புதுவையில் பூத்த யோக மலர்- 12

-திருநின்றவூர் ரவிகுமார்

“ஸ்ரீ கிருஷ்ணர் உடலில் இறங்கிய நாளிது. கிருஷ்ணரின் வருகை மீ - மனத்தின் இறக்கம். (அதிமனம் =  சூப்பர் மைண்ட்.  மீ - மனம் = ஓவர் மைண்ட்) . இந்த மீ -மனம் அதிமனம் மற்றும் ஆனந்தத்திற்கு பாதை அமைக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஆனந்த மயமானவர். மீ மனத்தைக் கொண்டு அதிமனத்திற்கு அழைத்துச் செல்வார்”  என்று ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி தினத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

ஆ. வேத ரிஷியின் வேத விளக்கம் 

 ஆ-7.  ஸித்தி தினம்

புதிய வீட்டில் பல பிரபலங்கள் வந்து அரவிந்தரைப் பார்த்து உரையாடிச் சென்றனர். அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டுமென தொடர்ந்து சித்திரஞ்சன் தாஸ் வற்புறுத்தி வந்தார். இவர் பிரபல வழக்கறிஞர். அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்தருக்காக வாதாடியவர். பிரபல சுதந்திரப் போராட்டக்காரர். காங்கிரஸின் செயல்பாடுகள் பிடிக்காத்தால், இவரும் மோதிலால் நேருவும் மேலும் சிலருடன் இணைந்து வெளியேறி, ஸ்வராஜ்ஜியா கட்சியைத் தொடங்கினார்கள்.

சித்தரஞ்சன் தாஸ் புதிய கட்சி தொடங்கிய பிறகு அதை பிரசாரம் செய்ய தென்னகம் வந்தார் . 1923 ஜூன் மாதம் பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தரைப் பார்த்தார். ஏற்கனவே அவரது கடிதங்களுக்கு பதிலளித்த அரவிந்தர், அரசியல் விஷயமாக தன்னால் அவருக்கு உதவ முடியாது என்றும் ஆன்மிக விஷயத்தில் உதவிட முடியும் என்றும் எழுதியிருந்தார். பாண்டிச்சேரி வந்த தாஸ் தன்னை சீடராக ஏற்று யோக மார்க்கத்தில் வழி நடத்துமாறு கேட்டார்.

ஆனால் அரவிந்தர் அதை ஏற்க மறுத்து விட்டார். பின்னாளில் அதுபற்றி பேசும் போது,  “இரண்டு காரணத்தினால் நான் மறுத்து விட்டேன். ஒன்று, அவர் அரசியலில் நாட்டமுடன் இருந்தார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு பூரண சரணாகதி செய்ய அவரால் முடியாது. இரண்டாவதாக, அவரை நேரில் பார்த்தபோது தெரிந்து விட்டது, யோக சக்தியை தாங்கும் வலு அவரது உடலுக்கு இல்லை. பலவீனமாக இருந்தார்” என்று சொல்லியிருந்தார். அதன் பிறகு தாஸ் நீண்ட காலம் வாழவில்லை.

1925 ஜூன் மாதம் சித்தரஞ்சன் தாஸ் காலமானார்.  “சித்தரஞ்சன் தாஸின் இழப்பு பேரிழப்பு. அவருக்கு அரசியல் ஞானமும், மக்களைக் கவரும் தன்மையும், ஆளுமையும், நினைத்ததைச் சாதிக்கும் மன உறுதியும், சூழ்நிலைக்கு ஏற்ப நிகழக்கூடிய மனமும் கொண்டவர். திலகருக்குப் பிறகு இந்தியாவை ஸ்வராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரே தலைவராக அவர் இருந்தார்” என்று அரவிந்தர் தனது புகழாஞ்சலியில் எழுதியுள்ளார்.

அதே ஆண்டில் (1923 ) அக்டோபர் மாதம் ஆந்திராவைச் சேர்ந்த பிரபலத் தலைவர் ஜி.வி.சுப்பா ராவ் பாண்டிச்சேரி வந்து அரவிந்தரைப் பார்த்தார். அவர் அரவிந்தரைப் பற்றி – அவரது உடை, உடல், பேச்சு , மென்மையான அதேவேளையில்  உறுதியாகவும் மாறக்கூடிய இயல்பு – விவரமாக எழுத்துக்களில் வடித்துள்ளார்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், குஜராத்தில் இருந்து திலீப் குமார் ராய் என்பவர் வந்தார். அவர் பாடகர். பல்வேறு திறமைகள் கொண்டவர். அவரது தந்தையும் பிரபல கவிஞர். ஆன்மிக வழிகாட்டுதலைத் தேடி வந்தவர். அரவிந்தருடன் நிகழ்த்திய உரையாடலை அவர் எழுதிய  ‘உயர்ந்தவர்களிடையே’ (Among the Great) என்ற நூலில் ஆவணப்படுத்தி உள்ளார். பின்னர் அவர் ஆசிரமவாசியானார்;  அரவிந்தரின் நெருக்கமான சீடராக வாழ்ந்தார்.

அந்த ஆண்டுதான் மகாத்மா காந்தியின் தூதராக அவரது மகன் தேவதாஸ் காந்தி பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தரைச் சந்தித்தார். தேசத்தின் முன்னுள்ள பிரச்சினைகளைப் பற்றி அரவிந்தரின் கருத்துக்களை அறிய மகாத்மா காந்தி விரும்பினார். அதற்காக தனது மகனை அனுப்பினார். தேவதாஸுக்கும் அரவிந்தருக்கும் இடையே நடந்த உரையாடல் வெற்றிகரமாக இருந்ததாகச் சொல்ல முடியாது.

தேவதாஸ் அகிம்சையைப் பற்றி அரவிந்தரின் கருத்துக்களைக் கேட்டார். அரவிந்தர் அவரிடம்,  “ஆப்கானியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்தால் அகிம்சை முறையில் நீங்கள் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?” என்று பதில் கேள்வி எழுப்பினார். தேவதாசிடம் சரியான பதில் இல்லை. கடுப்பான அவர்,  “நீங்கள் புகை பிடிப்பதை விடாமல் இருப்பதேன்?” என்று அரவிந்தரிடம் கேட்டார். இது நாகரிகமற்ற கேள்வி. அரவிந்தர் நன்மை தீமையை சமமாக பாவிக்கும் யோகி. இதுபற்றி அரவிந்தரின் சீடர்  டி. கோதண்ட ராமாராவ் எழுதியுள்ள நூலில் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு உள்ளது.

“அன்னை (மிர்ரா) வருவதற்கு முன்பு நாங்கள் – நண்பர்களும் சீடர்களும் – எல்லாரும் அரவிந்தருடன் ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு புகை பிடித்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். நான் ஒருவன் மட்டும் தான் புகை பிடிக்காதவன். நாலு மணி முதல் நாலரை மணி வரை இது நடக்கும். அதன் பிறகு எல்லோரும் கூட்டாக தியானம் செய்வோம். புதிதாக வந்த என்னுடைய நண்பன் அரவிந்தரைப் பார்த்து தானும் புகை பிடிக்கப் பழகிக் கொண்டான். மகான்களை நாம் சில விஷயங்களில் காப்பி அடிக்கக் கூடாது. இது என் நண்பனுக்குப் புரியவில்லை. அரவிந்தர் ஒருநாள் திடீரென்று புகைப்பதை நிறுத்திவிட்டார். என் நண்பனால் அப்படி நிறுத்த முடியவில்லை. இருமி இருமி மிகவும் கஷ்டப்பட்டான். பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டான்….

“அதேபோல அசைவ உணவுப் பழக்கம். அரவிந்தரும் அவருடன் இருந்த வங்காள நண்பர்களும் மீன் உணவைச் சாப்பிடுவார்கள். வங்காளிகளுக்கு மீன் அசைவ உணவு கிடையாது. அங்கு எல்லா ஜாதியினரும் மீன் சாப்பிடுவார்கள். தென்னகத்தில் அப்படி இல்லை. அது மட்டுமன்றி யோக மார்க்கத்தில் செல்ல வேண்டுமென்றால் சாத்வீக உணவு தான் இங்கு நியமம். அரவிந்தர் யோகத்திற்கும் உணவிற்கும் சம்பந்தமில்லை என்பவர். இது ஆரம்பத்தில் சற்று நெருடலாக இருந்தது. அன்னையை நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அசைவ உணவை நிறுத்திவிட்டார். அதேவேளையில் சைவ உணவையே சத்தானதாக, சுவையானதாக மாற்றிவிட்டார்….

“ஒருமுறை சமையல்காரர் உப்பு போட மறந்துவிட்டார். அரவிந்தர் எதையும் சொல்லாமல் வழக்கம் போல சாப்பிட்டார். பிறகு விஷயம் தெரிந்தது. அவரிடம் கேட்டபோது,  “ஆமாம் . இன்று உணவில் உப்பில்லை” என்று சாதாரணமாகச் சொன்னார். அவர் விருப்பு வெறுப்புகளைக் கடந்த மனநிலை கொண்ட யோகி”  -என்று தனது நூலில் ராவ் பதிந்துள்ளார்.

1925 ஆம் ஆண்டு லாலா லஜபதி ராயும் புருஷோத்தமதாஸ் டாண்டனும் பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தரைச் சந்தித்தனர். அவர்கள் இருவரும் காங்கிரசின் பெரும் தலைவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை சென்ற தியாகிகள். அவர்களுடன் நடந்த உரையாடலின் ஒரு சிறு பகுதியை , அதிலுள்ள விஷயசாரம் இன்றும் பொருந்துவது கருதி, இங்கு பார்ப்போம்…

அரவிந்தர்: அலகாபாத்தில் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?

டாண்டன்: மகாத்மாஜியின் திட்டங்களைச் செயல்படுத்த முனைப்புக் கொண்டுள்ளோம்.

லஜபதி ராய்: உண்மையிலேயே அதைச் செய்து கொண்டு இருக்கிறீர்களா? (அரவிந்தரைப் பார்த்து) இவர்கள் உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றும் முயற்சியில் உள்ளார்கள்.

டாண்டன்: எனக்கு அதில் விருப்பம் இல்லைதான். அதனால் அதிகார மோகமும் தனி மனிதர் விரோதங்களும் பொறாமையும் ஏற்பட்டுவிடும். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

லஜபதி ராய்: நீங்கள் பொற்காலத்திற்கு அழைத்துச் செல்வீர்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்.

அரவிந்தர்: ஆனால் அவர்களது எதிர்பார்ப்பை நாம் ஏன் அதிகரிக்க வேண்டும்?

லஜபதி ராய்:  ஜனநாயகத்தில் நீங்கள் இதைச் செய்துதான் ஆக வேண்டும்.

அரவிந்தர்: ஏன்?

லஜபதி ராய்: ஆட்சி, அதிகார அமைப்புகளில் அமர வேண்டுமானால் நீங்கள் இதுபோன்ற பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்தாக வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் இயல்பு!

அரவிந்தர்: அப்படியானால், ஜனநாயகம் தேவையா? அதிகார ஆசை அங்கு எப்போதும் இருக்கும். பதவி அதிகாரங்களை ஒழிக்க முடியாது. நம்முடைய ஊழியர்கள் அதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். தேசத்தின் நன்மைக்காகத்தான் பதவி அதிகாரம் என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஸ்வராஜ்ஜியம் கிட்டிவிட்டால் இந்த பிரச்சினை மேலும் அதிகமாகும். இது ஐரோப்பாவிலும் உள்ளது. ஐரோப்பியர்களும் நம்மைப் போலத் தான். நமக்கும் அவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. அவர்களுக்கு தங்கள் தேசம் பற்றிய பெருமிதமும் விழிப்புணர்வும் உள்ளது. நம்மிடம் அது இல்லை.

-ஜனவரி 1925 இல் இந்த உரையாடல் நடந்தது. நூறாண்டு காலம் கழித்தும் இன்றும் நம் செய்தித்தாள்களையும் ஊடகங்களையும் பார்க்கும்போது அரவிந்தர் வேதனையுடன் சொன்னது இன்றும் அப்படியே உள்ளது. அரவிந்தரின் மனவேதனையைப் போக்க 1925 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஜயதசமி நாளில் டாக்டர் ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்தார்.

அந்த ஆண்டுதான் பிலிப் பார்பியர் என்ற இயற்பெயர் கொண்ட பவித்ரா என்ற இளைஞர் ஆன்மிகத் தேடலுடன் அரவிந்தரைச் சரணடைந்தார். (இவரைப் பற்றி ஏற்கனவே  ‘பொருள் புதிது’ தளத்தில் வெளிவந்துள்ளது) சிறந்த பொறியாளரான இவர் உலகப் போரில் பங்கு பெற்றார். அதற்கு முன்பிருந்தே அவர் ஆன்மிக தாகம் கொண்டவராக இருந்தார். போர் அவரது ஆன்மிகத் தேடலை அதிகரித்தது. போருக்குப் பின் அது அவரை ஜப்பானுக்கும் பின்பு மங்கோலியாவுக்கும் இழுத்துச் சென்றது. இறுதியாக அரவிந்தரைக் கண்டடைந்தார். அரவிந்தர் ஆசிரமம் அமைப்பதில், குறிப்பாக சர்வதேச கல்வி மையம் அமைப்பதில், அவர் பெரும் பங்காற்றினார்.

அவர் வருவதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பாக சம்பக்லால் என்ற குஜராத்தி இளைஞர் பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தரிடம் அமர்ந்தார். நல்ல சீடரான அவர் அரவிந்தர் மற்றும் அன்னைக்கு தனி உதவியாளராக மிகுந்த பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்தார். அவரும் பவித்ராவும் ஆசிரமத்தை உறுதிப்படுத்தும் பணியில் பெரும் பங்காற்றினார்கள் என்றால் அது மிகையல்ல.

தத்தா, பவித்ரா என்று வெளிநாட்டினர் மட்டுமின்றி, குஜராத், வங்காளம், தென்னகம் என்று பல பகுதிகளில் இருந்தும் சீடர்கள் வந்து சேர்ந்தனர் . அவர்களது எண்ணிக்கை அதிகரித்ததால், வேறு சில வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர். ஆசிரமத்திற்கான அடித்தளம் ஆரம்பமானது.

1926 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே அரவிந்தர் தனது யோக சாதனைகளில் அதிகம் மூழ்கத் தொடங்கினார். சீடர்களுடன் நடத்தும் மாலை நேர உரையாடல்களுக்கு அவர் வரும் நேரம் தாறுமாறாக ஆனது. ஒரு நாள் அவர் வரும்போது இரவு இரண்டு மணி என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சீடர்கள் அரவிந்தர் சொல்லும் ‘மேலிருந்து தெய்வீக சக்தி இறங்கி வரும் நாள் நெருங்கி விட்டது’ எனப் பேச தொடங்கினர்.

அந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது பிறந்தநாள் உரையில், மேலிருந்து அதிமனம் இறங்குவதற்கான சூழ்நிலை கனிந்து வருவதாகச் சொன்னார்:

“முதலாவதாக, பௌதீக உலக அறிவு தன் எல்லைகளை எட்டி விட்டது. வரம்பை உடைக்க முயல்கிறது. இரண்டாவதாக, உலகமெங்கும் புற மற்றும் அக மனவெளிகளுக்கு இடையேயான திரையை விலக்க முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. மனிதர்கள் இப்பொழுது 'மனோ நிலை'யில் வாழ்பவர்களாக அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவதாக, உயிர் சக்தி, அது  முன்னெப்போதும் இல்லாத வகையில் உடலை இறுகப் பற்ற முயல்கிறது. நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளால் உலகம் ஒருங்கிணைந்து வருகிறது. இந்த ஒருங்கிணைப்பு மிக உயரிய உண்மை இறங்கி வர தோதாக உள்ளது. நம்முடைய பணியில் சிரமங்களும் அதிகரித்து வருகின்றன. நான்காவதாக, அதிகமானோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உயிராற்றல் கொண்ட மனிதர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இவையெல்லாம் காலம் கனிந்து வருவதற்கான அடையாளங்கள். அதேவேளையில் எதிர்ப்பும் தீவிரமடைந்து வருவதை நீங்கள் பார்க்கலாம். ஒளியும் சக்தியும் வரும்போது காரிருள் இருப்பதையும் பார்க்கலாம். அதன் அழுத்தத்தை நீங்களே உணர்ந்திருக்கலாம். நான் செய்வது தனிப்பட்ட யோகம் அல்ல. என்னுடைய தனிமனித விடுதலைக்காகவும் மோட்சத்திற்காகவும் செய்வதாக இருந்தால் அதை எப்போதோ அடைந்திருப்பேன்”

 – என்று அந்த உரையில் குறிப்பிட்டார்.

1926 நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்த சக்தியின் அழுத்தம், தாக்கம் தாங்க முடியாததாக இருந்தது என்கிறார் புராணி. டிசம்பர் 24 ஆம் நாள் மாலை,  “விரைவில் இங்கு வாருங்கள்”  என்று சீடர்களுக்கு அன்னை வார்த்தை அனுப்பினார். ஆறு மணியளவில் சீடர்களும் மற்றவர்களும் கூடிவிட்டனர் . இருள் கூடி வந்த நேரமது. வராண்டாவில் அரவிந்தரின் அறைவாசலுக்குப் பக்கத்தில் அவர் அமரும் நாற்காலிக்கு பின்புலமாக மூன்று சீன டிராகன்கள் ஒன்றின் வாலை மற்றது கவ்வியபடி இருக்கும் திரைசீலை தொங்கிக் கொண்டிருந்தது. இவ்வுலகம், மேலுலகம், அவற்றிக்கு இடைப்பட்ட உலகத்தைக் குறிப்பதாக மூன்று டிராகன்களும், அவை சந்திப்பது உண்மை தன்னை வெளிப்படுத்தும் நேரம் என்று தீர்க்கதரிசனம் பற்றிய ஒரு நம்பிக்கை சீனாவில் இருப்பதை  கூடியிருந்தவர்கள் பின்னர் தெரிந்து கொண்டனர்.

ஆழ்ந்த அமைதி நிலவியது. மேலிருந்து ஒளி வெள்ளமென அனைவர் மீதும் பாய்ந்ததை கூடியிருந்தவர்கள் கண்டனர். எல்லோரும் தங்கள் தலையின் மீது ஓர்  அழுத்தம் ஏற்படுவதை உணர்ந்தனர். அந்தச் சூழல் முழுவதும் மின்சார அதிர்வு போன்றதொரு அதிர்வு இருந்தது. எல்லோரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். கதவு திறந்ததும் முதலில் அன்னை மிர்ரா மெதுவாக பெருமிதத்துடன் வெளியே வந்தார். அவருக்கு அடுத்து ஸ்ரீ அரவிந்தர் கம்பீரமாக வந்தார். அவர் அமரும் நாற்காலி முன்னிருக்கும் மேஜை அன்று அகற்றப்பட்டிருந்தது . அவர் நாற்காலியில் அமர்ந்ததும் அருகில் உள்ள ஸ்டூலில் அன்னை அமர்ந்தார்.

பிறகு அனைவரும் கண்ணை மூடி தியானத்தில் ஈடுபட்டனர். 45  நிமிடங்கள் அது நீடித்தது. பிறகு சீடர்கள் ஒவ்வொருவராக வந்து அன்னையை வணங்கினர். அன்னையும் அரவிந்தரும் அவர்களை ஆசீர்வதித்தனர். ஆழ்ந்த தியானம் மற்றும் ஆசிக்கு இடைப்பட்ட நேரத்தில் பலரும் இனம் புரியாத ஆன்மிக அனுபவத்தைப் பெற்றனர். அந்தச் சூழல் பிரம்மாண்டமாகவும் கவித்துவமாகவும் அழகாகவும் இருந்தது.

உலகின் ஒரு மூலையில் சீடர்கள் தங்கள் குருவிடம் ஆசி பெற்றதாக அது இல்லை. அதைவிடப் பெரியதாக அது இருந்தது. உயர்ந்த விழிப்புணர்வு பூமிக்கு வந்திறங்கியதாக இருந்தது. ஆன்மிக ஆலமரம் பூமியைப் பிளந்து துளிர்ப்பதாக அது இருந்தது.

அரவிந்தரும் அன்னையும் அறைக்குள்ளே சென்றனர். தத்தா சன்னதம் வந்தது போல எழுந்தார். சூழலின் அமைதியை உடைத்து,  “இறைவன் இன்று உடலில் இறங்கி விட்டான்” என்று உரக்கச் சொன்னார் – என்று புராணி அந்த நிகழ்வைப் பதிவு செய்துள்ளார்.

அது ஸித்தி தினமாக (நவம்பர் 24) இன்றும் அரவிந்தரின் சீடர்களால் கொண்டாடப்படுகிறது.

“ஸ்ரீ கிருஷ்ணர் உடலில் இறங்கிய நாளிது. கிருஷ்ணரின் வருகை மீ – மனத்தின் இறக்கம். (அதிமனம் =  சூப்பர் மைண்ட்.  மீ – மனம் = ஓவர் மைண்ட்) . இந்த மீ -மனம் அதிமனம் மற்றும் ஆனந்தத்திற்கு பாதை அமைக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஆனந்த மயமானவர். மீ மனத்தைக் கொண்டு அதிமனத்திற்கு அழைத்துச் செல்வார்”  என்று ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி தினத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

“மனத்திற்கும் அதிமனத்திற்கும் இடையே பல்வேறு தளங்களாக விழிப்புணர்வு நிலை உள்ளது. அவை ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு ஒளி, சக்தி,  அறிவு நிலைகள் உள்ளன.  மீ மனம் தான் படிநிலைகளில் உயர்ந்தது. அதை அடைந்து அங்கிருந்து அதன் வழியாகத்தான் அதிமனத்தை இறக்க முடியும்” என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். ஸ்ரீ அரவிந்தர் அந்த உச்சபட்ச நிலையை அடைந்து விட்டார். அவரது யோக மார்க்கத்தின் லட்சியமான அதிமனதை அடைவதற்கான பாதை அமைக்கப்பட்டு விட்டது – என்றார் அரவிந்தரின் சீடரான டாக்டர் நிராத் பாரன்.

புறச் செயல்பாடுகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. ஸ்ரீ அரவிந்தர் முழுமையாக தனிமையில் தன் யோகத்தில் ஆழ்ந்து விட்டார். சீடர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் அன்னை முழுமையாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ஆசிரமச் செயல்பாடுகளையும் அவரே நிர்வாகித்தார். சுருக்கமாகச் சொன்னால், 1926 நவம்பர் 24 தேதி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் தொடங்கப்பட்ட நாளாகக் கருதலாம்.

தொடர்கிறது…

$$$

Leave a comment