ஹிந்து தர்மம்

இவ்வுலகத்தில் நாம் செய்கிற ஒவ்வொரு செய்கையும், ஸ்வப்ரயோஜனத்தைக் கருதாமல், லோகோபகாரத்தை முன்னிட்டுக் கொண்டு செய்ய வேண்டும். தீராத ஆவலும், அவஸரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாக மாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். ...

ஜாதி 1

வெளித் தேசத்தாருக்குத் தர்மோபதேசம் செய்கையில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இங்கே அநாவசியமான ஜாதி விரோதங்களும் (அன்புக் குறைவுகளும்) அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன் பிறப்பையும் நிலை நாட்டுவது நம்முடைய கடமையன்றோ?

வெறும் வேடிக்கை

ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதே முக்ய நோக்கமாகக் கொண்டு வேலை செய்துவரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்கு பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு, அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படி செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம், மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாக பிராமணத் துவேஷம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடையோர் சென்னை நகரத்து முக்யமான கல்வி ஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள். ....

ஆசாரத் திருத்த மஹாசபை

மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடைய மனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவிகளில் உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர்களும், சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடி அறிவுடன் வாதங்கள் நடத்தி, அறிவுடன் சில தீர்மானங்கள் செய்து முடிக்கிறார்கள். அப்பால், அத் தீர்மானங்கள் தமது சொந்த ஒழுக்கத்திலும் தேச ஜனங்களின் நடையிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவை இவர்கள் களைந்து போடும் குப்பைக்கு நிகராகவே மதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவதினின்றும் தேசத்து ஜனங்களுக்கு நன்மை விளையும் என்ற உண்மையான நம்பிக்கையுடனேயே அவை பிரேரேபணை செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில் ஏராளமான கால விரயமும் பொருட் செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக்காணோமென்றால், இந்த ஆசாரத் திருத்தக்காரரின் சக்தியைக் குறித்து நாம் என்ன சொல்லலாம். இவ்வருஷமேனும், இவ்விஷயத்தில் தகுந்த சீர்திருத்தம் ஏற்படுமென்று நம்புகிறேன்....

தேசியக் கல்வி

ஒரு தேசம் என்பது கோடானுகோடி குடும்பங்களின் தொகுதி. குடும்பங்கள் இல்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடில் தேசியக் கல்வியைப் பற்றி பேச இடமில்லை. தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது  ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. 

தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும். 

தமிழில் சாஸ்த்ர பரிபாஷை

பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும் லெளகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும்....

ஸங்கீத விஷயம்

புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுகளில் கீர்த்தனங்கள் செய்ய முயல வேண்டும். நவரஸங்களின் தன்மைகளையும், இன்னின்ன ரஸங்கள் உண்டாகும் என்பதையும் கற்றுத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்....

என் ஈரோடு யாத்திரை

ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை. ஸ்வதேசீய நிகழ்ச்சி தோன்றிய காலம் முதலாக தமிழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அகவேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவுபடுகின்றன. இதற்குச் ‘சுதேசமித்திரன்’ முதலிய பத்திரிகைகள் பெரிதும் உதவி புரிந்தன என்பது நிச்சயம்.

சுதேசமித்திரனில் (1921) மகாகவி பாரதி எழுதிய இறுதிக்காலக் கட்டுரை இது...

அபிநயம்

"சிங்கார ரஸத்தை ஒரு கூத்தன் காண்பிக்கும்அபி நயங்களில் கூத்துப் பெண்ணுடைய அபிநயங்கள் கலக்கலாகாது. ஆண் மகனே பெண்ணுருக் கொண்டு கூத்தாடுவானாயின், அப்போது பெண்மை அபிநயங்கள் காண்பிக்கத்தகும். ஆண்மகன் உருமாறாமல் கூத்தாடும்போது பெண்மை தோன்றலாகாது.

"வீர ரஸத்தில் ஒருவன் தேர்ச்சியடைய விரும்புவானாயின், ராமன் முதலிய அவதார புருஷர்களுடைய வடிவை அவன் தியானம் செய்யக் கடவான். நாராயண உபாஸனையே கூத்தனுக்குவீர ரஸத்தில் தேர்ச்சி கொடுக்கும்...”

வந்தேமாதரம்

மகாகவி பாரதி, ‘வந்தேமாதரம்’ கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரை இது...

தமிழருக்கு

தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதம் மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லெளகீகக் கொள்கைகள், வைதிக நடை – எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட இடங்கொடுத்துவிட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும், வெளியிலும, தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்; உண்மையிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்ற வரை தடுக்க வேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால், தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.