புதுவையில் பூத்த யோக மலர் – 2

-திருநின்றவூர் ரவிகுமார்

மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-2...

அ. வேதபுரியில் வேதரிஷி

அ-2. இதுவரை நடந்த கதை…

1900 ஆண்டுகளில் ‘மாட்சிமை மிக்க மகாராணிக்கு’ என்று மனு போட்டுக் கொண்டிருந்தது காங்கிரஸ். “சுதந்திரம் நமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்” என்று தேசியத்தை தீவிரமாக முன்வைத்தவர்  லோகமான்ய பாலகங்காதர திலகர் பெருமான். அவரது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு, மனு போட்டுக் கொண்டிருந்த காங்கிரசுக்குள் ஒளி பிறந்தது. தேசியவாதத்தை தீவிரமாக முன்வைத்த திலகர் பெருமானின் தலைமையை ஏற்றுக் கொண்டு கற்றவர்களும் இளைஞர்களும் விடுதலைப் போராட்ட களத்தில் ஈடுபட்டனர்.

வங்கத்தைச் சேர்ந்த பிபின் சந்திர பாலர், அரவிந்த கோஷ், தென்னாட்டுத் திலகர் என கொண்டாடப்பட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை,  மகாகவி சுப்பிரமணிய பாரதி, சீனிவாசாச்சாரியர், வ.வேசு.ஐயர், சுப்பிரமணிய சிவா போன்றோர் திலகர் பெருமானின் வழியில் தேசிய சிந்தனையை தீவிரமாக வளர்த்தனர்.

எனினும், ஆங்கிலேயருடன் சமரசமாகச் செல்ல வேண்டும் என்று கூறும் மிதவாதிகளும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தனர். தீவிர தேசியவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே கடுமையான கருத்துமோதல் இருந்து வந்தது. சூரத் மாநாடு மட்டும் கல்கத்தா மாநாட்டில் இந்த மோதல் வெடித்து, தீவிர தேசியவாதிகள் மற்றும் மிதவாதிகள் என்று காங்கிரஸ் பிளவு பட்டது (1907).

ஆங்கிலேயே அரசு மிதவாதிகளுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டு, தீவிர தேசியவாதிகளை கடும் நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க முனைந்தது. வ.உ.சிதம்பரம் பிள்ளையையும் சுப்பிரமணிய சிவாவையும் ஆங்கிலேய அரசு சிறையிலிட்டு வதைத்ததை யாவரும் அறிவர்.  ‘இந்தியா’ பத்திரிகை மூலம் சுதந்திர கனலை மூட்டிய மண்டயம் சீனிவாசாச்சாரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியும் பிரிட்டிஷ் இந்தியப் பகுதியில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு, பிரஞ்சு ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரியில் வசிக்க வேண்டியதாயிற்று.

அதே காலகட்டத்தில் வங்கத்தில் தேசிய எழுச்சிக்கு மூளையாக செயல்பட்ட அரவிந்தரை ஒடுக்க வழி தேடிக்கொண்டிருந்தது ஆங்கிலேய அரசு. கிங்ஸ்போர்ட் என்ற ஆங்கிலேய மாவட்ட நீதிபதி, 14 வயதேயான சிறுவனை தேசபக்தச் செயலில் ஈடுபட்டதற்காக பொதுவெளியில் சாட்டையால் அடித்துக் கொன்றான். தேசபக்தர்கள் கொதித்து எழுந்தனர். கிங்ஸ்போர்டு வழக்கமாகப் பயணிக்கும் சாரட் வண்டி (குதிரை வண்டி) மீது வெடிகுண்டு வீசி அவனைக் கொல்ல முயன்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவன் வண்டியில் இல்லை; அதில்இருந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகள் இறந்தனர்.

தனிமனித வன்முறைச் செயல்களில் ஈடுபடாதவர் அரவிந்தர். என்றபோதும், ஆங்கிலேய அரசு அவரையும், அவரது தம்பி பரீந்தர்நாத் கோஷையும், அவரது நண்பர்கள் பலரையும் மேற்கண்ட  வன்செயலுடன் தொடர்பு படுத்தி கைது செய்தது. 1908 மே மாதம் 2ஆம் தேதி அரவிந்தர் கைது செய்யப்பட்டார். மே மாதம் 5 ஆம் தேதி அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘அலிப்பூர் சதி வழக்கு’ என்று ஆங்கிலேய அரசால் சித்தரிக்கப்பட்ட அந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகள் கீழமை நீதிமன்றத்தில் மே மாதம் 17 ஆம் தேதி தொடங்கி நடந்தது. பிறகு உயர்நிலை நீதிமன்றத்தில் 1908 அக்டோபர் 19 ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது. 131 நாட்கள் நடந்த அந்த வழக்கு விசாரணை 1909 ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைந்தது. 4,000 பக்கங்கள் கொண்ட ஆவணம். 400 சான்றுகள். 200 சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது. வாத பிரதிவாதங்களுக்கு பிறகு 1909 மே 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

விசாரணையின் போது சிலர் இறந்து விட்டனர்; சிலர் தற்கொலை செய்து கொண்டனர்;  ஓரிருவர் கொல்லப்பட்டனர். இறுதியில் அரவிந்தர் விடுதலை செய்யப்பட்டார். அவரது தம்பி பரீந்தரும் நண்பர்கள் சிலரும் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பலருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஓராண்டு காலம் தனிமை சிறையில் இருந்த போதும், அரவிந்தர் விடுதலை பெற்றது ஆங்கிலேய அரசு அதிகாரிகளுக்கு ஆத்திரமூட்டியது. அவரை முடக்க வேறுவழிகளில் முயன்றது.

ஓராண்டு கால தனிமைச் சிறையில் அரவிந்தர் தீவிர யோக தவம் மேற்கொண்டார். அதனால் அவருக்கு சில தரிசனங்கள் கிடைத்தன. இந்திய விடுதலை உறுதி என்பதும் அவருக்குத் தெரிந்தது. விடுதலைக்குப் பின் இந்தியா பயணிக்க வேண்டிய பாதை பற்றி அவருக்கு சில வழிகாட்டுதல்கள் கிடைத்தன. வெளியே வந்தவுடன் அவர் அந்த வழிகாட்டுதல்களின் படி நடக்காமல் பழையபடி அரசியல் விடுதலை வேண்டி தேசபக்தச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த நிலையில் அரவிந்தரை விசாரணை செய்த காவல்துறை உயர் அதிகாரி நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து அரவிந்தர் மீது இரண்டாவது வழக்கு தொடர ஆங்கிலேய அரசு முயன்றது. 

அரவிந்தர் பயணித்த எஸ்.எஸ்.டூப்ளெக்ஸ் கப்பல்

அந்த வழக்கில் அரவிதர் கைது செய்யப்படலாம் என்ற செய்தி கிடைத்தது. எனவே அவர்  கல்கத்தாவை விட்டு வெளியேறி பிரெஞ்சு ஆதிக்கப் பகுதியான சந்திரநாகூர் சென்றார். ஆறு வாரங்கள் யாருக்கும் தெரியாதபடி தலைமறைவாக அங்கு இருந்தார்.  

‘கர்ம யோகினி’ல் அரவிந்தர் எழுதிய  “என் நாட்டு மக்களுக்கோர் மடல்” என்ற கட்டுரை அரசு விரோதமாக இருப்பதாகக் கூறி அவரை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.  கல்கத்தா நகரம் முழுக்கவும் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தது ஆங்கிலேய அரசு.

இந்நிலையில் கல்கத்தா செய்தித்தாள் ஒன்றில் (கர்மயோகின் – அரவிந்தர் இல்லாததால் அதன் ஆசிரியராக சகோதரி நிவேதிதை செயல்பட்டார்) ஒரு செய்தி வெளியானது.  “அரவிந்தர் சில நாட்களாக கல்கத்தாவில் இல்லை. வீட்டிலோ  ‘வந்தேமாதரம்’ பத்திரிகை அலுவலகத்திலோ அவர் இல்லை. விசாரித்ததில் அவர் திபெத்திய மகாத்மாக்களைச் சந்திக்க சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் திபெத்திற்கு திடீரென்று எப்படி சென்றார், யார் அந்த மகாத்மாக்கள், என்ன விஷயம் பற்றி அவர்கள் ஆலோசிக்கிறார்கள் என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை” என்று அந்தச் செய்தி கூறியது.

காவல்துறை குழப்பமடைந்தது. ஆனாலும்  விழிப்புடன் கல்கத்தாவை கண்காணித்து வந்தது. அந்தக் குழப்பமான சூழ்நிலையை அரவிந்தர் பயன்படுத்திக் கொண்டார். அவருக்குக் கிடைத்த இறையாணையின்படி அவர் எஸ்.எஸ்.டூப்ளெக்ஸ் என்ற கப்பலில் ஏறி கொழும்பு செல்லும் பயணச்சீட்டில் பாண்டிச்சேரி வந்தடைந்தார்.

பிறகுதான் ஆங்கிலேய அரசுக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வந்தது. ஒன்று,  “திபெத்திய மகாத்மாக்களுடன் சந்திப்பு” என்ற செய்தியை வெளியிட வைத்து திசை திருப்பியது அரவிந்தரேதான். இரண்டு , கொழும்புவில் எதிர்பார்த்தபடி அரவிந்தர் வரவில்லை; சென்னையிலும் இறங்கவில்லை. எனவே பாண்டிச்சேரியில் அவர் இருக்க வாய்ப்புண்டு என்று அங்கு ரகசியத் தேடுதலை மேற்கொண்டது. ஏப்ரல் 9 ஆம் தேதி, ‘அரவிந்தர் பாண்டிச்சேரியில் தான் இருக்கிறார்’ என்று ஆங்கிலேய காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு உறுதி செய்தது.

(இது முன்கதை சுருக்கம். மேலும் விவரங்களுக்கு இதே வலைதளத்தில் உள்ள முந்தைய கட்டுரைகளைக் காண்க. அல்லது  ‘விடுதலைப் போரில் அரவிந்தர்’ என்ற நூலைப் படிக்கவும்)

தொடர்கிறது…

$$$

Leave a comment