-முரளி சீதாராமன்
நுகர்வுக் கலாச்சாரத்தால் தத்தளிக்கும் இன்றைய தலைமுறைக்கு ஓர் இதமான அறிவுரை கூறும் கட்டுரை இது. தேசிய சிந்தனைப் பேரவையின் சேலம் அமைப்பாளர் முரளி சீதாராமன் எழுதியுள்ள இக்கட்டுரை, அவருக்கே உரிய அங்கதத்துடன் நிறைவு பெறுகிறது. படியுங்கள்.... மலரும் நினைவுகளில் திளையுங்கள்....

அந்தக் காலத்து பார் சோப். இதை 3 அல்லது 4 துண்டுகளாக்கி பயன்படுத்தும் மிடில் க்ளாஸ்!
செங்கல் மாதிரி நல்ல கனம் – செங்கல் மாதிரி கெட்டியான சோப்!
பிறகு – “சர்ஃப்னு ஒண்ணு வந்திருக்காம்! பக்கெட் தண்ணீரில் நாலு ஸ்பூன் போடணுமாம்! ஸ்பூன் அவாளே தராளாம்! அதில் நாலு ஸ்பூன் பவுடரை போட்டு கையை விட்டு அலசினால் நுரை குபு குபுன்னு பொங்குமாம்! பிறகு துணிமணிகளை அதில் போட்டு முக்கி ஊற வைக்கணுமாம்! துவைக்கற கல்லில் துணியைப் பரத்தி பார் சோப்பால கை வலிக்கத் தேய்க்க வேண்டியதே இல்லையதாம்! கரை எல்லாம் பளிச்னு போயிடறதாம்! சர்ஃப்னு பேராம்!”…
மிடில் கிளாஸ் சொல்லிச் சொல்லி அதிசயித்த காலம் அது!
1960 களின் பிற்பகுதி – 1970 களின் முற்பகுதி என்று சொல்லலாம்!
ஆனால் அந்த “SURF” பாக்கெட் வாங்க மிடில் க்ளாஸ் பட்ஜெட் உதைக்கும்!
“அவங்க வீட்டுல துணிக்கு சர்ஃப் யூஸ் பண்றாங்க”- என்பது ஏதோ ப்ளைமவுத் கார் வைத்துள்ளார்கள் என்பது மாதிரி அதிசயம்.
இந்த சோப்பைப் போட்டு துவைத்துவிட்டு – வெள்ளை சட்டை/ பேன்ட்/ ரவிக்கை போன்ற வெள்ளை நிற துணிகளை மேலும் பளபளப்பாக்க TINOPAL என்று தனியாக ஒரு தூள் டப்பாவில் வரும்.
அந்த டப்பாவின் அழகுக்காகவே ஏங்கி இருக்கிறோம்!
ஆனால் அப்போது அதெல்லாம் மிடில் க்ளாஸ் பட்ஜெட்டுக்கு பொருந்தாத LUXURY!
ஒரு மாதிரி வெள்ளை சட்டை மஞ்சள் சாயம் பூத்த மாதிரி இருக்கும் – அதையே போட்டுக் கொண்டு போவோம்.
இந்த MIDDLE CLASS புத்தி அந்தக் காலத்தில் எதை எல்லாம் LUXURY என்று – வாங்க முடியாமல் புறக்கணித்து இருக்கிறது? – என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது! இந்தத் தலைமுறையிடம் சொன்னால் நம்பக் கூட மாட்டீர்கள்.
பள்ளியில் NCC ல் சேர்வோம்!
KIWI என்பதுதான் உயர் ரக பாலீஷ்! அதைத் தனியாக வீட்டில் வாங்க வசதி இருக்காது.
நாலு பையன்கள் ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு ஒரு ப்ரவுன் பாலீஷ் டப்பா & பிரஷ் வாங்குவோம்.
ஒருவன் மாற்றி ஒருவன் பொது பாலீஷ் டப்பா – பொது ப்ரஷ் ஷேர் பண்ணுவோம்.
எங்கள் வீட்டில் ஷூ பாலீஷ் டப்பா வாங்கித் தருவார்கள் – ஆனால் பிரஷ் ஆடம்பரம்!
“பழைய பனியன் கிழிசல் இருக்கே – அதை வச்சு தேச்சேன்னா பளபளனு ஆகிடறது!”
இருந்தாலும் பிரஷ்ஷின் நறுவிசு கிழிசல் பனியன் துணியில் வராது.
பைலட் பேனா ஆடம்பரம் – WRITER பேனா போதும்!
CAMEL (CAMLIN) இங்க் ஆடம்பரம் – ப்ரில் இங்க் போதும்!
“எதற்கு ஸ்பைரல் பைண்ட் நோட் எல்லாம்! இந்தா இந்த SWAN BRAND ரூல்ட் நோட் வாங்கிக்கோ போரும்!”
“எதற்கு ROUGH NOTE க்கு புதுசா நோட்? பழைய சப்ஜெக்ட் நோட்டில் எல்லாம் மிஞ்சின பக்கத்தை கிழிச்சு தச்சுத் தரேன்!”
புஸ்தகம் தைக்கும் ஊசி என்றே உண்டு – அதை நன்கு வலிக்கக் குத்தி கோர்த்து – பழைய எத்தனையோ நோட்களின் எஞ்சிய பக்கங்களின் தொகுப்பாக “ROUGH NOTE!”
அதைப் புரட்டிக் கொண்டே வந்தால் ஒரு பக்கம் ONE SIDE RULED நோட்டாக மாறும்! ஓ பழைய ஸயின்ஸ் நோட்!
இன்னும் கொஞ்சம் தாள்களைத் தள்ளினால் கோடுகள் கிடை – நெடுவாக கோடுகள் மாறும்! ஓ! பழைய மேத்ஸ் நோட்!
மிடில் க்ளாஸ் அற்பத்தனம் – இல்லை இல்லை அவ்வளவுதான் வசதி!
புதிதாக ஒரு நோட்டு வாங்காமல் – இப்படி குடுகுடுப்பைக்காரன் அங்கி மாதிரி ஒரு நோட்டை வீட்டிலேயே தைத்தால் எட்டணா மிச்சமாகுமே!
அப்படிப் பார்த்துப் பார்த்து சேமித்த பெற்றோர்களால்தான் இந்த நிலைக்கு ஓரளவு பகவான் அருளால் உயர்ந்தோம்!
ஆனால் ஸ்வாதீனமாக வேலை, சம்பாத்யம் என்று வந்த பிறகு எனக்கு முதலில் இந்த மிடில் க்ளாஸ் “இயலாமை” யில் இருந்து வெளியேற வேண்டும் என்ற வெறியே வந்தது.
பேனா இங்க் CHELLPARK தான்! பேனா பைலட்தான்! அல்லது PARKER!
ஷூ என்றால் BATA AMBASSADOR தான்!
கோபால் பல்பொடியை பெங்கால் CALIGHAT உடன் சேர்த்து விரலால் தேய்த்தது போதும்!
முதலில் FOREHANS டூத் பேஸ்ட் சொந்த சம்பாத்யத்தில் வாங்கியபோது கோடி ரூபாய் ஜெயித்த சந்தோஷத்தில் அந்த டூத்பேஸ்ட் டியூபை – அதன் வழவழப்பான SURFACE ஐ தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்த தலைமுறை நான்!
முதலில் இந்த SECOND HAND புஸ்தகம் – யாரோ பயன்படுத்தியதை வாங்குவதை ஒழி!
CAIIB பரீட்சைக்கு ACCOUNTANCY க்கு மட்டும் R.L.GUPTHA & RADHASAMY, SUKLA GREWAL SUNEJA GUIDE பிறகு COMMERCIAL LAW வுக்கு N.D.கபூர், MANAGEMENT ACCOUNTING க்கு மட்டும் C.JEEVANANDAM…
இப்படி தினுசு தினுசாக வாங்கினேன்!
அப்போதும் சொந்த சம்பாத்யம் வந்த பிறகும் – “உன் ஆபீசிலேயே சீனியர் யாராவது படிச்ச CAIIB புஸ்தகம் இருந்தால் வாங்கிப் படியேன்!”- என்பாள் அம்மா!
அவள் மீது இல்லை – அந்த மிடில் கிளாஸ் புத்தி மீது எரிச்சல் வரும்!
அந்தச் சிக்கன புத்தி ஒரு காலத்தில் தேவைப்பட்டிருக்கலாம் – பிறகுமா?
இதை எல்லாம் இன்றைய தலைமுறை நம்பக் கூட நம்பாது!
இப்போதும் இந்தி பரீட்சை தயாரிப்புக்கு நன்கு விலை உயர்ந்த தரமான – SPIRAL BINDING நோட்டுகளையே பயன்படுத்துகிறேன் – அதுவும் 1st & 2nd Paper களுக்குத் தனித்தனியாக!
அதுவும் MAIN PREPARATION க்கு 2 – பிறகு பரீட்சை சார்ந்த PREPARATION க்கு 2 என்று நான்கு தரமான தாள்கள் கொண்ட நோட்கள்!
இதுவே என்னவோ கோடி ரூபாய் பொக்கிஷம் கிடைத்தாற்போல் உள்ளது!
இன்னமும் மிடில் க்ளாஸ் கஞ்ச புத்தி போகவில்லையோ – இதை எல்லாம் ஆடம்பரம் என்று பிரமிக்கும் புத்தி மாறவில்லையோ?
“காட்பரீஸ் சாக்லேட் எதுக்கு? PARRY மிட்டாய் போதும்!”
“காம்லின் ஜாமெண்ட்ரி பாக்ஸ் எதுக்கு? SWAN / TIGER போதும்”
நோ! கிடையாது! நான் அந்த காம்பரமைசுக்கு இணங்க மாட்டேன்!
பைசா போதவில்லை என்றால் இரண்டு மாதம் காசு சேர்த்து வைத்தாவது HIGH BRAND எதுவோ அதை வாங்குவேனே தவிர – போதும் அந்த COMPROMISE எல்லாம் என் தலைக்கட்டோடு போதும்!
இன்றைக்கு என் பேரன் காலையில் பல் தேய்க்க 2 தினுசு பிரஷ் – ஒன்றுவிட்டு ஒன்று கிழமைகளில், இரவில் தேய்க்க 2 தினுசு பிரஷ் அதே மாறி மாறியமைந்த கிழமைகளில் பயன்படுத்துகிறான்!
LET HIM ENJOY!
பிறகு அவன் வளர்ந்த பிறகு சொல்லிப் புரிய வைப்போம் – நீ பயன் படுத்தும் 2 ஆவது பிரஷ் அடுத்தவனுடையது தோழா!”
$$$