-வ.மு.முரளி
துணை ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் முதல்முறையாக, சொந்த மண்ணான திருப்பூருக்கு நவ. 29இல் வருகை புரிந்தார் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு இனிய பாராட்டு விழா நடைபெற்றது. அது தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே…

பகுதி – 1
துணை ஜனாதிபதி பதவி என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. தமிழகத்தைச் சார்ந்த – அதுவும் திருப்பூரைச் சார்ந்த தலைவர் ஒருவர் அந்த உயரிய அரசியல் சாசன பீடத்தை அலங்கரிப்பது என்பது, திருப்பூரின் பெருமிதம்; தமிழகத்தின் பெருமிதம். அந்த வகையில், மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் நம் அனைவருக்கும் பெருமை.
இதை உணர்ந்ததால் தான், மதுரையில் சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருக்கும் துணை ஜனாதிபதியை தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்தி இருக்கிறார். உடன் திருமதி கனிமொழி எம்.பி, மற்றும் மூத்த திமுக அமைச்சர்களும் இருந்துள்ளனர். இதுவே அரசியல் பண்பாடு.
ஆனால், திருப்பூரில் மண்ணின் மைந்தருக்கு நடந்த பாராட்டு விழாவில் மாநகர மேயர் திரு. தினேஷ், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ திரு. க.செல்வராஜ், திருப்பூர் எம்.பி. திரு. சுப்பராயன் ஆகியோர் கலந்து கொள்ளாதது ஏன்? மேயர் ஊரில் இல்லை என்கிறார்கள். அப்படி இருந்தாலும் துணை மேயர் கலந்து கொண்டிருக்கலாமே?

இத்தனைக்கும், தனது உரையில், திமுக, அதிமுக, கம்யூனிஸ்டு தலைவர்களையும் மெச்சினார் மேதகு சிபிஆர். பொதுமக்கள் அமைப்பால் (People’s Forum of Tirupur) நடத்தப்படும் பாராட்டு விழா என்பதாலேயே தான் சார்ந்திருந்த ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகளை முன்னிலைப்படுத்தாமல் பேசினார் அவர். அற்புதமான உரை. அதைக் கேட்க சிலருக்கு கொடுத்து வைக்கவில்லை. அரசியல் பண்பாடு மறந்ததனால் தான் இந்த நிலை.
விழாவுக்கு வர இயலாத சூழல் இருந்தாலும் கூட, வாழ்த்துரையையேனும் அனுப்பி இருக்கலாமே? ”தேர்தல்கள் முடிந்தவுடன் நமக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை மறந்து அரசியல் கட்சிகள் இணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும்” என்று மேதகு சிபிஆர் பேசியதன் பொருள் இதுதானோ?
அரசியல் நாகரிகம் தெரியாதவர்கள் நமது திருப்பூர் மண்ணில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் என்பது வேதனை. அவர்கள் தமிழக முதல்வரிடம் அரசியல் நாகரிகத்தைக் கற்க வேண்டும்.
பண்பாடு என்பது பாடறிந்தொழுகல்.
***
பகுதி – 2
மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழா தொடர்பாக, ஹிந்துத்துவ சிந்தனையுடன் முகநூலில் இயங்கிவரும் தோழர்கள் சிலரின் அதிருப்திப் பதிவுகளைக் கண்டேன். அவர்கள் கூறிய சில முக்கியமான குறைகள்:
- இந்த நிகழ்ச்சியை யார் நடத்தினார்கள் என்றே தெரியவில்லை. விழா மேடையில் பாஜகவினருக்கு இடமில்லை.
- துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தின. இவை காவல்துறையால் (மாநில அரசால்) திட்டமிட்டுச் செய்யப்பட்டவை.
- விழாவில் துணை ஜனாதிபதி மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களின் பேச்சில் திமுக முன்னாள் தலைவர் திரு. மு.கருணாநிதி, அதிமுக தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் திரு. நல்லக்கண்ணு ஆகியோரைப் புகழ்ந்தது சரியல்ல. அவர் பாஜக தலைவர்களைப் பற்றி பேசவில்லை.
இதற்கு பதில் அளிப்பதற்கு முன் ஒரு முன்னோட்டம்…
முகநூல் நம் அனைவரின் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான எளிய தளம். இதன்மூலமாக சமூகத்தின் நாடியைப் பிடித்தறிய முடியும் – ஒருவர் எந்த முன்முடிவும் இல்லாதவராக இருக்கும் வரை. ஆனால், நமது அரசியல் அபிலாஷைகளும், நம்பிக்கைகளும் தான் நம் முகநூல் நண்பர்கள் வட்டத்தையே தீர்மானிக்கின்றன. மாறாக, எதிர்த்தரப்புக் கருத்தாளர்களையும் நண்பர்களாகக் கொண்டிருப்பது அனைவருக்குமே நல்லது.
தற்போது கருத்து மோதல்களின் களமாக முகநூல் மாறிவிட்டது. எதிர்க் கருத்தாளர்களை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறாக விமர்சிப்பதும் முகநூலின் இலக்கணமாகிவிட்டன. இதனை மட்டுறுத்த வேண்டிய முகநூல் நிர்வாகம் இதை செய்யத் தவறுவது மட்டுமல்ல, புகார்களைக் கண்டுகொள்வதும் இல்லை. புகார் ஏற்பாடு பெயரளவில் மட்டுமே இயங்குகிறது.
இதன் விளைவாக, சித்தாந்த ரீதியாகவும், தனிப்பட்ட கொள்கைகளின் அடிப்படையிலும் அணி சேர்தல்கள் நிகழ்கின்றன. அதன் அடிப்படையிலேயே விமர்சிப்பதும் முகநூல் தளத்தின் இயல்பாகி இருக்கிறது. சில சமயம் ஒரே சித்தாந்த நண்பர்களிடையிலும் கூட மோதல்கள் எழுகின்றன. இது, உடனுக்குடன் தமது கருத்தை வெளிப்படுத்தும் ஆர்வத்தால் எழும் ஒரு சிக்கல். எதையும் எழுதுவதற்கு முன், சில நிமிடங்கள் அதுகுறித்து சிந்திப்பதும், அதுதொடர்பான தகவல்களை சரிபார்ப்பதும் அவசியம்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.

1. திருப்பூரில் நடந்த பாராட்டு விழா மக்கள் அமைப்பால் (People’s Forum of Tirupur) நடத்தப்பட்டது. அது ஏன்? இவ்விழாவை பாஜக ஏன் நடத்தவில்லை?
மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக தலைவராக ஒருகாலத்தில் இருந்திருந்தாலும், இப்போது அவர் கட்சி சார்பற்றவர். அவர் ஜார்க்கண்ட் ஆளுநர் பதவியேற்றபோதே பாஜகவிலிருந்து விலகி விட்டார். இது நமது அரசியல் சாசனம் எதிர்பார்க்கும் முக்கியமான பண்பு. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிகள் அரசியல் சார்பற்றவை. எனவே, அவர்களுக்கு ஒரு கட்சி சார்பில் விழா எடுக்கக் கூடாது; முடியாது.
அதேசமயம், நாட்டின் உயரிய பதவியை ஏற்றபின் சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதியை உரிய முறையில் வரவேற்று கௌரவிப்பது பாஜகவின் பொறுப்பு மட்டுமல்ல, மாநகர மக்களின் பொறுப்பும் கூட. எனவே தான் திருப்பூர் தொழில் அமைப்புகளை இணைத்து, பாஜகவினரின் ஒத்துழைப்புடன் இவ்விழா நடத்தப்பட்டது. சொல்லப்போனால், இதற்கான ஏற்பாடுகளில் பெரும் பங்களித்தோர் பாஜகவினரே. ஆனால், அவர்கள் மேடையில் ஏறக் கூடாது. எனவேதான் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (டீ), தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மட்டுமே மேடையில் இருந்தனர். இவ்விழாவை தொழில் அமைப்புகளும், ‘மக்களும்’ இணைந்து நடத்தினாலும், துணை ஜனாதிபதி பங்கேற்ற விழா என்பதால் அரசு விழா என்ற அந்தஸ்தைப் பெற்றது. இதில் அரசியல் கட்சி பேதங்களுக்கு இடமில்லை. இது அரசு விழாவாக மாறிவிட்ட மக்களின் விழா.
2. முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது போக்குவரத்து கெடுபிடிகள் தேவையா?
தேவையே. இதனை மக்கள் பாதிக்கப்படாமல், அல்லது குறைந்தபட்ச பாதிப்புடன் நடைமுறைப்படுத்துவது, அரசு நிர்வாகம், காவல் துறையின் கடமை.
முக்கிய பிரமுகர் வந்து செல்லும் வரை காவல் துறையினர் சந்திக்கும் அழுத்தங்கள் பல. அரசியல் தலைவர் மட்டும்தான் என்றில்லை, பல்வேறு துறைகளின் பிரபலங்கள் வரும்போதும் இதுபோன்ற சிக்கல்கள் நேரிடுகின்றன. அவர்களை பாதுகாப்பாக வரவேற்று வழியனுப்புவது சிக்கலான பணி. அதுவும், அமைதியைக் குலைக்க சமூகவிரோதிகள் எந்த மூலையிலும் காத்திருக்கலாம் என்ற சூழல் நிலவும் ஒரு நாட்டில், விஐபி பாதுகாப்பு முக்கியமானது. அதுவும் நாட்டின் அரசியல் சாசனப் பதவிகளில் இரண்டாம் நிலையில் இருப்பவர் வரும்போது அதனை சாதாரணமாக கையாள இயலாது. இது மத்திய, மாநில அரசு நிர்வாகங்கள், காவல் துறையினரின் ஒருங்கிணைந்த பணி.
அந்தக் காலத்தில் தலைவர்கள் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அதுபோல ஏன் இருக்கக் கூடாது என்பதற்கான ஒரே பதில்: அது அந்தக் காலம் என்பது மட்டுமே.
3. சித்தாந்த எதிரிகளைப் புகழ்ந்த மேதகு சிபிஆர், ஏன் பாஜவினரைப் புகழவில்லை?
இது துணை ஜனாதிபதியின் முழு உரையையும் கேட்காமல் அவசரகதியில் கேள்வி எழுப்புவதன் விளவு. உண்மையில் மேதகு சிபிஆரின் உரை, நான் இதுவரை கேட்ட அவரது உரைகளிலேயே மிகச் சிறந்தது. இது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பேசியது. சொல்லப்போனால், மேடையில் உரையாற்றுவதில் சிபிஆரின் திறன் கூடியிருக்கிறது.
துணை ஜனாதிபதி திமுக தலைவர் ‘கலைஞரை’ப் புகழ்ந்தது, அவரது தோல்வியில் துவளா குணத்தைத் தான். அதுபோலவே ஜெயலலிதா அவர்களின் நுண்ணறிவு, நல்லக்கண்னு அவர்களின் எளிமை ஆகியவற்றையும் புகழ்ந்தார். அதுமட்டுமல்ல, 182 பாஜக எம்.பி.களை மட்டுமே வைத்துக் கொண்டு ஆறு ஆண்டுகள் நாட்டை ஸ்திரமாக ஆட்சி செய்த வாஜ்பாய் அவர்களின் சிறப்பையும் அவர் முன்வைத்தார். அனைவரையும் அரவணைக்கும் தன்மையே அது. தற்போதைய பிரதமர் மோடியின் பல சிறப்புகளைப் புகழவும் சிபிஆர் தவறவில்லை. ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல பண்புகளைக் கண்டறிவதில் மோடி வித்தகர் என்றார் சிபிஆர்.

தொழில் அமைப்புகள் ஒருங்கிணைத்து நடத்தும் விழாவில், பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் விழாவில் தன்னை கட்சிக்காரராக அவர் அடையாளப்படுத்த முடியாது. அவர் தற்போது கட்சிக்காரரும் அல்ல.
அதேசமயம், தனது முந்தைய வரலாற்றைச் சொன்னபோது, பாரதிய ஜனசங்கமும் பாஜகவும் இந்து முன்னணியும் அதில் இடம்பெற்றன. ஆர்.எஸ்.எஸ். பற்றி ஒரு வரி பேசி இருக்கலாம். ஏன் பேசவில்லை என்பது அவருக்குத்தான் தெரியும்.
மேதகு சிபிஆரை கம்யூனிஸ்ட், இஸ்லாமிய கட்சிகள் தவிர்த்து பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் வாழ்த்தினர். (அவர்களும் வந்திருக்க வேண்டும்). தொழில் அமைப்புகள் அனைவரும் மண்ணின் மைந்தருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தன. பாஜக சார்பில் திரு சுதாகர் ரெட்டியும் திரு. நைனார் நாகேந்திரனும் மேடையேறி வாழ்த்தினர். இதைவிட வேறு என்ன வேண்டும் என்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்?
இறுதியாக ஒரு விஷயம்…
எந்த ஒரு தனி மனிதரும் அனைவராலும் ஆராதிக்கப்படக் கூடியவராக இருக்க மாட்டார். மேதகு சிபிஆருக்கும் இது பொருந்தும். அவரது அரசியல் வாழ்வின் குறைபாடுகளை அறிந்தவர்களால் – அவர்கள் சொந்தக் கட்சியினராக இருந்தாலும் – விமர்சிக்கப்படுவது இயல்பே. ஆனால், இந்த மண்ணின் மைந்தர் தனது தோல்விகளையும் குறைபாடுகளையும் மீறி, நாட்டின் உயரிய பதவியை அடைந்திருக்கிறார். இதற்கு அவரது தனிப்பட்ட நட்புறவுகளும் தொடர்புகளும் காரணமாக இருந்திருக்கலாம். அவை இப்போது பேசப்பட வேண்டியவை அல்ல. சொல்லப்போனால், அரசியலில் ஈடுபடும் எவர் மீதும் ஏதாவது குற்றச்சாட்டுகளை முன்வைத்து போகிற போக்கில் அவதூறு கற்பிக்க முடியும். இதனை தோழர்கள் தவிர்க்க வேண்டும்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் போன்ற தேர்வுகள் சுமுகமாக நடந்தேறுவதே இந்திய ஜனநாயகத்தின் சிறப்பான அடையாளம். இதைவிட சிறப்பான ஒன்று வேறெந்த நாட்டிலும் இல்லை என்பது சமகால அனுபவம். எனவே, இன்று தொழில் நகரத்தின் அங்கமாகிவிட்ட சந்திராபுரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்த ஒருவரின் சிகரம் நோக்கிய பயணத்தின் வெற்றியைக் கொண்டாடுவது, நமது கடமை; பெருமை.
இந்த விழாவின் சிறு குறைபாடுகளை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்பது என் கருத்து.
$$$