வைரமுத்துக்கு அறிவித்த ஞானபீடம் விருதைத் திரும்பப் பெறுக!

படைப்பாளர்கள் சங்கமம் வேண்டுகோள்

ஞானபீட விருது- 2025 அறிவிப்புக்கு எதிராக தார்மிக அடிப்படையில் ‘படைப்பாளர்கள் சங்கமம்’ அமைப்பு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. பாரதீய ஞானபீடம் தலைவருக்கு அனுப்பவுள்ள கடிதம் இங்கு வெளியிடப்படுகிறது…

சென்னை
21.03.2026


பெறுநர்:

தலைவர்,
பாரதீய ஞானபீடம்,
புது தில்லி

பொருள்:

2025ஆம் ஆண்டுக்கு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்ட
ஞானபீடம் விருதை திரும்பப் பெறுமாறு வேண்டுகோள்.

அன்புடையீர்,

வணக்கம்.

ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த இலக்கியவாதிகளுக்கு வழங்கி கௌரவிக்கப்படும்  ‘பாரதீய ஞானபீடம்’ விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்து ராமசாமி 2025ஆம் ஆண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக, விருது தேர்வுக் குழு கடந்த 2026 மார்ச் 14ஆம் தேதி அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய அக்கவிஞருக்கு மதிப்பு வாய்ந்த இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதை தமிழகத்தில் செயல்படும் இலக்கிய அமைப்பான ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறது.

கவிஞர் வைரமுத்து இலக்கியத்துக்கு ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திரு. அகிலன் (எ) பி.வி.அகிலாண்டம் (1975), திரு. ஜெயகாந்தன் (1982) ஆகியோருக்குப் பிறகு, 24 ஆண்டுகள் கழித்து தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு ஞானபீடம் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே.  என்றாலும், இந்த விருதுக்குரிய தகுதி கவிஞர் திரு. வைரமுத்து அவர்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வி பல வகைகளில் எழுகிறது.

  • கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக பல படைப்புகளைத் தந்திருப்பது மட்டுமே பொருத்தமான தகுதியா? வாழும் படைப்பாளிகளுள் இந்த விருது பெறும் அளவிற்கு  அவர்  சிறந்தவரா?
  • வைரமுத்து மீது பல பெண்கள் கடுமையான பாலியல் குற்றச்சாட்டு (#MeToo ) சுமத்தியுள்ள நிலையில்,  அவரை விருதுக்குத் தேர்வு செய்வது சரியா என்பதற்கு ஞானபீட குழு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளது.  
  • ஒரு படைப்பாளி சமூகத்தின் மனசாட்சியாகத் திகழ வேண்டும். அவரது படைப்புகள் மக்களை ஒருங்கிணைக்கப் பயன்பட வேண்டும். ஆனால் கவிஞர் வைரமுத்துவின் செயல்பாடுகள், வெறுப்புணர்வைத் தூண்டுவதாக, ஓர் அரசியல் கட்சி சார்புடன் இருக்கின்றன. இவற்றை ஞானபீட  தேர்வுக்குழுவினர் அறிவார்களா?

-மேற்படி கேள்விகளை விரிவான முறையில் தர்க்கரீதியாக ஞானபீட விருதுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கிறோம்.

  1. தேர்வுமுறை நியாயமானதா?

பாரதீய ஞானபீடம் என்பது இந்திய எழுத்தாளர்களின் ஆகச் சிறந்த கௌரவமாக விளங்கி வந்திருக்கிறது. அற்புதமான தமிழ்ப் படைப்பாளிகள் பலர் இவ்விருது பெறாமலே காலமாகிவிட்டனர். மறைந்த தமிழ் எழுத்தாளர்கள் கவிஞர் கண்ணதாசன்,  தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், பாலகுமாரன் போன்றவர்களுக்கு ஞானபீட விருது அளிக்கப்படவில்லை. அதேபோல வாழும் எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த விருது பெறாமல் காத்திருக்கிறார்கள். இவர்களை விட எந்த வகையில் கவிஞர் வைரமுத்து சிறந்தவர் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

கவிஞர் வைரமுத்து 1980 முதல் தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக இயங்கி வருகிறார். ஆரம்பகாலத்தில் பல இனிய திரைப்பாடல்களை அவர் வழங்கி இருக்கிறார். அதேசமயம், தரக்குறைவான பல பாடல்களையும் அவர் வழங்கி இருக்கிறார். இதுவரை 7 முறை சிறந்த திரைப்பாடலாசிரியர் விருதினை தேசிய அளவில் பெற்றிருக்கிறார். ஆனால், அவரது உரைநடை இலக்கியமும், புதினங்களும் நவீன இலக்கியத் தரத்திலானவை அல்ல. எனவே கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வழங்கிய ஞானபீட  விருதானது, தமிழில் நவீன தமிழ் இலக்கியமே இல்லை என்ற எண்ணத்தை தேசிய அளவில் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அவரைவிட அற்புதமான இலக்கியவாதிகள் பலர் தமிழகத்தில் இருக்கும் நிலையில், சிபாரிசு பிடித்து முந்திச் சென்று இந்த விருதை அடைந்திருக்கிறார் வைரமுத்து என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. 

விருது தேர்வுக்கு ஒவ்வொரு மொழியில் இருந்தும் எழுத்தாளர் பட்டியலை பரிந்துரைக்கும் குழு, தகுதியுள்ள எழுத்தாளர் எவரையும் விட்டுவிடவில்லை என்பதை உறுதிப்படுத்துவது ஞானபீடம் தேர்வு வாரிய விதிகளில் ஒன்றாகும். எனவே, இது தொடர்பாக யாரெல்லாம் தேர்வு வாரியத்தால் பரிசீலிக்கப்பட்டனர், ஒப்பீட்டளவில் அவர்களை விட வைரமுத்து எந்த வகையில் மேலானவர், அவரை தேர்வுக்குழுவுக்குப் பரிந்துரைத்தவர்கள் யார் என்ற கேள்விகளுக்கும் வெளிப்படையான பதில்கள் தேவை.

2. குற்றம் சாட்டப்பட்டவருக்கு விருதா?

தனது திரைத்துறை செல்வாக்கைப் பயன்படுத்தி அத்துறையில் உள்ள பெண்களிடம் அத்துமீறியதாக புகாருக்கு உள்ளானவர் கவிஞர் வைரமுத்து. 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபதா, வைரமுத்து மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை (#MeToo ) முன்வைத்தார். தன்னிடம் அவர் 2005-06 காலகட்டத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பதே அவரது குற்றச்சாட்டு. ஆனால், ஆட்சியாளர்களிடம் வைரமுத்துக்கு இருந்த நெருக்கம் காரணமாக, அவர் மீது தமிழக காவல் துறை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மாறாக, அவர் மீது குற்றம் சாட்டிய காரணத்தால் பாடகி சின்மயியின் தனிப்பட்ட தொழில் வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. தான் அங்கம் வகித்த தென்னிந்திய சினிமா, தொலைக்காட்சி கலைஞர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார்.

சின்மயி மட்டுமல்ல, மேலும் 16 பெண்கள் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை கவிஞர்  வைரமுத்து மீது கூறியுள்ளனர். சின்மயி ஸ்ரீபதாவும் மற்றொரு பாடகி புவனா சேஷனும் தேசிய மகளிர் ஆணையத்தில் கவிஞர் வைரமுத்து மீது 2018-19இல் புகாரைப் பதிவு செய்தனர். அதன்பிறகும் கூட, இந்த விவகாரத்தில் காவல் துறை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

இலக்கியத் திறனுடன் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை குழப்பிக்கொள்ளக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், வைரமுத்துவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்வியல்ல இது. தனது பணியிடச் செல்வாக்கால் பெண்களிடம் அத்துமீறி குற்றம் புரிந்தவர் என்பதுதான் #MeToo  புகார் கூறிய 17 பெண்களின் குற்றச்சாட்டு. இதற்காக அவர் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டிருக்குமானால், இன்று அவர் விருதுக்கான பரிசீலனையில் இருந்திருக்க மாட்டார் என்பதை ஞானபீட விருதுக்குழு ஏற்கும் என்று நம்புகிறோம்.

3. குழப்பமான சிந்தனையாளர்:

ஒருவரது தனிப்பட்ட அரசியல் பார்வை, சித்தாந்தம் போன்றவை விருதுக் குழுவால் பரிசீலிக்கப்படுவதில்லை என்பதை அறிவோம். ஆனால், கவிஞர் வைரமுத்து மொழி,  மதம் போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களில் தேவையற்ற கருத்துகளை முன்வைத்து சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தியவர்.

குறிப்பாக, 2018ஆம் ஆண்டு, ஹிந்துக்கள் வணங்கும் ஆண்டாள் நாச்சியாரை  ‘தேவதாசி’ என்று பேசி இழிவுபடுத்தியவர் வைரமுத்து. இதனை ஆண்டாள் பக்தர்கள் கண்டித்தபோது, எந்த ஆதாரமும் இல்லாத வெளிநாட்டு ஆய்வாளர் ஒருவரது மேற்கோளையே தான் பேசியதாகக் குறிப்பிட்டு நியாயப்படுத்தினார். (அது அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவரின் கருத்து என்றார். ஆனால், அதனை ஆராய்ந்தபோது, அதுவும் தவறு என்று தெரிய வந்தது). இதுதொடர்பாக அவருக்கு எதிராக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவர் மீது பலர் நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். அவற்றிற்கு அவர்  தடையாணை பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு வழக்கில் அவர் விசாரிக்கப்பட்டிருந்தாலும் கூட, இப்போது விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் அவர் இடம் பெற்றிருக்க மாட்டார்.

அதேபோல, கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலுக்கு (திகைத்தனை போலும் செய்கை) தவறாக விளக்கம் அளித்து, ஹிந்துக்கள் புனிதமாக வணங்கும் ஸ்ரீ ராமனை  ‘மனநலம் குன்றியவன்’ என்று இழிவு படுத்தியவர், வைரமுத்து (2025 ஆகஸ்ட்). திருவள்ளுவர், வள்ளலார் போன்ற தமிழ்ச் சான்றோர்களுக்கும் தனக்குகந்த அரசியல் பார்வையுடன் விளக்கம் அளித்து, பலரது கண்டனங்களுக்கு ஆளானார்.

தொடர்ந்து ஹிந்து சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசிவரும் கவிஞர் வைரமுத்து, இதேபோல இதர மதத்தினரை இழிவுபடுத்தி இருந்தால், அவரது பெயர் ஞானபீட விருதுக்கு பரிசீலிக்கப்பட்டிருக்குமா? இது ஒருபுறமிருக்க, நாட்டின் பெரும்பான்மை  சமூகத்தினரின் மத உணர்வைப் புண்படுத்துவது, விருது வழங்கி கௌரவிக்கத் தக்கதா என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும் சகோதர மொழிகளுள் ஒன்றான ஹிந்திக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து, மொழிகளிடையிலான ஒருமைப்பாட்டைச் சிதைத்தவர் வைரமுத்து. தான் சார்ந்த திராவிட அரசியல் இயக்கத்துக்கு நன்றிக்கடன் செலுத்த, தேசிய நலனைப் பற்றிய அக்கறையின்றிச் செயல்படும் ஒருவருக்கு தேசிய அளவிலான ஞானபீடம் விருதை அளிப்பது நகைமுரணாக உள்ளது.

4. விருது மறுக்கப்பட்டவர்:

கவிஞர் வைரமுத்துக்கு 2021ஆம் ஆண்டு கேரளத்தின் இலக்கிய விருதான ஓ.என்.வி.குருப் விருது அறிவிக்கப்பட்டபோது,  பாடகி சின்மயி ஸ்ரீபதா உள்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனை கேரள திரைத்துறையிலும் பலர் எதிரொலித்தனர். எனவே, அந்த விருதை வழங்கவிருந்த கேரள கலாச்சார அமைப்பு (Kerala Cultural Academy) தனது முடிவை  திரும்பப் பெற்றது. இத்தகைய தார்மிக நடவடிக்கையை, ஞானபீடக் குழு முன்னுதாரணமாகக் கருத வேண்டும்.

விருதுக்கு தகுதியுள்ள எழுத்தாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையே நியாயமற்றது. சுயமரியாதை உள்ள எழுத்தாளர் எவரும் தனக்குத் தானே விருதுக்கு விண்ணப்பிக்க மாட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் தகுதியற்ற பரிந்துரைகளைத் தான் ஞானபீட விருது தேர்வு வாரியத்தால் பரிசீலிக்க முடியும்.

விருதுக்கான தேர்வு வாரியத்தில் ஒரு தமிழர் கூட இல்லை என்னும் நிலையில், விருதாளரின் பின்புலத்தை முழுமையாக அறிய முடியாது. எனவே  ஞானபீட விருதுக் குழு  ஒவ்வொரு இந்திய மொழியிலும் வல்லுநர் குழுவை பொருத்தமான முறையில் அமைப்பது எதிர்காலத்தில் இதுபோன்ற சங்கடங்கள் நிகழாமல் தடுக்கும்.

படைப்பாளர்கள் சங்கமம் வேண்டுகோள்:

தேசிய இலக்கிய விருதுகள், இலக்கியத்தில் புதிய அளவுகோல்களை நிர்ணயிப்பவையாக இருக்க வேண்டும். நவீன இலக்கியப் போக்குடன் இயைந்து செல்வதாக இலக்கிய விருதுகள் அமைய வேண்டும். எழுத்தாளரின் தனிப்பட்ட சாதனையை விட தனிப்பட்ட செல்வாக்கே விருதுகளைத் தீர்மானிக்கும் என்றால், அந்த விருது மதிப்பிழந்து போகும். அதேபோல தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படும் விருது, இலக்கிய உலகில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்.

எனவே, திருவாளர் கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்ட பாரதீய ஞானபீடம் விருதினை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறுமாறு ஞானபீடம் குழுவினருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். விருது அறிவிக்கப்பட்டதைத் திரும்பப் பெறுவது தவறைத் திருத்திக் கொள்வதாக மதிக்கப்படும், ஆனால் தவறான நபருக்கு விருது வழங்கப்படுமானால்,  அது மதிப்பிழக்கச் செய்யும் மாபெரும் பிழையாகிவிடும். இந்த விருதுக்கான தகுதிகளாக ஞானபீடக் குழு வரையறை செய்யப்பட்டிருப்பனவற்றையும் சீர்திருத்தம் செய்வது அவசியம்.    

தமிழ் இலக்கியத்தில் விருதுக்கான உயர் தகுதி மிக்கவர்கள் பலர் இருக்கும்போது, இலக்கியத் தரம் குறைந்த, மோசமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கவிஞர் வைரமுத்து போன்ற ஒருவர் விருது பெறுவது என்பது, தமிழ் மொழிக்கே அவலம் என்பதோடு, ஒட்டுமொத்த இந்திய இலக்கியவாதிகளுக்கும் அவமானம். மேற்கண்ட எங்களது நேர்மையான கவலைகளை பாரதீய ஞானபீட விருதுத் தேர்வுக் குழு பரிசீலிக்கும் என்று நம்புகிறோம். 

ஞானபீட விருதுக் குழு தனது  முடிவை மாற்ற இயலாது என்ற சூழல் இருக்குமானால், குறைந்தபட்ச நல்லெண்ண நடவடிக்கையாக, ஞானபீட விருது வழங்கும் விழாவில், நாட்டின் உயரிய அரசு பீடங்களை அலங்கரிக்கும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

இவ்வண்ணம்,

‘திராவிட மாயை’ சுப்பு (எ) வா.ர.பாலசுப்பிரமணியம்
(கௌரவ ஆலோசகர், படைப்பாளர்கள் சங்கமம்)

வ.மு.முரளி
(ஒருங்கிணைப்பாளர், படைப்பாளர்கள் சங்கமம்)

பத்மன் (எ) நா.அனந்தபத்மநாபன்
(எழுத்தாளர்)

இராம. நம்பி நாராயணன்
(பத்திரிகையாளர்)

பேராசிரியர் ப.கனகசபாபதி
(கல்வியாளர்)

கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்
(எழுத்தாளர்)

பி.ஆர்.மகாதேவன்
(மொழிபெயர்ப்பாளர்)

கவிஞர் அரங்க.சுப்பிரமணியம்
(எழுத்தாளர்)

ஜவஹர் வெங்கிடசாமி
(பதிப்பாளர்)

பாஸ்கர் சுப்பிரமணியம்
(வழக்கறிஞர்)

நகல்கள்:

  1. மேதகு ஜனாதிபதி அவர்கள்
  2. மேதகு துணை ஜனாதிபதி அவர்கள்.
  3. ஊடகங்கள்.

$$$

Leave a comment