புதுவையில் பூத்த யோகமலர் – 3

மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-3...

 அ. வேதபுரியில் வேதரிஷி

அ-3. உளவாளியா, நண்பனா?

சுரேஷ் சக்கரவர்த்தி (மோனி) கல்கத்தாவில் இருந்து ரயிலில் சென்னை வழியாக பாண்டிச்சேரிக்கு 1910 மார்ச் 31 ஆம் தேதி வந்தார். இந்த இளைஞர் போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் எந்தக் காரணத்திற்காகவும் எப்போதும் வராதவர் என்பதால், எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் பாண்டிச்சேரி வந்துவிட்டார். அவரிடம் சீனிவாசாசாரியாவுக்கு அரவிந்தர் கொடுத்த அறிமுகக் கடிதம் இருந்தது. மண்டயம் சீனிவாசாச்சாரியாவுடன் சுப்பிரமணிய பாரதியாரும் இணைந்து,  ‘இந்தியா’ பத்திரிகையை சென்னையில் இருந்து நடத்த முடியாத காரணத்தால் பாண்டிச்சேரியில் இருந்து வெளியிட்டு வந்தனர் .1910 ஜனவரியில்  ‘இந்தியா’ பத்திரிகையில் அரவிந்தரின் நேர்காணல் வெளிவந்திருந்தது. அதற்கு முன்பு  ‘விஜயா’ பத்திரிகையில் 18 செப்டம்பர் 1909 அன்று அவரது நேர்காணல் வந்தது.  ‘விஜயா, இந்தியா’ இரண்டிற்கும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பொறுப்பாக இருந்ததால், இவை இரண்டிலும் வெளிவந்தது. இருவருக்கும் அரவிந்தருடன் நல்ல அறிமுகம் உண்டு. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலேயே நேரில் பார்த்து பேசிப் பழகி இருந்தனர்.

சீனிவாசாச்சாரியாவை தேடிப் பிடித்து ஸ்ரீ அரவிந்தரின் அறிமுகக் கடிதத்தைக் கொடுத்தார் மோனி. அரவிந்தர் பாண்டிச்சேரி வருவதை அறிந்து சீனிவாசாச்சாரியா முதலில் அதிர்ச்சியும் பிறகு சந்தேகமும் அடைந்தார். அரவிந்தர் தங்க இடம் காட்டும்படி மோனி வற்புறுத்த , ஏதோ ஒரு வீட்டில் உள்ள ஒரு பகுதியைக் காட்டினார். மோனிக்கு திருப்தி இல்லை. அதே வேளையில் அரவிந்தரை வரவேற்க பெரிய ஏற்பாடுகளை சீனிவாசாச்சாரியார் செய்வதைத் தெரிந்து கொண்ட மோனி அவரிடம்,   “அரவிந்தர் யாருக்கும் தெரியாமல், குறிப்பாக ஆங்கில அரசுக்கு தெரியாமல் சில காலம் தவ யோகம் செய்யவே பாண்டிச்சேரி வருகிறார். நீங்கள் வரவேற்பெல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டாம்” என்று வலியுறுத்தினார். விருப்பமே இல்லாமல் அது ரத்து செய்யப்பட்டது.

ஏப்ரல் 4 ஆம் தேதி எஸ்.எஸ்.டூப்ளெக்ஸ் கப்பலில் பாண்டிச்சேரி வந்தார் அரவிந்தர். பாண்டிச்சேரியில் துறைமுகம் கிடையாது. எனவே கப்பல் கடலிலிருந்து சற்று தூரத்தில் நிற்கும். கரையிலிருந்து படகில் சென்று கப்பலை அடைந்தனர். மோனியும் சீனிவாசாச்சாரியாவும் அரவிந்தரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். அவருடன் வந்த பிஜோவையும் அழைத்துக் கொண்டு அதே படகில் கரைக்கு வந்தனர். சீனிவாசாச்சாரியார் ஏற்கனவே ஒரு குதிரைவண்டியை ஏற்பாடு செய்திருந்தார்.

சங்கர செட்டியார் வீடு

அரவிந்தர் அதில் ஏறிக்கொள்ள மற்றவர்கள் வேறொரு வண்டியில் வந்தனர். பெட்டி, படுக்கையை எடுத்துக்கொண்டு வந்த மோனி வீட்டைப் பார்த்து திகைத்தான். அவனுக்கு காட்டிய வீடு இதுவல்ல. வீட்டுக்குள் சென்றால் அது விஸ்தாரமாகவும் வெளிச்சமும் காற்றோட்டம் உள்ளதாகவும், அரவிந்தருக்கு ஏற்றதாகவும் இருப்பதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தான். வீட்டின் முதல் மாடியில் ஒரு சாய்வு நாற்காலியில் புன்னகையுடன் அரவிந்தர் வீற்றிருப்பதைப்  பார்த்தான். பிறகு தான் அவனுக்கு ஒரு உண்மை சொல்லப்பட்டது.

உளவாளியோ என்று மோனி மீது சந்தேகப்பட்ட தேசபக்தர்கள் அவனுக்கு தவறான வீட்டைக் காட்டினர். அவன் சொன்னபடி அரவிந்தர் வராவிட்டால் உளவாளி என்று உறுதிப்பட்டு அவனை நையப் புடைத்து பிரஞ்சு காவல் துறையிடம் ஒப்படைக்க நினைத்திருந்தனர். ஆனால் அரவிந்தர் சொன்னபடி வந்துவிட்டார். அவன் உளவாளி அல்ல என்றும் தெரிந்தது.

அரவிந்தர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவருக்கு காவலாக மோனியும் பிஜோவும் யாரையும் உள்ளே விடாமல் விழிப்புடன் பார்த்துக் கொண்டனர். விதிவிலக்கு இருவருக்கு மட்டுமே இருந்தது ஆரம்பத்தில். ஒருவர் சீனிவாசாச்சாரியார், மற்றவர் சுப்பிரமணிய பாரதி. அரவிந்தர் தங்கிய வீடு சங்கர செட்டியாருக்கு சொந்தமானது. அந்த வீட்டில் தான், சுவாமி விவேகானந்தர் பாண்டிச்சேரி வந்த போது தங்கியிருந்தார்.

இளைஞர்கள் இருவரும் வீட்டுக்குள் யாரையும் – மேற்சொன்ன இருவரைத் தவிர -விடாமல் காவல் காத்தனர். அதற்குக் காரணம் இருந்தது. முதலாவது காரணம், அரவிந்தர் தவ யோகத்தை இடையூறு இல்லாமல் மேற்கொள்வது. இரண்டாவது காரணம், காவல்துறையின் கண்ணில் படாமல் இருப்பது. முதல் மூன்று மாத காலத்திற்கு இந்தக் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருந்தது. இரண்டு நண்பர்களும் கூட அரவிந்தரை பார்த்துப் பேச, இருட்டிய பிறகு இரவு ஏழு மணிக்கு மேல்தான் வருவார்கள்.

பவுல் ரிச்சர்ட்

சங்கர செட்டியார் வீட்டில் அரவிந்தர் தங்கி இருந்தபோது ஒரு முக்கியமான சந்திப்பு நிகழ்ந்தது. எழுத்தாளரும் வழக்கறிஞருமான பிரெஞ்சு நாட்டு அறிஞர் பவுல் ரிச்சர்ட் தேர்தல் அரசியல் விஷயமாக இந்தியா வந்தார். பாண்டிச்சேரியில் முக்கிய பிரமுகர்களின் ஒருவரான சிர் நாயுடு (பெயரைத் தவிர இவரைப் பற்றி வேறெந்த தகவலும் இல்லை) என்ற அவரது நண்பர் மூலமாக அரவிந்தரைப் பற்றி தெரிந்து கொண்டு அவரை சந்தித்தார். இரண்டு முறை நடந்த அவர்களது சந்திப்பில் பல்வேறு விஷயங்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் அரவிந்தருடன் விவாதித்தார் . அந்தச் சந்திப்பு அவரிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஜப்பான் சென்ற போது அங்கு அரவிந்தருடனான சந்திப்பு பற்றி பேசினார்.  “மகத்தான நிகழ்வுகள், மகத்தான சாதனைகள், மகத்தான மனிதர்கள், தெய்வீக புருஷர்களுக்கான காலம் இது. உலகின் ஏதோ ஒரு மூலையில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாவிட்டால் உலகம் செத்துவிடும். காரணம் அவர்கள் தான் உலகிற்கு ஒளி, உலகிற்கு உஷ்ணம், உலகிற்கு வாழ்வு. அப்படியானவர்களைத் தேடி நேரில் காண நான் உலகம் முழுக்கவும் சுற்றியுள்ளேன் . அப்படிப்பட்டவர்களில் உயர்ந்த ஒருவரை , அவர்களது தலைவரை , நாளைய உலகின் நாயகரை நான் ஆசியாவில் சந்தித்தேன். அவர் ஒரு ஹிந்து. அவர் பெயர் அரவிந்த கோஷ்”  என்று பவுல் ரிச்சர்ட் குறிப்பிட்டார்.

ரிச்சர்ட் உடனான சந்திப்புக்குப் பின்புலமாக ஒரு ஆழ்ந்த பொருள் இருந்தது. அதுதான் அவரது மனைவியான மிர்ராவுக்கும் அரவிந்தருக்கும் ஏற்பட்ட அறிமுகத்துக்கு வித்திட்ட சந்திப்பு. 1910 இல்  ரிச்சர்ட் உடனான சந்திப்பின் விளைவாக மிர்ரா 1914 இல்  அரவிந்தவைச் சந்திக்க பாண்டிச்சேரி வந்தார். அது பற்றி பல ஆண்டுகள் கழித்து அவர்,  “1910 இல் என் கணவர் தனியாக பாண்டிச்சேரிக்கு வந்தார்; ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார். அதுவொரு வினோதமான மற்றும் சுவாரஸ்யம் மிகுந்த சந்திப்பாக இருந்தது. அப்போதிருந்தே நாங்கள் இருவரும் இந்தியாவுக்கு வர வேண்டுமென மிகவும் விரும்பினோம். இந்தியாதான் எனது உண்மையான தாய்நாடு என்பதை உணர்ந்து கொண்டேன். 1914 இல் தான் எங்களுக்கு அந்த ஆசி கிடைத்தது. அதுநாள் வரையில் கிருஷ்ணர் என்று கூறிக் கொண்டிருந்தது ஸ்ரீ அரவிந்தரைத் தான் என்பதை அவரை நேரில் பார்த்தவுடன் எனக்கு தெரிந்து விட்டது. என்னுடைய இடமும் பணியும் இனி இந்தியாவில் அவருக்கு அருகில் இருப்பது தான் என்பதை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டேன்”  என்று கூறியுள்ளார் .

இதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது . நம்ப சிரமமாக இருக்கிறது. காரணம் இது அமானுஷ்யமாக இருக்கிறது. ஆனால் நம்ப முடியாது என்று சொல்ல முடியாது. ஏன் ? என்ன காரணம் ?

தொடர்கிறது…

$$$

Leave a comment