தரணி மகிழ தைமகளே வருக!

-வ.மு.முரளி

அன்றாடம் உழைத்துக் களைக்கும் உழவர்களும் தொழிலாளர்களும் பண்டிகைக் காலங்களில் தான் தங்கள் வாழ்வின் பொருளைப் பெறுகிறார்கள். அதற்காக சமுதாய நோக்கில் தாமாக வடிவமைந்தவையே பண்டிகைகள். இந்தப் பண்டிகைகளில், இயற்கையான சமூக வழிபாடாக அமைந்த பொங்கல் பண்டிகை தலையாயது.

இந்த உலக இயக்கத்திற்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சூரியனையே கடவுளாக்கி வழிபடும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. நாம் வாழும் உலகில் இரவுக்காலம் குறைந்து பகல் காலம் அதிகரிக்கும் சூரியனின் திசை மாற்றம் தை மாதம் நிகழ்கிறது.

இந்த மாற்றத்தால் அசதி குறைந்து சுறுசுறுப்பு பெருகுகிறது. எனவே தான் இந்த மாற்றத்தை உலக உயிர்கள் வரவேற்கின்றன. இதனை வரவேற்கும் விதமாகவே நாடு முழுதிலும் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தமிழகத்தில் பொங்கல் திருவிழாவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகையை நமது முன்னோர் எப்படிக் கொண்டாடினர் என்பதற்கும் நமது இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான தமிழ் இலக்கியங்களான சங்கப்பாடல்களில் பொங்கல் குறித்த குறிப்புகள் இருப்பது, இப்பண்டிகையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.

பொங்குதல் என்ற வினைச்சொல்லுக்கு பெருகுதல், வளம் கூடுதல், வெளிப்படுதல் என பல பொருட்கள் உண்டு. பொங்குதல் என்ற வினையின் அடிப்படையில் அமைந்த பெயர்ச்சொல்லே பொங்கல் ஆகும். இது ஒரு காரணப்பெயர். அதாவது, பானையில் பாலும் அறுவடையான புத்தரிசியும் சர்க்கரையும் சேர்த்து உலையிலிட்டு சூடாக்கும்போது, அது பொங்கி வருவதால் கிடைக்கும் உணவு இது.  மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியில் பொங்கி புத்துணர்வளிப்பதைக் குறிக்கும் வகையில், பொங்கலிடுவது நமது பாரம்பரிய மரபு.

சங்க இலக்கியங்களில் ‘பொங்கல்’ என்ற சொல் இல்லை. ஆனால் தை மாதம்  குறித்து அவை பேசுகின்றன. தை மாதம் போல வேறு எந்த ஒரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் பாடப்படவில்லை என்பது தமிழ் அறிஞர்களின் கருத்தாகும்.

தைத்திங்கள் தண்கயம் படியும் (நற்றிணை- 80), தை இத் திங்கள் தண்ணிய தரினும் (குறுந்தொகை- 196), தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ (கலித்தொகை-59)    என்பன போன்று, பல பாடல்களில் தைமாதம் சிறப்பித்துக் கூறப்பட்டாலும், பின்வரும் புறநானூற்றுப் பாடல் முதன்மையானது.

அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
சாறு கொண்ட களம் போல…

(புறநானூறு 22: 14-16).  

மேலே உள்ள பாடலில், குறுங்கோழியூர்க் கிழார் என்ற சங்க காலப் புலவர்  “நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன” என்கின்றார்.

‘பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்’ மேலும் பெரும்பாணாற்றுப்படை நூலானது  என அறுவடை செய்யும் உழவரைப் பற்றிச் சொல்லுகின்றது. எனவே அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் சங்க காலத்திலேயே காணப்படுகின்றன.

பொங்கல் என்ற சொல்லானது ‘புழுக்கல்’  என்ற பெயரில் பழங்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள்கூறுகின்றனர். புழுக்கம் என்ற சொல் வெப்பத்தின் ஒரு வடிவமாக தற்பாது பயன்படுத்தப்படுகிறது.

வெப்பப்படுத்திய புத்தரிசி உணவாகச் சமைகையில் அது புழுக்கல் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பொருநராற்றுப்படை பாடல் சான்று கூறுகிறது.


"முகிழ்த்தகை முரவை போகிய முரியாவரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்"

  (பொருநராற்றுப்படை: 113-114)  


இங்கு புழுக்கிய சோறு என்பது அவித்த சோறு என்ற பொருளில் இடம்பெறுகின்றது. அதேபோல சிலப்பதிகாரத்தில் புழுக்கலும் பொங்கலும் ஒருசேர இடம் பெறும் பாடல், நமது பம்டிகைச் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது. இப்பாடலே பொங்கல் என்ற சொல் இடம்பெறும் முதல் தமிழ் இலக்கியப் பாடலாகும்.


"வெற்றி வேல் மன்னர்கு உற்றதை ஒழிக்க என,
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்
பூவும், புகையும் பொங்கலும் சொரிந்து"

  (சிலப்பதிகாரம்: இந்திரவிழவூரெடுத்த காதை- 5:66-69) 

-என்று சிலப்பதிகாரமும் புழுக்கலைக் குறிக்கின்றது. நாம் இப்போது சமைக்கும் அரிசியை பச்சரிசி, புழுங்கல் அரிசி என்று இருவிதமாக அழைப்பதை இங்கு ஒப்பிடத் தோன்றுகிறது.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியிலும் “பொங்கல்’ என்ற சொல், இதே சொல்லாட்சியில் இடம்பெறுகிறது. மகளிர் அடுப்புக்கூட்டி எரித்த தணலில் பானைகளில் பால் பொங்கல் பொங்கிற்று என்று கூறுகிறது இப்பாடல்:

"மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்…"

(சீவக சிந்தாமணி: கனகமாலையார் இலம்பகம்- 7-1821)  

சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் மாபெரும் சைவ, வைணவ பக்தி இயக்கம் தோன்றியது. இந்த பக்தி இயக்கக் காலத்தில் பொங்கல் பண்டிகை கோயில் விழாவாகிவிட்டது. இக்காலத்தில் கோயில்களில் பொங்கலிட்டு படைத்து இறைவனை வழிபடுவது பொதுமரபாக மாற்றம் பெற்றது. “”நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்” என்ற சம்பந்தர் தேவாரத்தில் “புழுக்கல்’ என்பது “பாற்சோறு’ எனக் கொள்ளப்படுகிறது.

இந்த உலகம் இயங்கக் காரணமான சூரியனையும் உலக வாழ்க்கை செழிப்புறக் காரணமான இயற்கையையும் தெய்வங்களாகக் கருதிப் போற்றிய நமது முன்னோர், அந்த இறைக்கு நன்றிகூறும் வகையில் மக்கள் படைத்து அளித்ததே பொங்கல். அதனைப் பகிர்ந்துண்டபோது கிடைத்த ஆனந்தமே பண்டிகையை கொண்டாட்டம் ஆக்கியது.

தினமும் உண்ணும் உணவு எளியதாக இருந்தாலும், பண்டிகை நாளில் நமது உணவு சுவையாகவும் மணம் கூட்டுவதாகவும் மகிழ்ச்சி தருவதாகவும் அமைய வேண்டும் என்ற கருத்தால் அமைந்தது பொங்கல் பண்டிகை. இப்பண்டிகை நமது பாரம்பரியத்தின் சுவையாகவும் மணமாகவும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கிறது. இதன் வரலாற்றுச் சிறப்பையும் பாரம்பரியப் பெருமையையும் அறிந்துகொண்டு பொங்கலிடும்போது, தித்திக்கும் பொங்கலின் சுவை மேலும் கூடுமன்றோ?

$$$

Leave a comment