அவரது ஆன்மிக வீடு

-ராம் மாதவ்

திபெத்திய புத்தமதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இன்று 90வது பிறந்த நாள். பாரதத்தை நேசிக்கும் அவரை இந்நாளில் வணங்கி மகிழ்வோம்!

இந்த வாரம் மகான் தலாய் லாமாவுக்கு 90 வயதாகப் போகிறது. (6 ஜூலை) அவரது 23வது வயதில் இந்தியாவுக்கு வந்தார். ஹிமாச்சல மாநிலத்தில் உள்ள தர்மசாலா என்ற இடத்தில் கடந்த 66 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் வந்த சில நாட்களிலேயே அங்கு திபெத்திய மத்திய நிர்வாகம் நிறுவப்பட்டது. அது இந்தியாவிலுள்ள திபெத்தியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து ஒழுங்குப்படுத்தி வருகிறது.

விதிவசத்தால், 1959 மார்ச் 31 தேதி, தலாய் லாமா தன் குழுவினருடன் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள கின்செமனே என்ற கிராமத்துக்கு வந்தார். அந்த கிராமம் வடகிழக்கு எல்லை பகுதியில் தவாங்குக்கு அருகே உள்ளது. 1987இல் அது அருணாச்சல பிரதேச மாநிலமானது.

புனிதர் தலாய் லாமா இந்தியா வரும்போது மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். திபெத்திய தலைநகரான லாசாவிலிருந்து இரண்டு வாரங்கள் தொடர்ந்து பயணப்பட்டு இருந்ததால் உடல் ரீதியாக பலவீனமாக இருந்தார். அவருடன் வந்த எண்பது பேரையும் இந்திய எல்லையில் ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். லாசாவில் முன்பு பணியிலிருந்து இந்திய அயலகத் துறை அதிகாரியான பி.என். மேனன் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் செய்தியுடன் அந்த வரவேற்புக் குழுவில் இருந்தார்.

‘நானும் என் சகாக்களும் உங்களை வரவேற்கிறோம். உங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது’ என்று இந்திய மண்ணில் தங்க வந்த வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நேரு தன் கடிதத்தில் எழுதியிருந்தார். ‘ இந்திய மக்கள் உங்களை மிகவும் மதிக்கிறார்கள். அவர்களது மரபுப்படி, சந்தேகத்திற்கு இடமின்றி, உங்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்’  என்று அந்த கடிதத்தில் நேரு குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் தலாய் லாமாவை வரவேற்றதில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று சீனாவுக்கு செய்தி சொல்லி இருந்தார் நேரு.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2500 ஆண்டு புத்த ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள 1956 நவம்பரில், புத்தகயாவுக்கு தலாய் லாமா வந்தார். அதுதான் அவர் முதல்முறையாக இந்தியாவுக்கு வந்தது. அப்போது நேரு இவ்வளவு தாராள மனதுடன் நடந்து கொள்ளவில்லை. சீன அதிபராக இருந்த அவரது நண்பர் சூயென் லாய் இந்தியாவிலிருந்து தலாய் லாமா திபெத்துக்கு திரும்பி வர மாட்டார் என்று சொன்னதாகத் தெரிகிறது. அதனால் திபெத்திய தலைவரிடம்,  ‘இந்தியா உங்களை ஆதரிக்காது. நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்பி போக வேண்டும். சீன அரசுடன் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நேரு உறுதியாகக் கூறிவிட்டார்.

1959 இல் தலாய் லாமா இந்தியாவில் நுழைய நேரு அனுமதித்தது மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான திபெத்தியர்களுக்கும் தஞ்சமளித்தார். ஆயிரக்கணக்கில் திபெத்தியர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலா, டேராடூன், டார்ஜிலிங், மேற்கு வங்கத்தில் உள்ள களிம்போங், சத்தீஸ்கரில் உள்ள மெயின்பட் , கர்நாடகத்தில் உள்ள பைலகுப்பே, முண்டக்காரு என நாடு முழுவதும் பரவலாக அவர்களுக்கு குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.

இந்தியாவில் திபெத்திய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அது ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது குறையத் தொடங்கியது. திபெத்திய இளைஞர்கள் இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு நகரத் தொடங்கினர். 1922 இல் திபெத்திய மத்திய நிர்வாகத்தின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 66 ஆயிரம் திபெத்தியர்கள் இருக்கிறார்கள்.

இந்திய அரசுக்கு தலாய் லாமா கொடுக்க உறுதியின்படி, அவரும் அவரைச் சார்ந்தவர்களும் இந்தியாவில் அமைதியாகவும் கௌரவமாகவும் வாழ்ந்து வருகின்றனர் . இந்திய மண்ணில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் திபெத்தியர்கள் ஈடுபடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

மகாயான  மரபைப் பின்பற்றும் திபெத்திய புத்த மதத்தின் புகழ் மிக்க தலைவராக தலாய் லாமா இருப்பதால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலிருந்தும் அவருக்கு சீடர்களும் ஆதரவாளர்களும் அதிகரித்தனர். இந்திய மக்கள் மட்டுமன்றி அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகளும் ஆன்மிக குருவான தலாய் லாமாவை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தின.

தன் நாட்டில் இருந்து வெளியேறி பல பத்தாண்டுகள் இந்தியாவில் வாழ்ந்ததால் தலாய் லாமாவுக்கு இந்த மண்ணுடனும் மக்களுடனும் நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டு விட்டது. அவருடன் பழக எனக்கு பல சந்தர்ப்பங்கள்  கிடைத்தன. அப்போதெல்லாம் அவரது அறிவாற்றலும் அவர் தன்னுடைய ஆன்மிக பூமியாக கருதும் இந்தியாவுடன் அவருக்குள்ள உணர்வுபூர்வமான பிணைப்பும் வெளிப்பட்டுள்ளன.

அவர் சிறந்த ஞானி மாத்திரமல்ல,  நகைச்சுவை உணர்வும் கொண்டவர். ஒரு முறை, என்னுடன் பேசும் போது, ‘நான் திபெத்தியனாக இருக்கலாம். ஆனால் என்னுள் ஓடுவது இந்திய ரத்தம் தான்’ என்றார். அடுத்து, ‘அறுபது ஆண்டு காலம் இந்த நாட்டு அரிசியையும் பருப்பையும் சாப்பிட்டதால் அதிலிருந்து உருவானது எனது ரத்தம்’ என்றார்.

ஒரு ஆழமான உரையாடலின் போது மொரார்ஜி தேசாய் உடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார் . முன்னாள் பிரதமர் தலாய் லாமாவிடம் இந்து மதமும் புத்த மதமும் ஒரே மரத்தின் இரு கிளைகள் என குறிப்பிட்டாராம். “ஆனால் நான் பணிவுடன் மொரார்ஜி தேசாயின் கூற்றைத் திருத்தினேன். நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் மரம், நாங்கள் கிளை.” இதை அவர் என்னிடம் சொன்னார்.

அவரது மனிதநேயம், இந்திய ஆன்மிகத்தின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் அவரது ஆளுமையின் அடையாளமாக இருக்கின்றன.

 “என்னை இந்தியாவின் மகன் என்றுதான் அடையாளப்படுத்த முடியும். என் உடம்பு இந்திய அரிசியாலும் பருப்புகளாலும் வளர்க்கப்பட்டது. என் மனமோ சிறப்பான இந்திய தத்துவ மரபால் செழிப்புற்றது. இந்தியா மனித குலத்துக்கு வழங்கிய இரண்டு மகத்தான கொடைகளான அஹிம்சை மற்றும் சமய பன்முகத்தன்மையின் தூதுவனாக நான் இருக்கிறேன்” என்று ‘குரலற்றவர்களின் குரல்’ என்ற நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலாய் லாமாவுக்கும் சீன அரசுக்குமான பேச்சு வார்த்தை 1979ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. சீன அதிபர் டெங் ஜிப்பியாங் தலாய் லாமாவின் சகோதரரான கைலோ தோன்டங் – ஐ பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ‘சுதந்திரத்தைத் தவிர வேறு எதைப் பற்றி வேண்டுமானாலும் பேச தயார்’ என்ற டெங்கின் செய்தியுடன் அவர் திரும்பி வந்தார்.

இரு தரப்புக்கும் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் பல ஆண்டுகாலம் நடந்தன. 1988இல் ஸ்ட்ரோஸ்பேர்க்  (பிரான்ஸ்) இல் நடந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தலாய் லாமா, ‘சீன குடியரசின் அங்கமாக இருப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் முழுமையான தன்னாட்சிக்கு உத்தரவாதம் வேண்டும்’ என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

அதுதான் இன்று வரை திபெத்தியர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. இரு தரப்புகள் இடையே பேச்சுவார்த்தை நடந்த போதிலும் ஒருவர் மற்றவரை நம்பாத நிலை அவர்களிடையே நிலவுவதால், எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கிறது.

திபெத்தின் அரசியல் விஷயம் தலாய் லாமாவுக்கும் சீன தலைமைக்கும் இடையே  (இருதரப்பால்) தீர்க்கப்பட வேண்டியது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

வயதால் தலாய் லாமா மூப்படைந்து வருவதால் அவருக்கு அடுத்து யார் என்ற கேள்வி விவாதமாகி உள்ளது. இது தொடர்பாக அவர் அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2011 செப்டம்பரில் நடந்த திபெத்திய சமயத் தலைவர்கள் மாநாட்டில் எடுத்த முடிவின்படி திபெத்திய மரபு பின்பற்றப்படும். அத்துடன் எதிர்கால தலாய்லாமாவைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு கோடன் போட்ராங் அறக்கட்டளைக்கு (தலாய்லாமாவின் அலுவலகம் ) தான் உண்டு – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அரசு அதை ஏற்க மறுத்து தன்னுடைய மேற்பார்வையில் தான் அது நடக்க வேண்டும் என்று கூறியுள்ளது எதிர்பாராத விஷயம் அல்ல.

தலாய் லாமாவின் மறுபிறப்பு விஷயம் சீனாவுக்கும் திபெத்தியர்களுக்கும் இடையே முக்கிய மோதலாக இருக்கும் என்றாலும் ‘புதிய தலாய் லாமா சுதந்திர மண்ணில்தான் பிறப்பார்’ என்று அவருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் தான் மோதலுக்கு உண்மையான காரணம்.

  • நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (05.07. 2025)
  • தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

$$$

Leave a comment