
சென்னை உயர் நீதிமன்ற (மதுரை அமர்வு) நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட புத்தகத்தை பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் (சென்னை அமர்வு) ஜன. 7இல் உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரத்த்தில் நேர்மையாகவும் தமிழக அரசைக் கண்டித்தும் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு பரப்பும் புத்தகம், கீழைக்காற்று பதிப்பகத்தால் சென்னை 49வது புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. (அதுதொடர்பான விளம்பரம் கீழே உள்ளது).
நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்தப் புத்தகத்தின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என, ஜெகன்நாத் என்ற வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புத்தகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் தனது மனுவில், “புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப் போல ஆகிவிடும் என்பதால் இந்தப் புத்தகத்தை விற்கக் கூடாது என அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.இந்தப் புத்தகத்தை பறிமுதல் செய்து விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் இடம்பெற்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ”நீதிபதியைக் களங்கப்படுத்தும் வகையில் இந்த புத்தக விளம்பரத்தில் வார்த்தைகள் உள்ளன. இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.
அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “மிகவும் அவதூறான, களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா?” என, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.



“மிகவும் தீவிரமான இந்த விவகாரம் தொடர்பான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது? அறிவுசார் தளமான புத்தகக் கண்காட்சியில் இதுமாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்க முடியாது” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், “புத்தகக் காட்சி ஜன. 8இல் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதுபோன்ற செயல்களை முதல்வரும் விரும்பவில்லை. புத்தகக் காட்சி அரசால் நடத்தப்படவில்லை. பதிப்பாளர்களால் நடத்தப்படுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் விற்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்படும். அதற்கேற்ப காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி தெரிவித்தார்.
இதையடுத்து, புத்தகப் பதிப்பாளரான ‘கீழைக்காற்று பதிப்பகம்’ மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்குமாறு பதிப்பகத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மேற்படி அவதூறு புத்தகத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை உறுதி செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
- நாளிதழ் செய்தி (08.01.2026)
$$$