-ஆமருவி தேவநாதன், ஜெயமோகன், வெளி ரங்கராஜன், ஆதிசைவன் இரா.இராம்குமார்
திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு- 4)

அ. தமிழுக்கு மரியாதை செய்வோம்!
-ஆமருவி தேவநாதன்
தமிழ் மொழிக்கான ஞானபீடம் விருதை ஆபாசப் பாடல் ஆசிரியர் வைரமுத்துவிற்கு கொடுத்ததில் என்ன தவறு உள்ளது?
அந்த மனிதர் என்ன செய்தார்? ஆபாசப் பாடல்கள் எழுதினார். ஒழுக்கம் இல்லாமல் திரிந்தார். பேத்தி வயதுப் பெண்களுக்குப் பாலியல் சீண்டல்கள் தந்தார். ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்கிற நூலை எழுதி, அதற்கு நோபல் பரிசு வேண்டும் என்றார். கம்பனை இழிவு படுத்தினார். ஆண்டாளைத் தரம் தாழ்ந்து பேசினார்.
இப்படித் தமிழுக்குத் தொண்டாற்றியதற்காக ஞானபீடம் கொடுத்துள்ளார்கள். இதில் என்ன தவறு உள்ளது?
தமிழை ‘காட்டு மிராண்டி பாஷை’ என்றார் ஒருவர். ‘தமிழால் என்ன பிரயோஜனம்?’ என்று தமிழை ஏளனம் பேசினார். திருக்குறளை ‘மலம்’ என்றார். கண்ணகியை ( வைரமுத்து போலவே) தரம் தாழ்ந்து பேசினார். கம்ப ராமாயணத்தைப் பழித்தார். கம்பனை ‘ஆரியக் கைக்கூலி’ என்றார். இதனால் அவரை ‘தமிழர் தந்தை’ என்று விழுந்து வணங்கவில்லையா? இல்லாத விருதெல்லாம் அவர் பெற்றதாகச் சொல்லவில்லையா?
ஒருவர் தன் தங்கையின் மீது காமம் கொண்டதாக கதை எழுதியவரை பேரறிஞர் என்று போற்றவில்லையா? பல்கலைக்கழகம் முதல் மைல் கல் வரை அவரது பெயரை வைக்கவில்லையா?
சினிமா வசன எழுத்தாளரை ‘முத்தமிழ் அறிஞர்’ என்று போற்றவில்லையா? ஒரு பெண்ணைப் பற்றி ‘இவர் யார்?’ என்று கேட்டால், ‘அந்தப் பெண் என் மகளின் தாய்’ என்று சொன்னவரை கடவுளாகக் கொண்டாடவில்லையா ?
ராணுவத்தையே பார்த்திராதவரை தளபதி என்றும், ‘கவுண்டனை வெட்டு; கவுண்டச்சியை கட்டு’ என்றவரை ‘எழுச்சித் தமிழர்’ என்றும் சொல்லவில்லையா?
விலைமகளிருடன் கூடுவதை சைவ, வைணவச் சின்னங்களுடன் ஒப்பிட்டுப் பேசியவர் மந்திரியாக இருக்கவில்லையா?
புரட்சித் தலைவர், தலைவி, புரட்சிக் கலைஞர், உலக நாயகன், இளைய தளபதி – இப்படி எத்தனையோ பேத்தல்கள் இருக்கும் இந்த நிலையில், பல பெண்களைத் தீண்டி, ஆழமில்லாத கவிதைகளையும் ஆபாசப் பாடல்களையும் படைத்து தமிழுக்குத் தொண்டாற்றி, ‘கவிப்பேரரசு’ என்கிற பட்டத்தைக் கொண்டவருக்கு ‘ஞான பீடம்’ விருது வழங்கப்படுவதில் என்ன தவறு உள்ளது?
அகிலனுக்கும் வைரமுத்துவுக்கும் கொடுக்கப்பட்ட விருது இது. அந்த வரிசையில் எந்தத் தகுதியும் இல்லாத ஜெயகாந்தனுக்குக் கொடுத்ததை வேண்டுமானால் கண்டிக்கலாம். அது தான் நமது தமிழ் மொழிக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.
- (இது திரு. ஆமருவி அவர்களின் முகநூல் பதிவு)
$$$
ஆ. இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து!
-ஜெயமோகன்
இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.
இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது. “தமிழில் நவீன இலக்கியம் உண்டா?” என்று என்னிடம் பல மற்றமொழிக்காரர்கள் கேட்டிருக்கிறார்கள்.
அகிலனில் இருந்து தொடங்கி இந்திய மொழி அறிஞர்கள் நம் நவீன இலக்கியம் பற்றிய ஆழ்ந்த முன்முடிவுக்குள் சென்றுவிட்டனர். நம் நவீன இலக்கியத்தை உலகம் அறிந்தால்தான் இந்தியாவில் மதிப்பு என முடிவுசெய்தோம். இன்று அதை கொண்டுசெல்ல வாழும்தமிழ் இலக்கிய மாநாடு வழியாக பெருமுயற்சி எடுக்கிறோம். இன்று எந்த சர்வதேச இலக்கிய இதழ் ஓர் இந்திய இலக்கியச் சிறப்பிதழ் வெளியிட்டாலும் அதில் நம் படைப்பு உள்ளது. இந்தியா அதை திகைப்புடன் பார்க்கிறது.
அந்த முயற்சிகள் அனைத்தையும் சீரழிப்பது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட இந்த ஞானபீடப் பரிசு. தமிழிலக்கியத்தை நோக்கிக் காறித்துப்பியிருக்கிறார்கள். இதற்குமேல் உனக்கு மதிப்பில்லை என்கிறார்கள். இந்த அளவே உன்னை அளவிடுவோம் என குனிந்து நோக்கிச் சொல்கிறார்கள்.
அதை நான் நேரில் கண்டிருக்கிறேன். கேந்திர சாகித்ய அக்காதமி அரங்கில் வைரமுத்து அரை லட்சம் கவிதைகள் எழுதியுள்ளார், தாகூரை விட அதிகம் என அசோக் வாஜ்பாய் என்பவர் சொல்ல அரங்கே சிரித்தது. அந்தச் சிரிப்பின் பொருள் தெரிந்து நான் கூசிச் சிறுத்து அமர்ந்திருந்தேன்.
அந்த சிரிப்பு, அந்த இளக்காரம், அந்த போலிப்பெருந்தன்மை கொண்ட தட்டிக்கொடுத்தல், வேண்டுமென்றே நம்மில் சிறியவர்களை அங்கீகரித்து பிறரை அவரைவிடக் கீழ் என நிறுவும் சூழ்ச்சி– இது நூறாண்டுகளாக தமிழுக்கு எதிராக நிகழ்கிறது. இப்போதும் நிகழ்ந்துள்ளது.
இவர்கள் யார் நம்மை மதிக்க? இவர்களிடம் ஏன் சென்று நிற்கிறோம்? இத்தனை சூழ்ச்சிகள் செய்து இவர்களிடம் ஏன் ஏற்பு பெற முண்டியடிக்கிறோம்? எண்ணக்கூசுகிறது.
இந்த இரவு முழுக்க பெண்களின் அழைப்புகள். கண்ணீருடன், கொந்தளிப்புடன். ஏதோ தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அநீதி இழைக்கப்பட்டது போல. ஒரு தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்கிறார்கள் என்றனர். “ஏன் இந்த ஞானபீடைகளிடம் நாம் சென்று நிற்கவேண்டும்? நாம் உருவாக்குவோம் நமக்கான விருதை. அதை விட பெரிய விருதை. நான் என் நகைகளை முழுக்க தந்துவிடுகிறேன்” என்று பல பெண்கள் சொன்னார்கள். அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஓர் ஆணை.
இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE . ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி. (ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்)
இந்த செய்தி டெல்லியிலும், சென்னையிலும், நியூயார்க்கிலும் முறையாக அறிவிக்கப்படும்.
- (இது திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் இருந்து)
$$$
இ. சீரிய இலக்கிய முயற்சிகளுக்கு அவமதிப்பு
-வெளி ரங்கராஜன்
1965 தொடங்கி இலக்கியத்துக்காக ஞானபீட விருது பெற்றவர்களின் பட்டியலை பார்க்கும்போது வைரமுத்துவின் தேர்வு அண்மைக்காலங்களில் தமிழில் மேற்கொள்ளப்பட்ட சீரிய இலக்கிய முயற்சிகளை அவமதிப்பு செய்யும் ஒரு செயலாகும். இந்திய மொழிகளில் அழகியல் ரீதியாகவும்,தத்துவார்த்த ரீதியாகவும் சிறப்பான முயற்சிகள் கடந்த காலங்களில் தமிழில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழுக்கு வழங்கப்பட்ட விருதுகள் மதிப்புக்குரியவை அல்ல (ஜெயகாந்தன் நீங்கலாக) என்றாலும் தமிழைப் பொறுத்து தேர்வுக்குழுவில் இருப்பவர்களின் இலக்கிய அறிவு கேள்விக்குரியதாக உள்ளது.
பொதுவாக கல்வித் துறையிலும் கலாச்சாரத் துறையிலும் சமகால இலக்கியங்கள் குறித்த பரவலான புரிதல் அற்ற நிலையே தமிழ்ச்சூழலில் உள்ளது. வைரமுத்துவின் தகுதியற்ற தேர்வுக்கு இணையாக தேர்வுக்குழுவின் அண்மைக்கால நவீன இலக்கிய படைப்புகள் குறித்த புறக்கணிப்பே அதிகம் கண்டனத்துக்குரியது. மற்ற இந்திய மொழிகளில் இத்தகைய விபத்துகள் குறைவு.
- (இது திரு. வெளி ரங்கராஜன் அவர்களின் முகநூல் பதிவு)
$$$
ஈ. என்ன விலை விருதே?
-ஆதிசைவன் இரா.இராம்குமார்
பரிசு ப்ரக்ஞர், வித்தைக்காரர் போன்ற பல அடைமொழிகளுக்கு உரியவரான வைரமுத்துவுக்கு இப்போது அத்துமீறும் ஆசை நாயகன் என்ற பெயரும் சாலப் பொருந்தும்.
“இலக்கு இல்லாமல் இலக்கியம் இருக்கக் கூடாது” என்று விதி இருப்பது போல “தகுதி இல்லாமல் விருதும் கூடாது” என்ற விதி இன்றைய காலத்தில் ஏனோ காற்றில் அடித்துச் செல்லப்பட்ட பட்டம் போல் ஆகிவிட்டது.
யார் கைக்கு வேண்டுமானாலும் போய் சேரும் இயல்புடைய காற்றில் அடித்துச் செல்லப்படும் பட்டம், இன்று அரசியல் செல்வாக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களின் தயவு உடையவர்களிடமே சென்று சேர்வது மேலும் வியப்பிற்குரியது.
நமது தமிழினம் “கற்றதன் படி நிற்கும் ஒருவனையே” – கற்றவன் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. அதன்படி மேற்படி விருதுமுத்துவை நோக்கினால் ஒரு கூற்று என் எண்ணத்தில் வந்து செல்கிறது…. அதாவது ‘ஆயிரம் வருடம் கங்கை நீரில் மூழ்கிக் கிடந்தாலும் கரையாத கருங்கல்லைப் போல‘ தமிழ் இலக்கிய வாழ்வில் தனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்திருந்தாலும் கூட கடுகளவேனும் தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் வளராத ஒருவருக்கு ஞானபீடவிருது வழங்குவது என்பது தமிழன்னைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய செயல்.
நன்செய் நிலத்தில் விதைக்கப்பட்ட வேலிக்காத்தான் செடியைப் போன்ற வைரமுத்து போன்றவர்கள் நற்றமிழ் உலகத்திற்கு நஷ்டத்தைத் தான் உண்டு பண்ணியவர்கள்.
வேலிக்காத்தான் செடி போன்றவர்களுக்கு ஞானபீட விருது என்பதை நினைக்கும் போது மயிர்க் கூச்சம் உண்டாகிறது.
ஆயக்கலைகள் 64 இல் ஒருசில கலைகளில் மட்டுமே வல்லவராகிய இவர் கூடுதலாக, தன் தேவையை தீர்த்துக் கொள்வதில் கால்கை பிடிக்கும் கலையில் வல்லவராகவும் இருக்கிறார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
“உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” என்ற புறநானூற்றுப் பாடலை “உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது பெற்றல் நன்றே” என்று அர்த்தம் புரிந்து கொண்டார் போலும் விருதுமுத்து.
இவ்விஷயத்தில் இவரை மட்டும் குறைகூறுவது மட்டும் தவறாகிவிடும். ஒன்றை மதிப்பீடு (value) செய்வதற்கு உள்ளதை உள்ளவாறு அறியும் அறிவு வேண்டும். மதிப்பீடுகளை அளக்கும் நபர் மாறலாம், அளக்கும் முறையிலும் கூட சில மாற்றம் இருக்கலாம் ஆனால் அதன் அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.
ஏனோ இன்று நம்நாட்டில் நிறுவைத்தராசு, பலசரக்கு கடைகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் நிறுப்பதற்கு முன்பு தானும் சமமாக இருப்பதில்லை, நிறுக்கும் பொருளையும் சமமாக சீர்தூக்கிக் காட்டுவதும் இல்லை. இவையெல்லாம் பார்க்கும் போது சாதாரண மக்களின் குரல் “என்ன விலை விருதே!” என்பது தான்.
$$$