-ஜெயமோகன், கே.என்.செந்தில், சரவணன் சந்திரன், கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம், ராஜேஷ் குமார்.
திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு-2)

அ. தமிழுக்கு அவமானம்
-ஜெயமோகன்
சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர். வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத் துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்தத் தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது. பிறகு அவர்மேல் வந்த பாலியல் குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு. ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள் (பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.
இந்திய துணை ஜனாதிபதிக்கு ஞானபீடப் பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்தத் தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது, அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். ‘நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம்’ என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களைத் தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதைத் தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்தத் தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டுள்ளது.
இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட ஞானபீடம் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்தத் தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை, ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன். தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்குச் செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே. வைரமுத்துவுக்குக் கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை; இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.
இச்சூழலில்தான் தரமான தமிழ்ப் படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமை செய்துகொண்டே இருக்கின்றன. அடி விழுந்தோறும் நாம் நிமிர்ந்தாக வேண்டும். நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்க வேண்டும். நாம் மனம் தளராமலிருக்க வேண்டிய சூழல் இது. வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள், போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்ப விருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும்.
தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்து செல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. அருவருப்பும் கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்.
- (எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தனது தளத்தில் எழுதி இருப்பது).
$$$
ஆ. எழுத்தாளர்கள் திரள வேண்டும்!
-கே.என்.செந்தில்
இந்திய அளவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் விருதுகளில் உயர்வாக மதிக்கப்படுவது ஞானபீடம். இந்த முறை இவ்விருதுக்கு திரைப்பாடலாசிரியர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். லாபி மூலமே இதை அவர் வாங்கி இருக்கிறார் எனக் கருதுகிறேன். சாகித்ய அகாதமி விருதுக்கு எந்தெந்த ஆட்களைச் சென்று பார்த்தார் என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்தது. இது பற்றி வண்ணநிலவன் எழுதியிருப்பதை இணைத்திருக்கிறேன்*. பிறகு இதற்கு எப்படியெல்லாம் காய் நகர்த்தியிருப்பார் யாரையெல்லாம் சென்று பார்த்திருப்பார் என தெளிவாகப் புரிகிறது. மிகவும் அருவருப்பாக உணர்கிறேன்.

எந்தத் தகுதியுமற்ற ஒரு நபர் இந்திய அளவில் கெளரவிக்கப்படுவதற்கு, எழுத்தாளனாக கடும் மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இதை எப்படி பார்க்கிறது என அறிய விரும்புகிறேன். ச.தமிழ்செல்வனுக்கு சாகித்ய அகாதமி விருது நிறுத்தி வைக்கப்பட்ட போது கண்டன அறிக்கை தயாரித்தவர்கள் இந்த விஷயத்தில் நான்கு வரி கிண்டலாக எழுதிவிட்டு மெளனியாகி விட்டார்கள். நல்லது. இது அவரவர் விருப்பம் சார்ந்தது தான்.
வைரமுத்துவுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒன்று திரள வேண்டும் என விரும்புகிறேன். கண்டன அறிக்கை தயாரித்து கையெழுத்துப் பெறலாம் என்பது திட்டம். இந்த யோசனையைச் சொன்னவர் கவிஞர் தீபுஹரி. ஒன்றிரண்டு தினங்களில் அறிக்கை தயார் ஆனதும் இங்கு பகிர்கிறேன். இவ்வறிக்கையில் பலரும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
வைரமுத்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர் என்பதால் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலப் பலன்களை எண்ணி எவரும் பின்வாங்கக் கூடாது எனக் கோருகிறேன்.
பலரிடமும் கையெழுத்து பெற்ற பின் இந்த அறிக்கையை தமிழக முதல்வருக்கும் ஞானபீட விருது தேர்வாளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம். வேறு அரசு அமைப்புகள் எவருக்கேனும் மின்னஞ்சல் செய்ய வேண்டுமானாலும் கூறுங்கள். அங்கும் அனுப்புவோம்.
இப்படிச் செய்வதால் விருது அறிவிப்பை நிறுத்தி வைக்க முடியாது என நன்கு தெரியும். ஆனால் இலக்கியரீதியாக தரங்கெட்ட செயலுக்கு தமிழ் எழுத்தாள சமூகம் எவ்வாறு எதிர்வினை ஆற்றியது என்பதேனும் பொதுச் சமூகத்திற்கும் விருது அமைப்பாளர்களுக்கும் தெரிய வரட்டும்.
***
தமிழ் எழுத்தாளர்கள் கூட்டு பொதுக் கண்டன அறிக்கை
இந்திய இலக்கியச் சூழலில் மிக முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது, தகுதியான படைப்பாற்றலுக்கும், மானுட அறத்திற்கும், சமூக விழுமியங்களுக்கும் சான்றாகத் திகழும் ஆளுமைகளுக்கே வழங்கப்பட வேண்டும். அத்தகைய உயரிய விருதின் மதிப்பும், அதன் பின்னால் உள்ள தார்மிகப் பொறுப்பும் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு இலக்கியவாதியின் எதிர்பார்ப்பாகும். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அந்த விருதின் நீண்டகாலப் புகழுக்கும், தமிழ் இலக்கிய மரபுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு என தமிழ் அறிவுலகம், எழுத்தாளர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களாகிய நாங்கள் கருதுகிறோம்.
தமிழ்ச் சமூகம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையான அற இலக்கியங்களையும், பண்பாட்டுச் செழுமையையும் கொண்டது. ஒரு மெய்யான தமிழ் இலக்கியவாதி, இந்தப் பரந்துபட்ட பண்பாட்டுத் தன்மையையும், மண்ணின் மக்களின் ஆன்மாவையும் தனது படைப்புகளில் ஏந்தியிருக்க வேண்டும். ஆனால், வைரமுத்து அவர்களின் எழுத்துக்களில் தமிழ்ச் சமூகத்தின் ஆழமான விழுமியங்களோ, கலாச்சாரப் பெருமிதங்களோ மெய்யான தேடலோடு பதிவாகவில்லை. மாறாக, வெறும் மேலோட்டமான அடுக்குமொழிச் சொற்களால் அலங்கரிக்கப்பட்ட வணிகமயமான எழுத்துக்களே அவரது அடையாளமாக உள்ளன.
இலக்கியம் என்பது வாழ்வைச் செதுக்குவது; ஆனால் வைரமுத்து அவர்களின் படைப்புகள் பெரும்பாலும் திரைத்துறை சார்ந்த லாப நோக்கிற்காகவும், தற்காலிகப் புகழுக்காகவும் உருவாக்கப்பட்டவை. மக்களின் உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்காத, வெறும் வார்த்தை ஜாலங்களைக் கொண்ட ஒரு வணிக எழுத்தாளருக்கு இத்தகைய உயரிய விருதை வழங்குவது, உண்மையான இலக்கியப் பேராளுமைகளை அவமதிப்பதாகும்.
ஒரு படைப்பாளியின் எழுத்தைப் போலவே அவனது வாழ்வும் சமூகத்திற்கு முக்கியமானது. ‘மீ டூ’ (#MeToo) இயக்கத்தின் வழியாக, வைரமுத்து அவர்கள் மீது ஒரு பெண் மட்டுமல்லாமல், இதுவரை 17-18 பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பகிரங்கமாக புகார் அளித்துள்ளனர். இத்தகைய நீண்டகால தார்மீகக் கறைகள் படிந்த ஒருவருக்கு, சமூகத்தின் கௌரவமான விருதை வழங்குவது, பெண் உரிமை பேசும் நவீன சமூகத்திற்கு முரணான செயலாகும். மேலும், வைரமுத்து அவர்கள் வெளிப்படையான ஆண் ஆதிக்கப் பார்வை (Patriarchal mindset) கொண்டவர் என்பது அவரது பல்வேறு பொதுவெளிப் பேச்சுகள் மற்றும் படைப்புகளில் தென்படுகிறது. பெண்களை வெறும் போகப் பொருளாகவோ அல்லது இழிவுபடுத்தும் விதத்திலோ சித்தரிக்கும் இவருடைய போக்கு, சமூகத்தின் சமத்துவ வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரானது.
இதையும் தாண்டி, வைரமுத்து அவர்களின் பொதுவெளிச் செயல்பாடுகள் , உயர்ந்து நின்ற ஆளுமைகளுக்கு எதிரான மேலாதிக்க மனநிலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. சமூக சமத்துவத்தையும் அறத்தையும் பேச வேண்டிய ஒரு படைப்பாளியின் இத்தகைய செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை ஆகும்.
ஓர் உயரிய விருது என்பது ஒரு தனிமனிதனின் புகழை உயர்த்துவதற்காக மட்டும் அல்ல; அது நாட்டின் இலக்கிய உன்னதத்தைத் தக்கவைப்பதற்காக வழங்கப்படுவது. தகுதியற்ற ஒருவருக்கு இந்த விருது செல்வது, எதிர்காலத்தில் இந்த விருதின் மீதான நம்பகத்தன்மையையும் பெருமையையும் முற்றிலுமாக அழித்துவிடும். முன்னதாக, வைரமுத்து அவர்களுக்கு ஓ.என்.வி (ONV) இலக்கிய விருது அறிவிக்கப்பட்டபோது, அவர் மீதான இத்தகைய சர்ச்சைகள் காரணமாக எழுந்த கடும் எதிர்ப்புகளால், அந்த விருதை வழங்கவிருந்த கேரள கலாச்சார அமைப்பு (Kerala Cultural Academy) தனது முடிவைத் திரும்பப் பெற்றது. அந்த அமைப்பு மேற்கொண்ட இந்தத் தார்மிக நடவடிக்கையை, ஞானபீடக் குழுவின் முடிவில் ஒரு முக்கியமான முன்னுதாரணமாகக் கருத வேண்டியது அவசியம். குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள ஒருவருக்கு உயரிய விருதை அளிப்பது இலக்கிய மரபுகளுக்கு முரணானது என்பதால், இந்த அமைப்பின் முடிவை ஞானபீடக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, சமூக நீதியையும், இலக்கியத் தரத்தையும் கருத்தில் கொண்டு, இந்த விருது முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் சார்பாக வலியுறுத்துகிறோம்.
இப்படிக்கு,
தமிழ்ப் படைப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு.
ஒருங்கிணைப்பு:
கே.என்.செந்தில், எழுத்தாளர்.
தீபு ஹரி, கவிஞர்.
தீபு நடராஜ்
- இவ்வறிக்கையில் தங்கள் பெயரைச் சேர்க்க சம்மதம் தெரிவிக்கும் நண்பர்கள் பின்னூட்டத்தில் தங்கள் பெயரையோ ஒப்புதலையோ அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நண்பர்கள் பரவலாக இவ்வறிக்கையைப் பகிர வேண்டுகிறோம்.
- ஒன்றிரண்டு நாட்களில் இவ்வறிக்கையின் ஆங்கில வடிவம் ஞானபீட அமைப்பின் மின்னஞ்சலுக்கும் தமிழ் வடிவம் தமிழக முதல்வரின் மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
அனைவருக்கும் நன்றி.
- (இந்த அறிக்கை திரு. கே.என்.செந்தில் அவர்களின் முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது)
$$$
இ. எதிர்ப்பை ஒவ்வொருவரும் தெரிவிக்கலாம்!
-ராஜேஷ் குமார் (முகநூல் எழுத்தாளர்)
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கியதற்கு ஞானபீட கமிட்டிக்கு தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்க விரும்புபவர்களுக்கான கடித மாதிரி.
மின்னஞ்சல் முகவரி:
awardjnanpith@gmail.com / gmbharatiyajnanpith@gmail.com
அஞ்சல் முகவரி:
18 Institutional Area, Lodi Road, New Delhi 110 003
**
Subject: Concern Regarding the Selection of Vairamuthu for the 60th Jnanpith Award
Respected Members of the Selection Committee,
It is with deep concern that I write regarding the decision to confer the 60th Jnanpith Award on Mr. Vairamuthu.
The Jnanpith Award has long represented the highest standards of literary excellence and moral authority in India. It honors writers whose work expands the intellectual and ethical horizons of our society.
While Mr. Vairamuthu is a prolific lyricist and writer, many thoughtful readers and critics within the Tamil literary community have long questioned whether his body of work reflects the depth, philosophical reach, and enduring influence traditionally associated with a Jnanpith laureate. Popularity and productivity, however valuable, are not the same as lasting literary greatness.
Equally troubling are the serious allegations of sexual harassment raised against Mr. Vairamuthu by multiple women during the #MeToo movement, which remain unresolved in the public domain. At a time when society is striving for accountability and dignity for women, honoring someone facing such allegations risks weakening public faith in the moral stature of the award and in the sensitivity of the institution to survivors’ testimonies.
Awards of the stature of the Jnanpith do more than recognize literary achievement; they also represent the values that our literary institutions wish to uphold. For this reason, many believe that both literary merit and ethical considerations should play a role in such decisions.
I therefore respectfully urge the Bharatiya Jnanpith Trust to reflect on the concerns being expressed by members of the literary community and the wider public. Transparency regarding the criteria and deliberations behind the selection would help maintain the credibility and moral authority of this prestigious award.
Let the Jnanpith remain a beacon of truth and justice – not a monument to complicity.
With deep respect and anguish,
[Your Name]
$$$
ஈ. நாணம் இல்லாதவர்!
-சரவணன் சந்திரன்
வைரமுத்து அவர்களுக்கு ஞானபீடம் கிடைத்தது என்னை ஆச்சரியமூட்டவில்லை. அவர் இலக்கு நோபல்தான். அதற்காக அவருடைய கவிதைகளை ஒரு பெரிய கூட்டமே மொழிபெயர்த்துக் காத்திருக்கிறது. நோபலுக்கு முன் இதுவென முந்திக் கொண்டார். அவர் வாங்காத விருது இல்லை. என்னுடைய கடையின் பெயரில் புதிதாக ஒன்றை அறிவித்தால்கூட வந்து வாங்கிக் கொள்வார். அவருக்கு விருது கொடுத்த அமைப்பு இனி அழிந்தொழிகிற வரை சிலுவை சுமக்க வேண்டும் இதற்காக.
ஊரில் இவர்களைப் போன்றவர்களை நிறைவடையாத ஆன்மா என்பார்கள். எனக்குத் தெரிந்து முந்தைய தலைமுறையில்தான் இவ்வாறான ஆன்மாக்கள் இன்னமும் மிச்சமிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை இந்த பரக்காவெட்டித் தனத்தை ஓரளவிற்கு கடந்து விட்டதைப் பார்க்கிறேன். பரிசுப் பணமென்று பார்த்தால், பதினோரு லட்சம்தான். அவர் ஒரு ‘டிரான்ஸ்பருக்கு’ வாங்குகிற பணம்.
ஆனாலும் அதுதான் வேண்டும் என ஏன் அடம்பிடிக்கிறார்? எவ்வளவு பணம் இருந்தாலும் அந்தப் பஞ்சப் பராரிகளின் வாக்கு வேண்டும் எனத் துடியாய்த் துடிக்கிறாரே ஏன்? அதுதான் தீவிர இலக்கியத்தின் வலிமை. அதனால்தான் கடைசி காலத்தில் ஜெயகாந்தனின் கையைப் பிடித்து ஏதோ எழுதி, சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதுமாதிரி இன்னமும் நிறையச் செய்வார். ஆனால் ஒன்று. எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் தீவிர இலக்கிய பஞ்சப் பராரிகளின் முன்தான் மண்டியிட வேண்டும்.
இன்று அந்த இடத்தைத் தட்டிப் பறித்தாலும் அவருக்குள் இருக்கிற நிறைவின்மை தொடரும். ஏனெனில் அந்தப் பாராரிகளின் அருள் தனக்கு ஒருபோதும் கிட்டாது என்பதை அறிவார். அவரைக் காண்கையில் எனக்கு சங்கடவுணர்வே எழுகிறது. மொட்டாகிப் பூவாகிக் காயாகி கனியாக வேண்டாமா? வெம்புவதா முதுமை? பரந்து விசாலமாவது இல்லையா? பழுத்துக் கனிவது இல்லையா? எதுவுமே இல்லாமல்தான் இதுவரைக்கும் இருந்திருக்கிறார்.
ஆனால் ஒரு மனிதனுக்கு இருந்தேயாக வேண்டிய ஒன்று சுத்தமாக இல்லாமல் இருப்பதுதான் என்னை மேலும் ஆச்சரியமூட்டுகிறது. தமிழின் அழகான சொல்லும் அது. “நாணம்”.
(எழுத்தாளர் திரு. சரவணன் சந்திரன் அவர்களின் முகநூல் பதிவு)
$$$
உ. ஒரு கவிதைக் கண்டனம்
-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்
பாடுவதற்கு
வாய்ப்பு வேண்டுமா?
படுக்கப் பாய் விரியென்பான்.
50 கிலோ தாஜ்மகால்
எனக்கே எனக்காயென்று
உலக அழகிக்கு தூது விடுவான்.
எதிர்பார்ப்பு ஏமாற்றமானால்
தபு நடிகையின் கால் கழுவ
உலக அழகியை
பாட்டின் வரிகளில் கூட்டி வருவான்.
ஆண்டாள் தாயாரை
அவதூறு செய்வான்.
எதிர்ப்புகள் வலுத்தவுடன்
அடுத்தவர் கருத்தது
என் கருத்தல்லயென்பான்.
தன் கழிவையல்ல,
பிறர் கழிவையே
தான் சுவைத்ததாய்
உரைத்த இழிபிறவியிவன்.
வேழம் போல வாலசைப்பதால்
ஏனத்திற்குத் தரலாமோ
ஞான விருது?
இது
தமிழன்னை பாலூட்டியதால்
கிடைத்த விருதல்ல.
இவன்
பலரிடமும் வாலாட்டியதால்
வாங்கிய விருது.
பொய்
கவிதைக்கு அழகு.
கவிஞனுக்கல்ல.
என்ன செய்ய?
பொய்யன்
பீடமேறுகிறான்.
ஞானம்
இறங்கி விடுகிறது.
- (வேழம் – யானை, ஏனம் – பன்றி).
$$$
உண்மைகளை விட அதிகமாக வன்மமே, வைரமுத்துவுக்கு எதிரான மேற்கண்ட கண்டனங்களில் பொதிந்து கிடக்கிறது! வைரமுத்துவை விமர்சிப்பவர்களுக்கு அவரை விமர்சிப்பதற்கான உரிமை உண்டு அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த விமர்சனத்தின் இடையிலோ அல்லது எழுதி முடித்துவிட்டு கடைசியிலோ, தங்களை தாங்களே, “தமிழ் அறிவுலகம், தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் வாசகர்கள்” என்று சொல்லிக் கொள்வதற்கு எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை. இது நாணயமான முறையில் எப்படி குறிப்பிடப்பட வேண்டும் என்றால், “வைரமுத்துவை எதிர்க்கும் – தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் வாசகர்கள் மற்றும் தமிழ் அறிவுலகின் ஒரு பகுதியினர்”. இந்தப் போதுமான நேர்மையும் ஜனநாயக விழுமியமும் இல்லாதவர்கள் தான் வைரமுத்து விமர்சித்திருக்கும் இந்த ‘ஆகச் சிறந்த’ படைப்பாளிகளும் ஒழுக்க சீலர்களும்!
மேற்கண்ட இந்த விமர்சனத்தின் பொருள், வைரமுத்து ஞானபீட விருது பெற முழுமையாக தகுதி உடையவர் என்று நாம் கருதுகிறோம் என்பதல்ல… அவரை விட பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள் – அவர்கள் பொதுவெளியில் பலருக்கும் பரவலாக தெரிந்தும் இருக்கலாம்; தெரியாமலும் இருக்கலாம்!
ஆனால், இந்த விமர்சனங்கள் அனைத்தும் ஒரு சனாதனப் பின்புலத்திலிருந்து வைரமுத்துவை நோக்கிப் பாய்கின்றன என்பது துல்லியமாக தெரிகிறது! ஞானபீட இலக்கிய விருது என்பது இலக்கியத்திற்காக வழங்கப்படுவது ஒரு மனிதனின் ஒழுக்கத்திற்காக வழங்கப்படுவது அல்ல… ஜேசுதாஸை விட ஒரு கொலைக் குற்றவாளி சிறப்பாகப் பாடினாலும் அவன் பாடகர்களுக்கான தேசிய விருதுக்கு தகுதி பெற மாட்டான் என்பது அல்ல… அது பாடகருக்கான தேசிய விருது; அவன் தகுதி உடையவன் தான்! ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த உலகையே புரட்டிப் போட்ட, அணுக்கரு ஆற்றல் போன்ற மிகச்சிறந்த விஞ்ஞான கண்டுபிடிப்பை நிகழ்த்தியவன் ஒரு பாலியல் குற்றவாளி என்பதற்காக அவன் விஞ்ஞானத்திற்குரிய நோபல் பரிசு பெற தகுதியற்றவன் என்று எவரும் சொல்ல முடியாது! அது விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசு! அது அவனுக்குத் தரப்படும்; தரப்படத் தான் வேண்டும்… ஒரு மனிதன் குற்றவாளி என்றால் அவன் சமூகத்தால் கண்டிக்கப்படவும், சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்! ஆனால் அவன் திறமைகள் உரிய விதத்தில், உரிய தளத்தில், எல்லோராலும் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்! அது வேறு; இது வேறு!
“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு”, இவை தன் வரிகள் மட்டுமல்ல தன் வாழ்க்கையும் கூட என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட கண்ணதாசனின் ஒழுக்கத்தின் மீது பலருக்கும் பல்வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம்! ஆனால் அவர் கவிஞர் தானா என்றால் கவிஞர் தான். ஒரு கிரிக்கெட் ஆல் ரவுண்டர் உலகக்கோப்பையின் கடைசி போட்டியில் பந்து வீசி 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றுகிறார் தன் அணிக்காக அதிகபட்ச ரன்களை 100க்கும் மேலே எடுக்கிறார்; உலகக் கோப்பையை இந்தியாவுக்காக கைப்பற்றி கொடுக்கிறார்… அவருக்கு ஒருவேளை அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்! அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறது எனவே அவருக்கு தரக்கூடாது என்று சொல்கிற அவனை அவர் மீது வன்மம் கொண்டவன் என்று சொல்வதைத் தவிர அவன் ஒரு நேர்மையாளன் என்று ஒப்புக்கொள்ள முடியுமா..? அர்ஜுனா விருது பெற்றுவிட்டதாலேயே, அவரது குற்றம் பற்றி யாரும் விசாரிக்க கூடாது என்பது அல்ல; அவர் குற்றவாளியாக இருந்தால் சட்டம் தண்டிக்கக் கூடாது என்பதும் அல்ல… ஆனால் அதே நேரத்தில் அவரது கிரிக்கெட் திறமைக்கு அர்ஜுனா விருது வழங்கப்படக் கூடாது என்பதும் அல்ல!.. வன்மம் ஏதுமின்றி உண்மையாக சிந்தித்தால் இதன் தன்மை புரியும்!
இந்தப் பதிவின் தொடக்கத்தில் ‘சனாதனம்’ என்று சொல்லி இருந்தேன்… காரணம், இன்னொரு மனிதன் இருந்தான்… அவன் பொதுவெளியில் நிருபர்களை எல்லாம் கூட்டி வைத்துக் கொண்டு, தனக்குப் பின்னால் பாதுகாப்பிற்காக வயதுக்கு வந்து சில ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பெண்களை வைத்துக்கொண்டு, “நான் என்னமோ, குச்சில உட்கார்ந்து இருக்கிற பொண்ண தூக்கி கொண்டு போய் சோளக்காட்டில் வைத்து கற்பழித்து விட்டுட்ட மாதிரி சொல்றீங்க”, என்று சொன்னான். அதாவது வயசுக்கு வந்து குச்சில உட்கார்ந்து இருக்கிற பொண்ணுங்களை தவிர மற்ற பெண்களை கற்பழிக்கலாம் அது ஒன்னும் பெரிய குற்றம் இல்லையே என்கிற பொருள் பட வெளிப்படையாக பேசினான். இன்னொரு இடத்தில், தன்னைச் சுற்றி நிற்கிற பெண்களைப் பார்த்து அவர்களை குறிப்பிட்டு நிருபர்களிடம் சொல்கிறான்… “கொல்லையில பழகுவதற்கு இவ்வளவு பொம்பளைங்க இருக்கும்போது, போயும் போயும் உனக்கு அந்த பொம்பள தான் கிடைச்சாளானு என் பொண்டாட்டி என்னைய திட்டினா”, இப்படிச் சொல்லி கையைத் தட்டி சிரித்தான்…
இன்னொரு முறை, இதேபோன்று நிருபர்களை பெரிய அளவில் திரட்டி வைத்துக் கொண்டு, தன் மீது பாலியல் குற்றம் சுமத்திய பெண்ணை குறிப்பிட்டு, “அவள் ஒரு பாலியல் தொழிலாளி; அவள் காசு வாங்கிக்கொண்டு தான் என்னிடம் வந்தாள்; நான் காசு கொடுத்து தான் அவளிடம் போனேன்”, என்று கத்தினான்…
இப்போது கேள்வி என்னவென்றால், வைரமுத்துவுக்கு எதிராக தங்கள் பேனாவையே கொலைவாளாக தூக்கிக்கொண்டு, அவரை தண்டித்தே ஆக வேண்டும் என்று கத்தி சுழற்றிக் கொண்டிருக்கும், இந்த கண்ணியத்துக்குரிய ‘தமிழ் அறிவுலகங்கள், தமிழ் படைப்பாளிகள், வாசகர்கள்(?)’, அந்த அயோக்கியனுக்கு எதிராக அதுவும் தன்னை தமிழர்களின் தலைவன் என்று திமிராகச் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த காம வெறியனுக்கு எதிராக பதிவு செய்த தருணங்கள் மற்றும் கருத்துகள் எத்தனை… அல்லது வைரமுத்து மீது குற்றம் சாட்டிய அந்த பிராமணப் பெண்மணி, இப்படிப்பட்ட அயோக்கியனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்காக எழுப்பிய குரல் என்ன..? கொடுத்த ஆதரவு என்ன..? இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட அந்த தமிழ்ப் பெண்மணி இந்த பிராமண பெண்மணிக்கு முன்பாகவே இந்தக் குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் கொண்டு வந்து விட்டார்!… யார் ஒருவராக வேண்டுமானாலும் இருக்கட்டும் தனக்கு நிகழ்ந்ததை பொதுவெளியில் சொல்கிறார் என்றால் அவர் பொதுமக்களின் ஆதரவை தனக்காக கோருகிறார் என்று அர்த்தம்… அப்படி கோருகிற ஒருவர் பொதுச் சமூகத்தில் வேறு ஒருவருக்கு அப்படிப்பட்ட அநீதி நிகழும் போது அவருக்கு உடனடியாக குரல் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் இருக்கிறார் அதுதான் தார்மீக அறம்… அந்த அறத்தை இதுவரை அந்த பிராமண பெண்மணியும் வெளிப்படுத்தியது இல்லை… அந்த பிராமண பெண்மணிக்காக வைரமுத்துவுக்கு எதிராக இன்று வாள் சுழற்றும் இந்த படைப்பாளிகளும் இதுவரை வைத்ததில்லை… மாறாக அவனோடு மேடைகளில் கை குலுக்கிறார்கள் அவன் நன்றாகத் தமிழ் பேசுகிறான் என்று சொல்கிறார்கள்!… இந்த அவர்களது வரையறை வைரமுத்துவுக்கு பொருந்தாதா..?
அது என்ன பாலியல் ரீதியாக ஒரு தமிழ்ப் பெண் பாதிக்கப்பட்டால் பேசாமல் இருக்கலாம்… ஆனால், ஒரு பிராமணப் பெண் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலே கொதித்து எழ வேண்டும் என்கிற உங்களது சனாதன மனுதர்ம நியதி என்று புரிந்து கொள்ளலாமா..?
பெண்களுக்கு எதிராக குற்றம் செய்த யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே! அதற்கு வைரமுத்துகளும் விலக்கல்ல… நான் பெயர் சொல்லாமல் குறிப்பிட்ட அத்தகைய ‘சாக்கடை’களும் விலக்கல்ல…
ஒரு 15 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்… மருத்துவம் குறித்து வைரமுத்து எழுதிய கவிதை ஒன்றை நண்பர்கள் நாங்கள் சிலர் ஒன்று கூடி வாசிக்க நேர்ந்தது அதன் கடைசி வரி இப்படி இருந்தது…
“—————————-
—————————–
எல்லா நோயாளியிடமும்,
ஒரே ஒரு கேள்வி கேளுங்கள் டாக்டர்!….
“ஒவ்வொரு நாளும்,
மனச்சிக்கல் இல்லாமல் முடிகிறதா…?
மலச்சிக்கல் இல்லாமல் விடிகிறதா…?”….
கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரும் ஒரே நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டினோம்!… அந்தக் கூட்டத்தில் இலக்கிய ஆளுமையை பொறுத்தவரை நாங்கள் வியந்து பார்க்கிற ஒரு அற்புதமான மனிதர் இருந்தார் அவர் உடனே சொன்னார், “இந்த இரண்டு வரிகளுக்காக வைரமுத்துவுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்!”… இந்த நிமிடம் வரை அந்தக் கருத்தில் எங்கள் யாருக்கும் மாற்று கருத்து இல்லை… அப்படியானால் வைரமுத்து குப்பைகளை எழுதவில்லையா..? நிச்சயமாக அவைகளும் இருக்கின்றன… அதற்காக அவர் விமர்சிக்கப்பட வேண்டியவர் இல்லையா ஆமா விமர்சிக்கப்பட வேண்டியவர் தான் விமர்சிக்க வேண்டும்… அதே நேரத்தில் சிறந்த வரிகளுக்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர் அல்லவா ஆமாம் அவர் பாராட்டப்படத்தான் வேண்டும்!…
இந்த மனிதன் தேடித்தேடி விருதுகளை வாங்கிக் கொண்டான் என்று ஒரு தீவிரமான விமர்சனம் இவர்கள் அத்தனை பேரிடம் இருந்தும் வருகிறது… முற்றிலும் உண்மை! இந்தக் ‘கருப்பு’ மனிதன், எத்தனை கனமான வரிகளை எழுதினாலும், அவனை அங்கீகரித்து விடவே கூடாது என்கிற தீர்மானத்தோடு, அவனது ஆரம்ப காலத்து சமகால இலக்கிய உலகம் இருந்தது!… அவன் இலக்கிய உலகத்தை சம நிலையில் நிறுத்தி கைகூப்பி வணங்கியவனே அன்றி யாருடைய காலிலும் விழுந்து வணங்கியவன் அல்ல… இந்த எரிச்சல் அவன் காலத்தில் பெரிய கவிஞர்கள் என்று சொல்லப்பட்ட பலருக்கும் இருந்தது!… அவனது எழுத்துகளில் இன்று வரையும் ஒலிக்கும் ஒரு கம்பீரம், அது வெறும் இலக்கிய கம்பீரம் அல்ல அவனது சுயமரியாதையின் கம்பீரம்… கவிஞர் கண்ணதாசனை சந்திக்க போன நிகழ்வை, ‘இதுவரை நான்’, என்னும் ஒரு நூலில் வைரமுத்து பதிவு செய்திருக்கிறார் வாய்ப்பு இருந்தால் வாசித்துப் பாருங்கள்!… தன் வாழ்நாளின் தொடக்கத்தில் இருந்தே சுயமரியாதையை ஒரு சிறிதும் இழந்து விடாமல் தனக்கு முன்னால் இருந்த கவிஞர்களின் பாதம் பிடித்து ஆசி கோராமல், இலக்கிய உலகில் எப்படியும் ஜொலித்து விட வேண்டும் என்கிற ஒரு கருப்புத் தமிழனின் சுயமரியாதை உணர்வு தகித்து நிற்பது அந்த நூலில் எல்லா இடங்களிலும் தெரியும்!… தன் 28 வயதில் வைரமுத்து எழுதிய தன் வரலாற்று நூல் அது!…
‘கூடு’ என்று ஒரு கவிதை… சாலையின் ஓரம் ஒரு சிறிய மண் சுவரை எழுப்பி குடியிருக்கும் பெண் ஒருத்தியின் அந்த ‘அரண்மனை’யை இடிக்க அரசாங்க அதிகாரிகள் வந்து நிற்கும் போது அவளது புலம்பலாய் வந்துவிழும் கவிதை அது…
அசரடிக்கும் அற்புத வரிகள் அத்தனையும்!…
வாசித்துப் பாருங்கள்! (சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்தின் போது, சாலை ஓரமாக இருந்த பலரது வீடுகள் இடிபடும் சூழல் வந்த போது இந்தக் கவிதை, சோசியல் மீடியாக்களில் அன்று மிகப் பிரபலமாக வலம் வந்தது!)
இறுதியில் இந்த பதிவை இப்படி நான் நிறைவு செய்ய விரும்புகிறேன்!…
ஒரு மிகப்பெரிய அழகிய புல்வெளிகளும் மரங்களும் நிறைந்த மைதானம்… அதில் ஆங்காங்கே மனிதர்களோ விலங்குகளோ கழித்த கழிவுகளும் இருந்தன…
இப்போது அந்த மைதானத்தில் கன்றுகளும் பன்றிகளும் ஒரு சேர நுழைந்தன… யார் கண்ணில் எது படும் என்பது அறிவுள்ள அனைவருக்கும் தெரியும்!
(இந்தப் பதிவு வைரமுத்துவின் மீதுள்ள சில ஒழுக்க ரீதியான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை அறத்தை மீறி விடுவித்து புனிதப்படுத்தும் முயற்சி அல்ல… அதற்கும் இலக்கிய ஆளுமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புரிய வைக்கும் முயற்சி! அதே நேரத்தில், சமகாலத்தில் வைரமுத்துவை விட சிறந்த இலக்கிய ஆளுமைகள் இல்லை என்று நிறுவ முயலும் முயற்சியும் அல்ல… ஆனால் இன்று ஞானபீட விருது வழங்கப்பட்டதற்காக, வைரமுத்து மீது கல் எறியும் இந்த ‘புனிதர்கள்’ யாரும் (ஜெயமோகன்கள் உட்பட) அவரைவிட அப்படி ஒன்றும் ஆகச் சிறந்த இலக்கிய ஆளுமைகள் அல்ல என்று அறிவிக்கும் முயற்சி! இந்தப் பதிவும் ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கு உட்பட்டது தான்!).
LikeLike