க்கம் நிலவ வேண்டும் என தன் பாடல்கள் மூலம் மக்களுக்கு ஞான அறிவினை போதித்தவர். முருகப்பெருமானின் சமயத்தைப் பரப்புவதில் முனைப்பு காட்டிய திருவாமத்துார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
இவர்கள் இருவருமே நாடு நலம் பெற வேண்டும். மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை தன் பாடல்கள் மூலம் மக்களுக்குச் சொல்லியுள்ளார்கள்.
அந்நியரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்த நம் கருங்குழிப் பிள்ளையவர்கள் தன்னுடைய சன்மார்க்கப் பாடல்களில் ஒன்றாகிய திருவருட்பா பதிகத்தில்…
கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று இணைந்து எல்லோரும் வாழ்க இசைந்து.
-என்று தயவு கொண்ட உத்தமரையே அறம் பாட வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்.
இவர்களின் அடிவருடிகளின் செயல்பாட்டினை சொல்லவா வேண்டும்? ஆன்மிக அன்பர்களே விழித்துக் கொள்க.
வண்ணச்சரபர்:
ஆதி சங்கரர் நிறுவிய சண்மதத்தை பேணிக் காத்த பெருமை வண்ணச்சரபர் தண்டபாணி சுவாமிகளும் உண்டு என்றால் அது மிகையல்ல.
தமிழ், தமிழர் சமுதாயம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழர் சமயம் என் பல துறைகளிலும் பணி செய்த பரம யோகி தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
கெளமார சமயத்தின் ‘அத்தாரிட்டி’ என்றால் அது சுவாமிகள் தான்.
அருணகிரிநாதரின் மறு அவதாரமாகத் திகழ்ந்தவர் வண்ணச்சரபர்.
இப்பெருமான் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேயரால் ஏற்பட்ட துன்பம் மக்களை மிகவும் மயக்கமுறச் செய்து வாட்டியது.
அதைக் கண்ணுற்ற சுவாமிகள், புல்லறிவு உடையவர்கள், திருட்டுத்தன்மை கொண்டவர்கள், கொடுங்கோலர்கள், ஈனர்கள், புலையர்கள் என கொடுமை செய்பவர்களை தனது ஆங்கில அந்தாதியில் திட்டி வசை பாடுகிறார்.
இது தற்காலத்தில் மக்களுக்கு கொடுமை செய்பவர்களுக்கு பொருந்தும் அன்றோ!
மேலும், ஹிந்து தர்மத்தில் பசுவை தெய்வமாகப் போற்றி வணங்கும் பழக்கம் காலம் தோறும் நடை முறையில் இருக்கிறது. ஆகவே உயிர்க் கொலை செய்வதை பஞ்சமகா பாவம் என்பர்.
அப்படி உயிர் கொலை செய்பவர்களை ‘பசுக்கொலை செய்யும் வம்பர்’ என்று அழைக்கிறார் நம் சுவாமிகள். இத்தகைய செயல்களை பூமாதேவியே பொறுத்துக் கொள்ள மாட்டாள் என்கிறார்.
தெய்வீகத்தன்மை, ஞானம் பற்றிய திருநூல்கள் வரிசையில் மக்களின் மேல் கருணை கொண்டு வாழ்ந்தவர்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ராமலிங்க அடிகளார் மற்றும் அவரது அடியொற்றி வாழ்ந்த அன்பர் பெருமக்கள்.
இவர்களது பாடல்களே சுதந்திர வேள்வித்தீக்கு பிள்ளையார் சுழி போட்டன எனலாம்.
சிவகங்கை, பிள்ளையார்பட்டி அருகேயுள்ள குன்றக்குடி பகுதியில் ஞானச்செங்கோல் கொண்டு ஆட்சி செய்வது திருவண்ணாமலை ஆதினம் என்னும் குன்றக்குடி ஆதினம்.
இம்மடத்தின் அடிகளார் என அனைவராலும் அழைக்கப் பெற்ற சுவாமிகள் சட்ட மேலவை உறுப்பினராக இருந்து குன்றக்குடியை சிறந்த கிரமமாக முன்னுதாரப்படுத்தினாரே இது ஆன்மிகவாதியின் செயல்தான்.
சற்குரு சங்கரநாராயண சுவாமிகள், தெட்சிணா மூர்த்தி சுவாமிகள், வடலுார் ராமலிங்கவள்ளலார், வண்ணச்சரபர் கண்ட ஆட்சி அமைய, வானில் இருந்து நல்ல மழை பொழிய, பல வளங்களும் பெருக, நீதி தவறாமல் அரசு ஆட்சி செய்ய, உயிர்கள் அனைத்தும் குறைவில்லாமல் வாழ,எங்கும் அறங்கள் ஓங்கி நிலைக்க , கோயில்களில் பூஜை புனஸ்காரங்கள் தவறாது நடக்க, மக்களுக்கு ஆட்சியாளர்களும், ஆட்சியாளர்களுக்கு மக்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.
நிறைவாக,
- அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்.
- இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றாதீர்கள்.
- சிறிதேனும் வகிக்கும் பதவிக்கேற்ப, வாங்கும் சம்பளம் பணம் வயிற்றில் ஒட்டுவதற்கு ஏற்ப பணி செய்யுங்கள்.
- சுயநலம் மிகுந்த அரசியல்வாதிகளே! உங்கள் சொந்த விருப்பு வெறுப்பினை நீக்கிக் கொள்ளுங்கள்.
- மக்களுக்கு தாமாக முன்னுவந்து பணி செய்யுங்கள்.
- ‘எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே’ என்று சிவபெருமானே விரும்பி உங்கள் பெயரை அவனது ஏட்டில் எழுதுமாறு அரசியல்வாதிகளின் செயல்பாடு அமையட்டும்.
பாரதம் என்னும் தேசத்தின் வீட்டில் பூஜையறையாகத் திகழ்வது இந்த தமிழகம். பூஜையறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் இருந்தால், வழிபடுபவர்களுக்கு மனம் லயிக்காது. எனவே பூஜை ஈடுபாடு உள்ளவர்களையும் நம்பிக்கைக்குரியவர்களையும் கொண்டு வந்து விரைவில் சேர்க்கும் இயற்கை. அது நடக்கும் என நம்புகிறோம்.
சற்குருநாதர்களாகிய ஞானிகள், அருளாளர்கள், தவசிகள், முனிவர்கள், நல்லவர்கள் யாவரும் பிரஜைகளின் நலனின் அக்கறை கொண்டு நாட்டையாளும் மன்னனுக்கு சத்தியத்தை போதித்து, அறமற்ற போக்கைத் திருத்தி, அல்லவை நீக்கி தருமம் செழிக்கச் செய்தார்கள் என்பதைச் சிந்திப்போம்.
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!
$$$