-ஆசிரியர் குழு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -9)

காண்க: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 9
தீபத் தூண் தர்காவுக்கு சொந்தமாம்!
வக்பு வாரியம் வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் சிக்கந்தர் தர்காவுக்கு சொந்தமானது என்று வக்பு வாரிய வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வாதாடினார்.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உட்பட 20 மேல்முறையீட்டு மனுக்களும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக 6 மேல்முறையீடு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் டிச. 16ஆம் தேதி நடைபெற்றது. வக்பு வாரிய வழக்கறிஞர் முபின் வாதிடும்போது, “மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றும் பழக்கம் இருந்ததில்லை. நெல்லித்தோப்பு மற்றும் அது சார்ந்த பாதைகள், அவ்விடத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் தர்கா நிலங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையிடம் தனி நீதிபதி கருத்து கேட்கவில்லை” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடும்போது கூறியது:
“தனி நீதிபதி தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 1862, 1960 ஆண்டுகளில் பிரச்சினை எழுந்தபோது, தீபம் ஏற்ற அனுமதி கொடுக்கவில்லை. தர்கா அருகில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று புதிதாக உத்தரவிட்டு, அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடுவது ஏற்புடையதல்ல. தர்காவுக்குச் சொந்தமான பாதை வழியாக சென்றுதான் தீபம் ஏற்ற முடியும். இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
தனி நீதிபதிக்கு மதம் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை. அவரது உத்தரவால் பொது அமைதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தனி நீதிபதி, தான் எடுத்துக்கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளார். அவருக்கு வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளது” என்றார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடும்போது, “தனி நீதிபதி ஆய்வு செய்த பின்னரே தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். தர்காவில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால்தான் தூண் உள்ளது” என்றார்.
அப்போது நீதிபதிகள், “தூண் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். மலை உச்சிக்குச் செல்ல எத்தனை பாதைகள் உள்ளன. அவற்றில் பயன்பாட்டில் உள்ளவை எத்தனை, அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், அது சர்வே தூண் என்றும், சமணர் கால கல் தூண் என்றும் கூறப்படுகிறது. அரசு, அறநிலையத் துறை, தர்கா, காவல் துறையின் ஆட்சேபங்களை தனி நீதிபதி கருத்தில் கொண்டாரா, 1994 தீர்ப்பில் மலை உச்சியில் உள்ள தூண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா, மாற்று இடத்தைப் பரிசீலிக்கத்தானே கூறப்பட்டுள்ளது? பிறகு தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என கோர முடியுமா?” என்று கேள்வி எழுப்பினர்.
மனுதாரர்கள் தரப்பில், “தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது காவல் துறையின் கடமை. வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.
இதையடுத்து, விசாரணையை டிச. 17-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தலைமைச் செயலர், ஏடிஜிபிக்கு விலக்கு அளிக்க மறுப்பு:
திருப்பரங்குன்றம் தீப வழக்கு உத்தரவை நிறைவேற்றாததால் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, விசாரணையை டிச. 17-க்கு தள்ளி வைத்த தனி நீதிபதி, தாமாக முன்வந்து மத்திய உள்துறைச் செயலரை எதிர் மனுதாரராகச் சேர்த்தும், தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர் நீதிமன்ற அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், “தற்போதைய சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை 17ஆம் தேதி தொடரும்” என்று உத்தரவிட்டனர்.
(ஆதாரம்: இந்து தமிழ் திசை- 17.12.2025)
$$$

நீதிமன்ற உத்தரவை அரசு நிர்வாகம் மீறுவதை ஏற்க முடியாது
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திட்டவட்டம்
மதுரை: ‘‘நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக காட்டுவதை மன்னிக்க முடியாது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கவும் வழிவகுக்கும்’’ என்று திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு டிச. 17-இல் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண் குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராயினர்.
தமிழக அரசு தலைமைச் செயலர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொளி வாயிலாக ஆஜராயினர்.

அப்போது நீதிபதி, ‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் மீறியுள்ளனர், அவமதித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் 144 தடை ஆணை பிறப்பித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும். நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேனா என்று, இரு நீதிபதிகள் அமர்வில் ஆட்சியர், காவல் ஆணையருக்காக ஆஜரான வழக்கறிஞர் ஏன் கூறினார்?’’ என்று தலைமைச் செயலரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தலைமைச் செயலர் பதில் அளிக்கையில், ‘‘எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்ற கருத்து இல்லை. அந்த உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாமல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அவர்களாகவே 144 தடை ஆணை பிறப்பித்தார்களா? அல்லது அறிவுறுத்தல்களின் பேரில் உத்தரவு பிறப்பித்தார்களா என காணொளியில் ஆஜரான தலைமைச் செயலரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தலைமைச் செயலரிடம், திண்டுக்கல் மாவட்டம்- ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி ஒரு சட்டவிரோத தேவாலயக் கட்டுமானத்துக்கு எதிராக வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியதும் சுட்டிக்காட்டப்பட்டது. அங்கு பிரிக்கப்படாத குடும்பச் சொத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாமல் ஒரு தேவாலயம் கட்டப்படுகிறது. அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிச. 18இல் விசாரணைக்கு வருகிறது. ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் காரணமாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சட்டப்படி அந்த தேவாலயத்தின் கட்டுமானம் சட்டவிரோதமானது. அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்தக் கட்டிடத்தை தொடக்கூட அதிகாரிகள் தயங்குவது போலத் தெரிகிறது. சட்டம் ஒழுங்கை வசதியான போலி காரணமாகப் பயன்படுத்துவது தெரிகிறது.
இவற்றைப் பார்த்து நான் சோர்வடைந்து விட்டேன். எத்தனை வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்ற அவமதிப்புக்காக நான் அழைக்க வேண்டும்? இன்றும், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஓர் உரையைப் படித்த தலைமைச் செயலர், நீதித்துறை மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தும் போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதை ஏற்க முடியாது.
ஒரு நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தால், உயர் நீதிமன்றத்தால் அதற்குத் தடை விதிக்கப்படாமலோ அல்லது அது ரத்து செய்யப்படாமலோ இருந்தால், அதற்கு கீழ்ப்படிய வேண்டும். நீதித்துறை உத்தரவைச் செயல்படுத்த முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சட்டம் ஒழுங்கு என்பது நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கான ஒரு காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது. அது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுக்கும். அது அரசியலமைப்பு இயந்திரம் முடங்க வழிவகுக்கும்.
எனவே, இந்த நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தலைமைச் செயலர் பதிலளிக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஜன.9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்கள் அன்றைய தினம் ஆஜராக வேண்டும்.
-இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
- நன்றி: இந்து தமிழ் திசை (18.12.2025)
$$$
2 thoughts on “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 9”