வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

-ஆசிரியர் குழு

தமிழகம் முழுவதும் இன்று (பிப். 23) கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு முருக பக்தர் பேரவை சார்பில் நடைபெறுகிரது. அவர்கள் வெளியிட்டுள்ள முருக பக்தர்களுக்கான அறிக்கை இது…
திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூண்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

இன்றைய இந்த தினம் மிகவும் அற்புதமான தினம். முருகனுக்கு உகந்த சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வந்துள்ள அற்புதமான நாள். 

இந்த தினத்தில் நாம் அனைவரும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். இந்தப் பிரார்த்தனை இங்கு மட்டுமின்றி, தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள சாதுக்கள், சன்யாசிகள், ஆதீனங்கள் போன்ற  ஆன்மிகப் பெரியோர்கள், இந்தத் திருநாளில் நாம் செய்யக்கூடிய கூட்டுப் பிரார்த்தனையால் நம்முடைய லட்சியம் நிறைவேறும் எனக் கூறியுள்ளனர்.

நம்முடைய லட்சியமான, திருப்பரங்குன்றம் மலைக்கோயில் தீபத்தூணில் விளக்கேற்றி முருகனை வழிபட வேண்டும் என்ற நமது எண்ணம் ஈடேறும் என்று பெரியவர்கள் சொன்னதனால் நாம் இங்கு கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்கிறோம்.

$

திருப்பரங்குன்றம் மலை பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள இந்துக்களின் முதன்மையான ஆன்மிகத்தலமாக இருந்து வருகிறது. இதனை இழிவுபடுத்த மலை மீதுள்ள தர்காவின் பெயரில் இஸ்லாமியர்கள் சென்ற ஆண்டு முயன்றனர்.

அப்போது, திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க  5 லட்சம் பேர் கலந்துகொண்ட முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம், ஒவ்வொரு சஷ்டி தினத்திலும் இந்துக்கள் ஒன்றாகச் சேர்ந்து அந்தந்த ஊரில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்பதாகும். 

அதன்படியே நாம் இன்று கூடி சஷ்டி கவசம் பாடுகிறோம்.

$

அறுபடை முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சி மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற  வேண்டும் என்று பல ஆண்டுகளாக முருக பக்தர்கள் போராடி வருகிறோம்.

சென்ற ஆண்டு, முருகபக்தர்களின் சட்டப் போராட்டம் வென்றது. திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சி மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற  வேண்டும் என்று, டிச. 1ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தாமல், வேண்டுமென்றே தடுத்தது தமிழக அரசாங்கம். 

நீதிமன்ற பாதுகாப்புப் படையுடன் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டபோதும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக பொய்யான காரணம் கூறி, தீபம் ஏற்றுவதை மாநில அர்சு தடுத்தது.

தீபம் ஏற்றுவதைத் தடுத்தது மட்டுமல்ல,  ‘மலையுச்சியில் இருப்பது தீபத்தூணே அல்ல’ என்று நீதிமன்றத்தில் வாதாடியது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை.

$

தமிழக அரசாங்கம் ஏன் நம்மைத் தடுக்கிறது? தீபத்தூணில் முருக பக்தர்கள் தீபம் ஏற்றிவிட்டால், முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஓட்டுகள் கிடைக்காது என்று கருதும் அரசியல் பார்வை காரணமாக, அவர்களை தாஜா செய்வதற்காக இந்த ஈனச்செயலை செய்து வருகிறது மாநில அரசு.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக் கூடு கொடியேற்ற அனுமதி கொடுக்கிறது; ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக முருகப் பெருமானின் கோயில் இருக்கும் மலையுச்சியில் தீபத்தூணில் கார்த்திகை விளக்கேற்ற அனுமதி மறுக்கிறது. இது அரசாங்கத்தின் இரட்டைவேடம். இது ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பது போன்று இருக்கிறது.

$

மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற நீதிமன்றத் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருந்தபோதிலும்,  தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. அதனைத் தடுக்க காவல்துறையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது மாநில அரசு. தற்போது அதற்காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறது தமிழக அரசு.

தமிழக அரசின் பாரபட்சத்தையும் இந்து விரோத மனப்பான்மையையும் கண்டித்து, கார்த்திகை தீபத்திற்காக தன்னையே எரித்துக் கொண்டு உயிர்த்தியாகம் செய்தார் பூரணச்சந்திரன் என்ற பக்தர். மாநில அரசின் தவறான செயல்பாடுகளால் மனம் நொந்ததால் தான் பூரணச்சந்திரன் தன்னையே தீபமாக எரித்துக் கொண்டார். இன்னுயிர் ஈந்த முருக பக்தர் பூரணச்சந்திரனின் வாழ்க்கையை இனி திரும்பப் பெற முடியுமா? 

$

நீதித்துறை அனுமதித்தும்கூட, மாநில அரசு அதை நடைமுறைப்படுத்த மறுப்பதன் மூலம், எதிர்காலத்தில் எவரும்  நீதியை மதிக்கத் தேவையில்லை என்ற சிந்தனையை உருவாக்கி இருக்கிறது இந்துவிரோத அரசு. 

அதுமட்டுமல்ல, திருப்பரங்குன்றம் வழக்கில் நடுநிலையான தீர்ப்பை அளித்த நீதிபதியை பல வகைகளில் ஆளும்கட்சியினரும், கடவுள் நம்பிக்கையற்றவர்களும் அவதூறு செய்தனர். அதனை உச்ச நீதிமன்றமே கண்டித்தது. அதன் பின்னர் நீதிபதியை மிரட்டும் நிலை நின்றிருக்கிறது.

இதேபோன்று மற்ற மாநிலங்களும் நீதித்துறையை மதிக்காமல் நடந்துகொள்ள ஆரம்பித்தால், பாரதத்தில் நீதித்துறை மீது மரியாதை நிலைக்குமா? 

திருப்பரங்குன்றத்தைக் குறிவைத்து இஸ்லாமிய மதவெறி சக்திகள், திராவிட நக்சல் இயக்கங்கள்  நடத்துகின்ற தாக்குதல் இன்னும் குறையவில்லை.  திருப்பரங்குன்றம்  ஸ்தல விருட்சமான கல்லத்தி மரத்தில் திமுக அரசின் ஆதரவோடு பச்சை நிற பிறை கொடியைக் கட்டி  இஸ்லாமியர்கள் குன்றத்தை ஆக்கிரமிக்க மீண்டும் முயன்றனர்.  உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் உத்தரவால், தற்போது அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது.

$

நாம் நம்முடைய கடவுளான முருகனிடம் ஒன்றுசேர்ந்து பிரார்த்தனை செய்தால், நம்முடைய பிரார்த்தனைக்குத் தேவையான வழிவகைகளை அவரே செய்து தருவார் என்ற நம்முடைய உறுதியான நம்பிக்கை. அதன்படி, இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் ஹிந்துக்கள் கந்த சஷ்டி பாராயணம் செய்து வருகிறார்கள்.

கூட்டுப் பிரார்த்தனையின் பலம் நாம் அறிந்ததே.  திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டுமெனில், அடுத்த கார்த்திகை தீபத்தின் பொழுது இதனை அனுமதிக்கும் நபரே ஆட்சியில் அமர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும் என்ற நிதர்சனத்தை உலகுக்குப் பறைசாற்றுவோம்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

$$$

Leave a comment