புதுவையில் பூத்த யோக மலர்- 17

-திருநின்றவூர் ரவிகுமார்

இ.  ஆசிரமம்: ஆரம்பமும் வளர்ச்சியும்

 இ-4.   விடுதலைச் செய்தி

அரசியல் துறவறம் பூண்டு பாண்டிச்சேரி வந்த பின்பு வெளிப்படையாக அரசியலில் ஸ்ரீ அரவிந்தர் ஈடுபட்டது அது முதல் முறை. ஆனால் கடைசியல்ல. அவர் இரண்டாவது முறையாக அரசியலில் வெளிப்படையாக ஈடுபட்டு தன்னுடைய நிலையை அறிவித்தார். அது நடந்தது 1942 இல்.

உலகப் போரில் ஜப்பான் ஈடுபடத் தொடங்கியதும் அது பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுப்பது உறுதியானது. ஜப்பானைத் தடுத்து நிறுத்த இந்தியர்களின் உதவியைத் திரட்ட பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் விரும்பினார். போரில் இந்தியர்கள் பிரிட்டனை ஆதரித்தால் போருக்குப் பின் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தருவதுடன் இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை இந்தியர்களைக் கொண்டே உருவாக்குவது என்றும் வாக்குறுதி அளித்தார். அதுபற்றி காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச தனது பிரதிநிதியாக சர் ஸ்டெஃபோர்ட் கிரிப்ஸை அனுப்பினார்.

சர் கிரிப்ஸ்

கிரிப்ஸ் வருகையின் நோக்கத்தை ஸ்ரீ அரவிந்தர் வரவேற்றார். அவருக்கு 1942 மார்ச் 31 இல் ஆதரவுக் கடிதம் எழுதினார். இதன் மூலம் ஹிந்து – முஸ்லிம் வேற்றுமை மறையும். இருவரும் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைப்பார்கள். சுதந்திரத்திற்கும் ஒற்றுமைக்கும் இது வழி வகுக்கும். அகண்ட இந்தியா என்ற பார்வையும் அதை நிர்வகிப்பதில் இந்தியர்களுக்கும் பயிற்சியும் கிடைக்கும் என்று ஸ்ரீ அரவிந்தர் கருதினார். சர் கிரிப்ஸ் ஸ்ரீ அரவிந்தரின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பினார்.

ஜப்பானிய ஏகாதிபத்தியம் இப்போது இருக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விட ஆபத்தானது என்று ஸ்ரீ அரவிந்தர் சொன்னார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எப்படி எதிர்கொள்வது என்பது இந்தியர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது மட்டுமின்றி, அதை வெளியேற்றுவது நிச்சயமாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் காந்திஜியின் பிடியில் இருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் நெடுநோக்குப் பார்வைக்குப் பதிலாக உடனடி அரசியல் லாபத்தையே நோக்கினார்கள். மூடப்பட்ட வங்கியின் பின்தேதியிட்ட காசோலை போன்றது இது என்று கிரிப்ஸ் பேச்சை ஏற்க மறுத்தனர். தோல்வி அடையும் என்று தெரிந்தும் ஸ்ரீ அரவிந்தர் தனது சீடரான வழக்கறிஞர் துரைசாமி என்பவரை தில்லிக்கு அனுப்பி காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி கிரிப்ஸுக்கு இணக்கம் தெரிவிக்க முயற்சித்தார். எதிர்பார்த்தபடி காங்கிரஸ் தலைவர்கள் துரைசாமியின் பேச்சைக் கேட்கவில்லை; ஸ்ரீ அரவிந்தரின் ஆலோசனையை நிராகரித்தனர். இரு தேசக் கொள்கையை நிராகரிக்க  கிரிப்ஸ் கொடுத்த வாய்ப்பை நழுவ விட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.

COMMUNICATION WITH STAFFORD CRIPPS

31 Mar 1942

Sir Stafford Cripps
New Delhi

I have heard your broadcast. As one who has been a nationalist leader and worker for India’s independence though now my activity is no longer in the political but in the spiritual field, I wish to express my appreciation of all you have done to bring about this offer. I welcome it as an opportunity given to India to determine for herself and organise in all liberty of choice her freedom and unity and take an effective place among the world’s free nations. I hope that it will be accepted and the right use made of it putting aside all discords and divisions. I hope too that a friendly relation between Britain and India replacing past struggles will be a step towards a greater world union in which as a free nation her spiritual force will contribute to build for mankind a better and happier life. In this light I offer my public adhesion in case it can be of any help in your work.*1

Sri Aurobindo
The Asram
Pondicherry

31 March 1942

#

*1 Sir Stafford Cripps's telegram in reply, dated 1 April 1942:

I AM MOST TOUCHED AND GRATIFIED BY YOUR KIND MESSAGE ALLOWING ME TO INFORM INDIA THAT YOU WHO OCCUPY UNIQUE POSITION IN IMAGINATION OF INDIAN YOUTH ARE CONVINCED THAT DECLARATION OF HIS MAJESTY'S GOVERNMENT SUBSTANTIALLY CONFERS THAT FREEDOM FOR WHICH INDIAN NATIONALISM HAS SO LONG STRUGGLED.

STAFFORD CRIPPS 

***

1 Apr 1942

In view of the urgency of the situation I am sending Mr Duraiswami Iyer to convey my views on the present negotiations and my reasons for pressing on Indian leaders the need of a settlement. He is accredited to speak for me.*2

Sri Aurobindo

April 1. 1942

*2 Sri Aurobindo gave this note to his disciple Duraiswami Iyer, an advocate of Madras, whom he sent to Delhi to speak with members of the Congress Working Committee about the Cripps Proposal.—Ed. 

பிரான்ஸ் செய்த அதே தவற்றைச் செய்ய வேண்டாமென அன்னையும் வேண்டுகோள் விடுத்தார். கிரிப்ஸ் அளிக்க முன்வந்ததை காங்கிரஸ் நிராகரித்ததைக் கேட்ட பின்பு , இனி இந்தியாவுக்கு கடும் துயர் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்று சொன்னார்.

சீடர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் போரில் மாண்டனர். தமிழகம், அந்தமான், பாண்டிச்சேரி, ஆந்திரா போன்ற எல்லைப் பகுதியில் வான் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுவரை யோக சாதகர்களுக்கு மட்டுமே என்றிருந்த ஆசிரமக் கதவுகள் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் திறக்கப்பட்டன.

ஆசிரமத்தில் இருப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. போர்க்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு இருந்ததையும் மீறி அவர்களை அன்னையின் உள்ளம் அரவணைத்து உணவிட்டது. குழந்தைகள், குடும்பத்தினருக்காக ஆசிரம விதிகளும் தளர்த்தப்பட்டன. குழந்தைகளின் உலகமே வேறு. அவர்களது தேவைகள் வேறு. அதைப் புரிந்து கொண்டது தாயுள்ளம்.

இருபது பிள்ளைகளைக் கொண்டு அவர்களுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்தார் அன்னை. 1943 டிசம்பரில் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளியில் தானும் ஒரு ஆசிரியர் ஆனார்.

கல்வியைப் பற்றி ஸ்ரீ அரவிந்தருக்கு தனித்த பார்வை இருந்தது. அது அவர் அரசியல் களத்தில் இருந்த போதே கர்மயோகினில் எழுதியுள்ளார். பின்னர் பாண்டிச்சேரி வந்த பிறகு ஆர்யாவிலும் எழுதியுள்ளார். உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சி அளிக்கும் கல்வித் திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஹிட்லர் ஒழிக்கப்பட்டாலும் ஜப்பான் போர்க்களத்தில் இருந்தது. நாகசாகி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட பிறகு ஜப்பான் 1945 ஆகஸ்ட் 14 ஆம் தேதி சரணடைந்தது. உலகப் போர் முடிவடைந்து ஆகஸ்ட் 15 இல் அமைதி ஏற்பட்டது. அமைதியின் முதல் நாள் ஸ்ரீ அரவிந்தரின் 73 வது பிறந்த நாளாக இருந்தது ஒரு தற்செயல் நிகழ்வு தானா?

போருக்குப் பின் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்தது. 1946 இல் சுதந்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த  ஒரு அமைச்சரவைக் குழுவை அனுப்பினார்கள். 1942 இல் இருந்த நிலையில் முஸ்லிம் லீக் 1946 இல்  இல்லை. அவர்கள் பிரிவினையில் உறுதியாக இருந்தார்கள். காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு சீக்கிரம் அதிகாரத்தைப் பெற முடியும் என்று மட்டுமே பார்த்தார்கள். அமைச்சரவைக் குழுவை அடுத்து கடைசி கவர்னர் ஜெனரலான மவுன்ட் பேட்டன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தார். தேசம் சுதந்திரம் பெற்றது. பிரிவினையும் ஏற்பட்டது.

1947 ஆகஸ்ட் மாதம் சுதந்திரத்தை ஒட்டி ஸ்ரீ அரவிந்தர் திருச்சி வானொலிக்கு அனுப்பிய செய்தி ஒலிபரப்பானது. அதில்,  ‘பிரிவினை போக வேண்டும். போகும்’ என்று உறுதிப்படத் தெரிவித்தார்.  ‘உலகிற்கு ஆன்மிக வழிகாட்டியாக பாரதம் ஆகும்’ என்றும் தெரிவித்தார்.

1948 இல் ஆந்திரா பல்கலைக்கழகம் ஸ்ரீ அரவிந்தருக்கு மனிதநேயத்திற்கான தேசிய விருதை அளித்தது. அதை பாண்டிச்சேரிக்கு வந்து அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சி.ஆர்.ரெட்டி ஸ்ரீ அரவிந்தரிடம் அளித்து ஆசி பெற்றார்.

“விடுதலைக்குப் பிறகு நம் நாடு பல பிரச்சினைகளைச் சந்திக்கும். அதிலிருந்து மீண்டு வருவோம். தொழில்துறையில், வர்த்தகத்தில், ராணுவத் துறையில், அரசியல் களத்தில் அது மற்ற நாடுகளைப் போல மகத்தான முன்னேற்றத்தை நிகழ்த்தும். ஆனால் இந்த லௌகீக முன்னேற்றத்திற்காக தனது ஆன்மாவை - ஸ்வதர்மத்தை – இழக்கக் கூடாது. இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு இழந்தால் அது நம் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கே பெரும் இழப்பாகும். எனவே எப்பாடுபட்டாவது இந்தியாவின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கு புறவுலக முன்னேற்றம் மட்டுமல்ல அகத்திலும் (மனத்திலும்) முன்னேற்றமும் வலிமையும் பெறவேண்டும்” 

-என்று அந்த விருதை பெற்றுக் கொண்ட போது அவர் சொன்னார்.

தொடர்கிறது…

$$$

Leave a comment