-திருநின்றவூர் ரவிகுமார்

இ. ஆசிரமம்: ஆரம்பமும் வளர்ச்சியும்
இ-5. இறுதி நேர்காணல்
- காண்க: அத்யாயம்- 17

1949 பிப்ரவரி 21ஆம் தேதி அன்னையின் பிறந்த நாளில் இரண்டு பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ‘மதர் இந்தியா’ என்ற பண்பாட்டு, அரசியல் பத்திரிகை பம்பாயில் தொடங்கப்பட்டது. இது மாதம் இருமுறை வெளியாகிய ஆங்கிலப் பத்திரிகை. அதன் ஆசிரியராக சேத்தனா என்ற அறிஞர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் சிறந்த எழுத்தாளர். பல துறைகளில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். தலையங்கம் எழுதுவது எப்படி என்று ஸ்ரீ அரவிந்தர் அவருக்கு சொல்லிக் கொடுத்தார். ஸ்டாலின் பிற நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வது பற்றியும் சீனா திபெத்தை கபளீகரம் செய்யத் திட்டமிட்டு இருப்பது பற்றியும் ஸ்ரீ அரவிந்தரின் எச்சரிக்கை குறித்து அந்தப் பருவ இதழில் வெளிப்படுத்தினார் சேத்தனா. ஆனால் ஆட்சியாளர்கள் யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவு இன்று வரை தொடர்கிறது.
அதே நாளில் உடற்கல்வி பற்றி ‘புல்லட்டின் ஆப் பிசிகல் எஜுகேஷன்’ என்ற பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் காலாண்டிதழ் அது. ஆங்கிலம், பிரஞ்சு, ஹிந்தி மொழியில் எழுதப்பட்டது. அன்னையின் வேண்டுகோளுக்கிணங்கி முதல் இதழில் ஸ்ரீ அரவிந்தர் சிறப்புச் செய்தியை எழுதினார். அதன் பின்னர் ஏழு கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார்.
கட்டுடல், தெய்வீக உடல், மீ மனமும் தெய்வீக வாழ்வும், மீ மனமும் மானுடமும், பரிணாம வளர்ச்சியில் மீ மனம், மனவொளி, அதிமனமும் மனவொளியும் என்று அந்தக் கட்டுரைகளின் தலைப்பைப் பார்க்கும் போதே -அவை அவரது நூற்தொகுப்பில் உள்ளன -உடலைப் பற்றி மட்டுமல்ல, அதைக் கடந்து செல்வது பற்றியும் அவரது கருத்துக்கள் அதில் உள்ளதைப் புரிந்து கொள்ள முடியும்.
‘உடல் என்பது முதலில் ஒரு தர்ம சாதனம். செயல் புரிவதற்கும் ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்குமான கருவி. உடல், மனம் , வாழ்க்கை எல்லாம் முழுமையான தெய்வீகத்தின் பகுதிகள். அசேதனத்திலும் இறை சக்தி மறைந்திருக்கிறது. உடலையும் மனத்தையும் வாழ்க்கையையும் ஆன்மிகமயமாக்கி, அந்தக் கருவியைக் கொண்டு இறையனுபவத்தை அடைய வேண்டும். மானுட உடலை கருவியாக அன்றி வெறும் உடலாகப் பார்த்து அலட்சியப்படுத்துவதும் பரிணாம வளர்ச்சியில் இனி வரவிருக்கும் தெய்வீக உடலைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்துவதும் தவறாகும் . அதை ஏற்க முடியாது’ என்று அவர் அந்தக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.
1950 ஜூலை மாதம் கே. எம்.முன்ஷி பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார். பரோடாவில் ஸ்ரீ அரவிந்தர் கல்லூரிப் பேராசிரியராக இருந்தபோது அவரிடம் மாணவராக இருந்தவர். பிரபல காங்கிரஸ் தலைவர். பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவனத்தைத் தொடங்கியவர். மத்திய அமைச்சரான அவர்தான் ஸ்ரீ அரவிந்தரை கடைசியாகச் சந்தித்த அரசியல் தலைவர். அந்த சந்திப்பைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார்.
“சுமார் நாற்பது ஆண்டு காலம் கழித்து நான் அவரைப் பார்த்தேன். அவர் முற்றிலும் மாறிப் போயிருந்தார். தெய்வீக அமைதி சூழ்ந்தவராக, ஆனந்தமாக அவரது தோற்றம் இருந்தது. மெதுவான குரலில் ஆனால் தெளிவாகப் பேசினார். அந்தக் குரலே என் ஆழ்மனதைக் கிளர்த்தியது. என் ஆன்மிகத் தேவைகளைப் பற்றி அவரிடம் பேசினேன். அந்த மகான் சொன்னார், ‘நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று ஏற்கனவே எழுதியுள்ளேன். எனக்கே உரிய வழியில் உனக்கு உதவிக் கொண்டுதான் இருக்கிறேன். உன்னுடைய முன்னேற்றத்தை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறேன்’ என்றார்….
“பிறகு இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசினோம். ‘இந்தியாவுக்கென்று உயரிய வாழ்க்கை இருக்கிறது. அதைத் தாழ்த்தும் விதமாக அவதூறான கருத்துக்களும் கொள்கைகளும் இளைஞர்களுக்கு ஊட்டப்படுகிறது’ என்று நான் மன வேதனையோடு சொன்னேன் . அதற்கு மகரிஷி, ‘நீ நம்பிக்கையை இழக்க வேண்டாம். நம்முடைய பண்பாட்டை அவ்வளவு லேசாகக் கருத வேண்டாம். இது மேகக்கூட்டம் போல் கடந்து சென்று விடும்’ என்று உறுதிப்பட சொன்னார்”
-என்று கே.எம்.முன்ஷி அந்தச் சந்திப்பைப் பற்றி எழுதியுள்ளார்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள், வேத ரிஷிகள் என மகான்கள் எல்லோரும் கவிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். அந்த வகையில், மகரிஷி அரவிந்தரை அறிஞர், விடுதலைப் போராளி, ஆன்மிகவாதி, பேச்சாளர், மகான் என்றெல்லாம் பலரும் பலவிதமாகப் போற்றியுள்ள போதிலும் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை தன்னை ஒரு கவிஞர் என்றே முன்னிறுத்தி வந்தார்.
அவர் வாழ்வின் மிக முக்கியமான, ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படும் ‘சாவித்திரி காவியம்’ கவிதை வடிவில் தான் உள்ளது. மகாபாரதத்தில் உள்ள ஒரு கதை சத்தியவான் சாவித்திரி. அந்தக் கதையைத்தான் ஸ்ரீ அரவிந்தர் காவியமாக்கியுள்ளார்.
மகாபாரதத்தில் சத்தியவான் சாவித்திரி கதை உள்ளது. மரணத்தை வென்ற மானுடக் காதலாக அதில் சொல்லப்படுகிறது. ஆனால் , மானுடக் கதை போல சொல்லப்பட்டாலும் வேதத்தில் இருக்கும் பல மறைபொருள்கள் இதில் குறியீடுகளாக உள்ளன.
தெய்வீக உண்மையை ஏந்தி நிற்கும் ஆன்மா தான் சத்தியவான். அது அறியாமையினால் சரிந்து மரணத்தின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. சாவித்திரி தெய்வீக அருட்சொல். கதிரவனின் மகளான அவள் உயர்ந்த அறிவின், விழிப்புணர்வின் தெய்வ வடிவம். அவள் கீழிறங்கி வந்து பிறப்பெடுப்பது, அவனைக் காப்பதற்காக. அவளது மானுடத் தந்தை புரவிகளின் வேந்தனான அசுவபதி. அவன் தவங்களின் வேந்தன். மறையும் மானுடத்தை அமர நிலைக்கு உயர்த்துபவன். சத்தியவானின் தந்தையான தூமசேனன் தெய்வீக மனம் இருளில் விழுந்து தன் புகழ்மிக்க ஆட்சியை இழப்பதன் அடையாளம்.
இவர்கள் எல்லாம் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல. மனித வடிவில் வந்து மானுட இனத்தை அமர்த்துவ நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய தெய்வீக சக்திகள். நாம் இவர்கள் மூலம் அந்த நிலையை அடையலாம். விழிப்புணர்வு அற்ற நிலையில் மரணத்தின் பிடியில் இருக்கும் சத்தியவானை மீட்டு இந்த பூமியில் உண்மையின், ஒளியின், ஆனந்தத்தின் ஆட்சியை நிறுவுகிறாள் சாவித்திரி.

ஸ்ரீ அரவிந்தர் எழுதியுள்ள இந்தக் காவியத்தின் பிரம்மாண்டம், அவரது கற்பனை, மறைப்பொருள்கள், அமானுஷ்ய சக்திகளுடனான அவரது அனுபவம், வேத உபநிஷதங்களுக்கு இணையாக அமையக்கூடிய அவரது கவிமொழி இவற்றையெல்லாம் விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனவே அது பற்றி அன்னைக்கு கூறிய சில வார்த்தைகளை இங்கு பதிவிடுகிறேன்:
“ஒட்டுமொத்த உலகையும் இந்த ஒரு நூலில் அவர் துணித்துள்ளார். இது ஒரு அற்புதம். மகத்தான படைப்பு. ஒப்பிட முடியாத அளவுக்கு மிகச் சரியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அருள் வெளிப்பாடு. வரம்பற்றதை, சநாதனத்தைத் தேடும் தியானம். சாவித்திரியில் உள்ள ஒவ்வொரு செய்யுளும் மந்திரம் போன்றது. ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த மானுட அறிவுக்கு அப்பால் செல்வது. இதில் எல்லாம் இருக்கிறது. மறைபொருள், அமானுஷ்யம், தத்துவம், பரிணாம வரலாறு, மானுட வரலாறு, படைப்பை நிகழ்த்தும் இறை, இயற்கை என எல்லாம் இதில் உள்ளது. சாவித்திரி ஒரு ஆன்மிகப் பாதை, அது ஒரு தவம், அது ஒரு சாதனா…… அதில் அளவற்ற சக்தி உள்ளது. முழுமையான உண்மையை இதன் மூலம் அவர் உலகுக்கு கொண்டு வந்துள்ளார்” – என்று அன்னை கூறியுள்ளார் .
உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள அறிஞர்களும் இதைப் புகழ்ந்து எழுதியுள்ளனர். உலகம் எங்கிலும் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும் அவரது பணியைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல் அதிகரித்து வந்து கொண்டிருந்த சூழ்நிலையில், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் அதிகாலை 1.26 மணிக்கு அவர் திடீரென மறைந்து விட்டார். நீரிழிவினால் ஏற்பட்ட சிறுநீரகக் கோளாறு என்று மனித மனம் கூறியது.
அது இறப்பல்ல, இச்சா மிருத்யு. தானே விரும்பி உடலைத் துறப்பது. அன்னை சொன்னார், “ அவர் நமக்காக தன்னை தியாகம் செய்துள்ளார். அவர் உடலை விட எந்த நிர்பந்தமும் இல்லை. அதைத் துறந்ததற்கான காரணம் மனித மனத்தின் ஊகிப்புக்கு அப்பாற்பட்டது”.
ஸ்ரீ அரவிந்தர் உடலைத் துறந்தாலும் அந்தப் பொன்னுடல் ஐந்து நாட்கள் மினுமினுப்புடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அமைதியும் சக்தி அதிர்வும் அந்த அறையில் நிரம்பியிருந்தது. ஒன்பதாம் தேதி மாலை ஐந்து மணிக்கு ஆசிரம வளாகத்தில் அடர்ந்த மர நிழலில் சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

"எங்கள் குருவின் பொருளாக இருந்த உமக்கு, எங்கள் எல்லையற்ற நன்றி. எங்களுக்காக இவ்வளவு செய்த, உழைத்த, போராடிய, துன்பப்பட்ட, நம்பிக்கை கொண்ட, சகித்துக் கொண்ட, அனைத்தையும் விரும்பிய, அனைத்தையும் முயற்சித்த, தயாரித்த, எங்களுக்காக அனைத்தையும் சாதித்த உமக்கு முன்பாக, நாங்கள் பணிகிறோம், ஒரு கணம் கூட நாங்கள் உங்களுக்கு கடன்பட்ட அனைத்தையும் மறக்கக் கூடாது என்று மன்றாடுகிறோம்"
-என்ற அன்னையின் பிரார்த்தனை, ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் சமாதியின் இருபுறமும் பொறிக்கப்பட்டது.
(நிறைவு)
$$$