ஆங்கிலத்தை அல்ல, மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

-சசி தரூர் 

சசி கரூர் ஐ.நா. சபை மேனாள் துணை செயலாளர்; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் . திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். இந்தக் கட்டுரையில், ஆங்கில மொழி ஒரு கருவி. அது நமக்கு தேவை. ஆனால் ஆங்கிலேய உளநிலை தேவையில்லை. ஆங்கில இலக்கியங்களை, மரபுகளைத் தெரிந்து கொள்வதற்கு இணையாக நம் மண் சார்ந்த இலக்கியங்களை, புராணங்களை  நம் தாய்மொழியில் கற்க முடியாவிட்டால் ஆங்கில மொழியிலாவது கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மெக்காலே மனோபாவத்தைக் கைவிட வேண்டுமென கூறியுள்ளார்.  முதலில் ராம்நாத் கோயங்கா நினைவு உரையிலும் அதன் பிறகு அயோத்தியில்  ‘தர்ம துவஜம்’ ஏற்றும் நிகழ்விலும் இதைக் கூறினார். இதன் மூலம் இந்தியாவில் ஆங்கிலத்தில் இடம் என்ன என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

சரியான நேரத்தில் இந்த விவாதம் தொடங்கியுள்ளது. உலக அரங்கில் இந்தியா முக்கிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியர்களை ஆதிக்கத்தின் கீழ் அழுத்தி வைக்க திணிக்கப்பட்ட மொழி ஆங்கிலம். ஆனால் அதுவே ஆதிக்கத்திற்கு எதிராக சவால் எழுப்பவும் விடுதலைக்கு வித்திடவும் செய்த மாய சக்தி கொண்டதாக இருந்தது. இந்த முரண் நகை சுவையானது.

தாமஸ் பாபிங்டன் மெக்காலே 1835இல் இந்திய கல்வியைப் பற்றி எழுதியுள்ள, விமர்சனத்திற்குரிய, விரிவான அறிக்கையில், ‘நிறத்தாலும் ரத்தத்தாலும் இந்தியர்களாக – ஆனால் கருத்துக்களாலும் உளநிலையாலும் அறிவாலும் வாழ்வியல் விருப்பங்களிலும் ஆங்கிலேயர்களாக இந்தியர்களை மாற்றும்’ கல்வித் திட்டத்தை வலியுறுத்தினார். அவரது நோக்கம் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவது அல்ல. மாறாக ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு வசதியாக, ஆங்கிலேயர்களை விட மேலதிக திறமையுடன் ஆங்கிலப் பேரரசுக்கு பணி செய்யக்கூடிய குமாஸ்தாக்களையும் கூட்டாளிகளையும் உருவாக்குவதாகும். பல நூற்றாண்டுகளாக இருந்த இந்திய கல்வி முறையை, நம்பவே முடியாத அளவற்ற ஆணவத்துடன், ‘இந்திய, அரேபிய நூல் அறிவு மொத்தமும் ஒரு அலமாரியில் உள்ள ஐரோப்பிய நூல்களுக்கு இணையாகாது’ என்று அவர் அறிவித்தார்.

மொழியைப் போலவே வரலாறும் திருப்பி அடிக்கும். ஆதிக்கம் செய்த ஆட்சியாளர்களின் மொழியை அடிமைப்பட்டவர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். மெக்காலே உருவாக்க நினைத்த ஆங்கிலம் படித்த வர்க்கத்தினரே இந்திய தேசியத்தின் முன்னணி படையினராயினர். அடிபணிய வைக்க கருவியாக இருந்த ஆங்கிலம் எதிர்ப்பின் ஆயுதமானது .

ராம்நாத் கோயங்கா பெயரில் நடந்த உரை நிகழ்ச்சியில் மோடி தனது முதல் குண்டை வீசினார். கோயங்கா ஆங்கில மொழி நாளேட்டின் – தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – மூலம் பிரிட்டிஷ் ராஜ்யத்தையும் பின்னர் (இந்திரா காந்தி அறிவித்த) நெருக்கடி நிலையையும் எதிர்த்தார். கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இதில் உள்ள முரண் நகை புரியாமல் போகாது.

ஆனால் மெக்காலேவின் தொடர்ச்சி என்பது மொழி மாத்திரம் அல்ல, அது அறிவு சார்ந்தது. அவர் உருவாக்கிய கல்விமுறை மேற்கத்திய அறிவுக்கு முதலிடம் கொடுப்பது மட்டுமின்றி இந்திய மரபுகளை இழிவு படுத்துவதாகும். சுதந்திரத்திற்குப் பிறகும் கூட பல தசாப்தங்களாக ஆங்கில வழி பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஷேக்ஸ்பியரை படித்தார்களேயன்றி காளிதாசனைப் படிக்கவில்லை. பைபிளை (அல்லது குறைந்தபட்சம் பைபிள் கதைகளை) படித்தார்களேயன்றி ராமாயணத்தைப் படிக்கவில்லை. கிரேக்க, ரோமானியர்களின் உயர்வைத் தெரிந்து கொண்டார்களே அன்றி, மகாபாரதத்தைப் பற்றி அறியாமலே இருந்தார்கள். மெத்தப் படித்தவர்கள் கூட ப்ளூடார்ச் (கிரேக்க அறிஞர்)  பற்றியும் பிளினி (ரோமானிய அறிஞர்) பற்றியும் அதிகம் தெரிந்தவர்களாக இருந்தார்களேயன்றி,  உபநிஷதங்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் அறியாமையில்  இருந்தார்கள்.

இதெல்லாம் ஆங்கிலத்தினால் நேர்ந்த குறைபாடல்ல. இந்த இந்திய நூல்கள் எல்லாம் நல்ல ஆங்கில மொழியாக்கத்திலும் கிடைக்கின்றன. பிரச்சினை – அப்போதும் இப்போதும் – மனோநிலையில் தான் இருக்கிறது. காலனி ஆதிக்கத்தின் தொடர் பின்விளைவாக, ஆங்கிலம் உயர்வானதாகவும் இந்திய அறிவு பழமையானதாகவும் கருதப்பட்டது. இந்த உளநிலைதான் பிரதமரின் கோபத்திற்கு காரணமேயன்றி, ஆங்கில மொழியல்ல.

1989 இல்  ‘தி கிரேட் இந்தியன் நாவல்’ என்ற நூலை எழுதி வெளியிட்டேன். அதில் 20 ஆம் நூற்றாண்டில் இந்திய வரலாற்று நீதிக்கதைகள் என்று மகாபாரதத்தை அங்கத மொழி நடையில் மறு ஆக்கம் செய்திருந்தேன். அதில் , இந்த இதிகாசத்தை ஒவ்வொரு பள்ளி மாணவரும் – அவரது  கற்றல் மொழி எதுவானாலும் – கட்டாயப் பாடமாக படிக்க வேண்டுமென சொல்லியிருந்தேன். முப்பத்தியாறு ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனாலும் அந்த வேண்டுகோள் ஏற்கப்படாமலேயே இருக்கிறது.

இந்தியாவில் இன்று ஆங்கில மொழி அசாதாரணமான இடத்தைப் பிடித்திருக்கிறது. காலனிய ஆதிக்கத்தின் மிச்ச சொச்சங்களை அகற்ற வேண்டுமென அரசியல்வாதிகள் முழங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ரிக்ஷா வலிப்பவர் கூட தன் பிள்ளையை ‘ஆங்கில வழி பள்ளிக்கூடத்திற்கு’ – அது மூன்றாம் தரமானதாக இருந்தாலும் கூட – சிரமப் பட்டாவது பணம் கட்டி படிக்க அனுப்புகிறார்.

இந்தியர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்காக ‘வெட்கப்பட வேண்டுமென ‘ ஒரு முக்கிய தலைவர் சொல்லி உள்ளார். ஆனால் ரிக்ஷா வலிப்பவரோ வீட்டு வேலை செய்பவரோ தன் பிள்ளைகள் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக, டோரண்டோவில் செவிலியராக ஆவதற்காக ஆங்கிலம் கற்றுக் கொள்வதை அவமானமாக நினைக்கவில்லை. அவர்களைப் பொருத்த வரையில் ஆங்கிலம் தெரிந்து கொள்வது துரோகம் அல்ல, வாய்ப்புகளை அடையும் பாலம்; ரிக்ஷா வலிப்பதை விட, வீட்டுப் பணியாளராக இருப்பதை விட, மேலான வேலைவாய்ப்பிற்கு இட்டுச் செல்லும் வழி. 

உண்மையில் ஆங்கிலம் இந்தியாவுக்கு நல்லது செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள அறிவுச் செல்வத்தை அறிந்துகொள்ள உதவியது . நம்முடைய கணினித் துறையின் எழுச்சிக்கு வித்திட்டது. அயலுறவு நடவடிக்கைகளில் நாம் வலுவாக அடித்து ஆடுவதற்கு இசைவாக இருக்கிறது. கல்வித் துறையிலும்  இலக்கியத்திலும் நம்மை விரிவடையச் செய்துள்ளது. நமது உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், நம்முடைய அறிவியல் ஆய்வேடுகள், அதிகம் விற்பனையாகும் புதினங்கள் எல்லாம் அந்த மொழியில் தான் உள்ளன. அந்த மொழியின் மூலமாகத்தான் இந்தியா உலகத்துடன்  உரையாடுகிறது. இவ்வளவு ஏன்? நம் நாட்டுக்குள்ளும்  பேச அதற்குத் தான் வீச்சு அதிகம்.

ஆனால் அந்த வழியாக மட்டுமே நாம் நம்மை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.  புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஜப்பான் , சீனா , தென்கொரியா போன்ற நாடுகள் தங்கள் மொழியை விட்டுக் கொடுக்காமல் நவீனத்துவத்தை அரவணைத்துக் கொண்டன. அதேபோல இந்தியாவும் செய்ய வேண்டும். ஆங்கிலத்தை ஒழிப்பதன் மூலமாக அல்ல, அதை அரியாசனத்தில் இருந்து அகற்றுவதன் மூலம்.

சசி தரூர்

நம்  வாழ்க்கையிலும், உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் பல முக்கியமான கதவுகளைத் திறக்கும் சாவியாக ஆங்கிலத்தைப் பார்க்க வேண்டும். ஆனால் இந்த மண்ணுடன் நம்மைப் பிணைக்கும், நம் பண்பாட்டையும் மரபையும் பழக்க வழக்கங்களையும் சிறப்பான வகையில் வெளிப்படுத்தக்கூடிய நம் தேச மொழிகளைக் கைவிடக் கூடாது.

நாம் மெக்காலே மனோபாவத்தைக் கைவிட வேண்டுமேயன்றி, ஆங்கில மொழியை அல்ல. ஆங்கிலத்தை அகற்ற வேண்டாம். அது நமக்கு திறந்து விட்ட கருவூலங்களைப் புறக்கணிக்கவும் வேண்டாம். நாம் நம்மைப் பற்றியும் நம்முடைய செம்மையும் செழிப்பும் நிறைந்த நம் கலாச்சாரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ஷேக்ஸ்பியருடன் சேர்ந்து காளிதாசனையும் கற்றுத் தருவோம். பிளாட்டோவை சொல்லித் தரும்போது கூடவே உபநிஷதங்களையும் கற்போம். பைபிளுடன் கூடவே லைலா மஜ்னு கதையையும் சூபி மகான்களையும் பக்தி இயக்கத்தையும் சொல்லித் தருவோம். நம் கலாச்சாரம் மிகப் பெரியது; பல சமயங்களை உள்ளடக்கியது; சிறந்த தத்துவக் கொள்கைகளைக் கொண்டது. அதைக் கற்றுத்  தருவோம்.

நம் மண்ணில் முளைத்த கதைகளை நம் குழந்தைகள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகே மற்றவர்களின் புராணங்கள். ஆங்கிலம் உட்பட எல்லா மொழிவழி பாடத் திட்டத்திலும் இதை பின்பற்றுவோம். 

ஆங்கிலம் இப்போது நமக்கு அன்னிய மொழி அல்ல. அது இந்தியச் சொல்லாடல்களையும் மொழி வழுவுகளையும் கற்பனைகளையும் கொண்டுள்ளது. அந்த மொழியில் தான் நம் துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். நாம் வெற்றிகளைக் கொண்டாடுகிறோம். இந்தக் கட்டுரையை கூட அந்த மொழியில் தான் எழுதியுள்ளேன். மகாபாரதத்தையும் அந்த மொழியில் தான் மறு ஆக்கம் செய்தேன். 

  • நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (11.12.2025) 
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார் 

$$$

Leave a comment