-திருநின்றவூர் ரவிகுமார்
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-4...

- காண்க: அத்தியாயம்-3
அ. வேதபுரியில் வேதரிஷி
அ-4. முன்னுரைத்த தமிழ்யோகி
நம் நாட்டை பலரும் பல்வேறுவிதமாக அடையாளப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, காந்தி தேசம் (இப்போது மோடி தேசம்), மன்னர்களின் நாடு , கோயில்களின் தேசம், நிர்வாண சாமியார்களின் நாடு என்று பலவிதமாகச் சொல்கிறார்கள். சரியான மற்றும் நிரந்தரமான அடையாளங்களில் ஒன்று, இது யோகியர் நாடு என்பது. இங்கு எல்லாக் காலத்திலும் ஏதோ ஒரு மூலையில் ஒரு யோகி இருந்துகொண்டே இருப்பார். யோகிகள் இல்லாத காலம் என்பது இந்த நாட்டில் இல்லை. அவரை நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
யோகிகள், காலம், இடம் என்ற இரண்டையும் கடந்தவர்கள். வருங்காலத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். அவர்கள் சொன்னது அப்படியே நடக்கும். அப்படிப்பட்ட ஒரு யோகி நாகப்பட்டினத்தில் இருந்தார். அவர் அரவிந்தர் பிறப்பதற்கு முன்பே அவரைப் பற்றியும் அவர் தென்னகம் வருவார் என்பதை பற்றியும் கூறியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அவர் சொல்லியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் வாசுதேவ ஐயங்கார். இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டு துறவறம் பூண்டு, ஊர் ஊராகச் சுற்றி வந்துள்ளார். பிறகு நாகப்பட்டினத்தில் தங்கி விட்டதால் ‘நாகை சுவாமி’ என்று அழைக்கப்பட்டார். அவர் காயத்ரி மந்திரத்தையும் திருமந்திரத்தையும் (எட்டெழுத்து மந்திரம்) இணைத்து புதியதொரு ஜப மந்திரத்தை உருவாக்கினார். அதை தன் சீடர்களுக்கு உபதேசித்து அவர்களை கூட்டாக ஜபிக்கும்படி பழக்கினார் . எனவே அவரை ‘நாகை ஜபதா’ (தா என்றால் மூத்தவர், தலைவர், என்று பொருள் ) என்றும் சொல்லுவார்கள். அவர் 1870 இல் சித்தியடைந்தார்.
அவர் சித்தியடைவதற்கு முன்பு சீடர்கள் அவரிடம், “எங்களுக்கு இனி யார் வழி காட்டுவார்கள்?” என்று வேண்டினர். அதற்கு அவர், “முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து உத்திரயோகி ஒருவர் தமிழகத்திற்கு வருவார். அவர் மூன்று விஷயங்களை ஏற்கனவே சொல்லி இருப்பார் . அதைக் கொண்டு நீங்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அவருக்கு பணி செய்யுங்கள். அவர் உங்களை வழிநடத்துவார்” என்றும் சொல்லி சித்தியடைந்து விட்டார்.
1. எனக்கு இருக்கும் அறிவாற்றல், செல்வம், ஞானம் எல்லாம் அவன் தந்தது. அவனுடையது.
2. இறைவனை கண்டேயாக வேண்டும்.
3. இந்த தேசம் புவியியல் அல்ல, அன்னை.
-என்று அரவிந்தர் ஏற்கனவே எழுதியுள்ளதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவும்.


நாகை ஜபதா சுவாமிகள் சித்தியடைந்த பிறகு, அந்த ஜபமண்டலி (சீடர் கூட்டம்) மங்கி மறைந்து விட்டது. அவரது சீடர்களில் முக்கியமானவராக இருந்தவர், திருச்சி மாவட்டத்தில் உள்ள கொடியாலம் ஜமீன்தார். அவரது குடும்பத்தினர் தங்கள் குருவின் வார்த்தையை நம்பி காத்திருந்தனர். அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்தான் வா.ரங்கசாமி ஐயங்கார். அவர்தான் முதன்முதலில் அரவிந்தரை தங்கள் குரு சொன்ன உத்தர யோகி (உத்தர் என்றால் உயர்ந்த மற்றும் வடக்கு என்னும் பொருள். அரவிந்தர் வடக்கிலிருந்து வந்த உயர்ந்த யோகி என்று பொருள் கொள்ளலாம்) என்று அடையாளம் கண்டு கொண்டார். பாண்டிச்சேரி வந்த போது பணம் முடையிலிருந்த அரவிந்தருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் – அந்தக் காலத்தில் அது பெரிய தொகை – கொடுத்தார். பாண்டிச்சேரிக்கு வந்த பிறகு அரவிந்தர் எழுதிய நூலான ‘யோக சாதனை’ என்ற நூலை வெளியிட நிதி உதவி செய்தார். அந்த நூல் எழுதப்பட்டதே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.
பரோடாவில் இருந்த போதும் அதன் பின்னரும், கல்கத்தாவிலும், தன் தம்பி பரீந்தருடன் சேர்ந்து இறந்தவர்களின் ஆவியை தொடர்பு கொள்வது என்ற விஷயத்தில் அரவிந்தர் ஈடுபட்டார் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம். ஒரு பலகை, அதில் எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்கும். ஏதோவொரு கேள்வியை மனதில் நினைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட ஆவியை அழைத்தால் அது வந்து உங்கள் கைவிரலை பலகையில் உள்ள எழுத்துக்களை தொட்டுச் செல்லும் . அந்த எழுத்துக்களைச் சேர்த்தால் கேள்விக்கு பதில் கிடைக்கும்.
சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு அதன் தீர்மானங்களை தேசியவாதிகளின் கண்ணோட்டத்துடன் விளக்க வேண்டிய வேலை இருந்தது அரவிந்தருக்கு. அந்த நேரத்தில் அவரது யோக ஆசான் லீலீ அழைப்பின் பேரில் வந்தார். அவருடன் தியானப் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அரவிந்தர் யாருக்கும் தெரியாத இடத்தில் அவருடன் தனிமையில் இருந்து தியானம், யோகம் பயின்றார். மூன்று நாட்களிலேயே பூரண சமாதி நிலையை அடைந்தார். ஒரு வாரம் கழித்து இருவரும் வெளியுலகத்திற்கு வந்தனர்.
அரவிந்தர் பல ஊர்களுக்குச் சென்று பேச வேண்டி இருந்தது. ஆனால் அவருக்கு வெளி உலகத் தொடர்பை விட்டுப் போய்விட்டதால் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தார். லீலீ சொன்னார், “கவலைப்படாதே. கூட்டத்தின் முன்பு கண் மூடி நின்று வணங்கு. பிறகு கண்ணைத் திறந்தவுடன் உனக்கு வார்த்தைகள் வரும்”. அரவிந்தரும் அவர் சொன்னது போலவே செய்தார். அவரது பேச்சு முன்பு இருந்ததை விடவும் தீவிரமாகவும் அனலாகவும் ஆழமாகவும் இருந்ததென்று கேட்டவர்கள் எல்லோரும் சொன்னார்கள். அரவிந்தர் பின்னாளில், “லீலீ சொன்னபடி செய்தேன். பிறகு எங்கிருந்தோ வார்த்தைகள் என் மனதில் புகாமல் நேரடியாக வாய்மொழியாக வெளிப்பட்டது” என்று சொல்லியுள்ளார்.
அதன் விரிவாக்கமாக பாண்டிச்சேரியில் அவர் வேறொரு முயற்சியைச் செய்து பார்த்தார். மனதுக்குள் போகாமல் வார்த்தைகள் வெளிப்பட்டது போல, பேனாவைப் பிடித்தவுடன் தானாகவே அது எழுதும் (ஆட்டோமேட்டிக் ரைட்டிங்) விதத்தை அவர் முயன்றார். அது வெற்றிகரமாக முடிந்தது. அதன் விளைவே ‘யோக சாதனை’ (Yogic Sadhan) என்ற நூல். ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட அந்த நூல் சில பதிப்புகளைக் கண்டது. 1927 இல் அரவிந்தர் அந்த நூலை விற்பனையிலிருந்து விலக்கி விட்டார். அதைப்பற்றி, “தூல உலகியல் தளத்திற்கு அப்பாலிருந்து இதுபோன்ற சில வெளிப்பாடுகள் ஏற்படுவது உண்டு. அது எப்பொழுதுமே உயர்ந்த நிலையில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த எழுத்துக்கள் உங்கள் ஆழ் மனதிலிருந்து கூட வெளிப்பட்டதாக இருக்கலாம். அது கடந்த காலத்தில் மறைக்கப்பட்ட சம்பவங்களை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்கூட்டியே சொல்லக் கூடியதாகவும் இருக்கலாம். அதற்கப்பால் இந்தச் சொற்களுக்கு வேறெந்த முக்கியத்துவம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று அதன் முக்கியத்துவத்தை புறம் தள்ளும் விதமாக அரவிந்தர் சொல்லிவிட்டார்.
எனவே மிர்ரா அல்பாசா பாரிஸ் மாநகரில் இருந்தபோது அரவிந்தரை தன் அகவுலகில் கண்டதும் அவரை கிருஷ்ணர் என்று கருதியதும் சாத்தியமே.
தொடர்கிறது…
$$$