பிகார் தேர்தல்: சில பார்வைகள்

-மாலன், ஜடாயு, மு.சந்திரன்

பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பலவிதமான விவாதங்கள் நடந்து வருகின்றன.  அவற்றில் அபத்தமான புகார்களுக்கு பதில் அளிக்கும் சில முகநூல் கட்டுரைகள் இங்கே நன்றியுடன் மீள்பதிவாகின்றன...
நன்றி: தினகரன்

1. பிகார் முடிவுகள் சொல்வதென்ன?

-மாலன்

1. ஊழல், வாரிசு அரசியல் இரண்டையும் மக்கள் நிராகரிக்கிறார்கள்.

2.மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். பிகாரில் ஆறாண்டுகளுக்கு முன் (2019) வறுமை விகிதம் 57 சதவீதமாக இருந்தது. இப்போது (2023) 27 சதவீதமாக ஆகியிருக்கிறது. பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம் இவற்றிற்கு நிதீஷ் அரசு நிதி உதவி அளித்து ஊக்கமளித்தது. ஆரம்பப் பள்ளியிலிருந்து பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை நிதி உதவி அளிக்கும் Mukhyamantri Kanya Utthan Yojana என்ற திட்டத்தை சிறப்பாக நடத்தி வருகிறது. ஐ.ஏ.எஸ் தேர்வில் ஆரம்ப நிலைத் தேர்வுகளில் பாஸ் செய்த பெண்களுக்கு அவர்கள் படிப்பை/ பயணத்தைத் தொடர நிதி உதவி அளிக்கிறது. இதனால் இளம்பெண்களிடம் நிதீஷுக்கு மரியாதை அதிகம். மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தியது பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு இவற்றை உறுதி செய்திருக்கிறது (பிகாரில் இது முக்கியமான ஓர் அம்சம். பல ஆண்கள் வேலை நிமித்தம் வெளியூர்களில், வெளி மாநிலங்களில் தங்கி விடுவதால் பெண்கள் குழந்தைகளோடு தனியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வை அரசு உறுதி செய்திருக்கிறது)

3. தங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் அரசை மக்கள் விரும்புகிறார்கள்.

4. பாஜக ஜாதி சார்ந்த அரசியலை முறியடித்து வருகிறது. மகாராஷ்டிரத்தில் அதிகம் இருக்கும் மராட்டா மக்களின் ஆதரவு கிட்டாத போதும் அங்கு வென்றது. இம்முறை யாதவர்கள் கட்சியான லாலுவின் கட்சியை வீழ்த்தி இருக்கிறது

5. மதத்தை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தும் கட்சிகள் புறந்தள்ளப் பட்டிருக்கின்றன. ஓவைசியின் கட்சி மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டத்திலும் தே ஜ கூ கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது

6. ஏட்டில் எழுதிக் காண்பிக்கும் சீனி இனிப்பாக இருக்காது, நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை தீவிரவாத கம்யூனிஸ்ட்களை நிராகரித்ததன் மூலம் வெளிப்படுத்துகிறது.

7. மக்கள் தலைவன் என்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் ராகுலின் பிம்பத்தை மக்கள் பொருட்படுத்தவில்லை.

8. ‘ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி, கழுநீர் பானையில் விழுமாம் துள்ளி’ என்பது பழைய காலத்து வசனமல்ல்ல, அது இன்றும் உண்மைதான். உதாரணம் பிரசாந்த் கிஷோர்.

கற்க வேண்டிய பாடங்கள்:

மாநிலக் கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸை வைத்துக் கொள்வதால் அவற்றிற்குப் பலன் இல்லை. 61 இடங்களை காங்கிரசிற்கு ஒதுக்காமல் தனது கட்சிக்கு வைத்துக் கொண்டிருந்தால் ஒருவேளை தேஜஸ்வி யாதவ் இன்னும் சில இடங்கள் கூடுதலாகப் பெற்றிருக்கக் கூடும். திமுக இது குறித்து சிந்திக்க வேண்டும். இண்டி கூட்டணியில் இருக்கும் மமதா, கேஜ்ரிவால், கேரள  கம்பூனிஸ்ட்கள் காங்கிரஸை தங்களோடு சேர்ப்பதில்லை. ஏன் என்பதை திமுக யோசித்துப் பார்க்க வேண்டும்

ஏறத்தாழ சமபலம் பெற்றாலும் கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சியின் தலைவரை முதல்வராக ஏற்க பாஜக தயக்கம் காட்டுவதில்லை. முன்பு ஏக்நாத் ஷிண்டே, இப்போது நிதிஷ் குமார். இதை தமிழ்க பாஜகவினர் குறிப்பாக அண்ணாமல ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆளுவோருக்கு எதிரான மனப்பான்மை (Anti incumbency) என்ற நிலையை பாஜக மாற்றிக் காட்டியிருக்கிறது. மக்களவைத் தேர்தல்கள் (மூன்றாவது முறையாக மோதி ஆட்சி),  மகராஷ்டிரா, ஹரியாணா, அசாம் இப்போது பிகார்.

வாக்களர்கள் தங்கள் வளர்ச்சியைப் (அது மாநில, நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புடையது) பொருட்படுத்துகிறார்களே தவிர அரசியல் கட்சிகளையோ அவர்களது எதிர்மறையான பிரசாரங்களையோ அல்ல.

மாநிலத் தேர்தல்களில் பெரும்பாலான மாநிலங்களில் மூன்றவது கட்சி/அணி என்பதை மக்கள் பொருட்படுத்துவது இல்லை. சிறிய/புதிய கட்சிகள் ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் உதாரணங்கள்: பிகாரின் LJP, பிரசாந்த் கிஷோரின் கட்சி.

$$$

2. தமிழகத்திற்கான செய்தி

-ஜடாயு

மைதிலி தாகுர்

பிகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றிருக்கிறார் 25-வயது இளம் பாடகி மைதிலி டாகுர்.  குடும்பத்திலேயே பாரம்பரியமாக ஹார்மோனியம், பஜனைப் பாடல்களைக் கற்று,  ‘இண்டியன் ஐடல்’ போட்டியில் வென்று, தொடர்ந்து ஹிந்தி, அவதி, மைதிலி, போஜ்புரி, மாகதீ மொழிகளில் அமைந்த பாரம்பரிய பஜனைப் பாட்டுக்களையும், நாட்டுப்புறப் பாடல்களையும், சுலோகங்களையும், ஹரிநாம சங்கீர்த்தனத்தையும் ஆழ்ந்த பக்தி பாவத்துடன் தனது தேனினும் இனிய குரலில் பாடி, இளம் வயதிலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டார் இந்தப் பெண். 2024இல் ‘தேசிய படைப்பாளிகள் விருது (National Creators Award) பெறும்போது அந்த விழாவில், பிரதமர் மோதிஜி இவரைப் பாராட்டி, பஜனைப் பாடல் பாடுமாறு கோரி இவர் பாடும் விடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அயோத்தி கோயில் பிராண பிரதிஷ்டையின் போது இவர் பாடிய பாரம்பரிய ராமர்-சீதை திருமணப் பாடல்கள் பக்தர்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தின. இவரும் சீதையின் பிறந்தகமான மிதிலையைச் சேர்ந்தவர். அதன் காரணமாக சீதைக்கு ஏற்பட்ட மைதிலி என்ற பெயரையே கொண்டவர் என்பதும் சேர்ந்து இவரது ஆளுமைக்கு மிகப்பெரிய மெருகை அளித்தது. இத்தகைய மாபெரும் இந்துக் கலாசாரப் பின்புலம் தான் பாஜக அவரை வேட்பாளராக நிறுத்துவதற்கும், அவர் வென்று சாதனை படைத்திருப்பதற்கும் காரணமாகியுள்ளது.

ஆனால், நம்மாட்களுக்கு இது எதுவுமே தென்படவில்லை போலிருக்கிறது. எல்லாத் தமிழ் ஊடகங்களும் அவரது முக்கிய அடையாளமான பஜனை இசை என்பதை இருட்டடித்து  ‘நாட்டுப்புறப் பாடகி டூ அரசியல்வாதி’ என்று செய்தி வெளியிடுகின்றன. ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் அவர் மழலைத் தமிழில் திணறும் தமிழ் உச்சரிப்போடு (அவரைச் சொல்லிக் குற்றமில்லை, தமிழ் அவரது தாய்மொழியும் அல்ல) ஒரு நாலு வரி பாடியிருக்கிறார் என்பதுதான் அவரது ஜன்ம சாபல்யம் என்பது போல, அந்த விடியோவையே பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். “தமிழின் ஒவ்வொரு சொல்லையும் தன் மெல்லிய நாதத்தில் ஏற்றியபடி இதயத்தைத் தொட்டு செல்லும் குரல்.. தமிழின் காற்றை உணரும் இந்த இளம் MLA..” என்று போகிறது, தமிழ்நாடு பாஜக இளைஞர் அணி பதிவு. சுத்தம்!

உண்மையில் தமிழர்கள் யோசிக்க வேண்டிய விஷயம், கேட்க வேண்டிய கேள்வி – இப்படி எந்த வாரிசு, அரசியல், பின்புலமும் இல்லாத மைதிலி போன்ற ஒருவர், மைதிலிக்கு பஜனை இசை போல ஏதேனும் ஒரு துறையில் (சினிமா நடிகர் தவிர்த்து) இளம் சாதனையாளராக புகழ்பெற்ற ஒருவர், இங்குள்ள பெரிய கட்சிகளால் குறைந்தபட்சம் வேட்பாளராகவாவது நிறுத்தப்படுவாரா என்பது தான். வெற்றியெல்லாம் அடுத்தது. அதற்கும் கூட சாத்தியமே இல்லை என்பது தான் நிதர்சனம். ஆனால், இந்தக் கேள்வியை யாருமே கேட்பதாகத் தெரியவில்லை.

மற்றபடி. பிகாரின் மகத்தான மக்கள் தலைவராக, பட்டியல் சமுதாயத்தினரின் பிரதிநிதியாக எழுந்து வந்திருக்கும் சிராக் பஸ்வான் குறித்து தமிழ் செய்தி ஊடகங்களில் முழுமையான கனத்த மௌனம். திலகம் துலங்கும் அவரது வசீகரமான முகத்தைக் காட்டுவதற்குக் கூட இவர்களுக்கு அவ்வளவு பயம் போல. திருமாவுக்குப் பின் கட்சி தொடங்கி, இன்று பிகாரின் துணைமுதல்வராக வரக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கும் அவரது சாதனையையும், இங்கே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு, சத்தம் மட்டும் பெரிதாகப் போட்டுக் கொண்டிருக்கும் திருமாவளவனையும் ஒப்பிட்டு தமிழ் சமூக ஊடகங்களிலாவது சில பதிவுகள் வருகின்றன என்பது ஒரு ஆசுவாசம்.

தமிழ்நாட்டின் அரசியல் திராவிடக் கட்சிகளாலும், அதே பாணி பிரதேசவாத, வெறுப்புணர்வுக் கொள்கைகளை வேறுவேறு கலர்களில் கொண்டிருக்கும் சிறிய, பெரிய கொசுக்கடிக் கட்சிகளாலும், இந்தக் கட்சிகளில் உள்ள பழம்பெருச்சாளிகள், கொடும் ஊழல்வாதிகள், பணமுதலைகளாலும் முற்றிலுமாகக் கைப்பற்றப் பட்டு, முடைநாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் பிகாரின் அரசியலை விட மோசமாக, எந்த இலக்கும் திசையும் இல்லாத நிலையில் தான் தமிழ்நாட்டின் அரசியல் இருக்கிறது.

$$$

3. திசைதிருப்பும் தோல்வியாளர்கள்

-மு.சந்திரன்

பிகார் தேர்தல் முடிவுகள் வந்த நொடியில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் SIR க்கு எதிராகவும் தொடர்ச்சியாக அவதூறு பிரசாரங்களை தோல்வியுற்றவர்கள் செய்து வருகிறார்கள்.

முன்னெல்லாம் ஒரு மாநில தேர்தல் முடிந்தவுடன் பலவேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும். ஒரு காலத்தில் விகடனில் வெளிவந்த தேர்தல் ஆய்வுக் கட்டுரைகளை எல்லாம் படித்து சில அரசியல் புரிதல்களை வளர்த்துக் கொண்டோம். ஆனால் இன்று விகடன் ஒற்றை போட்டோவை போட்டு தீர்ப்பு எழுதிவிட்டது. (அதுவும் முட்டாள்தனம்).

பிகார் தேர்தலில் SIR  நடத்தில் 63 லட்சம் வாக்காளர்களை நீக்கி விட்டார்கள் என்று குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

ஆனால் அதில் இவர்கள் சொல்ல மறுக்கும், மறைக்கும் ஒரு செய்தி, அந்த 63 லட்சம் வாக்காளர்களில்…

  • 22 லட்சம் பேர் இறந்தவர்கள்
  • 35 லட்சம் பேர் இடம் மாறியவர்கள்
  • 8 லட்சம் பேர் போலி மற்றும் இரட்டை வாக்காளர்கள்.

இந்தத் தகவல்களை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட யாருமே சொல்வதில்லை என்பதில் இருந்தே, இவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

தேர்தல் ஆணையத்துக்கு எதிரான பிரசாரத்தை கையில் எடுத்து மக்களைக் குழப்பும் வேலையை செய்து வருகிறார்கள்.

பிகாரில் SIR  நடந்த பிறகு ஓட்டு சதவிகிதம் குறையவில்லை. தற்போது 2020 vs 2025 தேர்தல்களில் வாக்காளர்கள் எண்ணிக்கையைப் பற்றி விரிவாகப் பாப்போம் .

1. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:

  • 2020 – 6.79 கோடி
  • 2025 – 7.43 கோடி

அதாவது SIR நடத்திய பிறகு 64 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இந்தத் தகவலும் மறைக்கப்படுகிறது.

ஆண் வாக்காளர்கள்

  • 2020 – 3.59 கோடி
  • 2025 – 3.93 கோடி

பெண் வாக்காளர்கள்

  • 2020 – 3.20 கோடி
  • 2025 – 3.50 கோடி

2. வாக்கு செலுத்தியவர்கள் எண்ணிக்கை VOTERS TURNOUT

ஆண் வாக்காளர்கள்

  • 2020 – 1.96 கோடி 54.68 %
  • 2025 – 2.46 கோடி 62.8 %

பெண் வாக்காளர்கள்

  • 2020 – 1.91 கோடி 59.58%
  • 025 – 2.51 கோடி 71.6 %

மொத்த வாக்கு சதவிகிதம்

  • 2020 – 57.13 %
  • 2025 – 67.2 %

SIR நடத்திய பிறகு வாக்கு சதவிகிதமும் கூடியிருக்கிறது. வாக்களிக்கும் உரிமை கொண்ட வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள் என்று சொல்வது பொய்யான குற்றச்சாட்டு என்று இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். 10 % வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கிய பிறகும் பிகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடந்திருக்கிறது என்பதே, தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தியிருக்கிறது என்பதற்கு சான்று.

3. கட்சிகள் வாரியாக வாக்கு சதவிகிதம்.

மொத்த வாக்குப் பதிவில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்…

ஆர்.ஜே.டி ( தேஜஸ்வி யாதவ்).

  • 2020 – 23.11 %
  • 2025 – 22.76 %

காங்கிரஸ்

  • 2020 – 9.48 %
  • 2025 – 8 %

ஐக்கிய ஜனதாதளம் ( நிதிஷ் குமார்)

  • 2020 – 15.39 %
  • 2025 – 18.92 %

பாஜக

  • 2020 – 19.46 %
  • 2025 – 20.92 %

கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்திலும் மிகப் பெரிய வித்தியாசங்கள் இல்லை. சென்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தை பெரும்பாலும் தக்க வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமே 2 % வாக்குகளை இழந்திருக்கிறது.

இந்த எண்களை பார்த்தாலே திமுக மற்றும் காங்கிரஸ் சொல்லும் 10 % வாக்குதிருட்டு எங்கேயும் எதிரொலிக்கவில்லை என்பது புரியும்.

10 % வாக்காளர்களை நீக்கியது உண்மை என்றால்…

  • வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும்.
  • வாக்கு சதவிகிதம் குறைந்திருக்க வேண்டும்.
  • கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதமும் குறைந்திருக்க வேண்டும்.

ஆனால் மாறாக எல்லாமே அதிகரித்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் கூட்டணி.  சென்ற தேர்தலில் தனியாக நின்ற சிராக் பாஸ்வான் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தார்.

நிதிஷ்குமார் கொண்டு வந்த மதுவிலக்கு + பெண்களுக்கு உதவித்தொகை இரண்டும் பெண் வாக்காளர்களை மொத்தமாக தே.ஜ.கூட்டணி பக்கம் திரும்பியிருக்கிறது. இவை தான் தே.ஜ.கூட்டணியின் வரலாற்று வெற்றிக்கு மிக முக்கிய காரணங்கள்.

இண்டி கூட்டணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் காங்கிரஸ்; ராகுல்.

இறுதி வரை கூட்டணிக்குள் இணக்கம் இல்லை. கூட்டணிக்குள்ளேயே எதிர் வேட்பாளர்களை நிறுத்தியது. ஒவைசி கூட்டணிக்கு வரத் தயாராக இருந்தும் அவரை அவமதித்தது. தேஜஸ்வியின் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகள். நிதிஷ் மதுவிலக்கைக் கொண்டு வந்த பிறகும்,  ‘கள்ளுக்கடையைத் திறப்பேன்’ என்று தேஜஸ்வி வாக்குறுதி கொடுத்தது. பிகார் மக்களின் பிரச்சினையைப் பற்றி பேசாமல்  ‘ஓட்டு அதிகார யாத்திரை’ நடத்திய ராகுல். இவை தான் இண்டி கூட்டணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்கள்.

ஆனால் இந்தக் காரணங்கள் எதைப் பற்றியும் விவாதிக்கவே எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை.

4. வெற்றி வித்தியாசமும் அதிகம்:

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொய்களை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லி தேர்தல் ஆணையத்தின் மீது அவதூறு பரப்புகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் பாஜக வெற்றி பெற்றது என்பதும் தவறான, பொய்யான தகவல்.

  • மொத்தம் 109 இடங்களில் 20 ஆயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது தே.ஜ.கூட்டணி.
  • 53 இடங்களில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வெற்ற வாக்கு விபரங்கள், பூத் வாரியான விபரங்கள் வெளியாகும் போது, யாருடைய வாக்குரிமையும் பறிக்கப்படவில்லை என்பதை எளிதாக நிரூபிக்க முடியும்.

அவதூறு பரப்புபவர்கள் இது போன்ற எந்த ஒரு தரவுகளையும் சொல்வதில்லை என்பதில் இருந்தே திமுக, காங்கிரஸ் கூட்டணி பொய்களைப் பரப்புகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

.

  • மேற்கண்ட கட்டுரைகள், எழுத்தாளர்களின் முகநூல் பதிவுகள்.

$$$

Leave a comment