தமிழகத்தில் தேர்தல் ஜூரம்

-வ.மு.முரளி

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. மே இறுதிக்குள் புதிய சட்டசபை அமைந்தாக வேண்டும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிரது. இந்நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க, திமுக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. எதிர்த்தரப்பில் அதிமுகவின் பணிகளில் காணப்படும் சுணக்கம் புரியாத புதிராக இருக்கிறது. இந்தத் தேர்தல் களத்தில் புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் பல தசாப்தங்கள் கோலோச்சிய மூத்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 2021 சட்டசபைத் தேர்தலில் 159 தொகுதிகளில் வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியால் முக.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்கொள்ள முடியவில்லை. அக்கூட்டணிக்கு 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிட்டியது. அதுவும் கொங்கு மண்டலமும் மேற்கு மாவட்டங்களும் தான் அதிமுகவைத் தாங்கிப் பிடித்தன.

2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகாலத்தில் நடைபெற்ற அதிமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தியையும் ஜெயலலிதா இல்லாத தலைமை வெற்றிடத்தையும் திமுக சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் திமுக வென்றது. ஊடக பலம், கூட்டணி பலம், சிறுபான்மையினர் ஆதரவு ஆகியவற்றால் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினார் ஸ்டாலின். திமுக மட்டுமே அப்போது 37.70 % வாக்குகளைப் பெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி 45.38 % வாக்குகளைப் பெற்றது.

அதேசமயம், அதிமுகவால் 33.29 % வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது; அதிமுக தலைமையிலான கூட்டணி  39.71 % வாக்குகளையும் பெற்றது. அமமுக தலைமையிலான கூட்டணி 2.85 % வாக்குகளையும், நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் தலைமையிலான கூட்டணி 2.73 % வாக்குகளையும் பெற்றன. நாம் தமிழர் கட்சி 6.58 % வாக்குகளைப் பெற்றது. சென்ற தேர்தலில் ஐந்துமுனைப் போட்டி என்று சொல்லப்பட்டாலும் திமுக- அதிமுக அணிகளிடையே தான் பிரதானப் போட்டி நிலவியது. இரு அணிகளிடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 6 %.

தற்போது 5 ஆண்டுகள் ஆட்சியின் நிறைவில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற மு.க.ஸ்டாலின் தீவிரமாகப் பணியாற்றுகிறார். அவரது ஆட்சி மீதான அதிருப்தி அலை மாநிலம் முழுவதும் பரவலாக இருப்பதை அவர் உணர்ந்திருக்கிறார். எனவேதான். யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த பிப். 21ஆம் தேதி, மகளிர் உதவித்தொகை பெற்றுவரும் 1.30 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5,000 தொகை செலுத்தப்பட்டு விட்டதாக ஸ்டாலின் அறிவித்தார். அதாவது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத்தொகை தலா ரூ. 1000த்துடன், கோடைக்கால சிறப்பு உதவித்தொகை ரூ. 2000 வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். தேர்தல் அறிவித்துவிட்டால் இந்த உதவித்தொகையை வழங்க முடியாது என்பதால் இந்த அதிரடியை அவர் நிகழ்த்தினார். இதனை ஒரு சாதனையாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பறைசாற்றி வருகின்றன.  

சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்குப் பிறகு தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 லட்சமாக குறைந்துள்ளது. 2021இல் இது 6.29 கோடியாக இருந்தது. புதிய விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பிறகு வாக்காளர் எண்ணிக்கை சற்று உயரக் கூடும். எது எப்படி இருப்பினும், இப்போதைக்கு மொத்த வாக்காளர்களில் கால்வாசிப் பேருக்கு மேல் மகளிர் உரிமைத்தொகை சென்றுவிட்டது. இது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்பது ரகசியமல்ல. இந்த உதவித்தொகை பெற்ற பயனாளிகளின் குடும்பங்களையும் கணக்கில் கொண்டால் திமுக, திட்டமிட்டு காய்களை நகர்த்தி இருப்பதை உணர முடியும்.

மேலும், 29.29 லட்சம் முதியோர் மற்றும், சுமார் 8.5 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் கணக்கில் தலா ரூ. 2,000 நலத்தொகையை கடந்த மார்ச் 3இல் வரவு வைத்திருக்கிறது தமிழக அரசு. இதுவும் ஓர் அதிகாரப்பூர்வமான லஞ்சமே என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தேர்தல் அரசியலில் இதனை ஒரு குறையாகக் கூறி எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய முடியாது என்பதுதான் சிக்கல்.

மகளிர் விடியல் இலவச பேருந்துப் பயணம், 2.72 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் அளிக்கும் புதுமைப்பெண் திட்டம், சிறுபான்மையினருக்கு உதவும் திட்டங்கள் போன்றவையும் சமூகநலம் என்ற பெயரில் வாக்குகளைக் குவிக்கும் திட்டங்களே. ஆனால்…

கடந்த ஐந்தாண்டுகால மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல பாதிப்புகள் நேரிட்டிருப்பது தான் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை பெருகக் காரணமாக உள்ளது. குறிப்பாக, ‘திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மதுக்கடைகள் ஒழிக்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அது மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது, டாஸ்மாக் கடைகளில் நிலவிவரும் ஊழலும் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மகளிருக்கு வழங்கும் உதவித்தொகை டாஸ்மாக் வாயிலாக அரசுக்கே திரும்பிவிட்டது என்பதும் பல இடங்களில் உண்மை. தமிழக அரசே டாஸ்மாக் மூலமாக கிடைக்கும் வருவாயை நம்பித்தான் இருக்கிறது என்பதும் கசக்கும் உண்மை.

மதுக்கடைகள் மட்டுமல்லாது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகமெங்கும் பெருகிவிட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் மானவர்கள் போதைக்கு அடிமையாவது அதிகரித்து, தமிழகத்தில் போதைக்கு எதிரான மனநிலை உருவாகி இருக்கிறது.

மது, போதை கலாச்சாரத்தின் பக்க விளைவாக பெண்கள் பலாத்காரம், ரௌடிகள் ராஜ்யம் போன்றவை அரங்கேறி, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்திருக்கிறது. காவல் துறையினர் திமுகவின் ஏவல் துறையாக மாற்றப்பட்டுவிட்டதால், திமுகவை வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே காவல் துறைக்கு நேரம் போதவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. அரிவாள் கலாச்சாரமும், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற மனநிலையும் அதிகரித்திருப்பதையே, பெருகிவரும் படுகொலைகளும், பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் காட்டுகின்றன. இந்நிலையில் ஆளுகட்சியினரின் அராஜகப் போக்கும் கனிமவளக் கொள்ளையும் திமுக அரசு மீதான நற்பெயருக்கு சேதம் விளைவித்திருக்கின்றன.

சட்டம் – ஒழுங்கு பாதிப்புக்கு அடுத்ததாக, பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இது தொடர்கதையாக மாறிவிட்டது. வேங்கைவயல், திருவாரூர், மதுரை அமச்சியாபுரம், திருப்பூர் ஆகிய இடங்களில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த சமூகவிரோதிகளால் தமிழகத்தின் சமூகநீதி சந்தி சிரித்தது.

ஆனால், இந்தப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலேயே மு.க.ஸ்டாலின் அரசு பிடிவாதமாக இருந்தது. சநாதன எதிர்ப்பு என்ற பெயரில் ஹிந்து சமயத்தை ஒழிப்பதாக முழங்கியதன் மூலம் சிறுபான்மையினரின் ஆதரவை வலுப்படுத்த திமுக முயன்றது. அதேபோல, மாநில சுயஆட்சி என்ற பெயரில் மாநில ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியுடன் மோதல் போக்கைக் கையாண்டது. மாநில நிதிநிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களில் ஆர்வம் காட்டி மாநில கஜானாவை காலி செய்ததுடன், அதிலிருந்து மக்களை திசை திருப்ப, மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியைத் தரவில்லை என்று பிரசாரம் செய்தது.

2026-27 நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த கடனளவு ரூ. 10.62 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் (ஜிடிபி) 26.1 % ஆகும். 2021 தேர்தலின்போது முந்தைய அதிமுக அரசு அதிகபட்சமாக கடன் வாங்கியது என்று குற்றம்சாட்டி தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக, அதனை மறந்து அதிமுக ஆட்சியை விட அதிகமாக கடன் வாங்கி இருக்கிறது. 2021 வரையிலான 20 ஆண்டுகளில் தமிழகம் வாங்கிய கடன் தொகை ரூ.  5.7 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மேலும் ரூ. 5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இது வரவுக்கு மேல் செலவு செய்ததன் கொடிய விளைவு.

இலவச கவர்ச்சித் திட்டங்களால் ஏற்படும் இந்தக் கடன் சுமை வரப்போகும் புதிய அரசுக்கு சவாலாகவே இருக்கப்போகிறது. தவிர, மின்கட்டண உயர்வு, உள்ளாட்சிகளில் வீட்டுவரி உயர்வு போன்றவையும் மக்களின் செலவை அதிகரித்திருக்கின்றன. மாநிலத்தின் பொருளாதாரமே தத்தளிக்கும் நிலையில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாவது வியப்பில்லை.

இத்தகைய சூழலில்தான் அரசு மீதான அதிருப்தி இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க, திமுக சார்பு ஊடகப் படையின் உதவியுடன் கடுமையான பிரசாரம் நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் நலத்திட்டங்களை சொந்தம் கொண்டாடி  ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசு மாநிலத்தை வஞ்சிப்பதாக பிரசாரம் செய்கிறது. இதனை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உரிய வகையில் எதிர்கொள்வதில்லை என்பது ஒரு குறைபாடாகும்.

எதிர்த்தரப்பில் ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாதது மு.க.ஸ்டாலினுக்கு சாதகம். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் தீவிரமானவையாக இல்லை என்று பலரும் கூறுகின்றனர். இப்போதும்கூட பாஜகவின் முயற்சியால் தான் அதிமுகவுடன் கூட்டணி சிறிய அளவிலேனும் அமைந்திருக்கிறது. மாறாக திமுகவோ, சிறு கட்சியையும் கூட விட்டுவிடத் தயாரில்லை. ஏதாவ்து ஒரு கட்சிக்கொடியுடன் அறிவாலயம் பக்கம் சென்றாலே இழுத்துக்கொண்டு சென்று கூட்டணியில் சேர்த்து விடுகிறார்கள் என்று கேலி செய்யும் அளவுக்கு திமுக இறங்கி இருக்கிறது. வாங்கப்படும் கட்சிகளுக்கும் பல கோடி லாபம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இப்போதைக்கு (மார்ச் 7 நிலவரம்) திமுக கூட்டணியில் 22 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுதைகள், தேமுதிக, முஸ்லிம் லீக், எஸ்.டிபி.ஐ, மக்கள் நீதி மையம் ஆகியவை முக்கியமானவை. அதிக தொகுதிகள் கேட்டு வீறாப்பு காட்டி பத்திரிகைகளுக்கு பரபரப்பு செய்திகளை உருவாக்கிய காங்கிரஸ் தன்னிலை உணர்ந்து அடக்கமாக திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது. இவை போதாதென்று அதிமுகவின் அதிருப்தித் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தையும் திமுகவில் சேர்த்து விட்டார் ஸ்டாலின்.

அதிமுக தரப்பில் இப்போதைக்கு பாஜக, பாமக, அமமுக, த.மா.கா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட 12 கட்சிகள் மட்டுமே உள்ளன. கூட்டணி அமைப்பதிலும் தொகுதி ஒதுக்கீட்டிலும் அதிமுகவை விட திமுக முன்னணியில் இருக்கிறது. நடிகர் விஜயின் த.வெ.,க கட்சியின் அடுத்தகட்ட நகர்வுக்காக அதிமுக காத்திருப்பது போலத் தோன்றுகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்.

ஆனால், திமுகவை பின்னணியிலிருந்து இயக்கும் கிறிஸ்தவப் பின்னணி கொண்ட அமைப்புகளும், அதிதீவிர விசுவாசிகளான ஊடக அறிஞர்களும் சாமானியப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் எந்த நகர்வையும் நிலைகுலையச் செய்ய தயாராகக் காத்திருக்கிறார்கள். ‘பாஜக வந்திரும்’ என்ற பூச்சாண்டியைக் காட்டியே சிறுபான்மையினரின் சுமார் 20 % வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்று அறிந்த அனுபவஸ்தர்கள் அவர்கள்.

திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை மீற மாநில அரசு துணிந்தது, இந்த வாக்குவங்கிக்காகத் தான். இந்து வழிபாடுகளை சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுகவினர் இழிவுபடுத்துவதும் கூட திட்டமிட்ட ஒரு செயல்முறையின் அங்கமே. பிராமண எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு ஆகியவையும் இதன் நீட்சியே. இது தெரியாமல், இந்துக்கள் ஆத்திரமடைந்து திமுகவுக்கு எதிர்வினையாற்றி, அக்கட்சியின் வாக்குவங்கியை வலுப்படுத்துகிறார்கள் என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

எனவே, வரக்கூடிய நாட்கள் தமிழக தேர்தல் களத்தில் முக்கியமானவை. திரைப்பட இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தனியே களம் காண்கிறது. அக்கட்சி மத்தியில் பாஜகவையும் மாநிலத்தில் திமுகவையும் எதிர்க்கிறது. அக்கட்சியின் வாக்கு விகிதம் இம்முறை குறையக்கூடும். நடிகர் விஜயையும் ஒரு அதி புத்திசாலிக் கும்பல் தான் பின்னணியில் இருந்து ஆட்டுவிக்கிறது. அவர்கள் காட்டும் வழியில் தான் விஜயின் பயணம் இருக்கும். எனினும் வரும் நாட்களில் எதுவும் நடக்கலாம்.

தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிறகு, தமிழக தேர்தல் களத்தில் ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பிறகு ஒரு மாதகாலம் பிரசாரக் காலம். எனவே, வரும் நாட்களில் தொடர்ந்து அரசியல் களத்தை அலச தினுசு தினுசான வாய்ப்புகள் கிடைக்கும்.

$$$

Leave a comment