திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்

-ஆசிரியர் குழு, வ.மு.முரளி, துக்ளக் சத்யா, டாக்டர் க.கிருஷ்ணசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்... 

1. அரசின் இழிசெயலைக் கண்டிக்கிறோம்!  

-ஆசிரியர் குழு 

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றமும்
ஏரகமும் நீங்கா இறைவன் கைவே லன்றே
பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொரு நாள் 
சூர்மா தடிந்த சுடரிலைய வேள்வேலே! 

    -இளங்கோவடிகள் 

தெய்வீகம் பொருந்திய திருத்தலங்களில் முக்கியமானதும் முதன்மையானதுமாகியது திருப்பரங்குன்றம். இம்மலையின் மீதுள்ள பழமையான தீபத் துாணில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தீபத்தை ஏற்றும் வழக்கத்தில் இருந்த பண்டைய நடை முறையை இவ்வாண்டு தடை செய்தது திராவிட அரசு. 

மேலும் அறமற்ற துறையாக இயங்கி கொண்டிருக்கும் அறநிலையத் துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது  ‘பொருள் புதிது’ இணைய ஆசிரியர்குழு. 

மதுரை உயர்நீதிமன்றம் தெளிவாக அனுமதி வழங்கியிருந்தும், CISF பாதுகாப்பு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தும், அரசு மேல்முறையீடு செய்து 144 தடையை விதித்து, ஆஸ்தீக அன்பர்களும், பொதுமக்களும் மலை உச்சிக்கு செல்ல முடியாத வகையில் பாதைகளை தடுப்பிட்டு பூட்டியும், திட்டமிட்டு நீதிமன்ற உத்தரவை செயலிழக்கவும் நீர்த்துப்போகச் செய்யவும் செய்த செயல் வருத்தத்துக்குரியது. 

இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்துவரும் சைவ மரபையும், பண்பாட்டையும் புறக்கணிக்கும் இந்த நடவடிக்கை இந்து மத சுதந்திரத்தை மீறும் செயல் மட்டுமல்ல; நீதிமன்றத்தின் கௌரவத்தையும் மாநிலத்தின் மத சமத்துவ நெறியையும் முற்றிலும் அவமதிக்கும் ஆபத்தான தலையீடு. 

  • உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமலாக்காமல் தடுத்தது — நடைமுறைக் களங்கம், சட்ட அடக்குமுறை.
  • சைவ வழிபாட்டு மரபுகளை நிர்வாகத் தடைகளால் ஒடுக்க முற்பட்டது — பண்பாட்டை அவமதித்தல்.
  • பாதுகாப்பு காரணம் என்ற பெயரில் பக்தர்களின் அடிப்படை மத உரிமையை மறுத்தது — அரசியல் தலையீடு.
  • கோயில் நிர்வாகத்தையும் அறநிலையத் துறையையும் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பயன்படுத்தியது – அமைப்பைத் தவறாகச் செயல்படுத்துதல்.

கீழ்க்கண்ட செயல்களுக்கு முன்நிற்பான் முருகன்: 

1. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் வழிபாட்டை அனுமதித்தல்.

2. ஆஸ்தீக அன்பர்கள் மலை உச்சிக்கு வழக்கமாகச் செல்லும் உரிமையை உறுதி செய்தல்.

3. நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை.

4. இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள் மீது அரசின் தலையீடுகள் நடைபெறாதபடி சட்டப்படி நடவடிக்கை.

சைவ மரபைத் தடுக்க முயன்ற அரசின் செயலையும், இந்து மக்களுக்காக செயல்படாமல் அரசுக்கு அஞ்சி நின்ற அறநிலையத் துறையின் இணக்கத்தையும் கண்டிக்கிறோம்.

நடுநிலை இந்துக்கள், வாய்வாடகை ஆன்மிக விற்பனர்கள், தனித்தமிழ் தற்குறிகள், சுயநலவாதியான அரசியல்வாதிகளே இவ்விஷயத்தில் கள்ள மௌனம் சாதிக்கும் உங்களும் சேர்ந்து தான் இக்கண்டனம் என்பதை மறவாதீர்கள். 

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் 
முருகா என்று ஓதுவார் முன். 

     -அபியுக்தர் வாக்கு 

வெற்றி வேல்! வீர வேல்! 

$$$

2. அறம் கூற்றாகும்!

-வ.மு.முரளி

1.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, அந்த ஊரில் சிறுபான்மையாக வாழும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு நீதிமன்றம் வந்தது. மலையுச்சியில் முறைப்படி தீபமேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்து அறநிலையத்துறை அதைச் செயற்படுத்த மறுத்து மேல்முறையீட்டுக்கு முயன்றது. எனவே மத்திய பாதுகாப்புப் படை உதவியுடன் மனுதாரர்கள் தீபமேற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நேற்று மாலை உத்தரவிட்டது. அதனையும் மாநில அரசு மதிக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு மாவட்ட ஆட்சியர் 144 தடையுத்தரவு பிறப்பித்து, சட்டச் சிக்கலை உருவாக்கினார். இது நீதிமன்ற அவமதிப்பு. அதைப் பற்றி திராவிட மாடல் அரசு கவலைப்படப் போவதில்லை. இறுதியில் இந்துக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது.

$

2. திண்டுக்கல் மாவட்டம், பெருமாள் கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு மண்டு கருப்பண்ணசாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அந்த ஊரில் பெரும்பான்மையாக வாழும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. உயர் நீதிமன்றம் இந்துக்களின் வழிபாட்டு உரிமையைக் காக்கும் விதமாக, காவல்துறை செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அதை மதிக்காததுடன், இந்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்தது. அப்போது சிஆர்பிஎப் போலீஸ் உதவியுடன் தீபமேற்ற வேண்டும் என்று ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. அதையும் அரசு நிறைவேற்றவில்லை; தவிர மேற்படி கிராமத்தில் 144 தடையுத்தரவு பிறப்பித்து, கார்த்திகை தீபத்தை தடை செய்தது. இங்கும் இந்துக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது.

$

இருவேறு இடங்கள்… இரண்டிலும் 144 தடையுத்தரவு மூலமாக உயர்நீதிமன்ற உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

இரு இடங்களிலும் திமுக அரசும் காவல்துறையும் அராஜகமாகவே செயல்பட்டனர்.

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியரை திருப்திப்படுத்தவும், பெருமாள் கோவில்பட்டியில் கிறிஸ்தவர்களை திருப்திப்படுத்தவும், இந்துக்களின் வழிபாட்டு உரிமை திமுக அரசால் மிதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நிகழ்வுகளிலும் நீதியை நிலைநாட்ட முயன்ற உயர்நீதிமன்றம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் வருகின்றன. திமுக அரசு திருந்துவதாகத் தெரியவில்லை.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் ஓட்டு இருந்தால் போதும் என்று திமுக உறுதியாக இருக்கிறது. இந்துக்கள் சுய உணர்வு பெறாத வரை இதுபோன்ற நிலை தொடரும். இந்துக்களுக்கு எதிராக இந்து அறநிலையத் துறையே வழக்காடும்.

விழிப்புணர்வு அற்ற சமுதாயம் அவமானம் அடைவது வியப்பில்லை. ஆனால், நீதியை நிலைநாட்ட முயன்ற உயர்நீதிமன்றமும் அவமானப்படுவதுதான் புதிய வரலாறு.

ஆனால் தெய்வம் நின்று கொல்லும்.

இதே மதுரையில் தான், ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற நியதி நிரூபிக்கப்பட்டது. இதை அகந்தையுடன் ஆடும் அரசியல் வாதிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

$$$

3. தொடர்கதையில் ஓர் அத்தியாயம்

-துக்ளக் சத்யா

தீபத்தூணில் கார்த்திகை விளக்கேற்ற அனுமதித்து, மதுரை கிளை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகளும் ஏற்றுள்ளனர் (டிச,. 4). இது தொடர்பாக தமிழக அரசு செய்த மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னர் பின்பற்றப்பட்டு வந்த இம்முறையை மீண்டும் பின்பற்ற ஹிந்துக்கள் சிலர் அனுமதி கேட்ட வழக்கில், அது தொடர்பான ஆவணங்களை சரி பார்த்த பிறகே அதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி அனுமதி வழங்கினார்.

இப்படி ஒரு வழக்கே போடப்படாமல் இருந்தால் பிரச்சினை இல்லை. அல்லது நீதிபதி அதற்கு அனுமதி மறுத்திருந்தாலும், அரசைக் குறை கூறும் அவசியம் ஏற்பட்டிருக்காது.

ஆனால், ஹிந்துக்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை, ஹிந்து நம்பிக்கைகளைக் காக்க வேண்டிய ஹிந்து சமய அறநிலையத் துறை ஏனோ விரும்பவில்லை.

சிறுபான்மையினர் தரப்பில் யாரும் ஆட்சேபிக்காத இந்தத் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத் துறை தானாகவே மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பிறகும் தீர்ப்பை ஏற்கவில்லை.

இது முற்றிலும் ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். இதை சிறுபான்மையினர் கருத்தோடு சேர்த்து அரசு குழப்பியிருக்கத் தேவையில்லை.

தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதித்தால் மத நல்லிணக்கம் கெடும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது விந்தையான வாதம். உண்மையில், தீர்ப்பை செயல்பட விடாமல் தடுப்பதே அத்தகைய பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.

இப்படியெல்லாம் ஹிந்து உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டால் சிறுபான்மையின வாக்குகள் குவியும் என்பது அரசின் அரசியல் கணக்கு. அது சரியா தவறா என்பதை தேர்தல்தான் நிரூபிக்க வேண்டும்.

இவ்விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்புக்குப் பொருந்துபவை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் பேசி வருகின்றனர்.

ஹிந்து உணர்வுகளை அரசு மதித்தால் பாஜகவுக்கு பணிந்து விட்டதாக ஆகாது. ஹிந்துக்கள் வேறு, பாஜக வேறு என்ற புரிதல் அரசுக்கு இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

அரசின் ஹிந்து எதிர்ப்புப் போக்கு புதியதல்ல. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பதிலிருந்து சனாதன எதிர்ப்புப் பேச்சுக்கள் வரை, அது ஒரு தொடர்கதையாகவே நீடிக்கிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் அந்தக் தொடர்கதையில் ஓர்அத்தியாயம். அவ்வளவுதான்.

$$$

4. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏற்புடையதல்ல!

-டாக்டர் க.கிருஷ்ணசாமி

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றானது திருப்பரங்குன்றம். அதன் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றிட அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டார். வழக்கு தொடர்ந்த ராம. ரவிகுமார் உட்பட 10 பேர் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாதகமான தீர்ப்பு என்றே கருத வேண்டும். எனவே, இதில் கோயிலுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியவுடன், அரசுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தபட்சத்தில், உடனடியாக அன்றே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். அதை விடுத்து கோயில் நிர்வாக அதிகாரியை வைத்து முறையீடு செய்ததும், நீதிமன்ற விசாரணையின்போது அவர் பின்வாங்கியதும் புதிராக உள்ளது.

மேலும் மேல்முறையீடு செய்வதென்றால் அங்குள்ள தர்கா நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்காத நிலையில், நீதிமன்ற உத்தரவை ஏற்று தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால் பிரச்சினை பெரிதாக எதுவும் எழுந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், வழக்கம் போல மோட்சத் தூணில் மட்டும் ஏற்றியது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும்.

தமிழ் கடவுள்களில் முதல் கடவுளாகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி, 144 தடை உத்தரவு விதித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றத் தடை செய்து பிரச்சினையைப் பெரிதாக்கியது ஏற்புடையதல்ல!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சினையில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளித்திருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும், நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் விமர்சிப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. ஆனால் தற்போது அவரை சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்குரியது.

  • டாக்டர் திரு. க. கிருஷ்ணசாமி,  புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர்.  (இது அவரது முகநூல் பதிவு).

$$$

5. இந்துக்கள் வழிபட உரிமை இல்லையா ?

-கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

திருப்பரங்குன்றம் மலையில்  திருக்கார்த்திகைதீபம் ஏற்றுவதில் ஏற்பட்டிருக்கும் இன்றைய தாவாக்களில் சென்னை உச்சநீதிமன்றத்தின் சார்பாக மதுரைக்கான கிளை நீதிபதி அவர்கள் இந்துக்கள் அங்கு அமைதியுடன் சென்று தீபம் ஏற்றுவதற்கு அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், அது இந்து பெரும்பான்மை மக்களின் மரபுரிமை என்றும் குறிப்பிட்டு ஆணையிட்டுள்ளார். அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர், கழுவிய நீரில் நழுவிய மீனாக பதில் சொல்லியுள்ளார்.

இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறுபான்மை ஓட்டுகளைப் பெறுவதற்காக இந்துப் பெரும்பான்மையினரின் நெடுங்கால மண் சார்ந்த உரிமைகளின் மீது தொடர்ந்து கை வைத்து வருகிறது. அல்லது அவர்களது நம்பிக்கையை மௌனமாக்குகிறது.

ஒரு பக்கம் முதல்வரின் மனைவி கோயில் கோயிலாகச் சென்று கணவரின் ஆயுளுக்கு வேண்டிக்கொள்கிறார். மறுபக்கம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் திருநீறு குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொண்டு கோயில் நிர்வாகத்தில் ஊழலையும் செய்து கொண்டு இரட்டை வேடம் போடுகிறார். இவர்களுடைய பகுத்தறிவு என்பது எல்லாத் துறையிலும் சமூக ஊழல் என்பதாகத்தான் இருக்கிறது.  ‘கிடைத்த வரை ஆட்டையைப் போடு’ என்பதுதான் இவர்களின் லட்சியம். அத்தனை மாவட்ட திமுக செயலாளர்கள் எல்லோரும் இன்று மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்.

காலகாலமான இந்துக்களின் நம்பிக்கைகளும் அவர்களுடைய வாழ்க்கையிலும் இந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்று இன்றைக்கு சொல்லிக் கொள்கிற இந்தக் குடும்ப அரசியல் சுயநலக்காரர்கள் அண்ணா, பெரியார் போன்றவர்களையெல்லாம் அதற்கு பதிலியாக்கி மிக மோசமான முறையில் தங்களுடைய வருமானத்தை அதாவது வருகின்ற தேர்தலில் பணம் கொடுத்து மக்கள் ஓட்டைப் பெறுவதற்காக பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் ஊதுகிற சங்கை ஊதித்தான் தீர்க்க வேண்டி இருக்கிறது..

எல்லா காலத்திலும் இங்கு வழிபாடுகள் அது சிறு தெய்வமாக இருந்தாலும் சரி, பெரும் தெய்வமாக இருந்தாலும் சரி மன்னர்களாக இருந்தாலும் சரி, இங்கே இருக்கக் கூடிய கலாச்சார பண்பாடு எல்லாமே இந்து தர்மத்தை சார்ந்ததாகத் தான் இன்று வரை இருந்து வருகிறது. அதற்கு ஓர் அடிப்படை இல்லை என்றால், வலிமைமிக்க பிரதமர் மோடி மாதிரி ஒரு மகா சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இந்தியாவில் உருவாகவே முடியாது.

நேரு முன்வைத்த சோஷலிச ஏமாற்று வேலைகள் எல்லாமே அந்நியக் கடனில் தான் முடிந்தது. சிறுபான்மையினரின் ஆன்மிகத்தையோ இறைமையையோ அவர்களுடைய வழிபாடுகளையோ மதிக்கும் திராவிட முன்னேற்ற கழகம், இந்து பெரும்பான்மை மக்களின் வழிபாடுகளை எள்ளி நகையாடுவது என்பது எவ்வளவு மோசமான வக்கிரம்!

உலக நாடுகள் முழுக்க அங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் சகிப்புத்தன்மை என்பது தங்கள் சமூகத்திற்குள் வந்திருக்கக் கூடிய பிற மக்களை மதிப்பதும் பிறகு தங்களின் இறையாண்மையை இழக்காது இருப்பது தான் இன்றைக்கு தேசியம் என்று கருதப்படுகிறது. நான் சொல்கிறேன் இந்து மக்கள் என்று இந்தியாவில் யாரும் இல்லை என்றால், இது என்ன வகையான நாடாக இருக்கும்? இந்த பகுத்தறிவு முட்டாள்களுக்கு வேண்டி நமது மரபுகளை அதற்கான அரசியல் அதிகாரம் எதையும் பலியிட முடியாது.

நாடுகள் என்று இருப்பது தெரியாதா? ஒரே ஒரு இந்து நாடு இந்தியா இருக்கிறது! இந்துக்களை பலியிடுவது எந்த வகையில் நியாயம். அவர்கள் ஆண்டார்கள் இவர்கள் ஆண்டார்கள் என்று சொல்வதெல்லாம் போக இந்துக்களைச் சுரண்டும் எந்த ஒரு புறவயத்தாரும் அவரகளுடைய மத வழிபாட்டு உரிமையை வைத்து இந்து மக்களை பதவி இறக்கவோ அடிமைப்படுத்தவும் முடியாது. இதற்கெல்லாம் தங்கள் குடும்ப அதிகாரத்தை வைத்துக் கொண்டு நடித்து இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கும் திமுகவை வீழ்த்தாமல் இந்தியாவிற்கு விமோசனம் கிடையாது.

  • திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முன்னாள் திமுக எம்.பி. தற்போது பாஜகவில் உள்ளார். (இது அவரது முகநூல் பதிவு).

$$$

One thought on “திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்

Leave a comment