-திருநின்றவூர் ரவிகுமார்
எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவும் ஸ்ரீநகரில் திறந்த வண்டியில் ஊர்வலமாக வந்ததுடன், பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ச்சியுடன் விளையாடிய காட்சியை நாடே கண்டது. இது காங்கிரஸ் ஆட்சியில் கூட நடக்காத விஷயம்.

கடந்த சனிக்கிழமை (ஏப்.6) ராஜஸ்தானில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 370 சட்டப்பிரிவை நீக்கியதனால் என்ன மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சவடாலாகக் கேள்வி எழுப்பினார்.
(அவர் 370 என்று சொல்வதற்கு பதிலாக 371 என்று சொல்லிவிட்டார். அது நாக்கு விழுந்து விட்டது – வார்த்தை தவறிவிட்டது – என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். வடநாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்று 370 என்றால் என்ன, 371 ஏ, பி, சி, டி இப்படி வரிசையாக லிஸ்ட் போட்டு காங்கிரஸ் தலைவருக்கு பாடமே எடுத்துவிட்டது மறுநாள்).
உண்மையிலேயே அவருக்கு விஷயம் தெரியாதா, அல்லது சும்மா திசை திருப்புவதற்காக தடாலடியாகப் பேசினாரா?
370 சட்டப்பிரிவைப் பற்றியும் அதன் தாக்கங்கள் என்ன என்றும், அதை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதைப் பற்றியும் நாம் அவருக்குச் சொல்வோம்.
தேச விடுதலையின்போது அந்த மாநிலத்தில் நிலவிய அசாதாரணச் சூழ்நிலையை மனதில் கொண்டு 370 ஆவது பிரிவு சேர்க்கப்பட்டது. அதற்கு இரண்டு நோக்கங்கள் சொல்லப்பட்டன.
- போரினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை அம்மாநிலம் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு தற்காலிகமான, இடைக்கால ஏற்பாடு.
- மாநிலத்தில் அரசமைப்பு சபை (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை) உருவாகும் வரை ஒரு இடைக்கால ஏற்பாடாக இது இருக்கும்.
ஆனால் நடந்தது என்ன?
‘தற்காலிக’ மற்றும் ‘இடைக்கால’த் தீர்வானது ‘நிரந்தர’, ‘சிறப்பு அந்தஸ்தாக’ மாறியது. இதனால் ஜம்மு-காஷ்மீர் பாரதத்தின் மற்ற பகுதிகளைப் போல ஒன்றிணையாமல் தனித்துவமாக, தேச விரோதமாகச் செயல்பட வழிவகுத்தது.
370 ஷரத்தின் தாக்கம்:
370 ஆவது சட்டப்பிரிவு பிரிவினைவாத உணர்வை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்பட்டது. இதனால் பயங்கரவாதத்தின் பாதிப்பு அங்கு அதிகரித்தது. இதுவரை சுமார் 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தேசியக் கொடிக்குப் பதிலாக அந்த மாநிலத்துக்கென தனிக் கொடி இருந்தது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பிரதமர் என்று அழைக்கப்பட்டார். டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் உயிர்த் தியாகத்தால் ‘ஒரே நாட்டில் இரண்டு கொடி, இரண்டு சபை, இரண்டு பிரதமர்’ என்ற அவலம் நீங்கியது. ஆனாலும், நீக்கப்படாமல் தொடர்ந்த 370 சட்டப் பிரிவினால் தேசத்திற்கு எதிரான பிரிவினைவாதம் வளர்ந்தது.
அதன் சில மோசமான விளைவுகள்…
- நமது நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் அந்த மாநிலத்துக்குப் பொருந்தாது. அவர்கள் (ஜம்மு-காஷ்மீர் சட்டசபை) அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் மட்டுமே அது பொருந்தும்.
- பாரத தேசியக் கொடியை விமர்சிப்பதும் அவமதிப்பதும் அந்த மாநிலத்தில் குற்றம் அல்ல. உச்ச நீதிமன்ற விதிகளும் அங்கு பொருந்தாது என்ற நிலை இருந்தது.
- ஒரு காஷ்மீரிப் பெண் ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே பாரதத்தை (பிற மாநிலங்களை) சார்ந்த யாரையாவது திருமணம் செய்து கொண்டால், அவள் காஷ்மீர் குடியுரிமையை இழக்கிறாள். மேலும் அந்தப் பெண் ஒரு பாகிஸ்தானியரை மணந்தால் அந்த ஆண் ஜம்மு-காஷ்மீர் குடியுரிமை பெறுவார்.
- ஜம்மு-காஷ்மீருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது.
- தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் உரிமையான இட ஒதுக்கீடு சட்டம் ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்தாது.
- ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே இருக்கும் யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது.
- ஜம்மு-காஷ்மீருக்கு நிதி நெருக்கடி, பற்றாக்குறை என்பதே கிடையாது. எல்லாவிதமான செலவுகளையும் பாரத அரசே ஏற்றுக் கொள்ளும்.
- வெளியில் இருந்து யாரும் ஜம்மு காஷ்மீருக்குள் வந்து குடியேற முடியாது.
- ஜம்மு-காஷ்மீரில் வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. எனவே நிறைய இளைஞர்கள் பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்டனர்.
- மாநிலத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மிகக் குறைவாகவும் நிர்வாகத்தில் ஊழல் மிக அதிகமாகவும் இருந்தது.
370 ஆவது பிரிவின் கீழ் பிரபலமான மூன்று குடும்பங்கள் மட்டுமே ஆட்சியையும் அதிகாரத்தையும் அனுபவித்தன.
மோடி அரசின் நடவடிக்கைகள்:
2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி மோடி அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2023 டிசம்பர் 11 அன்று 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, 370 வது சட்டப்பிரிவை நீக்கியது சரி என்று ஒரு மனதாக உறுதி செய்தது.
இதனால் நிகழ்ந்த மாற்றங்கள்:
- 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்தவுடன், ராணுவம் மீது கல்லெறிதல் நின்று போனது. அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
- விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்களை முன்னேற்றத்தை நோக்கமாக்க் கொண்ட, சாதனை படைக்கும் நலத்திட்டங்களால் ஜம்மு காஷ்மீர் மக்கள் இப்பொழுது அதிகாரம் பெற்றிருக்கின்றனர்.
- ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனைத்து மத்திய சட்டங்களும் அமுல்படுத்தப்பட்டன. ஜம்மு – காஷ்மீர் வரலாற்றில் முதல்முறையாக மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு நிறுவப்பட்டது.
- பிரதமர் அறிவித்த 53 மேம்பாட்டுத் திட்டங்களில் இதுவரை 32 திட்டங்கள் (ரூ. 58,477 கோடி மதிப்பிலானவை) முடிக்கப்பட்டுள்ளன.
- பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- ஜம்மு-காஷ்மீர் கிராமங்கள் அனைத்தும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை அடைந்துள்ளன. (எல்லாக் கிராமங்களிலும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது).
- பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 3.84 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 13.54 லட்சம் குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு 12.53 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- இலவச சுகாதாரத் திட்டத்தால் 8.22 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
- பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 8,086 கி.மீ. கிராமப்புறச் சாலைகள் நான்கு ஆண்டுகளில் போடப்பட்டுள்ளன.
- 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், 50 பட்டயக் கல்லூரிகள், 28 பி.எஸ்சி. நர்சிங் கல்லூரிகள், 19 பிஎஸ்சி. துணை மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஐஐடி- ஜம்மு, ஐஐஎம்-ஜம்மு, எய்ம்ஸ்-ஜம்மு ஆகியவை இப்பொழுது செயல்படுகின்றன.
- ஆகஸ்ட் 2019 முதல் அரசாங்கத்தில் 32,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 74 லட்சம் சுய வேலைவாய்ப்புகள் (2021 முதல் 2023 வரை) உருவாக்கப்பட்டுள்ளன.
- பி.எம்.கிஸான் திட்டத்தின் கீழ் அந்த மாநிலத்தில் மட்டும் 12.55 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 2,517 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
- 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட நான்கு ஆண்டுகளில் பயங்கரவாத சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்துள்ளன. 2004 முதல் 2014 வரை காஷ்மீரில் மொத்தம் 2,829 பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2014 முதல் 2023 வரை 891 பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இது முன்னை விட 70 சதவீதம் குறைவு.
- கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது; 2021-22 இல் ரூ. 563 கோடியாக இருந்தது, 2022இல் ரூ. 1116.37 கோடியாக உயர்ந்துள்ளது.
- தொழிலை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் ரூ. 28,400 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு 2021இல் அறிவித்தது. அவற்றை நிறைவேற்றும் பணிகள் முழுமையை நோக்கிச் சென்று கொண்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவும் ஸ்ரீநகரில் திறந்த வண்டியில் ஊர்வலமாக வந்ததுடன், பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ச்சியுடன் விளையாடிய காட்சியை நாடே கண்டது. இது காங்கிரஸ் ஆட்சியில் கூட நடக்காத விஷயம்.
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கப்படுவார் என்பதனாலே அவர் சொந்த ஊரிலே (மகாராஷ்டிரம்) கூட பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சுற்றிக் கொண்டிருந்த நிலைமை மாறி, காஷ்மீரில் சாலை ஓரத்தில் அங்கிருந்த குழந்தைகளுடன் அவர் கிரிக்கெட் விளையாடியதை நாட்டு மக்கள் தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் பார்த்தனர்.
370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் விளைவாகத்தான் மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும் நடந்தன. இதை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே மறந்தது எப்படி?
இதை அவருக்கு நல்லபடியாக நினைவுபடுத்த மக்களுக்கு வாய்ப்பாக வந்துள்ளது, இந்த நாடாளுமன்றத் தேர்தல்.
$$$