-ஆசிரியர் குழு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -4)

சி.ஐ.எஸ்.எஃப். அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து, மனுதாரர்களுடன் பாதுகாப்புக்காகச் சென்ற சி.ஐ.எஸ்.எஃப். எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, ஹிந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ராம ரவிகுமார் தாக்கல் செய்த மனு மீது, டிச. 1இல், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ‘வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். ‘தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை’ என, குறிப்பிட்டார்.
ஆனால், ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை இல்லாததால் கலெக்டர் பிரவீண்குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, ராம.ரவிகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். இதை அவசர வழக்காக, டிச. 3இல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
கோயில் நிர்வாகம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. எனவே, பிற மனுதாரர்கள் உட்பட 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களை அனுப்ப உயர் நீதிமன்ற சி.ஐ.எஸ்.எஃப். கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன் – என்று உத்தர விட்டார்.
இதை எதிர்த்து அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு டிச. 4இல் தள்ளுபடி செய்தது.
அதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டிச. 4இல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘கார்த்திகை தீபத்தை தீபத்தூணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோரது வாதத்தில், ‘இந்நீதிமன்ற உத்தரவை அரசுத் தரப்பு நிறைவேற்றவில்லை. தீபம் ஏற்றச் சென்றவர்களை காவல் துணை ஆணையர் தடுத்தார். ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இவ்வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்றனர்.
இதையடுத்து நீதிபதி, ‘இவ்வழக்கில் கோரிய நிவாரணத்திற்கு அப்பால் மேலும் விரிவாகச் செல்ல வேண்டாம்,’ என்றார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ”நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு எதிராகத் தாக்கலான மனுவை, இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என, ரிட் மனுவில் உத்தரவிட்டதை எதிர்த்து, அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றக் கிளை இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ‘டிச. 3இல் திருப்பரங்குன்றத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக, 24 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். 12 பேரை கைது செய்தனர். டிச. 4இல் 300 பேரை கைது செய்தனர். அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது சட்டத்திற்கு புறம்பானது’ என்றனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதால், அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்நீதிமன்றம் டிச. 3இல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற, மனுதாரர்களுடன் சென்ற சி.ஐ.எஸ்.எஃப். கமாண்டன்டிடமிருந்து அறிக்கை பெற்று, மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் டிச. 9இல் தாக்கல் செய்ய வேண்டும் – என்று உத்தரவிட்டார்.
$$$
வெறுப்புணர்வு கருத்துக்களைப் பரப்பினால் நடவடிக்கை பாயும்
நீதிபதிகள் எச்சரிக்கை
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
‘தற்போதைய நிலையில் இடைக்காலத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய இயலாது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்; வெறுப்புணர்வுக் கருத்துக்களைப் பரப்ப வேண்டாம். மீறினால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்’ என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, மதுரை, எழுமலை ராம. ரவிகுமார் ஏற்கனவே தாக்கல் செய்த மனு தொடர்பாக, டிச. 1இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ‘வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து கோயில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: ‘தீபம் ஏற்றும் இடத்தை மாற்றியமைக்க கோயிலைக் கட்டாயப்படுத்த எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை; கோயிலின் நீண்டகால நடைமுறையில் தலையிட முடியாது’ என இதுபோன்ற ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் 2014இல் உத்தரவிட்டது.
தற்போது ராம. ரவிகுமார் அதே நிவாரணத்தைக் கோரியுள்ளார். இதன் அடிப்படையில் தற்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, இந்திய அரசியலமைப்பிற்கு முரணானது. மற்றொரு வழக்கில் உயர் நீதிமன்றம் கோயிலுக்கு சாதகமாக, 1994இல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக, உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபப் பகுதியில் மட்டுமே தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்தூண் பகுதியில் ஒருபோதும் ஏற்றப்படவில்லை என்பதை தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். தீபத்தூணில் ஏற்றப்பட்டது எனக் கூறுவதற்கு, கோயில் பதிவேடு, அறநிலையத் துறை ஆவணம், கல்வெட்டு, ஆகமத்தில் சான்றுகள் இல்லை.
அறங்காவலர் அல்லது செயல் அலுவலர் மட்டுமே கோயில் வழிபாடு, பூஜைகள் குறித்து முடிவு செய்ய முடியும். அதில் மாற்றம் செய்யுமாறு எந்தவொரு தனிநபரும் வலியுறுத்த முடியாது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நாட்களுக்குள் செயல்படுத்துவது சாத்தியமற்றது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும் – என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோல, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றொரு மனு தாக்கல் செய்தார். அம்மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
அரசுத் தரப்பில், தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா.கதிரவன், ரவீந்திரன், அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்; ராம. ரவிகுமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பழனிவேல் ராஜன், வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜராகினர்.
தர்கா தரப்பு, ‘தீபத்துாண் எனக் குறிப்பிடும் பகுதி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவிற்கு சொந்தமான இடத்தில் அமைந்து உள்ளது’ என்றது.
அறநிலையத் துறை தரப்பு, ‘தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியது.
நீதிபதிகள், ‘தற்போதைய நிலையில் தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய இயலாது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்த பின், அதைப் பரிசீலித்து முடிவெடுக்கப்படும். மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய விரும்பும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக யாரும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாது’ என்றனர்.
ராம ரவிக்குமார் தரப்பு, ‘அரசுத் தரப்பில் தேவையின்றி சட்டம் – ஒழுங்கு பிரச்சினை உருவாக்கப்படுகிறது’ எனத் தெரிவித்தது.
அரசுத் தரப்பு, ‘அவ்வாறு எதுவும் இல்லை. சமூக வலைதளங்களில் உணர்வுகளைத் தூண்டும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன’ என்றது.
நீதிபதிகள், ‘நடக்கும் ஒட்டுமொத்த நிகழ்வுகள் பற்றி கவனத்தில் கொண்டுள்ளோம். இவ்விவகாரத்தில் தேவையற்ற வெறுப்புணர்வு விமர்சனங்கள் எழுந்தால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அதைப் பற்றி தேவையற்ற கருத்துக்களைப் பரப்பினால் சமூகத்தில் பாதிப்பு ஏற்படும். நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம். வெறுப்புணர்வுக் கருத்துக்களைப் பரப்ப வேண்டாம். இதை யார் மீறினாலும், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். இதை, இங்கு வழக்கு தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்த வேண்டும்’ என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், ‘தாக்கலாகும் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் சேர்த்து டிச. 12இல் விசாரிக்கப்படும்’ என்றனர்.
இதற்கிடையே, ‘தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும்’ என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததை எதிர்த்து, மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, டிச. 4 இல் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
$$$
திருப்பரங்குன்றம் பிரச்சினையால் நாடாளுமன்றத்தில் அமளி
புதுதில்லி: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்வைத்து, தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்ற லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் கடும் அமளியில் இறங்கினர். அப்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பெயரைக் குறிப்பிடாமல், அவர் ஓர் அமைப்புடன் தொடர்டையவர் என, தி.மு.க. – எம்.பி.யான டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார். இதற்கு, பா.ஜ. – எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பைக் காட்டவே, ஆட்சேபனைக்குரிய அந்த வார்த்தையை நீக்கும் அளவுக்கு கடும் ரகளை ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்குத் திட்டமிட்டு, அதற்கேற்ப லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை தி.மு.க. எம்.பி.க்கள் வழங்கியிருந்தனர். காலையில் அலுவல்கள் தொடங்கியதும், அந்தத் தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்படவே, தி.மு.க. – எம்.பி.க்கள் அமளியில் இறங்கினர்.
அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, ”கேள்வி நேரம் முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன்” என்றார். அதை ஏற்காமல், தி.மு.க. – எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
அரை மணி நேரம் வரை கூச்சலுக்கு மத்தியில், கேள்வி நேர அலுவல்கள் நடந்தன. அதன்பிறகு அமளி அதிகமாகவே, லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. ஜீரோ நேரம் துவங்கியதும், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழி நடத்திய கிருஷ்ண பிரசாத் தென்னடி, தி.மு.க. – எம்.பி. பாலுவை பேச அழைத்தார்.
அதையடுத்து, பாலு பேசியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தால் தமிழகம் மட்டுமல்ல, சட்டத்தை மதிக்கும் அனைவரும் கவலையில் உள்ளனர். அங்குள்ள மலையில் தீபத்தை ஏற்ற வேண்டியது ஹிந்து அறநிலையத் துறையா அல்லது வேறு தவறான நபர்களா என்பது தான் பிரச்சினை. அந்த நபர்கள் தான், பிரச்சினையைத் தூண்டிவிட வேண்டுமென விரும்புகின்றனர். அத்தகைய நபர்கள், நீதிமன்றத்திற்கு சென்று (ஓர் அமைப்பின் பெயரை குறிப்பிட்டு), அந்த அமைப்பைச் சேர்ந்த நீதிபதியிடமிருந்து தீர்ப்பை வாங்கி விட்டனர்- என்று பேசினார்.
இதைக் கேட்ட பா.ஜ. எம்.பி.,க்கள், ‘நீதிபதியை, குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் என எவ்வாறு குறிப்பிடலாம்?’ எனக் கூறி கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு கூறுகையில், ”பார்லிமென்டின் விதிகளுக்கு மாறாக பாலு பேசுகிறார். நீதிபதியை ஓர் அமைப்புடன் இணைத்து எப்படி பேச முடியும்? நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசுவது மிகவும் தவறானது. இந்தப் பேச்சு, உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் தேவையற்ற பிரச்சினைகளை வரும் நாட்களில் உருவாக்கலாம். நீங்கள் பேச வேண்டிய கருத்துகளை தாராளமாகத் தெரிவிக்கலாம்; தவறில்லை. அதற்காகத்தான் வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், நீதிபதியைப் பற்றி இப்படி பேசுவதற்கு எந்த வகையிலும் உரிமை இல்லை. எனவே, நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அதுவே தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்” என்றார்.
அதை ஏற்று, அந்த வார்த்தை நீக்கப்படுவதாகக் கூறிய கிருஷ்ண பிரசாத் தென்னடி, பாலுவுக்கு மீண்டும் பேச வாய்ப்பளித்தார்.
அப்போது பாலு, ”உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் தீபத்தை ஏற்றுவதற்கு, தேவஸ்தானத்துக்கு மட்டுமே உரிமை இருப்பதாக, கடந்த 1996இல் நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்துள்ளார். இந்நிலையில், அங்கு சிலர் மதக் கலவரத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். இந்தியாவை ஆளும் ஒரு கட்சி தான், அந்த கலவரத் தீயை பற்ற வைக்கிறது” என்றார்.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முருகன் பேசியதாவது:
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பு அளித்த பிறகும், திருப்பரங்குன்றத்தில் மக்கள் வழிபட, தி.மு.க. அரசு தடை செய்கிறது. அரசும் போலீசும் இணைந்து வழிபாட்டு உரிமையை மறுத்துள்ளன; சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களை அழைத்துச் சென்று, தீபம் ஏற்ற உத்தரவிட்டும், அதையும் தடுத்து, கைது செய்து அராஜகம் செய்துள்ளனர்.
‘வெற்றி வேல்; வீர வேல்’ என, அங்கு சென்று வழிபடுவோரின் உரிமையை, ஓட்டு வங்கி அரசியலுக்காக, ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை தாஜா செய்வதற்காக, தி.மு.க. அரசு இவ்வாறு செய்கிறது. அங்கு சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைத்து, பக்தர்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை போலீசார் கட்டவிழ்த்துவிட்டனர். பா.ஜ.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்காக இத்தனையும் தி.மு.க. அரசு செய்கிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். மதுரை நீதிமன்றம் தீர்ப்பைத் தந்தும்கூட மக்களை அனுமதிக்கவில்லை என்றால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்திய அரசியலமைப்பு 25வது ஷரத்து, ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக வழிபடும் உரிமையை தந்துள்ளது. மேலும், இந்த பிரச்சினை மாநிலத்தில் விவாதிக்கப்பட வேண்டியது. அதை விட்டுவிட்டு, இங்கு வந்து நாடாளுமன்றத்தை முடக்க வேண்டுமென்று இவ்வாறு அமளி செய்கின்றனர். சட்டத்தின்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு மதிக்க வேண்டும். – என்று எல்.முருகன் பேசினார்.
ராஜ்யசபாவிலும் இதே பிரச்சினையைக் கிளப்ப, தி.மு.க. – எம்.பி.க்கள் முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்படவே, வேறு வழியின்றி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- ஆதாரம்: தினமலர் (06.12.2025)
$$$
One thought on “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 4”