மகாத்மாவின் இறுதிகாலத் தடுமாற்றம்

-ராம் மாதவ்

பிரிவினைக்கு வழிவகுத்த ‘சூழ்நிலைகளை’ உருவாக்குவதில் காந்திக்கு இருந்த பங்களிப்பில் இருந்து அவர் முழுவதுமாக நழுவி விட முடியாது. ஆனால் அவர் மட்டுமே அதற்கு காரணமென பொறுப்பாக்க முடியுமா? கோட்சே அப்படித்தான் நினைத்தான். ஆனால் தேசம் அப்படி நினைக்கவில்லை.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை 1948 ஜனவரி 30 தேதி நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். தான் குற்றமெனக் கருதியவற்றை அவர் செய்ததாக நம்பியதால் சுட்டான். ‘பிரிவினையை ஒப்புக்கொண்டதன் மூலம் அவர் தேசத்துக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக’ காந்தி மீது அவன் குற்றம் சாட்டினான்.  ‘பாகிஸ்தான் உருவாவதை அவர் உளப்பூர்வமாக எதிர்த்திருந்தால் ஜின்னாவோ பிரிட்டிஷாரோ அதை உருவாக்கி இருக்க முடியாது’ என்று அவன் வாதிட்டான். 

கோட்சே காந்தியைக் கொன்றது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் காந்தியைக் கொன்றதற்கு அவன் கூறிய காரணங்கள் தவறா?

காந்தி தனது அமைதிக் கொள்கைக்கு புத்தர், இயேசு என்ற இருவரை ஆதர்ஷமாகக் கொண்டிருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த மூன்று பேர்களும் இயற்கைக்கு மாறான வகையில்  மரணம் அடைந்தார்கள். குண்டாவை மறுக்க மனமின்றி அவன் கொடுத்த கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் புத்தர் மரணித்தார். ஆட்சியாளர்கள் இயேசுவைப் புரிந்து கொள்ளாததால் அவர் மரணத்தை ஏற்றார். காந்தி விஷயத்தில் மேற்சொன்ன இரண்டு காரணங்களும் இருந்தன. இந்தியா பிளவுபடுவதை காந்தி எப்போதும் ஏற்கவில்லை. ஆனால் 1947 ஜூன் மாதத்தில் பிரிவினையை ஏற்றுக் கொண்ட தன் சகாக்களை அவர் முழுமையாக ஆதரித்தார்.

1945 இல் ஜின்னாவிடம் பிரிவினை வேண்டாமென வாதிட்டு, வேண்டி, தோற்றுப் போனார். 1946 இல் நாட்டை மத அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு வந்தது. அப்போதும் காந்தி தனது எதிர்ப்பை காங்கிரஸ் செயற்குழுவிடம் தெரிவித்தார். ஆனால் ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், மௌலானா ஆசாத் போன்றோர் அடங்கிய காங்கிரஸ் தலைமை, தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு பிரிவினையுடன் வந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டது.

“நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். உங்கள் அனுமதியுடன் இங்கிருந்து வெளியேறுகிறேன். உங்கள் மனசாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்” என்று துயரத்துடன் கூறியபடி காந்தி கூட்டத்திலிருந்து வெளியேறினார். அதற்கு முன்பு இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்பட்டபோது தலைவர்கள் அவரை வெளியேற விடாமல் தடுத்து, அவர் கூறியபடியே நடந்து கொள்வதாகச் சொல்லுவார்கள். ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை.

பியாரிலால் அங்கு நடந்ததை விவரமாக பதிவு செய்துள்ளார். “நீங்கள் விரும்புவது என்ன ? பாபுவை (காந்தியை) இன்னமும் இங்கு நிறுத்தி வைக்க என்ன தேவை இருக்கிறது?’ என்று மௌலானா சாஹிப் கேட்டார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் அவர்களுக்கு பாபு தேவைப்படவில்லை. விமானியை தூக்கிப் போட அவர்கள் முடிவெடுத்தனர்.”

1947 மார்ச் மாதத்தில் வைஸ்ராய் மவுன்ட் பேட்டனின் பிரிவினைத் திட்டத்தைக் கேள்விப்பட்டதும் காந்தி திகைத்துப் போனார். தன்னுடைய கருத்தைக் கேட்டு, அதன்படி காங்கிரஸ் பிரிவினையை ஏற்க மறுக்கும் என அவர் நம்பினார். ஆனால் அப்படி நடக்கவில்லை. 1947 மார்ச் முதல் வாரத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பஞ்சாப்பை மத அடிப்படையில் பிரிக்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. பின்னர் மெட்ராஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெ.பி. கிருபளானி அதே கொள்கை வங்காளத்திற்கும் பொருந்தும் என்றார்.

பஞ்சாப்பை மதரீதியில் பிரிக்க வேண்டுமென காங்கிரஸின் தீர்மானத்தைக் கேட்ட காந்தி அதை எதிர்த்து நேருவுக்கும் படேலுக்கும் கடிதம் எழுதினார். ‘விரிவான விவாதத்துக்கு பிறகே அந்தத் தீர்மானம் இயற்றப்பட்டது. அவசரகதியிலோ ஆழ்ந்து சிந்திக்காமல் எதுவும் செய்யவில்லை. இதை உங்களுக்கு விளக்குவது கடினம்’  என்று சொற் சிக்கனத்துடன் மார்ச் 24 ஆம் தேதி சூடான பதில் கடிதம் வந்தது. முன்பெல்லாம் இது போன்ற விஷயத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது – என்று பியாரிலால் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

காந்தி தில்லிக்கு அவசரமாக திரும்பி வந்தார். பிரிவினையைத் தடுக்கும் நோக்குடன் மவுன்ட்பேட்டனை மார்ச் 31 ஆம் தேதி சந்தித்தார். தேசத்தைப் பிரிக்காமல் அதிகாரம் முழுவதையும் ஜின்னாவிடம் கொடுத்துவிடும்படி சொன்னார். நேருவும் படேலும் இதை கடுமையாக எதிர்த்தனர். ‘காந்தியின் சூழ்ச்சிகரமான தந்திரம் இது’ என்று கூறி ஜின்னா அதை புறம் தள்ளினார்.

மவுன்ட்பேட்டன் இந்தியத் தலைவர்கள் – காங்கிரஸ் சார்பில் நேரு, படேல், ஆச்சாரிய கிருபளானி, லீக் சார்பாக ஜின்னா, லியாகத் அலி கான், ஏ.ஆர். நிஸ்தார் மற்றும் சர்தார் பல்தேவ் சிங் –  முன்பு 1947 ஜூன் இரண்டாம் தேதி புதிய பிரிவினைத் திட்டத்தை முன் வைத்தார். தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டவுடன் மவுன்ட்பேட்டன் செய்தியாளர்கள் சந்திப்பைக் கூட்டி,  ‘ஜூலை மூன்றாம் தேதி திட்டம்’ எனப்படும் பிரிவினைத் திட்டத்தை அறிவித்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புத்தருக்கு ஏற்பட்ட அதே தடுமாற்றத்தை காந்தி எதிர்கொண்டார். தன்னுடைய இளம் சகாக்களின் முடிவை அவர் எதிர்த்தாலும் அவர்களை பொதுவெளியில் மறுக்க முடியாமல் ‘சூழ்நிலை’ மீது பழியைப் போட்டார். ‘சில நேரங்களில் கசப்பான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தீமையிலிருந்தும்  சில நேரங்களில் நன்மை வெளிப்படலாம்’ என்று கூறி பிரிவினையை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்களை ஜூன் 1947 இல் அவர் சமாதானம் செய்தார்.

பிரிவினைக்கு வழிவகுத்த ‘சூழ்நிலைகளை’ உருவாக்குவதில் காந்திக்கு இருந்த பங்களிப்பில் இருந்து அவர் முழுவதுமாக நழுவி விட முடியாது. ஆனால் அவர் மட்டுமே அதற்கு காரணமென பொறுப்பாக்க முடியுமா?

 கோட்சே அப்படித்தான் நினைத்தான். ஆனால் தேசம் அப்படி நினைக்கவில்லை. ‘காந்தியின் மறைவுக்குப் பிறகு’ இந்திய அரசியல் நன்றாக இருக்குமென கோட்சே நினைத்தான். ஆனால் அவன் கருதியது தவறு என்று நிரூபணமாகி உள்ளது. இந்திய அரசியல் துடிப்பு உள்ளதாக ஆகிறது. ஆனால் காந்தி இல்லாததால் அல்ல, அவர் நிரந்தரமாக அதில் இருப்பதால்.

  • நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (31.01.2026)  In his last days, a dilemma the Mahatma couldn’t resolve
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார் 
  • கட்டுரையாளர், இந்தியா பவுண்டேஷனின் தலைவர்; பாஜக முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர்.

$$$

Leave a comment