புதுவையில் பூத்த யோக மலர்- 11

-திருநின்றவூர் ரவிகுமார்

ஆ. வேத ரிஷியின் வேத விளக்கம் 

 ஆ-6.  குரு பீடத்தில்…

ஜப்பானிலிருந்து பவுல் ரிச்சர்டும், மிர்ராவும் அவரது தோழி டோரதி ஹுட்சன் என்ற ஆங்கிலப் பெண்மணியும் பாண்டிச்சேரி வந்தார்கள் என்பதைப் பார்த்தோம் . டோரதிக்கு அரவிந்தர்  ‘வாசவதத்தா’ என்று மறு பெயரிட்டார். அது சுருங்கி தத்தா என்று அவர் அழைக்கப்பட்டார்.

ரிச்சர்டுக்கு அரவிந்தரின் யோகா சாதனா வழியின் கனம் தாங்க முடியவில்லையோ அல்லது வேறு விஷயங்களில் அவருக்கு நாட்டம் அதிகமாக இருந்ததோ என்று தெளிவாக நமக்குத் தெரியவில்லை. அவர் பிரான்சுக்கு 1920 நவம்பரில் திரும்பிப் போனார். போனவர் பிறகு திரும்பி வரவில்லை. ஆயினும் தன் வாழ்நாளின் இறுதிவரை அரவிந்தரை மிகவும் மதித்தார். அவரைப் பற்றி எல்லோரிடமும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ரிச்சர்டுடன் மிர்ரா பிரான்சுக்குப் போகவில்லை.

பாண்டிச்சேரியிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். அவரது தோழி டோரதி என்ற தத்தாவும் அவருடனேயே தங்கி விட்டார் . ரிச்சர்ட் போன பிறகு மழைக்காலம் தொடங்கியது. மிர்ராவும் தத்தாவும் தங்கியிருந்த வீடு மிகவும் பழையது. மழையில் இடிந்து விடுமோ என்ற நிலையில் இருந்ததால், அரவிந்தர் அவர்கள் இருவரையும் தன் வீட்டில், அடுத்த அறையில் தங்க அனுமதித்தார்.

மிர்ரா வந்த பிறகு வீட்டில் மாற்றம் ஏற்பட்டது. நான்கைந்து பிரம்மச்சாரிகள் தங்கி இருந்த வீடு இப்போது சுத்தமாகவும் ஒழுங்காகவும் ஆனது. பின்புறம் இருந்த தோட்டம் சீரானது. முன்புறம் இருந்த வராண்டா தூய்மையானது . எங்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் வந்தது. அதுவரை அரவிந்தரை தோழமையுடன் நண்பர்கள் அணுகிக் கொண்டிருந்த நிலைமை மாறி, அவரை குரு ஸ்தானத்தில் மிர்ரா அமர்த்தினார். தியானத்திற்கு அமரும்போது அரவிந்தருக்கு நாற்காலி. மற்றவர்கள் தரையில் அல்லது நாற்காலியை விட சற்று உயரம் குறைவான ஸ்டூல் போடப்பட்டது. மிர்ரா அரவிந்தரின் காலடியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

சரளாதேவி

ஆரம்பத்தில் இது பற்றி சலசலப்பு ஏற்பட்டது. குரு, ஆசிரமம் போன்ற வார்த்தைகளையும் விஷயத்தையும் அரவிந்தரே ஏற்பவர் அல்ல. இருந்தாலும் மிர்ரா தனது நடத்தையாலும் பேச்சினாலும் உயர்ந்த யோக குரு ஸ்தானத்தில் அரவிந்தரை வைத்ததுடன், சீடர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை தானே முன்மாதிரியாக நடந்து காட்டி விளக்கினார். கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் அவர் வழிக்கு வந்தார்கள். பின்னாளில்,  “நான் உங்களுக்காக எவ்வளவு தான் தாழ்ந்து வந்த போதிலும் நீங்கள் என்னைப் பற்றி உயர்ந்து வரவில்லையே” என்று அரவிந்தர் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆண்டு இறுதியில் சரளா தேவி அரவிந்தரைக் காண பாண்டிச்சேரி வந்தார். சரளாதேவி ரவீந்திரநாத் தாகூரின் அக்கா மகள். தாகூர் குடும்பத்துக்கே உரிய சுதந்திரமான சிந்தனைகளும் செயல்பாடுகளும் கொண்டவர். அரவிந்தரின் வழிகாட்டுதல்களின்படி தீவிர தேசபக்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.  ஆரம்ப காலத்தில் அரவிந்தர் வெடிகுண்டு கலாச்சாரத்தை அறிமுகம் செய்து –   வெடிகுண்டின் செய்தி, வெடிகுண்டின் தார்மிகம், வெடிகுண்டின் உளவியல், வெடிகுண்டின் கொள்கைகள் – என்று நான்கு கட்டுரைகளை எழுதி உள்ளார். அந்த வழியில் பயணித்தவர் சரளாதேவி. அரவிந்தரின் அறிமுகக் கடிதத்தைப் பெற்று லோகமான்ய பாலகங்காதர திலகர் பெருமானை நேரில் சந்தித்தவர். பெண்களை ஒருங்கிணைத்து தேசபக்திச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தியவர்.

அவர் அரவிந்தருடன் நிகழ்த்திய உரையாடலை அம்பாலால் புராணி தன் நூலில் பதிவு செய்துள்ளார். அதிலிருந்து சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.

சரளா தேவி: நீங்கள் ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிராக இருப்பதாக சொல்கிறார்களே அது உண்மையா?

அரவிந்தர்: உண்மை அல்ல. நான் ஒத்துழையாமை இயக்கத்துக்கு எதிரானவன் அல்ல. அது தொடங்கியுள்ளது, நடக்கட்டும். விடுதலை பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசத்தின் விருப்புறுதி மேலும் வலுவாகத் திரட்டப்பட வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.

சரளாதேவி: ஒத்துழையாமை இயக்கம் ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போர் முழக்கம் செய்துள்ளது.

அரவிந்தர்: உண்மைதான். ஆனால் அது போதிய தயாரிப்பும் ஒருங்கிணைப்பும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

சரளா தேவி: நீங்கள் ஏன் வெளியே வந்து உங்கள் வண்டியை ஓட்டக் கூடாது?

அரவிந்தர்: அதற்கு முதலில் பாதையை நான் தயார் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் வண்டியை ஓட்ட முடியும்.

சரளாதேவி: போராட்டத்திற்கு போதுமான ஆயுத்தங்கள் செய்யப்படவில்லை என்று நினைக்கிறீர்களா?

அரவிந்தர்: அதற்கான உணர்ச்சியும் விழிப்புணர்வும் லேசாக ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு வலுவாக அதை நசுக்கினால், அதைத் தாங்கி நிற்கும் சக்தி வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை.

சரளாதேவி: ஒத்துழையாமை இயக்கத்தை பலர் கேலி பேசுவதைக் கேட்கிறேன். அது பற்றி உங்களது கருத்தை வெளிப்படையாகக் கூறுங்கள்.

அரவிந்தர்: அதற்கு எனது ஆதரவு உண்டு. ஏனெனில் எனது நோக்கமும் அதுதான். அதேவேளையில் தயக்கமும் இருக்கிறது. ஏனெனில் அதன் அடித்தளம் வலுவாக இல்லை. மெட்ராஸில் இருந்து சில மாணவர்கள் வந்திருந்தார்கள். அரசு நியாயமாக இல்லை என்பதால் ஒத்துழையாமை இயக்கத்தை தாங்கள் ஆதரிப்பதாகக் கூறினார்கள்.  ‘பிரிட்டிஷ் அரசு நியாயமாக நடந்து கொண்டால் ...?’ என்று அவர்களைக் கேட்டேன். அவர்களிடம் பதிலில்லை.

இந்தியா சுதந்திரம் பெற வேண்டும். அது அவளுக்காக, அவளது ஆன்மா விழிப்புக்காகப் பெற வேண்டும். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதை விடவும் மிக பரந்த நோக்கம் விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமாக இருக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசையும் அதன் செயல்பாடுகளையும் பார்ப்பதாகவே நம் கண்ணோட்டம் இருக்கிறது. நாம் நம்முடைய சொந்த தேசியத்தைக் கண்டடைய வேண்டும். அதை சுதந்திரம் பெறச் செய்ய வேண்டும்.

-மற்றவர்கள் ஆட்சியாளர்களை மாற்றுவதே விடுதலை என்று போராடிக் கொண்டிருக்கும்போது அரவிந்தர் ஸ்வ – தந்திரத்தைப் பற்றி சிந்தித்துள்ளார், பேசியுள்ளார் என்பது மேற்கண்ட உரையாடலில் இருந்து தெரிகிறது.

இந்த உரையாடலை பதிவு செய்தவர் வேறொரு விஷயத்தையும் பதிந்துள்ளார். அது அரவிந்தரின் உடலில் ஏற்பட்ட மாற்றம். 1918இல் தான் பார்த்த அரவிந்தருக்கும் 1920 இறுதியில் பார்த்தவருக்கு இடையே இருந்த மாற்றம் அது. ஆரம்பத்தில் (1918இல்) மற்ற வங்காளிகளைப் போல அரவிந்தரும் மாநிறமாக இருந்தார். முகம் மட்டும் பிரகாசமாகவும் கண்கள் ஊடுருவிப் பார்ப்பதாகவும் இருந்தன. இப்போது (1920-21 இல்) அவரது கன்னம் ஆப்பிள் நிறத்தில் இருந்தது. மொத்த உடலும் லேசான வெள்ளை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அது பற்றி புராணி கேட்டபோது முதலில் பேச்சை மாற்றிய அரவிந்தர், பின்னர்,  “உயர்ந்த தளத்தில் உள்ள ஆன்ம விழிப்புணர்வு கீழிறங்கி மனோதளத்திலும் அதன் பின்பு இன்னும் கீழிறங்கி உயிர்த்தலத்திலும் அதனினும் கீழ இறங்கி வரும்போது உங்கள் நரம்பு மண்டலத்திலும் உடலிலும் மாற்றங்கள் வெளிப்படும்”என்று சொன்னார்.

இதைக் கேட்கும்போது நமக்கு வேதகால ரிஷிகா (பெண் ரிஷி) நினைவுக்கு வரலாம். வேத காலத்தில் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த பெண்மணி ஒருவருக்கு சரும நோய் ஏற்பட்டது. அதனால் அவளது கணவன் அவளை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டான். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அந்தப் பெண்மணி யோக சாதனைகளில் ஈடுபட்டார் . யோக வழியில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற முன்னேற அவரது சரும நோய் மறைந்தது; தோலின் நிறம் பிரகாசமானது. உடல் ஒளிவீசத் தொடங்கியது. விஷயத்தைக் கேள்விப்பட்ட கணவன் அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்தான். அவரோ தான் யோக மார்க்கத்தில் நீண்ட தூரம் பயணித்து விட்டதாகவும் இனி குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது என்றும் கூறிவிட்டார். பின்னாளில் அவர் உயர்ந்த ரிஷிகாவாக ஆனார் என்று வேத நூலில் கூறப்பட்டுள்ளது.

சாதாரண மக்களுக்கு தெய்வீக சக்திகளின் இருப்பை அடையாளம் காட்டுவது பல நேரங்களில் தீய சக்திகள் தான். அப்படி ஒரு சம்பவம் 1921இன் இறுதியில் நடந்தது.  ‘குருவின் காலடியில்’ என்ற நூலில் அந்தச் சம்பவம் பற்றி நேரில் பார்த்த டி.கோதண்டராமாராவ் என்ற சீடர் எழுதியுள்ளார்.

‘குருவின் காலடியில்’ நூல்

விட்டல் என்றொரு சமையல்காரன் அரவிந்தரின் வீட்டில் வேலை செய்து வந்தான். அவன் ஏதோ தப்பு செய்தான் என்பதால் தத்தா அவனைத் திட்டி விட்டார். அந்த சமையல்காரன், ‘நான் யார் என்று உங்களுக்கு காட்டுகிறேன். உங்களை இந்த வீட்டை விட்டே துரத்தி விடுகிறேன்’ என்று சவால் விட்டபடி போய் விட்டான். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனுக்கு உதவியாக இருந்த ஒரு முட்டாள் பையன் மட்டும் அங்கே இருந்தான்.

மறுநாள் அந்த வீட்டில் கற்கள் தானாகவே வந்து விழுந்தன. ஒரு கல் தத்தாவின் கையில் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் தொடர்ந்து கல்லெறி  சம்பவம் நடந்தது. வெளியே வந்து பார்த்தால் யாரும் இல்லை. போலீசுக்கு சொல்லப்பட்ட து. ஏற்கனவே கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் குதித்தோடி வீட்டுக்குள் நுழைந்தனர். கல்லெறி விழும் இடத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்த போதே அவர்கள் மீதும் கல்லெறி நடந்தது.

அவர்கள் பயந்து போய் இது மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டனர் . மாடிப் பகுதியில் இருந்த அரவிந்தருக்கும் மிர்ராவுக்கும் செய்தி சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் கீழே வந்தார்கள். மிர்ரா சூழலை கூர்ந்து பார்த்தார். அங்கிருந்த சிறுவனை மையப்படுத்தி தான் கல்லெறி விழுகிறது என்று தெரிந்து கொண்டார். உடனே அந்தப் பையனை  வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினார்.

மறுநாள் காலை சமையலறைக்கு வந்து தியானத்தில் அமர்ந்தார். அவர் சிறிது நேரம் கழித்து எழுந்த போது அங்கிருந்த தூணில் ஏதோ எழுத்துக்களும் குறிகளும் தென்பட்டன. அவற்றை தண்ணீர் விட்டு கழுவி அகற்றினார். கல்லெறிதல் நின்று போனது. மதியம் விட்டலின் மனைவி ஓடி வந்து அரவிந்தரிடம் தன் கணவன் உடல் நலமில்லாமல் அரசியல் மருத்துவமனையில் கிடப்பதாகவும் காப்பாற்றும் படியும் கெஞ்சினாள்.

சரோஜினி

மிர்ரா அவளிடம் விசாரிக்க தன் கணவனுக்கு சில முஸ்லிம்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு மந்திர வேலைகள் தெரியும். பில்லி சூனியம் வைப்பவர்கள் அவர்கள், என்றும் சொன்னாள் . அந்த ஏவல் வைத்தவனை அழைத்து வரும்படி சொல்ல, அவனும் வந்து உண்மையை ஒப்புக்கொண்டான். விட்டல் கொடுத்த பணத்திற்காக செய்ததாகச் சொல்லி, இனி செய்ய மாட்டேன் என்று உறுதி கூறி மன்னிப்பு கேட்டான். விட்டலும் மறுநாள் நலமுடன் வீடு திரும்பினான். அதன்பிறகு அவன் குடும்பத்தோடு ஊரைவிட்டுப் போய் விட்டான்.

இதை எழுதிய கோதண்ட ராமாராவ் தொடர்ந்து, அதுவரை தியானம், யோகம் சாதனாவை நம்பாமல் கிண்டல் செய்து கொண்டிருந்த உபேந்திரநாத் பானர்ஜி – இவர் ஒரு தீவிர தேச பக்தர். அரவிந்தரை அரசியலுக்கு மீண்டும் இழுக்க அவருடனே தங்கி வற்புறுத்திக் கொண்டிருந்தவர் –  உட்பட பலரும் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டார்கள். அரவிந்தரை மேலும் மதிப்புடனும் மரியாதையுடனும் பார்த்தார்கள்.  “யோக மார்க்கத்தில் ஈடுபட்டிருந்த என்னைப் போன்ற சீடர்கள் மேலும் தீவிரமாக அதில் ஈடுபட்டார்கள்” என்று கோதண்ட ராமாராவ்  பதிந்துள்ளார்.

அந்த ஆண்டு அரவிந்தரின் தங்கை சரோஜினி பாண்டிச்சேரிக்கு வந்தார். வீட்டை விட்டு வெளியே வராத அரவிந்தர் தங்கையை ரயில் நிலையம் சென்று வரவேற்றார். சில நாட்கள் கழித்து அவள் திரும்பிச் செல்லும் போது ரயில் நிலையம் வரை வந்து வழியனுப்பினார்.

சீடர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அவர்கள் இருந்த வீடு போதாமல் ஆனது. அரவிந்தர் வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தார் . அது இப்போது அரவிந்தர் ஆசிரமத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இங்கு வந்த பின்பு அவரது யோக சாதனைகள் மிகவும் தீவிரமடைந்தன.

தொடர்கிறது…

$$$

Leave a comment