-திருநின்றவூர் ரவிகுமார்

இ. ஆசிரமம்: ஆரம்பமும் வளர்ச்சியும்
இ-1. ஆசிரமவாசிகள் யார்?
- காண்க: அத்தியாயம்- 12
ஸ்ரீ அரவிந்தரின் ஸித்தி தினத்தில் இருபத்தைந்தாக இருந்த ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் முப்பத்தாறாக உயர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அது வேகமாக வளர்ந்தது. மேலும் சில வீடுகள் பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கட்டடப் பராமரிப்பு, சமையல், வேலையாட்கள், மின்சாரப் பராமரிப்பு, சலவை என பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. எல்லாவற்றையும் ஆசிரமவாசிகளே பார்த்துக் கொண்டனர். இது அன்னையினால் வந்த வளர்ச்சி.
“இது உலகியல் வாழ்க்கையைத் துறந்தவர்களுக்கான வழக்கமான ஆசிரமம் அல்ல. புது வகையான மனிதப் பரிணாமத்திற்கு , புதுவகையான வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் இடம் இது. உயர்ந்த ஆன்மிக விழிப்புணர்வுக்கு , ஆன்ம வாழ்விற்கு மனித இனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயார்ப்படுத்தும் இடம் இது” என்று, ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் நோக்கம் பற்றி கூறியுள்ளார்.
அப்படியானால் இங்கு யாரெல்லாம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்? அதற்கான தகுதி என்ன? என்ற கேள்வி எழலாம். அது முழுக்க முழுக்க அன்னையின் தேர்வாகவே இருந்தது. சாதாரண தொழிலாளி, பொறியியலாளர், மருத்துவர், கலை ஆர்வம் கொண்டவர்கள், இசைக் கலைஞர்கள், குடும்பப் பெண்கள், படித்தவர்கள், சமூக அந்தஸ்துள்ளவர்கள் என பலதரப்பட்டவர்களையும் அன்னை சீடராக ஏற்றுக் கொண்டார்.
அது பற்றி ஒரு சீடர் , வீரியமுள்ள விதைகள் தான் நல்ல விளைச்சலைத் தரும். சாதாரணமானவர்களையும் சீடர்களாக ஏற்றுக் கொண்டால் என்ன பயன்? என்று எழுதினார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீ அரவிந்தர், “இது அன்னையின் தேர்வு. தெய்வீக சக்தி இறங்கும் போது அது பல்வேறு ஆன்ம வளர்ச்சி நிலைகளில் உள்ளவர்களிடையே எப்படி செயல்படுகிறது என்பதை அன்னை சோதிக்கிறார். இது அவரது ஆய்வகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் உங்களைத் தான் குருவாக ஏற்றுக் கொள்வோமே தவிர அன்னையை அல்ல, கண்டவர்களை ஆசிரமவாசிகளாக சேர்த்துக் கொள்வதா?” என்றெல்லாம் தாறுமாறாக கேள்விகள் எழுந்தன ஆரம்பத்தில். அரவிந்தர் அவற்றுக்கு எல்லாம் பதில் அளித்ததுடன், அன்னையின் யோக சக்தியைப் பற்றியும் ஆசிரமவாசிகளின் தேர்வு பற்றியும் அன்னை செய்யும் பணிகளினால் தன்னுடைய பாரம் குறைந்தது பற்றியும், அதனால் தான் யோக மார்க்கத்தில் மேலும் தீவிரமாக ஈடுபடுவது பற்றியும் கடிதங்கள் எழுதியுள்ளார். இது பற்றிய விவரங்களை ‘மதர்’ என்ற நூலில் படிக்கலாம்.
ஸ்ரீ அரவிந்தர் முழுக்க முழுக்க யோக சாதனைகளில் ஈடுபட்டார். மற்றவர்களைச் சந்திப்பதில்லை என்றாலும், சில விதிவிலக்குகள் இருந்தன. அவர் காலையில் செய்தித்தாள்களைப் படிப்பார். வெளி உலகில் நடப்பதைத் தெரிந்து கொள்வார். சீடர்களுக்கு கடிதங்கள் மூலம் வழிகாட்டுவார்.
1928 மே மாதம், ரவீந்திரநாத் தாகூர் பாண்டிச்சேரிக்கு வந்தார். அவர் ஐரோப்பாவுக்கு கடற் பயணம் மேற்கொண்ட போது முதலில் பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தரைக் கண்டார். ஏற்கனவே அவர் அரவிந்தரை இளைஞராகப் பார்த்து வியந்து தன் வணக்கத்தைத் தெரிவித்திருந்தார். இம்முறை ஸ்ரீ அரவிந்தர் முற்றிலும் மாறி ஒரு தவயோகியாக இருக்கும் நிலையில் கண்டார். அந்தச் சந்திப்பைப் பற்றி தாகூர் ஒரு கட்டுரை எழுதினார். அதில் ‘அரவிந்தரே ரவீந்திரனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும்’ என்று மீண்டும் தன் வணக்கத்தைத் தெரிவித்திருந்தார். அதே வேளையில் மகாத்மா காந்தி அரவிந்தரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியதற்கு, ‘மகாத்மா ஜி’ என்ற விளியுடன் ஆரம்பித்து, பணிவுடன் சந்திப்பை மறுத்துவிட்டார் ஸ்ரீ அரவிந்தர். அன்னையும் மகாத்மா காந்திஜியைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை, விலங்குகளிடையே சோதித்து மனிதனை உயர்வானவனாக உருவாக்கியது. உயர் படைப்பான மனிதர்களிடையே தெய்வீக சக்தியின் துணை கொண்டு இயற்கை ஆய்வு மேற்கொண்டு இன்னும் உயர்வான படைப்பாக மனிதனின் பரிணாமம் விரிவடையும். அதற்கு மனித இனம் தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் – என்பது ஸ்ரீ அரவிந்தரின் யோக நெறியின் நோக்கம் என்று எளிமைப்படுத்திச் சொல்லலாம்.
மனிதன் தன்னைப் பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது அவரது யோக நெறியின் முதல் படி. பக்தி, கர்ம, ஞான யோகம் என்கின்ற வழக்கமான யோக மார்க்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படும் இதைப் பற்றி, “எனது யோக நெறியில் குறுக்கு வழி இல்லை. ஆரம்ப நிலைகளைத் தவிர்த்து விட்டு கடைசியில் படியில் தாவி ஏற முடியாது. அது ஆபத்தானதும் கூட” என்று ஸ்ரீ அரவிந்தர் தனது ஒருங்கிணைந்த யோகத்தைப் பற்றி கூறியுள்ளார்.

‘முழுமையான சரணாகதி தான் இந்த மார்க்கத்தின் ஒரே வழி. வேறு வழியே இல்லை. நம்பிக்கை, பக்தி, சிரத்தை, தைரியம், கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வது என்ற ஐந்து குணங்களை, இந்த மார்க்கத்தைப் பின்பற்றவும் இதில் முன்னேறவும் முழுமை பெறவும் அவசியம்’ என்று அன்னை வலியுறுத்தி உள்ளார். இதனை ஒரு உளவியல் தயாரிப்பாகக் கருதலாம். ஆனால் இவை உண்மையான விழிப்புணர்வுக்கு தெய்வீக சக்தி வெளிப்படும் போது தாங்கி நிற்பதற்கான சக்தி அளிப்பது என்பது தெளிவு.
சுமார் முப்பது பாகங்களாக அரவிந்தரின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அவரது நூற்றாண்டின் போது தொகுக்கப்பட்டுள்ளன. அதில் மூன்று பாகங்கள் அவர் எழுதிய கடிதங்கள். அதில் சீடர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களையும் அவர்களுக்கு யோக நெறியில் ஏற்பட்ட தடைகள், இடையூறுகளைப் போக்குவதற்கான வழிகளையும் நாட்டு நடப்புகளைப் பற்றியும் அவர் வழிகாட்டி உள்ளார்.
அதில் அவரது கவி உள்ளம், நகைச்சுவை உணர்வு, சீடர்களின் யோக வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்வது என்று பல்வேறு விஷயங்கள் வெளிப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு சம்பவம் நடந்தது.
தொடர்கிறது…
$$$