-மகாகவி பாரதி
வேதபுரம் என்று புதுவை நகரத்துக்கு ஒரு மாற்றுப் பெயர் உண்டு. பாரதியார் வேதபுரம் என்ற பெயரைப் பல இடங்களில் உபயோகித்துளளார். வேணு முதலி என்ற நபரைப் பற்றியும் பல கதை, கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். இக் கதை ‘சுதேசமித்திரனில்’ முதலில் வெளிவந்தது; ‘காளிதாசன் எழுதுகிறார்’ என்ற குறிப்புடன் இக்கதை வெளியாகி இருக்கிறது. பிறகு மித்திரன் அலுவலகம் 1920-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலில் வெளியாயிற்று.

வேதபுரத்து வேணு முதலிக்கு வயது முப்பது, முப்பத்தைந்து இருக்கும். கரு நிறம். இவனுடைய உடம்பு சிங்கத்தின் உடம்பைப் போல வலிமை யுடையது. இவன் சிறு பிள்ளையாக இருக்கும்போது இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் மூன்று நான்கு வருஷம் வாசித்துக் கொண்டிருந்தான். இங்கிலீஷ் படிப்புக்கும் இவனுக்கும் ஒத்து வரவில்லை. படிப்பை விட்டான். தகப்பனார் இவனை ஏதேனுமொரு வேலைக்குப் போகச் சொன்னார். ஒரு வியாபார ஸ்தலத்தில் குமாஸ்தா வேலைக்குப் போனான். மூன்று மாதம் வேலை பார்த்தான். அதுவும் பிடிக்கவில்லை. விலகி விட்டான். பிறகு வீட்டிலிருந்த படியே இங்கிலீஷ் புத்தகங்களும் தமிழ்ப் புத்தகங்களும் வாசித்துக் கொண்டிருந்தான். இரண்டு பாஷைகளிலும் அவனுக்குச் சிறிது தேர்ச்சி ஏற்படலாயிற்று.
மறுபடியும் வீட்டாரின் வேண்டுதலின்படி சில குழந்தைகளுக்கு – இராப் பாடம் கற்றுக் கொடுத்து மாஸம் பத்துப் பதினைந்து ரூபாய் சேர்க்கலானான். ஏழெட்டு மாஸத்திற்குள் அவனுக்கு இந்தத் தொழிலும் கசந்து போய் விட்டது. அப்பால் பரதேசி, பண்டாரம், லாடர், யோகிகள், வகையராக்களுடன் இவனுக்குப் பழக்கம் உண் டாயிற்று. அவர்களுடனே வட தேசத்தில் நெடுங்காலம் சுற்றி வந்தான். சென்ற பத்துப் பதினைந்து வருஷங்களாகத்தான் வேத புரத்தில் மனைவி மக்களுடன் வாழ்ந்து வருகின்றான். குடும்ப விஷயங்களை இவன் கவனிப்பதே கிடையாது. இவனுடைய பத்னி மிகவும் நல்லவள். அவளை ஸ்ரீதேவிக்குச் சமானமாகச் சொல்ல வேண்டும். இவனுடைய பிதா கொடுத்த நிலத்திலிருந்து வருஷச் செலவுக்கு நெல் விளைந்து வருகிறது. அதை வைத்துக் கொண்டு அந்தப் பெண் – அவள் பெயர், ஸத்யபாமை – செட்டாகக் குடித்தனம் நடத்திக் கொண்டு வருகிறாள்.
வேணு முதலியோ விடுதலையே வழியென்று வாழ்கிறான். இன்றிரவு வீட்டிலே படுப்பான். மறு நாளிரவு கடற்கரை மணலிலே படுத்துத் தூங்குவான். மழை, வெயில், காற்று ஒன்றுக்கும் பயப்பட மாட்டான். யாருக்கும் தலை வணங்கான். நெடுங்காலமாக வாயினால் வார்த்தை சொல்லும் வழக்கத்தை விட்டுத் தன் கருத்தைப் பாட்டாகவும், சிலேடையாகவும் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தான். தனியே வானத்தைப் பார்த்து நகைப்பான். கடவுளைத் தொழுவான். குழந்தைகளைக் கும்பிடுவான். நாம் பேசும்போது மிகவும் கவனத்துடன் கேட்டிருப் பான், அவன் பேசுவது ஸங்கீத ஸாஹித்யம். இப்படி இவன் நடப்பதிலிருந்து இவனுடைய ஸ்நேகிதரில் சிலர் ஏதோ பொய் வேஷம் போடுகிறானென்று நினைத்து வந்தனர். இப்பொழுது நாலைந்து தினங்களாக இவன் தன்னுடைய பாதி மவுனத்தையும் கைவிட்டுப் பச்சைத் தமிழை நம்மைப் போல் வசன நடையிலே பேசத் தொடங்கி விட்டான். நேற்றிரவு கடற்கரையில் நான் உலாவி வருகையிலே வேணு முதலி எதிர்ப்பட்டான்.
“வேணு முதலி, பேசத் தொடங்கி விட்டாயாமே, மெய்தானா? ஏன் விரதத்தை மாற்றினாய்? விஷயமென்ன?” என்று விசாரணை செய்தேன்.
வேணு முதலி சொல்லுகிறான்:- “ஸ்வப்னத்தில் ரிஷிகள் என்னிடம் தோன்றி மறுபடி பேசத் தொடங்கலாம் என்று உத்தரவு கொடுத்தார்கள். அதனாலே பேசுகிறேன். முன்பு குமரக் கடவுள் கனவில் அருள் செய்தபடி பாட்டையே பேச்சாகக் கொண்டிருந்தேன்” என்றான்.
நான் வியப்படைந்து, “என்ன வேணு முதலி, விழித்துக் கொண்டிருக்கிறாயா? தூங்குகிறாயா? என்ன சொல்லுகிறாய்? ரிஷியாவது, காரியமாவது!” என்று கேட்டேன்.
வேணு முதலி சொல்லுகிறான் :-
“தாளி தாஸரே, ஒரு சங்கதி கேளும். வான் உண்டு; தேவர் உண்டு; வேதம் ஸத்யம்; புனர் ஜன்மம் உண்டு. ரிஷிகள் இக் காலத்திலும் இருக்கிறார்கள். என் கனவிலே முதலாவது வந்த ரிஷி பராசரர். இவர் தவத்தினாலே சக்தியருள் பெற்றிருக்கிறார். பிறகு வசிஷ்டர் வந்தார். பிறகு கெளசிகர் வந்தார். சிதம்பரச் சித்தர், தாயார் முனி என்ற இரண்டு மஹாத்மாக்களையும் கண்டேன். அவர்கள் என்னிடம் தேவ ரஹஸ்யங்களை யெல்லாம் வெளிப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள். நான் அவற்றை இப்போது உம் மிடம் சொல்ல மாட்டேன், பக்குவம் ஏற்படும்போது உமக்கும் கனவிலே தோன்றி உம்மிடத்தில் அவற்றை உரைப்பதாகச் சிதம்பர முனிவர் தெரிவித்தார்!” என்றான்.
எனக்கு நம்பிக்கை யுண்டாகவில்லை.
“பேணு :முதலி, இதெல்லாம் கனவென்பதை மறந்து போகாதே?” என்று சொல்லி நகைத்தேன். வேணு முதலி பாடுகிறான்:-
“கனவென்று நனவென்று முண்டோ?-
காண்பது காட்சி யல்லாற் பிரிதா மோ? இங்கு
மனையிலிருப்பது வானம்- அந்த
வானத்தின் வந்தவர் தேவர் முனிவர்,
நினைவது செய்கை யறிவீர்- ஏந்த
நேரத்தும் தேவர்கள் காப்பது வையம்,
வினவிற் பொருள் விளங்காது- அ௧
விழியைத் திறந்திடில் விண்ணிங்கு தோன்றும்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்'”
இங்ஙனம் வேணு முதலி பாடியதைக் கேட்டு நான் மவுனத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வேணு முதலி உண்மையாகவே ஞான திருஷ்டி யுடையவனா இல்லையா என்பதைப் பற்றி யோசித்து யோசித்துப் பார்த்தேன். தீர்மானமாக ஒன்றும் புலப்படவில்லை. விடிந்தால் தெரியும் வெளிச்சம்.
$$$