சூழல் போராளியான இயற்பியல் விஞ்ஞானி

-வ.மு.முரளி

வந்தனா சிவா

வாழ்க்கைப் பாதையில் இரு கிளைகள் பிரியும் இடம் வரும்போது பலரும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பது இயற்கை. எந்தப் பாதையில் பயணிப்பது? அப்படிப்பட்ட நிலைகளில் ஆழ்மனம் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் ஆழ்மனம் நமது ஆசைகள், லட்சியங்கள், எண்ணங்களின் சங்கமத் திடல். இப்படிப்பட்ட நிலை இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஒருவருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் தேர்ந்தெடுத்த பாதை, சூழியலைக் காக்கும் போராட்டப் பாதை. அவர் தான், உலக அளவில் புகழ்பெற்ற இந்திய சூழலியல் போராளி வந்தனா சிவா.

1952, நவ.5-இல், டேராடூனில் (உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது) பிறந்தார் வந்தனா சிவா. தந்தை வனப் பாதுகாவலர். தாய், விவசாயி. எனவே, இளம் வயதிலேயே, விவசாயம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு வந்தனாவிடம் புகுந்துவிட்ட்து.

நைனிடாலிலுள்ள புனித மேரி பள்ளியிலும், டேராடூனில் ஜீசஸ்- மேரி பள்ளியிலும் ஆரம்பக் கல்வி கற்ற வந்தனா, சண்டிகாரிலுள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டமும் (1972), எம்.எஸ்சி. பட்டமும் (1974) பெற்றார். அதையடுத்து சிறிதுகாலம், மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்தார்.

பிறகு மேற்படிப்புக்காக கனடா சென்றார். அங்கு ஆன்டாரியோவில் உள்ள குல்ப் பலகலைக்கழகத்தில் அறிவியல் தத்துவத்தில் எம்.ஏ. (1977) படித்தார். அப்போது  ‘ஒளியின் கால முறைமை தொடர்பான கருத்துருவில் மாற்றம்’ குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, மேற்கு ஆன்டாரியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் தத்துவம் பிரிவில் பிஎச்.டி. (1978) பட்டம் பெற்றார். அப்போது பெல்ஸ் தேற்ற அடிப்படையில், ‘குவான்டம் தியரியும் மறைந்துள்ள மாறிகளும்’ என்ற தலைப்பில் ஆய்வேட்டை சமர்ப்பித்தார்.

கனடாவில் பயிலும்போது அவருக்கு சுற்றுச்சூழல் தொடர்பான அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அதையடுத்து, அவரது கவனம் இயற்பியலிலிருந்து சுற்றுச்சூழல் நோக்கி திரும்பியது. நாடு திரும்பிய வந்தனா, இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்திலும் (ஐஐஎஸ்), பெங்களூரு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்திலும் (ஐஐஎம்), அறிவியல், தொழில்நுட்பம், சூழியல் துறைகளிடையிலான பல்துறை ஒருங்கிணைப்புப் படிப்புகளைப் பயின்றார்.

தனது இளமைப்பருவத்தில், உத்தரகண்ட் (அப்போதைய உ.பி.) மாநிலத்தில் மரங்களைப் பாதுகாக்கப் போராடிய சிப்கோ இயக்கத்தின் (CHIPKO ANDOLAN) தொடர்பு வந்தனாவுக்கு ஏற்பட்டது. மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து, மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபடுவது அந்த இயக்கத்தின் வழிமுறை. அதன்வாயிலாக, சூழியல் போராளியாக அவர் உருவெடுத்தார். காந்திய அடிப்படையில் தனது சுற்றுச்சூழல் சிந்தனைகளை அவர் வடிவமைத்துக் கொண்டார்.

1982-இல் வந்தனா, அறிவியல், தொழில்நுட்பம், சூழியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை (Research Foundation for Science, Technology and Ecology-RFSTE) டேராடூனில் நிறுவினார். தற்போது உலகம் சந்தித்துவரும் சுற்றுச்சூழல், சமூகப் பிரச்னைகள் குறித்து முழுமையான, சுதந்திரமான ஆய்வுக்கு அந்த அறக்கட்டளை பல முயற்சிகளை முன்னெடுத்தது. இப்பணியில் உள்ளூர் சமுதாயங்கள், சமூக இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டது. அதன் தீவிரமான பணிகளின்போது, பசுமைப் புரட்சியின் அறியப்படாத மறுபுறத்தை, அதன் கோர முகத்தை அவர் உணர்ந்தார். அதுகுறித்து அவர் தீவிரமாக பிரசாரம் செய்தார்.

பசுமைப்புரட்சி என்றாலே, உணவில் தன்னிறைவுக்கான முற்போக்கான திட்டம் என்று கருதப்பட்டு வந்த சூழலில், வேளாண்மையில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்கள்,  பூச்சிக்கொல்லிகள், வீரிய விதைகள்,  நவீனக் கருவிகளின் பயன்பாட்டை அவர் கேள்விக்கு உள்படுத்தினார். இயற்கையை அறிவியலால் வெல்ல முடியாது; அது குறுகியகாலப் பயன்களைத் தரலாம். ஆனால், இறுதியில் அது தோல்வியையே தழுவும், வேளாண்மையில் செய்யப்படும் எந்தப் புரட்சியும் இயற்கையுடன் இயைந்ததாக இருக்க வேண்டும் என்றார் அவர். அவரது ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ (The Violence of the Green Revolution)  என்ற நூல், நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தது.

2000-இல் மரபணு மாற்றப்பட்ட வித்துக்களால் (genetically modified organisms) வேளாண்மையில் இரண்டாவது பசுமைப்புரட்சி துவங்குவதாக ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னணியில் மான்சாட்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் இருந்தன. அதன் அபாயத்தை ஆரம்ப காலத்திலேயே உணர்ந்த வந்தனா சிவா, அதனை முழுமூச்சாக எதிர்த்தார். மரபணுப் பொறியியலும், அது உருவாக்கிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களும் ஏற்படுத்தும் சூழலியல் பாதிப்புகள்,  நெறிமுறை மீறல்கள், ஆரோக்கியச் சீர்கேடுகள் குறித்து அவர் தெளிவான விளக்கங்களை முன்வைத்தார். பி.டி கத்தரிக்கு எதிரான அவரது போராட்டங்கள் முக்கியமானவை.

குறிப்பாக, பன்னாட்டு விதை நிறுவனங்களின் மரபணு மாற்றப்பட்ட பயிரினங்களின் விதைகளை (GM seeds) பயன்படுத்துவதால், அவற்றிலிருது நாம் தொடர் சாகுபடிக்கு விதைகளைப் பெற முடியாமல், வருங்காலம் முழுவதும் அவர்களையே சார்ந்திருக்க வேண்டும். அதன் அபாயத்தை எச்சரித்த வந்தனா, உள்நாட்டுப் பயிரினங்களின் அழிவுக்கு அவை காரணமாகிவிடும் என்றார். தவிர, மரபணு மாற்றப்பட்ட பயிரினத்தின் வீரிய வித்துகள் ஆரம்பத்தில் நல்ல அறுவடையை அளித்தாலும், பிற்பாடு அதிக உரம், நீர்த்தேவை, பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டு வலைக்குள் நம்மைத் தள்ளிவிடும் என்றார் அவர். விதை சுதந்திரம் என்ற அவரது கருத்தாக்கம் முக்கியமானது.

பன்னாட்டு விதை நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, வந்தனா  சிவா, 1991-இல் ‘நவதான்யா’ என்ற அமைப்பை நிறுவினார். பன்மைத்தன்மை வாய்ந்த பாரம்பரிய பயிரின வித்துகளை சேகரித்து பாதுகாப்பதை லட்சியமாக்க் கொண்ட அநத அமைப்பு, 20 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகளைத் தொடர்பு கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அதன்பலனாக, நாடு முழுவதும், 16 மாநிலங்களில் விதை வங்கிகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் 3,000 பாரம்பரிய அரிசி ரகங்கள் உள்பட பல பயிரினங்களின் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும், இத்துறையில் இளம் தலைமுறையை உருவாக்க, டூன் பள்ளத்தாக்கில், பீஜ வித்யாபீடம் (விதைக் கல்லூரி) என்ற நீடித்த வாழ்வுக்கான சர்வதேசக் கல்லூரியை 2001-இல் வந்தனா சிவா துவக்கினார். பிரிட்டனில் உள்ள ஷூ மாக்கர் கல்லூரியுடன் இணைந்து இக்கல்வி நிறுவனம் மாற்றுக்கல்வியை அளிக்கிறது.

வந்தனா சிவாவின் தொடர் போராட்டங்கள் அவருக்கு உலக அளவில் பெரும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளன. உலக மயமாக்கலுக்கு எதிரான கூட்டமைப்பிலும் அவர் அங்கம் வகிக்கிறார். உலக வர்த்தகக் கழகம் (WTO)  1994-ல் உலக மயமாக்கலுக்கு உலக நாடுகளை நிர்பந்தித்தபோது, அதை கடுமையாக எதிரத்தார் வந்தனா. வர்த்தக நோக்குள்ள அறிவுசார் சொத்துரிமைக்கு (TRIPS) எதிராகவும் அவர் போராடினார்.  ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகவும், உலக மயமாக்கலுக்கு எதிராகவும் நடைபெற்ற இயக்கங்களில் அவர் உதவி செய்திருக்கிறார்.

அரசு சாரா அமைப்பாக இயங்கினாலும், பல அரசு அமைப்புகள் அவரது சேவையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. ம.பி, பிகார், கேரளா, உத்தரகண்ட் மாநில அரசுகள் இயற்கை வேளண்மையை மேம்படுத்த வந்தனாவின் ஆலோசனைகளைப் பெற்றுள்ளன. மத்திய தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக 2013- 2015 காலகட்டத்தில் அவர் இருந்தார். திட்டக்குழுவிலும் அவரது நிபுணத்துவம் பயன்பட்டுள்ளது.

தவிர, நமது நாட்டின் பாரம்பரியச் செல்வங்களான வேம்பு, பாசுமதி அரிசி, கோதுமை ரகங்களுக்கு அமெரிக்க பெரு நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை பெற்று மோசடி செய்ய முயன்றபோது அதை எதிர்த்துப் போராடி வென்றார். வேம்புக்காக அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக அவர் நடத்திய பத்தாண்டு கால வழக்கு யுத்தம் 2005-இல் வெற்றி பெற்றது. தங்க அரிசி என்ற மரபணு மாற்ரப் பயிருக்கு எதிராகவும் அவர் போராடுகிறார்.

பல உலக அமைப்புகளிலும் அவர் அங்கம் வகிக்கிறார். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அவர் வருகைப் பேராசிரியராக உள்ளார். பூடானை முழுமையான இயற்கை விவசாய நாடாக்கவும் அவர் உழைத்து வருகிறார். காத்மண்டுவில் உள்ள சர்வதேச மலைப்பகுதி மேம்பாட்டு மையம் (ICIMOD) அவரால் நிறுவப்பட்டது.

வனம்,  பல்லுயிரியம், வேளாண்மை போன்ற இயற்கை வளங்கள் மீதான மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போராடியதற்காக மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் வாழ்வாதார உரிமை விருதை (Right to Livelihood) வந்தனா சிவா 1993-ஆம் ஆண்டு பெற்றார்.

Earth Democracy, Stolen Harvest, Soil Not Oil, Monocultures of the Mind, Making Peace with the Earth, Biopiracy: The Plunder of Nature and Knowledge உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட நூல்களை வந்தனா சிவா எழுதியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘டைம்’ பத்திரிகை,  2003-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் நாயகியாக வந்தனாவை சிறப்பித்தது.  ‘ஆசியன் வீக்’ பத்திரிகை ஆசியாவின் 5 வலிமையான பிரசாரகர்களில் ஒருவர் என்று அவரைப் பாராட்டியுள்ளது. உலகின் 7 சக்தி வாய்ந்த பெண்களில் வந்தனா ஒருவர் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது.

இவ்வாறாக, இயற்பியல் விஞ்ஞானியாகி இருக்க வேண்டிய வந்தனா சிவா, தனது உள்ளுணர்வால் உந்தப்பட்டு, உலக நாடுகளுக்கு வழிகாட்டும் சூழியல் போராளியாக உருவெடுத்திருக்கிறார். அவதூறுகளுக்கு அஞ்சாமல், தனது கடமையை ஆற்றும் பணியில் அவரது பயணம் தொடர்கிறது.

$$$

Leave a comment