கம்யூனிஸ்டுகளால் கைவிடப்பட்ட கம்யூனிசம்

-ராகேஷ் சின்ஹா

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஏன் கரைந்து வருகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை,  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில், பாஜகவின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் ராகேஷ் சின்ஹா தனது கட்டுரையில் அளித்துள்ளார். இதோ அக்கட்டுரை…

ஒரு காலத்தில் இந்திய அரசியலில் வலிமையான குரலாகவும் அசைக்க முடியாத சக்தியாகவும் இருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது தேர்தல் அரசியலில் மட்டுமன்றி தொழிலாளர்கள் , விவசாயிகள் மத்தியிலும் மதிப்பிழந்து போயுள்ளனர். ஆர்எஸ்எஸ் சார்புள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் இன்று தொழிற்சங்கக் களத்தில் மிகப்பெரிய, வலிமையான தொழிற்சங்கமாக ஆளுமை கொண்டுள்ளது. நூற்றாண்டு கால கருத்தியல், அரசியல் பயணத்தில் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கான காரணத்தை எந்த கம்யூனிச அமைப்பும் பொதுவெளியில் மட்டுமல்ல, அமைப்புக்குள்ளும் ஆய்வு செய்வதாகவோ, விவாதிப்பதாகவோ தெரியவில்லை. எதையும் தீவிரமாக விவாதிப்போம் என்கின்ற அவர்களின் மரபுக்கும் கூட இது முரணாக இருக்கிறது.

புதிய தலைமுறையைச் சார்ந்த கம்யூனிஸ்டுகள் (தில்லியில் உள்ள) பிரதமர்களின் காட்சியகம், நூலகத்தில் தங்களது முன்னோடிகள் பேசிய பதிவுகளைக் கேட்டு தங்கள் அறியாமையை போக்கிக் கொள்ள முடியும். ஆனாலும் உலகம் முழுவதும் அரசியலில் போக்கு மாறி உள்ளது. பிலு மோடி அல்லது மினு மசானி போன்ற வலதுசாரிகள் இன்று இல்லை. அதேபோல எம்.என்.ராய், பசவபுன்னையா போன்ற இடதுசாரிகளும் இன்றில்லை.

கடந்த பல தசாப்தங்களாக எந்த ஒரு தீவிரமான இலக்கியத்தையோ, ஆழமான அரசியல் கருத்தாய்வையோ கம்யூனிஸ்டுகள் உருவாக்கவில்லை. 1990 களில் தொடங்கி அவர்களின் கவனம் முழுக்கவும் ஆர்எஸ்எஸ், பாஜக மீது மட்டுமே உள்ளது. அதுவும் கூட ஆழமற்றதாகவே இருக்கிறது. பொதுத்துறை, அரசுடைமை பற்றிப் பேசும் சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம் எல்) போன்ற கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து கூட நவதாராளவாதம், நேரடி அந்நிய முதலீடு, தனியார் மயமாதல் , சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிரான மாற்றுக் கண்ணோட்டத்தை, செயல்திட்டத்தை இதுவரை உருவாக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் சார்புடைய பிஎம்எஸ், சுதேசி ஜாக்ரன் மன்ச் போன்ற அமைப்புகள் முன்னோடியாக வெகு தூரம் பயணித்துள்ளன.

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கு அடையாளச் சிக்கல் இல்லை. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் ‘நாம் யார்?’ என்ற கேள்விக்கு விடை தேடப் போக பல முரண்பாடுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பிளவுகளுக்கும் ஆளாகியுள்ளனர். அதில் முதல் விஷயம் தேசியம் பற்றிய கருத்தியல் கேள்வி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவரான சத்யபக்தர்,  “தங்கள் கட்சி இந்திய நாட்டிற்கே உரிய கட்சியாக இருக்க வேண்டும் என்றும் இந்திய சமுதாயத்தை மாற்றி அமைக்க கம்யூனிசக் கொள்கைகளை ‘இந்திய சூழ்நிலைகளுக்கும் இந்திய மக்களின் மனநிலைக்கும் ஏற்ப’ செயல்படுத்த வேண்டும்” என்றார். அவர் 1929 இல் வெளியிட்ட மீரட் சதி வழக்கு ஆவணத்தில்  “நாங்கள் எங்கள் கைகளை கட்டிக் கொள்ள தயாரில்லை. வேறு எவரிடமிருந்தும் ஆணைகளையோ அறிவுறுத்தலையோ ஏற்க மாட்டோம்” என்று பதிவு செய்துள்ளார்.

சோவியத் ஆதரவு கோஷ்டி அவர் குரலை நசுக்கி அவரை கட்சியிலிருந்து வெளியேற்றியது. அவர்கள் சோவியத் ஆதிக்கத்தில் இருந்த காம்இன்டர்னிடமிருந்தே (Comintern – கம்யூனிச அகிலம்) தங்கள் கருத்தியல் வழிகாட்டுதலை பெற்றார்கள்.

சீனா-இந்தியா போரின் போது விசுவாசம் குறித்த அதே கேள்விதான் சிபிஐ கட்சியின் பிளவுக்கு வழி வகுத்தது. கட்சியில் ஒரு சாரார் சீனாவை ஆக்கிரமிப்பாளர் என்று கூறத் தயாராக இல்லை. பின்னாளில் சிபிஎம் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த பி.டி.ரணதிவே,  “ஒரு சோஷலிச நாட்டை ஆக்கிரமிப்பாளன் என்று நம்புபவன் முட்டாளாகவோ அல்லது அயோக்கியனாகவோ தான் இருப்பான். அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ சோசலிஸ்டாகவோ இருக்க முடியாது” என்று சொன்னார்.

கம்யூனிச கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலோர் பாட்டாளி வர்க்க பின்னணி இல்லாதவர்களாகவும், மக்கள் இயக்கத்தை பற்றி ஒன்றும் தெரியாதவர்களாகவோ அல்லது அது பற்றி சற்றே அறிமுகம் ஆனவர்களாகவோ தான் இருக்கிறார்கள். உயர்நிலை தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி அந்தக் கட்சிகளில் இருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக அரசியலில் ஒருங்கிணைந்த அங்கமாக ஆவது குறித்து  கம்யூனிச இயக்கத்தின் உள்ளார்ந்த தடுமாற்றத்தில் இருந்து அது இன்னும் மீளவில்லை.

கம்யூனிஸ்டுகள் தங்கள் ஆதரவாளர்கள் இடையே கூட, ஒருங்கிணைப்புக்கு மாறாக , பிளவையே அதிகம் ஏற்படுத்தி உள்ளனர். பிகாரில் கம்யூனிசத் தலைவர்கள் ஜாதியக் கட்சிகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். கம்யூனிஸ்டுகளின் கருத்தியல் பற்றியோ அரசியல் பங்களிப்பு பற்றியோ இன்று வெறும் பாடமாக படிக்கலாமே தவிர, அவர்கள் முன்னணி வீரர்களாக களத்தில் இல்லை. அவர்கள் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளனர். மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கையும் இல்லை. மதிப்பும் இல்லை.

அது மட்டுமன்றி, நாடாளுமன்ற (தேர்தல் ஜனநாயக) முறையில் ஈடுபடுவதா அல்லது அதை சிதைக்க வேண்டுமென்ற கம்யூனிச கருத்தியலைப் பின்பற்றுவதா என்ற முரண்பாட்டை அவர்களால் தீர்க்க முடியவில்லை. கட்சித் தொண்டர்கள் இன்னமும் ஸ்டாலின், மாவோவின் சிந்தனைகளையே படித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கிறார்கள். கவர்ச்சிகரமான கருத்தியலால் அதிகாரத்தைப் பிடித்து விடலாம் என்ற நினைப்பு அவர்களிடம் இன்னமும் இருக்கிறது. பொதுமக்களிடையே தங்களால் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும் என்ற மிகை கற்பனையில் அவர்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் அமைப்புக்கும் கூட உதவவில்லை.

அவர்களது கண்ணோட்டத்தில், கருத்தியலில் கலாச்சாரத்திற்கு இடமே இல்லை. அவர்கள் பாட்டாளி வர்க்கத்தைப் பற்றிப் பேசுவதை விட இந்து மதவாதம் பற்றி விவாதிப்பதிலேயே அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறார்கள். உளுத்துப்போன கருத்துக்களிலும் பழைய கனவுகளிலும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே தவிர, மாறியுள்ள சூழ்நிலையை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள தெம்பில்லாமல் இருக்கிறார்கள்.

சோஷலிசக் கருத்துக்களுக்கு இன்றைய அரசியலில் இடம் இருக்கிறது. 1967 வரை ஒவ்வொரு தேர்தலிலும் சோஷலிச கருத்துக்களைக் கொண்ட கட்சிகள் இருபது சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளனர். ஆனால் அதைத் தக்க வைத்துக்கொள்ள திராணியற்றுப் போய்விட்டனர்.

“கம்யூனிஸ்டுகள் டிரோஜன் குதிரையைப் போன்றவர்கள்” என்று ஒரு பிரிட்டிஷ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இன்று அந்த வேலையைக் கூட செய்ய முடியாதவர்களாக அவர்கள் ஆகிவிட்டனர். புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்  நூறாண்டுகளுக்கு முன்பு அவர்கள் தொடங்கினார்கள். இன்று அவர்கள் உயிர்த்திருப்பது அவர்களது பலத்தாலோ கருத்தியல் உறுதியாலோ இல்லை. கூட்டணிக் கட்சிகளின் பரந்த மனப்பான்மையால் தான்.

  • நன்றி:  தி இந்தியன் எக்ஸ்பிரஸ்– 14.01.2026  (Communism in India is let down by its own incoherence)
  • தமிழில்:  திருநின்றவூர் ரவிகுமார்

$$$

Leave a comment