-சேக்கிழான்
நடையில் நின்றுயர் நாயகனான ராமன் புகழ் பாடும் கம்ப ராமாயணத்தில் செங்கோன்மை குறித்து இல்லாமல் இருக்குமா? ராமனின் நாடான கோசலமே ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணச் சான்றாக இருக்கிறது. ஒரு செம்மையான ஆட்சி நிலவும் நாடு எவ்வாறு இருக்கும் என்று இலக்கணம் வரைந்த கம்பர், செங்கோலின் சிறப்பையும் ஆங்காங்கே பாடல்களில் கூறிச் செல்கிறார். செங்கோல் ஓங்கிய ஆட்சியே ராமராஜ்ஜியம் என்று அழைக்கப்படுவதும், அதையே நமது தேசிய லட்சியமாக மகாத்மா காந்தி முன்வைத்ததும் இயல்பானவை அல்லவா?

பகுதி-2: வெறுக்கப்படும் கொடுங்கோன்மை
.
3. கம்பன் காட்டும் கோலுயர் கோசலம்
“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை…”
(தேசிய கீதங்கள் - 22 - தமிழ்)
-என்று பாடி மகிழ்வார் மகாகவி பாரதி. கம்பர் இயற்றிய ராமாவதாரம் காப்பியம், தமிழின் தனிச்சிறப்பான அடையாளமாகி, மொழியின் வளர்ச்சியில் பெருந்துணை புரிந்தது; புரிகிறது. அதுவே இன்று ‘கம்ப ராமாயணம்’ என்று குறிப்பிடப்படுகிறது.
கம்ப ராமாயணம், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும் உடையது. இதில் 10,569 பாடல்கள் உள்ளன. காண்டம் என்பது காப்பியத்தின் பெரும் பிரிவையும், படலம் என்பது அதன் உட்பிரிவைம் குறிக்கும். அற்புதமான யாப்பிலக்கணத்துடன் கூடிய விருத்தப்பாக்களால் அமைந்தது கம்ப ராமாயணம். சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய நான்கு அம்சங்களும் நிறைந்து தமிழுக்கு அணிகலனாக விளங்குவது கம்ப ராமாயணம்.
நடையில் நின்றுயர் நாயகனான ராமன் புகழ் பாடும் கம்ப ராமாயணத்தில் செங்கோன்மை குறித்து இல்லாமல் இருக்குமா? ராமனின் நாடான கோசலமே ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணச் சான்றாக இருக்கிறது. அவனது காலம் திரேதா யுகம்; சத்திய யுகத்தின் தொடர்ச்சியான காலம்; அறநெறிகள் அகமகிழ்வுடன் மக்களால் போற்றப்பட்ட காலம். அனைத்தையும் விட, அறத்தின் நாயகனாம் ராமன் அவதாரம் புரிந்த காலம்.
ராமனின் தந்தை தசரதனோ, நாட்டு மக்கள் மகிழ்வுற வாழும் வகையில் ஆண்டவன். தசரதனின் நாட்டை கம்பர் வர்ணிக்கும் அழகே, ஒரு செம்மையான நாடு எவ்வாறு இருக்க வேண்டும், மன்னனின் செங்கோன்மை எப்படி இருக்க வேண்டும் என்று இயம்புகிறது. பாலகாண்டத்தின் நாட்டுப்படலம், கோசல நாட்டின் சிறப்பை வியந்து பாடுகிறது. அவற்றில் சில பாடல்கள் மட்டும் இங்கு எடுத்தாளப்படுகின்றன.
கோசல நாட்டின் மக்களுக்கு யமனைப் பற்றிய அச்சமே இல்லை. மக்களின் உள்ளத்தில் சினமே எழாது. அங்கே உயர்வு மட்டுமே அன்றி இழிவு கிடையாது. இவற்றைச் சொல்ல வந்த கம்பர், சுவை கூட்டிச் சொல்கிறார். அதாவது, “அயோத்தி மக்கள் எந்தப் பாவமும் செய்யாததால் யமனுக்கு அங்கே வேலையில்லை. அவர்தம் உள்ளம் செம்மை உடையதாதலின் யாருக்கும் சினமே எழாது. நாட்டு மக்கள் அறச்செயல்கள் அன்றி மறச் செயல்கள் புரிவது இல்லையாதலால், அங்கே இழிவான தன்மையே இல்லை; புகழான மேன்மையே உள்ளது” என்கிறார்.
இதோ அந்தப் பாடல்:
“கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால்
ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.
(பாலகாண்டம் - நாட்டுப் படலம் - 1.2.39)
கோசல நாட்டு மக்களிடம் வள்ளல் பண்பும், வலிமையும், உண்மையும், ஒன்றும் அறியாத கபடற்ற தன்மையும் இல்லை என்று கூறும் கம்பர் அதற்குக் காரணமும் (மாறுபடு புகழ் நிலையணி) கூறுகிறார். “அந்த நாட்டில் எவரிடமும் வறுமை என்பதே சிறிதும் இல்லாததால், ஒருவர் மற்றொருவருக்கு உதவுவதான வள்ளல் பண்புக்கே அங்கு இடமில்லை, பகைவர் இல்லாமையால் (அந்நாட்டைப் பகைக்க பகைவர் அஞ்சுவதால்) வலிமைக்கோ, வீரச் செயலுக்கோ வாய்ப்பில்லை. மக்கள் எவரும் பொய்யே பேசாததால், உண்மை என்ற ஒரு சொல்லே அறியப்படவில்லை. பல்வகைக் கல்வி கேள்வி அறிவைப் பெற்றிருப்பதால், மக்களின் அறிவுடைமையில். வெறுமைக் கூறே இல்லை” என்கிறார் கம்பர்.
இதோ அந்தப் பாடல்:
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர்செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்யுரை இலாமையால்
ஒண்மை இல்லை பல கேள்வி ஒங்கலால்
(பாலகாண்டம் - நாட்டுப் படலம் -1.2.53)
பாலகாண்டத்தின் நகரப் படலத்தில், அயோத்தியை இன்னமும் சிறப்பாக வர்ணிக்கிறார் கம்பர். அங்கு இல்லாதோரும் உடைமையாளரும் இல்லை என்கிறார்.
அயோத்தி நகரில் உள்ள எல்லாரும் கல்வி கற்றிருப்பதனால், கல்வியில் மிகவும் திறமுடையவர் என யாரையும் சொல்வதற்கும் இல்லை; எனவே கல்வியில் திறம் குறைந்தவர் என்று யாரையும் சொல்ல இயலாது. அனைவரும் அனைத்துப் பெருஞ்செல்வங்களையும் பெற்றிருப்பதால், அங்கே இல்லாதவர்களும் இல்லை ; உடையவர்களும் இல்லை.
அந்தப் பாடல்:
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ!
(பாலகாண்டம் - நகரப் படலம்- 1.2.74)
தசரதன் மாண்பு
இத்தகைய கோசல நாட்டின் மன்னன் தசரதன், மன்னர்களுக்கெல்லாம் மன்னன். செங்கோல் ஏந்தி உலகைப் புரப்பவன். அவனது புதல்வனாக இறையம்சமான ராமன் வந்து பிறக்கப் போகிறான் என்பதை அரசியற் படலத்தில் கூறுகிறார் கம்பர். அந்தப் பாடல்:
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான்.
(பால காண்டம்- அரசியற் படலம் – 1.4.1)
ராம அவதாரத்திற்குப் பிறகு, சீதையை ராமன் மணம் புரிவதற்காக, தசரதன் மிதிலை செல்லும் காட்சிகள் பாலகாண்டத்தின் எதிர்கொள் படலத்தில் இடம் பெறுகின்றன. அதன் முதல் பாடலே, தசரதன் கொண்ட செங்கோலின் பெருமை பேசுகிறது.
வேதம் கூறும் நெறி பிறழாமல் நீதிவழி ஆட்சி நடத்திய, செங்கோலும் வெண்குடையும் தரித்த மன்னாதி மன்னன் தசரதன் கங்கை நதிக் கரையைச் சேர்ந்தான் என்கிறார் கம்பர். அந்தப் பாடல்:
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி
விடா நெறிப் புலமைச் செங்கோல் வெண்குடை வேந்தர்வேந்தன்,
படா முக மலையில் தோன்றிப் பருவம் ஒத்து அருவி பல்கும்
கடா நிறை ஆறு பாயும் கடலொடும், கங்கை சேர்ந்தான்.
(பால காண்டம் - எதிர்கொள் படலம் - 1.20.1)
மிதிலை சென்ற அந்த அணியிலே தசரதனின் பிள்ளைகள் நால்வரும் வீற்றிருக்கின்றனர். ராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன் ஆகிய நால்வரும் இருக்கும் காட்சியை கம்பர் நான்மறைக்கு ஒப்பாகக் காட்டுகிறார்.
பெருந்தாதை என்பவர் நாட்டு மக்களை தாம் பெற்ற மக்களாகக் கருதும் மன்னரின் உயர்நிலையைக் குறிப்பது. தசரதன் தன் செல்வம் எனக் கருதியது தன்நாட்டு மக்களுக்குக் காட்டும் நீதியும் கருணையுமே. இப்பாடலில் தசரதனின் நீதிவழுவா நெறிக்கு செங்கோலும், கருணைக்கு வெண்கொற்றக்குடையும் உருவகிக்கப்படுகின்றன. இத்தன்மையின் தொடர்ச்சியாக, நான்கு வேதங்களின் பிள்ளைகளாகப் பிறந்தது போல நான்கு பிள்ளைகளும் விளங்கினர் என்கிறார் கம்பர். இதோ அப்பாடல்:
‘கோல் வரும் செம்மையும், குடை வரும் தன்மையும், சால் வரும் செல்வம்’ என்று உணர் பெருந் தாதைபோல், மேல் வரும் தன்மையால், மிக விளங்கினர்கள், தாம் - நால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினார். (பால காண்டம் - எதிர்கொள் படலம் - 1.20.28)
இதற்கு அடுத்த பாடலை, தனது ஆட்சிக்குப் பிறகு பட்டம் ஏற்கவுள்ள ராமனுக்கு தசரதன் அறிவுரை கூறுவதாக அமைக்கிறார் கம்பர். அதில், செங்கோல் ஆட்சிக்கு மிகச் சிறந்த சான்றான அரசாட்சியை வழங்கிய தசரதன் என்று குறிக்கிறார். தனது ஆட்சியைத் தன் மைந்தன் தொடர வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையுடன், ‘இந்தச் செல்வங்கள் அனைத்தையும் சேனையுடன் முன்கொண்டு செல்க’ என்று ஆசி கூறுகிறார் தசரதன். இதோ அப்பாடல்:
சான்று எனத் தகைய செங்கோலினான், உயிர்கள்தாம்
ஈன்ற நல் தாய் எனக் கருது பேர் அருளினான்,
‘ஆன்ற இச் செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற’
தோன்றலை, 'கொண்டு முன் செல்க!' எனச் சொல்லினான்.
(பால காண்டம் - எதிர்கொள் படலம் - 1.20.29)
வையகம் என்னும் உயிரைத் தாங்கும் உடலே மன்னவன்:
முடியாட்சியில் மன்னவனின் சிரப்பை விளக்க இதற்கு அடுத்த சிகரத்திற்கு செல்கிறது கம்ப ராமாயணம். மக்கள் அனைவரும் மன்னவனின் உயிரைப் போன்றவர்கள், அவர்களது உயிரைக் காக்கும் உடம்பாகத் திகழ்பவன் மன்னவன்; அத்தையவனே தசரதன் என்கிறது ராமாயணம்.
இதோ பால காண்டம், அரசியற் படலத்தில் அந்தப் பாடலின் அடிகள்:
வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர்எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ்
உயிர்எலாம் உறைவதுஓர் உடம்பும் ஆயினான்.
(பால காண்டம் - அரசியல் படலம் – 1.4.10)
இதன் பொருள்:
“தசரதன் வயிரங்கள் பதித்துச் செய்த சிறந்த அணிகலன்களைப் பூண்டவன்; சிங்கம் போன்ற வலிமையை உடையவன்; தனது நாட்டில் உள்ள உயிர்களையெல்லாம் தன்னுயிரைப் போலவே பாதுகாத்து வந்தான். ஆதலால் அவன், குற்றமற்ற இவ்வுலகிலே இறந்தும், இருந்தும் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம் உறைகின்ற ஓர் உடம்பாக இருந்தான்.
இப்பாடல், ‘அரசன் உடல்; மக்கள் உயிர்’ என்ற உயரிய சிந்தனையை வலியுறுத்திக் காட்டுகிறது. மற்றோரிடத்திலே இக்கொள்கையை இன்னும் தெளிவாக உரைக்கின்றார் கம்பர்.
ராமனுக்கு முடிசூட்டத் தீர்மானிக்கிறான் தசரதன். அதன்பின் அவனுக்கு அரசியல் அறிவு புகட்டுமாறு குலகுரு வசிஷ்டனை வேண்டினான். வசிஷ்டன் ராமனுக்கு அறவுரைகள் கூறுகிறார். அவ்விடத்திலும் இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.
“இவ்வுலகையே நிலையான உயிராகக் கொள்ள வேண்டும்; அவ்வுயிரைத் தாங்கும் உடம்பு நானே என்று மன்னவன் நினைக்க வேண்டும்; அவ்வாறே மன்னவன் உலக உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். இத்தகைய மன்னவனை விட்டு அறநெறி நீங்காது; அவனையே தழுவி நிற்கும். இரக்கம் என்னும் மெய்ந்நெறியிலே மன்னன் ஒழுகுவானாயின், அவன் வேறு வேள்விகளும் செய்ய வேண்டுமோ?” என்கிறார் வசிஷ்டர்.
இதோ அந்தப் பாடல்:
வையம் மன் உயிராக, அம் மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
அய்யம் இன்றி அறம் கடவாது; அருள்
மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?”
(அயோத்தியா காண்டம்- மந்தரை சூழ்ச்சிப் படலம்- 2.2.17)
இச்செய்யுளும், ‘மன்னன் உடம்பாவான், மக்கள் உயிர் ஆவர்’ என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.
ஆயினும் விதிவலியால், ராமன் பட்டம் துறந்து கானகம் ஏக வேண்டி வந்தது. 14 ஆண்டுகள் வனவாசம் முடியும் வரை, இளவல் பரதன், ராமனின் பாதுகையை முன்வைத்து ராமனின் பிரதிநிதியாக கோசல நாட்டை ஆள்கிறான். ராவணனை வீழ்த்தி, சீதையை மீட்ட பின், 14 ஆண்டுகள் நிறைவை அடுத்து கோசல நாடு திரும்பிய ராமன் மன்னனாகப் பட்டம் சூடுகிறான். அப்போது, தனது இளவசனாக பரதனையே நியமிக்கிறான் ராமன்.
செங்கோல் மிளிரும் ராமராஜ்யம்:
மாபெரும் சோதனைகளைத் தாண்டி உலகத்து உயிர்களெல்லாம் உவகை பூக்க ராமபிரான் சீதா பிராட்டியோடு மணி மகுடம் சூடுகிறான். அப்போது, முடியாட்சிக்கு முன்னுதாரணம் காட்டுவது போல, தனது தம்பியர்க்கும் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தான். பரதனுக்கும் இளவரசனாக ஆட்சிப் பங்களித்தான். தனது செங்கோல் ஆட்சியை நிலைநிறுத்தும் பொறுப்பை பரதனிடமே ஒப்படைக்கிறான் ராமன். ராமாயணத்தின் நிறைவில், யுத்தகாண்டத்தில் அமைந்த அந்தப் பாடல் இதோ:
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ!
(யுத்த காண்டம் – திருமுடிசூட்டுப் படலம் - 6.42.20)
இவ்வாறு, ஒரு செம்மையான ஆட்சி நிலவும் நாடு எவ்வாறு இருக்கும் என்று இலக்கணம் வரைந்த கம்பர், செங்கோலின் சிறப்பையும் ஆங்காங்கே பாடல்களில் கூறிச் செல்கிறார்.
செங்கோல் ஓங்கிய ஆட்சியே ராமராஜ்ஜியம் என்று அழைக்கப்படுவதும், அதையே நமது தேசிய லட்சியமாக மகாத்மா காந்தி முன்வைத்ததும் இயல்பானவை அல்லவா?
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 3”